Published:Updated:

நான் அகதி! - 5 - யார் அகதி?

நான் அகதி! - 5 - யார்  அகதி?
பிரீமியம் ஸ்டோரி
நான் அகதி! - 5 - யார் அகதி?

மருதன்

நான் அகதி! - 5 - யார் அகதி?

மருதன்

Published:Updated:
நான் அகதி! - 5 - யார்  அகதி?
பிரீமியம் ஸ்டோரி
நான் அகதி! - 5 - யார் அகதி?

டுங்கிக்கொண்டிருந்த நாயை எடுத்துத் தன் தோள்மீது போட்டுக்கொண்டார் நவோமி. காலுக்குக் கீழே வெள்ளம் பாய்ந்துகொண்டிருந்தது. சில இடங்களில் முழங்கால் வரை நீர். பல இடங்களில் இடுப்புவரை வளர்ந்துவிட்டது. மனிதர்களாவது பார்த்து, நிதானமாகக் காலடி எடுத்து வைத்து நகரலாம், நாய்க்குட்டி பாவம் இல்லையா? கறுப்பும் வெள்ளையுமாகத் திரண்டு நின்ற அந்த நாய்க்கு சிம்பா என்று பெயர். நவோமியின் தோளில் வசதியாக அமர்ந்துகொண்ட பிறகும்கூட சிம்பாவின் முகத்திலிருந்து அச்சம் மறையவில்லை. ஆனால், நவோமி ஒரு சிறு புன்னகையுடன் நடக்கத் தொடங்கினார். ஒரு துயரத்தைக் கடந்துசெல்லச் சிறந்த வழி, இதயத்தைக் கொஞ்சம் திறந்து வைப்பதுதான் என்று நவோமிக்குத் தெரிந்திருந்தது.  கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவைப் புரட்டிப்போட்ட ஹார்வே புயலை நினைவுபடுத்தும் புகைப்படங்களில் ஒன்றாக இது மாறிப்போனது.

நான் அகதி! - 5 - யார்  அகதி?

யு.எஸ்.ஏ டுடே என்னும் அமெரிக்க நாளிதழ் ஹார்வே புயல் குறித்து வெளியிட்டிருந்த ஒரு செய்திக்கட்டுரை வித்தியாசமான காரணத்துக்காகச் சர்ச்சைக்குள்ளானது. புயலில் சிக்கித் தங்கள் குடியிருப்புகளையும் உடைமைகளையும் பறிகொடுத்தவர்களை அகதிகள் என்று குறிப்பிட்டிருந்தது அந்தக் கட்டுரை. சர்ச்சை தொடங்கியது இங்கேதான். நவோமியையும் அவரைப் போன்றவர்களையும் அகதிகள் என்று அழைக்கமுடியுமா?  அகதி என்னும் சொல்லை இந்த இடத்தில் பயன்படுத்தியது சரியா? பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்கர்கள் நடு வீதியில் வந்து நின்றது நிஜம். எல்லாம் போய்விட்டதே என்று கதறியழுதது நிஜம். மீண்டும் ஆரம்பத்திலிருந்து வாழ்வைக் கட்டமைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்துக்கு அவர்கள் தள்ளப்பட்டதும் உண்மைதான். ஆனால், அவர்கள் அகதிகளா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் அகதி! - 5 - யார்  அகதி?பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே அமெரிக்காவை கேத்ரீனா புயல் தாக்கியபோது,  அனைத்தையும் இழந்து பரிதவித்தவர்களை ஒட்டுமொத்த ஊடகமும் அகதிகள் என்றே அழைத்தன. அவர்களைப் பொறுத்தவரை பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்ட எவரொருவரும் அகதியே. ஆதரவற்றவர்கள் அகதிகள். வீடற்றவர்கள் அகதிகள். வேலையிழந்தவர்கள், பொருளற்றவர்கள் அகதிகள். பெற்றோரை இழந்த குழந்தைகள் அகதிகள். குழந்தைகளை இழந்து தனித்துநின்றவர்கள் அகதிகள். பூகம்பத்தில் சிக்கி உயிர் தப்பியவர்கள் அகதிகள். ஏழைகள் அகதிகள்.

இப்படித்தான் நம்மில் பலரும் அழைக்கிறோம் என்றாலும், இவர்கள் யாருமே நிஜத்தில் அகதிகள் இல்லை. எனில், யார் அகதி? ஐக்கிய நாடுகள் சபை சில வரையறைகளை வகுத்து வைத்திருக்கிறது. அதன்படி நான் எப்போது அகதியாக மாறுகிறேன் தெரியுமா? என் நாடு என்னை ஒரு விரோதியாகப் பார்க்கவேண்டும். என் இனம், மதம், தேசிய அடையாளம், அரசியல் நிலைப்பாடு அல்லது நான் பங்குபெற்றுள்ள சமூக  அமைப்பு காரணமாக என் அரசு என்னைத் தனிமைப்படுத்தவேண்டும். என் அரசால் எனக்கு ஆபத்து நேரலாம் என்று நான் நம்பவேண்டும். அதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படவேண்டும். என் தாய்நாட்டில் தங்கியிருப்பது பாதுகாப்பற்றது என்று நான் மெய்யாக நம்பவேண்டும். என் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என் தாய்நாட்டிலிருந்து தப்பி வேறோர் இடத்துக்கு நான் குடிபெயர வேண்டும்.  அப்படிச் செய்தால் நான் ஓர் அகதி.

உதாரணத்துக்கு, ரோஹிங்கியா  முஸ்லிம்களை எடுத்துக்கொள்வோம். ரோஹிங்கியாக்களை பர்மியர்களாகக் கருத மியான்மர் அரசு முன்வரவில்லை. நீங்கள் வங்கதேசத்திலிருந்து வந்த குடியேறிகள், அங்கேயே திரும்பிச் செல்லுங்கள் என்கிறார்கள் பர்மியர்கள். ரோஹிங்கியாக்களின் தேசிய அடையாளம் இங்கே பிரச்னைக்குரியதாக மாறியது. ரோஹிங்கியாக்கள் இஸ்லாமியர்களாகவும் இருப்பதால் பெரும்பான்மை பௌத்தர்கள் அவர்களைத் தங்கள் சமூகத்துக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். அந்த வகையில், ரோஹிங்கியாக்களின் மத அடையாளமும் அவர்களை பர்மியர்களிடமிருந்து அந்நியப்படுத்துகிறது.

ஐ.நா சட்ட விதி அளிக்கும் வரையறையை ரோஹிங்கியாக்களுக்குப் பொருத்தினால் அவர்கள் தங்கள் தேசிய அடையாளத்துக்காகவும் மத அடையாளத்துக்காகவும் தாக்கப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். பெரும்பான்மை பௌத்தர்களுக்கு மத்தியில் வாழ்வது கடினம் என்று சிறுபான்மை ரோஹிங்கியாக்கள் நினைக்கிறார்கள். அரசு தங்களைப் பாதுகாக்கும் என்னும் நம்பிக்கையை அவர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள். பர்மாவின் அரசு பெரும்பான்மையினரின் அரசுதான் என்பதை அவர்கள் அறிவார்கள். தடியும் துப்பாக்கியுமாக வந்து தாக்கும் பலர் காவல்துறைச் சீருடை அணிந்திருப்பதைக் கண்டு அதிர்ந்திருக்கிறார்கள். பெரும்பான்மை பயங்கரவாதத்தைக் காட்டிலும் அஞ்சத்தக்க ஒன்று, அதை ஆதரிக்கும் அரசு. எனவே உயிர் தப்ப அவர்கள் மியான்மரை விட்டு ஓடிவர வேண்டியிருக்கிறது. எனவே அவர்கள் அகதிகள்.

புயலிலிருந்து தப்பி வெளியேறிய அமெரிக்கர்களுக்கும் பர்மாவிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியாக்களுக்கும் இடையிலான வேறுபாடு இதுதான். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் புளோரிடா மக்களும் வெளியேறினார்கள் என்றாலும் அவர்கள் அடைக்கலம் புகுந்தது அதே அமெரிக்காவில் உள்ள மற்றொரு மாகாணத்தில். இயற்கை அவர்களுக்கு எதிராக இருந்தபோதும் அமெரிக்க அரசு அவர்களைக் கைவிட்டுவிட வில்லை.  மாறாக, உதவத்தான் செய்தது. அதனால்தான் அவர்களில் மிகப் பெரும்பாலானோர் இப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.ரோஹிங்கியாக்களுக்கு அப்படியா? அவர்கள் சந்தித்துக்கொண்டிருப்பது கேத்ரீனா, ஹார்வே, இர்மா போன்றதொரு இயற்கையான சவாலை அல்ல. திட்டமிடப்பட்ட, கொடூரமான ஓர் இனவொழிப்பை.  இந்த இனவொழிப்பை அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது பெருஞ்சோகம் மட்டுமல்ல, மிகப்பெரிய அநீதியும்கூட.

நான் அகதி! - 5 - யார்  அகதி?

டொனால்ட் ட்ரம்ப் போன்ற ஓர் அதிபரைப் பெற்றிருந்தபோதும் அமெரிக்க அரசு இயந்திரத்தின் துணையை அமெரிக்கர்களால் பெறமுடிந்தது. ஆங் சான் சூச்சீ போன்ற ஒரு தலைவரைப் பெற்றிருந்தபோதும் ரோஹிங்கியா மக்களின் துயரம் முடிவுக்கு வரவில்லை. ஆக, எப்படிப் பார்த்தாலும் அமெரிக்கர்களும் ரோஹிங்கியாக்களும் ஒன்றல்லர். அவர்கள் சந்திக்க நேர்ந்த துயரங்களும் ஒன்றல்ல. வீட்டை இழப்பதும் நாட்டை இழப்பதும் ஒன்றல்ல. எனவே, இருவருக்கும் ஒரே பெயர் பொருந்தாது.

அதே அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் வசிக்கிறார் குசோன் அல் ஹசன். சிவப்பு, வெள்ளை, நீலம் மூன்றும் கலந்த கட்டம் போட்ட ஹிஜாபை அவர் அணிந்திருந்தார். ``நான், என் கணவர், என் இரு குழந்தைகள் அனைவரும் சிரியாவில் வாழ்ந்துவந்தோம். ஒரு நாள் அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெறுவதைப் பார்த்தோம். என் தம்பிக்கு 27 வயது. அவன் கேமராவைக் கொண்டு போராட்டத்தைப் படம் எடுத்துக்கொண்டிருந்தான்.  அவன் மட்டுமன்று, பலரும் தங்களுடைய மொபைலில் படம் எடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். சிலர் வீடியோவும் எடுத்தார்கள். அதற்குப் பிறகு அது நடந்தது. அரசுப் படைகள் எல்லோரையும் தாக்க ஆரம்பித்தார்கள். போராடுபவர்களை, அமைதியாக நின்று வேடிக்கை பார்ப்பவர்களை, பிறகு படம் பிடிப்பவர்களையும். என் தம்பியை என் கண் முன்னால் கொன்றார்கள்.’’

நடுக்கத்தை மறைத்துக்கொள்ளவோ என்னவோ அடிக்கடி தன் ஹிஜாபை அவர் தொட்டுப்

நான் அகதி! - 5 - யார்  அகதி?

பார்த்துக்கொண்டார். `‘சிரியாவை விட்டு வெளியேறவேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தது அதற்குப் பிறகுதான்.’’ இதே முடிவைத்தான் சிரியாவைச் சேர்ந்த, கிட்டத்தட்ட 12 மில்லியன் பேர் எடுத்திருந்தனர். அவர்கள் அனைவருமே சிரியாவை விட்டு வெளியேறத் துடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் முகத்தை மூடிக்கொண்டு துப்பாக்கியைத் தோளில் சாய்த்தபடி வீதிகளில் நடைபோட்டுக் கொண்டிருந்தனர். எங்காவது ஒரு பாடலின் ஒலி கேட்டால் அங்கே குண்டு ஒன்றை வீசினார்கள். முகத்தை மூடாமல் ஒரு பெண் குழந்தை வாயிலுக்கு அருகில் வந்து நின்றாலும், நிறுத்தி நிதானமாகச் சுட்டுத் தள்ளினார்கள். அரசை எதிர்க்கிறேன், அமெரிக்காவை எதிர்க்கிறேன் என்றெல்லாம் முழங்கினாலும் அவர்கள் உண்மையில் சிவிலியன்களைத்தான் வேகமாக அழித்துக்கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை அழிக்கிறேன் என்று சொல்லி சிரியாவை ஆளும் பஷார் அல் ஆசாத் மீண்டும் சிவிலியன்களைத்தான் அழித்துக்கொண்டிருந்தார். 

குண்டுகள் ஓயாமல் வந்து விழுந்தபடி இருக்கின்றன. அவற்றை வீசும் கரங்கள் யாருக்குச் சொந்தமானவை என்பதை ஆராய்வது வீண். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்நியர்களாக இருக்கிறார்கள். ஆசாத்தின் ராணுவத்தினர் சுதேசிகள். ஆனால், இருவருடைய கரங்களும் குண்டுகளைத்தான் எடுத்து வீசிக்கொண்டிருக்கின்றன. இருவருமே சீருடை அணிந்துகொண்டிருக்கிறார்கள். இருவருமே சிவிலியன்களைக் கொல்லத் தயங்காதவர்களாக இருக்கிறார்கள். இருவருமே அதிகார வேட்டை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இருவரிடமும் பெருங்கனவு ஒன்று இருக்கிறது. அந்தக் கனவு அச்சமூட்டக்கூடியதாக இருக்கிறது. அதை அடைய அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் மதத்தைத் துணைக்கு அழைத்துக்கொள்கிறது. ஆசாத் அரசு அமைப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார்.  அப்படிச் செய்யும்போது மதம், அரசமைப்பு இரண்டுக்கும் அவர்கள் பெரும் தீங்கை இழைக்கிறார்கள். ஆனால், அதைப்பற்றி இருவருக்குமே கவலையில்லை.

சிரியர்களைப் பொறுத்தவரை இரு வாய்ப்புகள் மட்டுமே இருந்தன. ஒன்று நீங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பால் கொல்லப்படலாம், அல்லது குசோன் அல் ஹசனின் சகோதரரைப் போல் அரசப் படையால் கொல்லப்படலாம். இருவரிடமிருந்தும் தப்பவேண்டுமானால் பிறந்த நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். இதற்குத் தயாராக இல்லை என்பதாலேயே பலர் சிரியாவின் மண்ணை முத்தமிட்டபடி  சுருண்டுகிடந்தனர்.  இறந்தாலும் என் நாட்டை விட்டு வெளியேறமாட்டேன் என்று திடமாகச் சொல்லிவிட்டார்கள் அவர்கள்.

நான் அகதி! - 5 - யார்  அகதி?
நான் அகதி! - 5 - யார்  அகதி?

ஆனால், குசோன் அல் ஹசனால் அப்படிச் சொல்லமுடியவில்லை. தாய்நாட்டை நேசிப்பதற்கு என்ன விலை கொடுக்கவேண்டும் என்பதை அவர் அறிவார். ``என் சகோதரன் சிரியாவின் மண்ணை விரும்பியவன், அவன் ரத்தம் அதே மண்ணில் சிந்தப்பட்டதை நான் பார்த்தேன். என் மண்ணில் அவன் ரத்தம் பீய்ச்சியடிக்கப்பட்டிருக்கிறது. சிரியா என்றால் எனக்கு இனி குருதியே நினைவுக்கு வரும். உலர்ந்து மண்ணோடு மண்ணாகிப்போன குருதி. என் பாதங்களை அங்கே இனி என்னால் பதிக்கமுடியாது. என் தாய்நாட்டை நான் நேசிக்கிறேன். ஆனால், அது வேட்டை விலங்குகளின் பிடியில் இப்போது சிக்கியிருக்கிறது. என் பாதங்களை அங்கே இனி பதிக்கமுடியாது. என் பிஞ்சுக் குழந்தைகளை விலங்குகளிடமிருந்து காப்பாற்றும் திராணி எனக்கோ என் கணவருக்கோ இல்லை. என் முடிவை என் நாடு புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.”

அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார் குசோன் அல் ஹசன். லெபனான் சென்று அங்கிருந்து படிப்படியாக முன்னேறி, முறைப்படி விண்ணப்பித்து, முறைப்படி விசா பெற்று அமெரிக்கா செல்வதே அவர் திட்டம். ஆனால், லெபனானில் குடும்பம் பிரியவேண்டியிருந்தது. அனைவருக்கும் அனுமதி கிடைக்கவில்லை என்பதால் கணவனை விட்டுவிட்டு, தன் குழந்தைகளை மட்டும் அள்ளியெடுத்துக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தார் குசோன் அல் ஹசன். ‘`என் பாதை நீண்டு நீண்டு சென்றுகொண்டிருந்தது. புரியாத பிரதேசங்களை எல்லாம் கடந்துகொண்டிருந்தேன். புரியாத மொழிகள் என் காதுகளை நிரப்பிக் கொண்டிருந்தன. யாரைப் பார்த்தாலும் அச்சம். என் குழந்தைகளை யாராவது கடத்திவிடுவார்களோ என்று அஞ்சினேன். எங்களை யாராவது கொன்றுவிடுவார்களோ, சிறைப்படுத்தி விடுவார்களோ என்று அஞ்சிக்கொண்டே இருந்தேன்.’’

மத்தியக் கிழக்கு நாடுகளைக் கிட்டத்தட்ட முழுக்க அவர் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. சைப்ரஸ் சென்று அங்கே சிறிது காலம் தங்கியிருந்துவிட்டு ஆவணங்கள் கிடைத்ததும் இணைந்துகொள்வதாகக் கணவர் சொல்லியிருந்தார். அவரைப் பற்றிய கவலையும் குசோன் அல் ஹசனை அரித்துக்கொண்டிருந்தது. இடையில் நம்பிக்கை வெளிச்சம் அளிக்கும் சில மாற்றங்கள் நடைபெற்றன. `அரபு வசந்தம் தொடங்கிவிட்டது குசோன், எல்லாம் மாறப்போகிறது’ என்று சிலர் ஆறுதல் சொன்னார்கள். எகிப்தில் ஆட்சி கவிழ்ந்துவிட்டது. துனிஷியாவில் ஆட்சி கவிழ்ந்துவிட்டது. கவிழ்த்தவர்கள் யார்? உன்னையும் என்னையும் போன்ற சாமானியர்கள். மக்கள் புரட்சி வெற்றிபெற்றுவிட்டது குசோன். பீரங்கிகளையும் ஏவுகணைகளையும் மக்கள் வென்றுவிட்டார்கள். நாளை சிரியாவிலும் இது நடக்கலாம். ஐஎஸ்ஐஎஸ் கலையலாம். ஆசாத் பதவி விலகலாம். நாம் மீண்டும் வீட்டுக்குத் திரும்பலாம். என்ன சொல்கிறாய்?

ஏதுமற்றிருந்த குசோனை இந்தக் கனவு நிரப்பத் தொடங்கியது. ஆனால், வெகு விரைவில் அவர் விழித்துக்கொண்டுவிட்டார். அரபு வசந்தம் சிரியாவைத் தொடுவதற்கு முன்பே இறந்துபோயிருந்தது. சிரியாவில் வன்முறை அதிகரித்திருக்கிறது, திரும்பிவந்துவிடாதே என்றொரு செய்திதான் அவருக்கு வந்தது. மன்னிக்கவும், உன் தந்தை இறந்துவிட்டார் என்று இன்னொரு செய்தி. முகம் முழுக்க கண்ணீருடன் குசோன், அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்தார். அது அப்போது ஒபாமாவின் அமெரிக்காவாக இருந்ததால் அதிக சிரமமின்றி அனுமதி கிடைத்துவிட்டது. வாக்குறுதி அளித்தபடி அவர் கணவரால் குடும்பத்துடன் இணையமுடியவில்லை. அவர் சிரியாவுக்குத்தான் திரும்பிச் செல்லவேண்டியிருந்தது.

எனில், நீங்களும் சிரியாவுக்குத் திரும்புவீர்களா என்று கேட்கப்பட்டபோது குசோன் தன் ஹிஜாபை அழுத்தமாகப் பற்றிக்கொண்டார். ‘`நான் இனி சிரியா திரும்புவதாக இல்லை. ஆட்சி மாறினாலும் சிக்கல் தீர்ந்தாலும் சிரியாவுக்கு நான் திரும்பப்போவதில்லை. என் சகோதரன், தந்தை, உறவினர்கள், நண்பர்கள்  அனைவரையும் சிரியா விழுங்கிவிட்டது. அங்கே எனக்கு இனி எதுவும் இல்லை. என் வேர்களைப் பிடுங்கியெடுத்துவந்து இங்கே நட்டுவிட்டேன்.” தன் குழந்தைகளை அணைத்துக்கொள்கிறார் குசோன். ‘`என் நாட்டுக்காக நான் கடவுளைத் தொழுவேன். ஆனால் திரும்பிச் செல்லமாட்டேன்.”

நவோமும் அவருடைய நாய்க்குட்டியும் வசிக்கும் அதே அமெரிக்காவில்தான் குசோனும் அவர் குழந்தைகளும் வசிக்கிறார்கள். நவோமின் துயரம் வெள்ளம் வடிந்ததோடு முடிவுக்கு வந்துவிட்டது.  குசோனின் துயரம் முடிவற்றது. சிரியா அவரைக் கைவிட்டுவிட்டது.  ஹிஜாப் அணிந்த குசோனால் ஒருபோதும் அமெரிக்கராக மாற முடியாது. எனவே அவர் அகதி.

- சொந்தங்கள் வருவார்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism