Published:Updated:

அன்பின் ஆர்வலர்கள்!

அன்பின் ஆர்வலர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பின் ஆர்வலர்கள்!

தமிழ்ப்பிரபா, படங்கள்: மீ.நிவேதன்

அன்பின் ஆர்வலர்கள்!

தமிழ்ப்பிரபா, படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
அன்பின் ஆர்வலர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
அன்பின் ஆர்வலர்கள்!

ன்னை அழைத்துக்கொண்டுவந்த சுஜீத்திடம், எத்தனை நாய்கள் உள்ளே இருக்கிறதெனக் கேட்டேன். “கம்மிதான். ஐம்பத்தேழு இருக்கும்” என்றார்.  உள்ளே செல்லுவதற்கு பயந்துகொண்டு கம்பிகளின் வழியாகப் பார்த்தேன். ஒரு பெண், அங்கிருந்த நாயின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி,  கைக்குழந்தையைக் கொஞ்சுவது போல அதன் நெற்றியைத் தடவிக்கொண்டிருந்தார். சற்று அருகில் சென்றேன். அந்த நாயின் உடலிலுள்ள அனைத்து ரோமங்களும் உதிர்ந்து, தோல் சுருங்கிப்போய் ரணமாகி இருந்ததைக் காண முடிந்தது. பார்வையை விசாலப்படுத்தியதும் அந்த அறையிலுள்ள அனைத்து நாய்களும் அதே நிலைமையில் இருப்பது தெரிந்தன.

“தைரியமா உள்ள வாங்க, ஒண்ணும் பண்ணாதுங்க” என்று ஒரு நாய்க்கு ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டிக் கொண்டே சொன்னார் இன்னோர் இளைஞர். அது சந்தோஷத்தில் தன் காதுகளைச்  சிலுப்பிய  சத்தம்   மடமடவென்று கேட்டதில், அவர் அருவியில் நனைவதுபோல முகம் குளிர்ந்தார்.  “ப்ரோ, நானும் இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் டைம் வரேன். என்ன ஏதாச்சும் பண்ணுச்சுங்களா பாருங்க” என்று இன்முகத்துடன் சொல்லியபடி ஒரு நாயின் முதுகைத் தடவிக்கொண்டிருந்தார் இன்னொரு பெண். அவர் தடவிக்கொண்டிருந்த நாயின் சருமம் பல இடங்கள் பிய்ந்து இரத்தப் புண்களே அதன் உடலாகக் காட்சியளித்தது. சென்னை வேளச்சேரியிலுள்ள ப்ளூகிராஸ் காப்பகத்தின் Manage Dogs பிரிவில்தான் இந்தக் காட்சிகள்.

அன்பின் ஆர்வலர்கள்!

நம் உள்ளத்தில் மனிதாபிமானம் ஊற்றெடுத்ததும் அதைக் காண்பிக்கிற இடமாக நாம் பெரும்பாலும் தேர்வு செய்வது ஆதரவற்ற முதியோர் இல்லம், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் காப்பகம் என இந்தமாதிரி இடங்களாகத்தான் இருக்கும். மனிதன்மீது நமக்கு இருக்கும் அன்பு விலங்குகள்மீதும் இருக்கிறதா?  உடற்குறைபாடுள்ள விலங்குகளின் நலத்தைப் பற்றி நமக்கு அக்கறை குறைவு. ஆனால், நம்மைப்போன்ற சக மனிதர்கள் அந்தப் பிராணிகளுக்கு நேசக்கரம் நீட்ட வாரந்தோறும் வந்துவிடுகிறார்கள்.

ப்ளூகிராஸில் நாய், பூனை, குதிரை, மாடு, முயல், காகம், அணில் என ஏறத்தாழ இரண்டாயிரம் விலங்குகள் இருக்கின்றன. அவையனைத்தும் ஆதரவற்ற, விபத்தில் காயமடைந்த, பிறவிக் குறைபாடுடைய என்று ஏதோவொரு வகையில் மற்றவர்களின் உதவியை நாடும் சூழலில் இருக்கின்றன. விலங்குகளைப் பராமரிக்க வேலைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் எனினும் போதுமானதாக இல்லை. தினமும், வாரந்தோறும் அங்கு வரும் தன்னார்வலர்களால்தான் அந்தப் பிராணிகளின் ஆயுட்காலம் கூடுகின்றன. அவர்களால்தான் ப்ளூகிராஸ் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.

உள்ளே நுழைந்து சென்றதும் வலதுபுறத்தில் குட்டிப்பூனைகளின் முனகல் அதிகமாக இருந்தது. அங்கே சில இளம்பெண்கள் அந்தக் குட்டிகளைத் தூக்கி எடுத்துக் கொஞ்சிக்கொண்டும், திரவ உணவுகளை வழங்கிக்கொண்டுமிருந்தார்கள். அங்கிருந்த ஒரு பெண்ணிடம் பேசியதும்,  “நடிகைங்க நாய்க்குட்டிய தத்தெடுத்தாத்தானே நீங்க நியூஸா போடுவீங்க?’’ என்றவர் முகத்தில் புன்னகை ததும்ப  “பரவாயில்லையே, எங்களையும் வந்து பாக்குறீங்களே” என்றார். “நாலு வருஷமா என்னோட வீக்கெண்ட்ஸ் இங்கதான் செலவழிச்சிட்டிருக்கேன். என் வீட்லயும் பெட்ஸ் இருக்கு. ஆனா, இவங்களை வாரம் ஒரு வாட்டியாவது வந்து பாக்கலைன்னா எனக்கு ஒரு மாதிரி இருக்கும்” என்றவர், திரும்பவும் பூனைக்குட்டிகளின் மேல் கவனம் செலுத்தத் தொடங்கினார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அன்பின் ஆர்வலர்கள்!

பார்வையிழந்த சாம்பல் நிறப் பூனையை ஒருவர் தன் தலைக்கு மேல் தூக்கி, அதனுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். மூன்று கால்களுடன் இருந்த பூனை, அதைப் பார்க்க வந்த இளைஞருடன் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தது. தலையில் வெட்டுக்காயத்துடன் இருந்த பூனையின் தலையில் ஒரு சிறுவன் களிம்பு தடவிக் கொண்டிருந்தான். அங்கிருந்த பணியாள் ஒருவரிடம், ‘ஏன் எல்லாப் பூனையும் ஏதோ ஒரு குறையோடவே இருக்கு’ எனக் கேட்டதற்கு, அவர் சலிப்புடன், “நீங்க வேற. இதுங்கள உயிர் பொழைக்க வெச்சதே பெரிய விஷயம். சென்னையில் மட்டும் 650 ஆம்புலன்ஸ் மனுஷங்களுக்கு இருக்கு.  ஆனா, பிராணிகளுக்கு ஆறு ஆம்புலன்ஸ்தான் இருக்கு. இங்க ப்ளூகிராஸ்க்கு மட்டும் ஒரு நாளுக்கு முந்நூறு கால்ஸ்கிட்ட வருது. எப்படி சார் டைமுக்குப் போக முடியும். நல்ல மனுஷங்க கண்ணுல இதுங்க பட்டுச்சுன்னா அவங்களே ஆட்டோவோ, டாக்ஸியோ புடிச்சு வந்து விட்டுட்டுப் போவாங்க. இல்லாட்டி இவங்களுக்குக் கடைசி நாள் அன்னிக்கு தான். தயவுசெஞ்சி அடிபட்ட பிராணிகள எங்காச்சும் பாத்தீங்கன்னா எப்டியாவது அதுகள இங்க கொண்டு வந்து சேத்துடுங்க. வண்டிக்காசுகூட நாங்க தந்துடுவோம்” என்றார் கெஞ்சலாக.

இன்னும் சில விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கையில் அவர் சம்பளத்தை அறிந்தபோது ஆச்சர்யமாக இருந்தது. “இதெல்லாம் சம்பளத்துக்காகச் செய்ற வேலை இல்ல ப்ரதர். நம்மளும் இல்லன்னா இதுங்க நிலைமைய யோசிச்சுப் பாருங்க. நானாவது பரவாயில்ல, அங்க போயிப் பாருங்க, சிரங்குபிடிச்சுப்போய் இருக்கிற நாய்கள பாக்கவே ரொம்ப இதுவா இருக்கும். அதுங்களத் தொட்டுக் குளிப்பாட்டி விட அந்த செக்ஷன்ல ஒரு லேடி வேலை செய்றாங்க. அவங்களுக்கு வேற வேலை தேடிக்கத் தெரியாதா என்ன?” என்றவரிடம் சொல்ல பதிலேதும் இல்லை.

``சுனாமி சமயத்துல கார்ப்பரேஷன்ல இருந்து நிறைய பன்றிகள் இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போனாங்க. அதுங்க, அதுகளோட குட்டின்னு நாங்கதான் பாத்துக்கிறோம். மத்த விலங்குகளுக்கு உடம்ப தேத்திட்டோம்னா அதுங்களைக் கொண்டுபோய் விடுறமாதிரி பன்றிகளை விட முடியல. சென்னைல பெரிய பெரிய பில்டிங் கட்டுன அப்புறம் பன்றிங்க சுத்துனா அவமானம்னு நெனைக்கிறாங்க” என்றார், ப்ளூகிராஸில் பாதுகாப்புப் பணியில் இருந்த செக்யூரிட்டி அண்ணன்.

அன்பின் ஆர்வலர்கள்!

நேரம் கடக்க, தன்னார்வலர்கள் வர ஆரம்பித் தார்கள். அவரவர் தங்களுக்குப் பிடித்தமான பிராணிகளுக்கு சேவை செய்ய, குறிப்பிட்ட இடம் நோக்கி நகர்ந்தனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் சுஜீத் என்பவரைச் சந்தித்து அவரிடம் பேசினேன். “சின்ன வயசுல இருந்தே எனக்கு பிராணிகள்னா உயிர். எங்க அப்பா வீட்ல முயல், நாய், பூனைன்னு நெறைய வெச்சு வளர்த்தாரு. பெரிய வீடு. அப்புறம் அந்த வீட்டை நாங்க வித்துட்டு அபார்ட்மென்ட் போன பிறகு எங்களால் வளர்க்க முடியல. நான் பெருங்குடில ரெண்டு கிரவுண்டுக்கு ஒரு  வீட்டை வாடகைக்கு எடுத்து, அடிபட்டுக் கண்ணு, காலு போன பெரலைஸ்ட் ஆன பிராணிகளை ப்ளூகிராஸ்ல இருந்து வாங்கி வளர்த்துட்டிருக்கேன். வீட்ல இருபத்தைஞ்சு பூனைகள் இருக்கு. அஞ்சு நாய்கள் இருக்கு. நானே தெருவுல பாக்குறத எடுத்து வளர்த்துட்டிருக்கேன். டாக்டர்ஸ் அட்வைஸோட  அதுங்களுக்கு சிகிச்சை அளிச்சிட்டும் வர்றேன்’’ என்றவர், மெக்கானிக்கல் இன்ஜினீயர்.

“ஸ்கின் டிசீஸ் வந்த டாக்ஸ். ஆக்சுவல்லா அதுக்கு ரொம்ப சிம்பிளான ஒரு பிரச்னை, பூச்சி மாதிரி  ஒண்ணு அது ஒடம்புல கூடு கட்டும். அதை கேர் எடுக்க யாரும் இருக்க மாட்டோம். உடம்பெல்லாம் புண்ணாகி, முடியெல்லாம் கொட்டிப்போய் தெருவுலே தனியா சுத்திட்டிருந்து ஒரு வருஷத்துல செத்துப்போயிடும். அந்த நாய்களை எல்லாம் புடிச்சு இங்க கொண்டு வந்து ட்ரீட் பண்றோம். வாரத்துல ஒருநாள் ஸ்பெஷல் ஷாம்பூல குளியல் போட வெச்சு ஊசி போட்டோம்னா ஒரு மாசத்துல சரியாகிடும். அதுமாதிரி ஒரு அறுபது நாய்கள் எங்ககிட்ட இருக்கு. இந்தப் பிரிவுக்குப் பேர்தான் மேனேஜ் டாக்ஸ். எங்க தன்னார்வலர்கள் வாரம் ஒருநாள் இந்த நாய்களைக் குளிக்க வெச்சு, அதுங்க கூட இருப்பாங்க. பொதுவா ஐ.டி-ல வேலை செய்றவங்கள, காலேஜ் பசங்களையெல்லாம் வெளிய ரொம்ப தப்பா நெனச்சுட்டிருக்காங்க. ஆனா, யாருமே செய்யத் தயங்குகிற வேலைய அவங்க எவ்ளோ அன்போட செய்றாங்கன்னு உள்ள வந்து பாருங்க” என்று சொல்லி, அந்த அறையின் கதவை மெள்ளத் திறந்தார் சுஜித். நாய்கள் அவரைப் பார்த்ததும் தலை தூக்கி ஒன்றுபோலக் குரைக்க ஆரம்பித்தன. நான் உள்ளே செல்வதற்குத் தயங்கி வெளியே நின்றிருந்தேன். ஒருவிதமான கவுச்சிவாசம் காற்றை நிரப்பியிருந்தது.

உள்ளே இருப்பவர்களும் என்னைப் போன்ற மனிதர்கள்தாம் என்கிற எண்ணம் ஏற்பட்டதால், நுழைந்ததும் அங்கிருந்த நாய்கள் என்னை வந்து மோந்து ஏறிட்டுப் பார்த்தன. அவற்றின் கண்கள் சிவப்பு நிறத்தில் குழம்பாக இருந்தன. சிரங்கும், சீழும் பிடித்து சோகையான நிலையில் அவை இருந்தாலும் தேற்றுவதற்கு மற்ற உயிரினங்கள் இருப்பதால் மெல்லிய உற்சாகத்துடன் அங்கே சுற்றிக் கொண்டிருந்தன.

 “என் பேரு ஃபாருக்.  சோழிங்கநல்லூர்ல இருக்கிற ஒரு ஐ.டி கம்பெனியில வேலை செய்றேன் ப்ரோ. நீங்களே பாத்தீங்கள்ல, இந்த ஒரு அக்காவால என்ன பண்ண முடியும். அதுனாலே நாங்க கூட இருந்து அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவோம். என்னோட வீக்லி ஸ்பாட்டே இதான்” என்கிறார். எனக்கு அச்சம் முழுவதும் விலகாமல் தயங்கியபடியே நின்றிருக்க... “பாக்கத்தான் இவங்க ரொம்ப பயமுறுத்தற மாதிரி இருப்பாங்களே தவிர, பழகிட்டா கொழந்த மாதிரிங்க. அதுங்க குரைக்குறதுகூட, நாம அதுங்கள கண்டுக்கலன்னுதான். நீங்க போய் பக்கத்துல நில்லுங்க, நிறுத்திடும் பாருங்க” என்றார்.

விஷ்ணு என்கிற கல்லூரி மாணவர் ஆவேசத்துடன் பேசினார், “நாய்கள வளர்க்குறது பாசம், பாதுகாப்புங்கறதைத் தாண்டி அதை ஒரு வியாபாரத்திற்காகச் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இந்தியச் சூழலுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத நாய்களை இங்கே வளர்க்க ஆரம்பிச்சிருக்காங்க. குறிப்பா சொல்லணும்னா  சைபீரியன் ஹஸ்கின்னு ஒரு நாய். சைபீரியால குளிர் மைனஸ் ட்வெண்ட்டி, மைனஸ் பிஃப்ட்டினு இருக்கும். அந்த இயற்கைச்சூழல்ல வளர்ற நாயை இங்க கொண்டு வந்து வெச்சுட்டு வளர்க்குறாங்க. கேட்டா, ஏ.சி ரூம்ல தான் அதை வெச்சு வளர்க்கிறோம்னு சொல்றாங்க. பொருந்திப்போக முடியாத காரணத்தால் நுரையீரல் பாதிப்பு, சுவாசக்கோளாறு போன்ற நிறைய பிரச்னைகள் அந்த நாய்களுக்கு வரும். இப்படியெல்லாம் நாய்களைக் கொடுமைப்படுத்துறவங்களக் கேட்க யாரும் இல்ல” என்றார்.

``என் பெயர் ரம்யா. மின்ட்ல இருந்து வர்றேன். தெருநாய்க்கு வெச்ச விஷத்த என் பப்பியும் சாப்பிட்டதாலே இறந்துபோச்சு. வீட்ல இன்னொரு பப்பி இருக்கு. ஆனாலும் அதைப் பாத்துக்க எங்க வீட்ல மத்தவங்க இருக்காங்க. இதுங்களுக்கு யாரும் இல்லைல்ல... இதுங்களுக்கு நோய் இருக்குறது என் கண்ணுக்குத் தெரியல. இதுங்கமேல இருக்கற அன்புதான் எனக்குத் தெரியுது. அதுதான் என்னை இவங்களோட நெருங்க வைக்குது” என்ற ரம்யா, “இப்போதான் முதன்முறையா வர்றேன்” எனச் சொன்னபோது அவர் அந்த நாய்களிடம் காட்டிய அன்னியோன்யம் வியக்க வைத்தது.

அவர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த சமயத்தில் அந்த நாய்களுடன் நானும் பழகி விட்டேன். கையுறை அணிந்து அவைகளைத் தடவிக்கொடுத்தேன். மனதில் நிம்மதி படர்ந்தது. மற்ற உயிரினங்களின்பால் நேசங்கொண்டு அவற்றுக்கான வேலையை அர்ப்பணிப்புடன் செய்யும் மனிதர்களையும், தன்னார்வலர்களையும் சந்தித்த நாள் மறக்க முடியாதது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism