அடலசன்ட் அன்பு!

வ்வொரு மனிதரும் குழந்தையாகவே பிறக்கிறார். அப்படிப் பிறக்கிறவர்களுக்கு இயற்கை ஓர் இலக்கை நிர்ணயித்திருக்கிறது. வளர்ந்து பெரிய மனிதராவதே அது. சுய சார்புடையவர்களாக, சுய சிந்தனை

அடல்ட்ஸ் ஒன்லி - 5

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளவர்களாக, சுய விருப்பு வெறுப்புகள் கொண்டவர் களாக ஆவதே அதன் குறியீடுகள். மடியில் தவழ்ந்துகொண்டும், விரல் பிடித்து நடந்துகொண்டேவும் இருக்க, குழந்தை எப்போதும் குழந்தை இல்லை. இயற்கையின் விதிப்படி அது படிப்படியாக வளர்கிறது. சிறுவராகிறது, பருவ வயதை எய்துகிறது, இளைஞராகிறது, தனிமனிதராகத் தன்னை நிலை நிறுத்துகிறது. ஆனால், பெற்றோராகிய நமக்கு இது புரிவதே இல்லை. நம் வயிற்றில் பிறக்கிறது என்பதற்காகவே குழந்தைக்கு ஒரே பருவம்தான். எட்டு மாத மென்றாலும், எட்டு வயதானாலும், 18 ஆக மாறினாலும் 58-க்கு முதிர்ந்தாலும், பெற்ற மனம் அதை அங்கீகரிப்பதில்லை. பிள்ளைகள் ஒருபோதும் வயதில் பெற்றோரைத் தாண்டிப் போக முடியாது என்பதால் உடல், உணர்வு, அறிவு ரீதியாகக் குழந்தை எய்தும் பக்குவம் அவர்களுக்கு ஒரு பொருட்டாவதில்லை.

 குழந்தையின் வளர்ச்சியை அங்கீகரிக்க மறுப்பதுதான் வளர்ப்பில் நாம் செய்யும் முதல் தவறு. பெற்றோர் மட்டுமே முதன்மை எனப் பிள்ளைகள் நினைக்கும் ’குழந்தைப்பருவம்’ என்பது 8-9 வயது வரைதான். 10 வயதிலிருந்து வளர் இளம் பருவத்திற்குள் (அடலசன்ட் ஏஜ்) அவர்கள் அடியெடுத்து வைக்கின்றனர். அடலசன்ட் பருவத்திற்கான குழந்தைகளின் நடத்தை முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது என ஒரு மனவியல் ஆய்வு தெரிவிக்கிறது.

அடல்ட்ஸ் ஒன்லி - 5

அதாவது, குழந்தை பிறப்பதிலிருந்து தொடங்கி ஐந்தாண்டுகள் வரை அதன் மூளையில் என்ன தகவல்கள் ஸ்டோர் ஆகின்றனவோ அவற்றினடிப்படையில்தான் அடலசன்ட் வயதில் குழந்தைகள் நடந்துகொள்கின்றன. வளர் இளம் பருவத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கான காரணத்தை ஆயிரக்கணக்கான மூளைச்செல்களில் தேங்கிய தகவல்களைக் கொண்டு அது ஆராய்கிறது. ஐந்து வயது வரை சேமிக்கப்பட்ட தகவல்கள் நேர்மறையானவையாக இருந்தால் டீனேஜ் பருவமும் பாசிட்டிவ்வாக அமைகிறது. கோபப்படுதல், தாழ்வு மனப்பான்மை, சண்டை போடுதல் என நெகட்டிவ்வாக இருந்தால், அதன் குழந்தைப்பருவத்தில் கோளாறு என்று அர்த்தம். குழந்தை பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் ஒவ்வொருவரும் இதை மனதில் நிறுத்த வேண்டும்.

 ‘Child is father of the man’ என்பது கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் புகழ்பெற்ற வாசகம். ஒவ்வொரு மனிதரும் தனது குழந்தைப்பருவப் பழக்கவழக்கங்கள், நடத்தை மற்றும் பண்புநலன்களின் விளைவு என்பதுதான் இதற்கு அர்த்தம். கண்களை உருட்டி, போட்ட இடத்தில் போட்டபடி, கைகாலை மட்டும் அசைத்து, பொக்கை வாயைக் காட்டிக் கொண்டி ருந்தாலும், குழந்தையால் தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் உள்வாங்க முடியும். இந்த ஆத்திசூடியை ஒவ்வொரு பெற்றோரும் கற்க வேண்டும்.

 பொதுவாக, குழந்தை வளர்ப்பில் நமக்கு நல்ல முன்மாதிரிகள் இல்லை. நம் பெற்றோர் நம்மை வளர்த்ததை வைத்து ஓர் யூகத்தில் அதே வழிமுறைகளைக் கையாள்கிறோம். அல்லது நம் வயதில் இருப்பவர்களைப் பார்த்துப் போலச்செய்தலில் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை கொண்டது. அதோடு இன்றைக்கிருக்கும் கால மாற்றத்திற்குத் தக்கவாறு வளர்ப்பு முறையிலும் மாறுதல் செய்யப்பட வேண்டும். கருவுறும்போதே சில பெற்றோர் குழந்தைக்கு உடை வாங்கி வைப்பது, வங்கியில் பணம் போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். குழந்தை நல கவுன்சிலர்களைச் சந்தித்து ஆலோசனை பெறுவது, கூகுள் செய்து தெரிந்துகொள்வது, நூல்களைப் படிப்பது எனக் குழந்தை வளர்ப்பு குறித்து அறிவு பெற நாம் முயற்சி செய்வதில்லை.

அடல்ட்ஸ் ஒன்லி - 5

அடலசன்ட் பருவம், பெற்றோருக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும்கூட மிகவும் சிக்கலுக்குரிய காலகட்டம். உடல், மனம், அறிவு மூன்றும் இந்த வயதில்தான் மிக வேகமாக வளர்ச்சியடைகின்றன. சொல்பேச்சு கேட்பதில்லை, எதிர்த்துப் பேசுகிறான்/ள், வெளியில் சுற்றுகிறான்/ள், சரியாகச் சாப்பிடுவதில்லை, சரியாகப் படிப்பதில்லை, எப்பவும் கேட்ஜெட்ஸ் வைத்திருக்கிறாள்/ன் என, பெற்றோர் இந்த வயதிலிருந்துதான் புகார் வாசிக்கத் தொடங்குவர். அதற்கு முன்பும் குழந்தை சொல்பேச்சு கேட்டிருக்காது, எதிர்த்துப் பேசும், சாப்பிட மாட்டேன் என அடம்பிடித்திருக்கும். அப்போதெல்லாம் அது தவறாகத் தெரிந்திருக்காது. ஏனென்றால், மழலையில் ஒரு சார்புநிலையை (Dependency) குழந்தைகள் வெளிப்படுத்தும். அடலசன்ட் கட்டத்தில் அது தற்சார்பாக மாறுகிறது (Independency). தன்னை அண்டியே பிள்ளைகள் இருக்க வேண்டுமென்ற சர்வாதிகார உணர்வு பெற்றோருக்கு இருப்பதால், பத்து வயதில் வெளிப்படும் இண்டிப்பெண்டென்ஸி அவர்களுக்குப் பதற்றத்தை உண்டாக்குகிறது.

 வயது என்பது ஒரு பொதுவான கணக்குதான். சில பிள்ளைகள் பத்து வயதிற்கு முன்பேகூட அடலசன்ட் ஆகிவிடுவது உண்டு. அதே போல 19 வயது கடந்தும் சிலருக்கு இந்த வளர்ச்சி நீடிக்கும். அடலசன்ட் கட்டத்திற்குள் உங்கள் பிள்ளை வந்துவிட்டதை எப்படிக் கண்டுபிடிப்பது? நீங்கள் பரிந்துரைக்கும் பல விஷயங்களைக் குழந்தைகள் மறுக்க ஆரம்பிப்பதுதான் இதன் அறிகுறி. 

 உண்மையில், குழந்தையின் நோக்கம் பெற்றோரை அவமதிப்பது அல்ல; தன் சுயத்தை நிலைநாட்டுவது. அதன் நோக்கம் உங்கள் விருப்பத்தைப் புறக்கணிப்பது அல்ல; தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளுவது. நம் கைக்குள் இருந்து வெளியேறி, தன்னை ஒரு தனிமனிதராக நிலைநிறுத்திக்கொள்ளும் வளர்ச்சி அடலசன்ட் பருவத்தில்தான் தொடங்குகிறது. இந்தியப் பெற்றோருக்கு வளர் இளம் பருவ மாற்றம் குறித்த புரிதல் மிக மிகக் குறைவு. நமது குடும்ப மற்றும் சமூக அமைப்பில் குழந்தை வளர்ப்பு குறித்த நவீன முறைகள் பற்றி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பே இல்லை. அன்று குழந்தைகள் கேட்டால் எதுவும் கிடைக்காது; இன்று கேட்டால் எதுவும் கிடைக்கும் என்பதுதான் குழந்தை வளர்ப்பில் நாம் கண்டிருக்கும் பரிணாம வளர்ச்சி. குழந்தையின் உடல்/மன/அறிவு ஆரோக்கியம் குறித்து நமக்கு எதுவுமே தெரியாது அல்லது எல்லாவற்றையும் தப்புந்தவறுமாக அறிந்து குழந்தைகளை டார்ச்சர் செய்கிறோம்.  

 வளர் இளம் பருவத்தில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. உயரம் கூடுகிறது. தசைகள் திரண்டு வருகின்றன. உடல் கொழுப்பு பரவிப் பங்கீடாகிறது. மார்பகங்கள் வளர்ச்சி, அந்தரங்கப் பகுதிகளில் முடி வளர்தல், இடுப்பு எலும்பு விரிதல், மீசை/தாடி வளர்தல் போன்ற இரண்டாம் பாலியல் குறியீடுகள் தோன்றுகின்றன. அதுமட்டுமல்ல, நரம்பு மண்டலமும் வளர்ச்சியடைகிறது. பருவமெய்துதல், பாலுணர்வு தோன்றுதல் நடக்கின்றன. தான் ஆண் என்றும், பெண் என்றும் மாறுபட்ட பாலீர்ப்பு உள்ளதையும் அடலசன்ட் பருவத்தில்தான் குழந்தை கண்டறிகிறது. `ஆம்பளையா கம்பீரமா நடந்துக்கோ, பொம்பளையா அடக்க ஒடுக்கமா நடந்துக்கோ’ என்பது போன்ற பாலியல் விதிமுறைகள்தாம் குழந்தைகளுக்கு அந்த வயதில் நாம் கற்பிக்கும் ஒரே பாடமாக இருக்கின்றன.

 ஆனால், அடலசன்ட் பருவம் என்பது ஒரு `எக்ஸ்ப்ளோரிங்’ காலகட்டம். குழந்தையின் மூளை தன் முழு ஆற்றலைக் கொண்டும் சிந்திக்கத் துவங்குகிறது. ஹார்மோன்கள் சுரப்பு உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கிறது. பயம், மூர்க்கம், உற்சாகம், பாலீர்ப்பு போன்ற உணர்வுகளால் அலைக்கழிக்கப்படுதல் நடக்கிறது. அதனால், தன் வயதொத்தவர்களுடன் அதிக நேரம் செலவிடுவதை விரும்புகின்றனர். உலகமே தன்னைக் கவனிப்பதாய்த் தோன்றும்.

அடல்ட்ஸ் ஒன்லி - 5

அண்மையில் பொம்மைக் கடைக்கு மகளின் தோழியின் அம்மாவுடன் சென்றிருந்தேன். இரண்டு பிள்ளைகளும் எங்களுடன் இருந்தார்கள். `இது ஓகேவா பாரு’ என ஒரு பொம்மையைக் காட்டினார் அவளின் அம்மா. அந்தச் சிறுமி அதைக் கவனிக்காமல், செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தாள். `எப்பப் பாரு போனையே பார்த்திட்டிரு. எவ்ளோ நேரமா கேட்குறேன்’ என அவர் சொன்னதுதான் தாமதம், அவள் டென்ஷனாகிவிட்டாள். `இப்போ எதுக்கு கத்தி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துற’ என அழுகையோடு கேட்டாள். நான் சுற்றிலும் பார்த்தேன். அங்கு யாருமே இல்லை. கடையில் வேலை செய்பவர்கூட தூரத்தில் கவுன்ட்டரில்தான் இருந்தார். `இங்க யாருமே இல்லையே. எதுக்கு இப்படி அழுவுற’ என்று அவள் அம்மா பரிதாபமாகக் கேட்டார். வெளியே வரும்போது `இருந்தாலும் அந்த ஆன்ட்டி பப்ளிக் ப்ளேஸ்ல அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுல்லம்மா’ என்றாள் என் மகள்.

 இதுதான் அடலசன்ட் உலகம். ஆக்ஸிடோஸின் என்ற ஹார்மோன் அதிகளவில் சுரப்பதால், உலகமே தன்னை கவனிப்பதாகத்  தோன்றுகிறது. நாமும் அப்படியான அவஸ்தைகளைக் கடந்துதானே வந்திருக்கிறோம். இந்த வயதில்,  உடலும் துடிப்போடு பரபரவென்றிருக்கும். உணர்வெழுச்சி, வயதொத்தவர்கள் முன் நிரூபித்தல் போன்ற காரணங்களுக்காக, ரிஸ்க் எடுப்பதை அதிகம் விரும்புவார்கள். நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, பள்ளியில் புதிதாக  ஒரு  கட்டடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். விடுதி மாணவிகள் அனைவரும் மாலை 5-6 விளையாடுவது வழக்கம். பூச்சு வேலை நடந்த அக்கட்டடத்தின் மாடியில் ஏறி வேடிக்கை பார்க்கலாம் எனத் தோன்றியதால் நாங்கள் ஒரு ஏழெட்டுப் பேர் அங்கே போனோம். கீழே மணல் குவித்து வைத்திருந்தார்கள். ரம்யா என்ற தோழி, இங்கேயிருந்து யாராவது அந்த மணலில் குதிக்க முடியுமா என்று சவால்விட்டாள். அவள் குரல் காதில் விழுந்த நொடி நான் முதல் ஆளாகக் குதித்துவிட்டேன். அவ்வளவு தான் என் பின்னால் எல்லோருமே தொப் தொப்பென்று குதித்தனர். ஒரு தோழிக்கு மட்டும் கால் பிசகிவிட்டதால் விஷயம் வார்டனுக்குத் தெரிந்து, முழங்கால் போட வேண்டியதாகிவிட்டது.

 இதை ஏன் சொல்கிறேன் என்றால், அந்த வயதில் இது சாதாரணம். பின்னர் யோசிக்கும் போது, அவ்வளவு உயரத்திலிருந்து எப்படிக் குதித்தேன் என மலைப்பாக இருந்தது. ரிஸ்க் உணர்வுக்கு ஆண், பெண் வித்தியாசமெல்லாம் இல்லை.  ஆனால், பெண் குழந்தைகளைக் கட்டுப்பாடுகளாலேயே வளர்ப்பதால் உளவியல் ரீதியாக, தான் இதையெல்லாம் செய்யக் கூடாது என அமைதியடைகின்றனர். பையன்களை நாம் கட்டுப்படுத்துவதில்லை. ஆழம் பற்றிக் கவலைப்படாமல் ஆற்றிலோ குளத்திலோ குதிப்பது, வேகமாக வாகனத்தை ஓட்டுவது என ரிஸ்க் எடுக்கின்றனர். செய்திகளில் பார்க்கிறோமே, `ஆற்றில் மூழ்கி பலி. கடலில் அலை இழுத்துப் போனது’ என்று. இவர்களின் வயதைக் கவனித்தால் தெரியும். அதே போல வாகன விபத்துகளுக்கும் அதிகளவில் வளர் இளம் பருவத்தினர் காரணமாக இருக்கின்றனர். இப்படிச் செய்யாதே, அப்படிச் செய்யாதே என்று தடுக்கும் பெற்றோர் ஒரு விஷயத்தை எப்படிச் சரியாகச் செய்ய வேண்டுமென வழிநடத்துவதில்லை.

 குழந்தைகள் தவறு செய்தால் நூறு சதவிகிதப் பொறுப்பும் பெற்றோருக்குத்தான். கெட்டுப் போகும் அளவுக்குச் செல்லங்கொடுப்பது, வெறுத்துப்போகும் அளவுக்கு ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுவது என இந்த இரண்டு நிலைகளில்தான் பெற்றோர் இயங்குகின்றனர். இரண்டுமே குழந்தைகளுக்குக் கேடுதான் என்கிறார் டெல்லியைச் சேர்ந்த பிரபல குடும்ப நல நிபுணர் செட்ரிக் எம். கென்னி. தனது `Love Without Spoiling, Discipline Without Nagging’ நூலில் இது குறித்த ஒரு சமூகவியல் ஆய்வையே நிகழ்த்தியிருக்கிறார். பெற்றோர் எல்லோரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

 குழந்தைகளின் பாலுணர்வும் பாலியல் நடவடிக்கைகளும் பாலியல் ஈர்ப்பும் பெற்றோருக்கு அதீத கோபத்தை உண்டாக்குகின்றன. நமக்குத்தான் அது குழந்தை. ஆனால், தான் வளர்ந்துவிட்டதாகவே குழந்தை நினைக்கிறது. அது உண்மையும்கூட. நாம் புரிந்து கொள்ள வேண்டியது, அடலசன்ட் வயதில் நிகழும் பல்வேறு மாற்றங்களில் இதுவும் ஒன்று. அவ்வளவுதான். நாம் கொஞ்சம் பெருந்தன்மையோடும் அன்போடும் வழிநடத்தினால் குழந்தை அதை எளிதாகக் கையாளப் பழகிக் கடந்துவிடும். ஆனால், குழந்தைகளின் அந்தரங்கத்தை மதிப்பது நமது கலாசாரத்திலேயே இல்லை.  குழந்தைகளுடன் விளையாடவோ உரையாடவோ தயாராக இல்லாத பெற்றோர் வேவு பார்க்க மட்டும் போதுமான நேரத்தைச் செலவழிக்கின்றனர்.

 என் தங்கை கல்லூரியில் படித்தபோது, அவள் தோழியின் தங்கையை வீட்டுக்கு அழைத்து வந்தாள். `அம்மா அப்பாவோட எப்பப்பாரு சண்டை போடுறா. அவகிட்ட நீ பேசுறயா?’ என்று கேட்டாள்.  10 ஆம் வகுப்பு படித்த அந்தக் குழந்தையுடன் அன்றிரவு நிகழ்ந்த உரையாடலை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. நாங்கள் நிறைய பேசினோம்.

 மொட்டை மாடியில் அமர்ந்து நட்சத்திரங்களைப் பார்ப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால், பெற்றோருக்குப் பிடிக்கவில்லை. அப்பா அம்மாவை தான் மிகவும் நேசிப்பதாகக் கூறினாள். அவள் ஒரு லட்சியவாதி என்பது சற்று நேரத்திலேயே புரிந்துவிட்டது. பேசிக் கொண்டிருக்கும்போதே அமைதியாகி, சில நிமிட இடைவெளிக்குப் பின், ‘எனக்கு செக்ஸ் பண்ணணும்னு அடிக்கடி தோணுது’ என்றாள். ஒரு நொடி ஸ்ட்ரக் ஆகி சட்டென சுதாரித்தேன். என் கண்களிலோ, குரலிலோ எந்த மாற்றமும் தென்பட்டுவிடாமல், `அது ரொம்ப இயல்பான உணர்வுதான்’ என்றதும், அவள் என்னை ஏறெடுத்துப் பார்த்தாள். பின் சட்டென அழத் தொடங்கினாள். வெகு நேரம் அழுதாள். `இது பிராப்ளம் இல்லையா?’ எனக் கேட்டாள். `இல்லவே இல்லை. ரொம்ப நேச்சுரல்’ என்றேன். ``இந்த ஃபீலிங் வரும்போதெல்லாம் நான் தப்பு பண்ற மாதிரி ஃபீல் பண்றேன்’ என்றாள். `நீ எந்தத் தப்பும் பண்ணல. ஆனா உன்னை நீ இப்போ டைவர்ட் பண்ணிக்கணும். உனக்குப் பிடிச்ச வேற விஷயங்கள்ல கவனம் செலுத்து. வீட்லயே அடைஞ்சுகிடக்காத. டயர்ட் ஆகிற வரை விளையாடு’ என எனக்குத் தெரிந்த பதில்களைச் சொன்னேன். மறுநாள், எனக்குத் தெரிந்த குழந்தை நல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றேன். கவுன்சிலிங் அவளுக்குத் தன் உணர்வுகளைக் கையாள உதவியது.

 ``டீன் ஏஜ் பிள்ளைகள் எப்போதும் வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருக்கின்றனர். தன் வாழ்க்கைப் புத்தகத்தைத் திறந்து எதைப் பற்றிப் பேசவும் அவர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால், அதே உரையாடலைப் பெரியவர்களுடன் நிகழ்த்தினால் அதில் நிறைய பொய்கள் இருக்கும். தன்னுடைய நம்பிக்கைகளையும் செயல்களையும் பற்றிப் பேசும்போது, மற்றவர்கள் தன்னைப் பற்றி நல்ல விதமாக நினைக்க வேண்டும் என மெனக்கெடுகின்றனர். அதனால் அவர்கள் பேச்சில் நிறைய பொய்கள் கலக்கின்றன’’ என்கிறார் கென்னி.

 நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருப்பதுதான் பருவ வயதின் அடிப்படை. அதைத்தான் நாம் திமிர் என்று புரிந்துகொள்கிறோம். பருவ வயதுப் பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது எதைத் தெரியுமா?  அங்கீகாரம். `நீ செய்தது சரிதான்’ என்கிற இந்த வார்த்தைகள் மந்திரக்கோல்போலக் குழந்தைகளை ஆட்டுவிக்கும். பெற்றோரின் கடமை குழந்தைகளுக்குப் புதிய அழுத்தங்களைக் கொடுப்பது அல்ல, எல்லாவகையான பிரச்னைகளிலிருந்தும் விடுவிப்பது, வெளியேறி வர உதவுவது.

 இந்த வாழ்க்கை மிகவும் உன்னதமானது, இந்த உலகம் நாம் வாழ்வதற்கான எல்லா நல்ல விஷயங்களையும் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கையைக் குழந்தைகள் பெற வேண்டும். அந்த நல்லுணர்வை பெற்றோரைத் தவிர யார் அளித்துவிட முடியும்?

- நிறைய பேசுவோம்...

வளர் இளம் பருவப் பிள்ளைகள் கொண்ட பெற்றோருக்கு...

அமைதியாக இருங்கள். குழந்தையிடம் தென்படும் பருவ மாற்றங்களைக் கவனியுங்கள். நீங்கள் பார்க்கும் அத்தனை விஷயங்களும் வளர்ச்சியின் அறிகுறியே. பதற்றப்படாதீர்கள்.  

திறந்த மனதுடன் இருங்கள். முன் அனுமானங்கள் வேண்டாம். `அப்படிச் செய்கிறாய்... இப்படிச் செய்கிறாய்’ எனப் புகார் வாசிக்காதீர்கள்.

பேசுவதைக் குறைத்து, கேட்பதை அதிகப்படுத்துங்கள். குழந்தை பேசும்போது மரியாதையுடனும் கனிவுடனும் கவனியுங்கள். அப்போது அது தொடர்ந்து பேசும்.

குழந்தையின் நண்பர்களை விமர்சிக்காதீர்கள். தோற்றம், பொருளாதார நிலை, சமூகப் பின்னணி என எது குறித்தும் தாழ்வாகப் பேசாதீர்கள். நட்பை மதித்தால் கைம்மாறாக உங்களுக்கு அது நிறைய கிடைக்கும்.

எல்லாக் குழந்தைக்கும் ஏதேனும் திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். உங்களுக்குப் பிடிக்காது என்பதற்காகவோ, பண மதிப்பு இல்லை என்பதற்காகவோ அதன் திறமையை மட்டம் தட்டாதீர்கள்.

குற்றம் சுமத்தாதீர்கள்.

தோற்றத்திற்கு அதீத முக்கியத்துவம் அளிப்பார்கள். அதனால் ஒரு தவறும் இல்லை. 

குழந்தை பொய் சொன்னால் அதற்கு நீங்களே காரணம்!

குழந்தை முன் சண்டை போடாதீர்கள், கெட்ட விஷயங்களை, கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள். அன்பும் மதிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் இடமாக வீட்டை மாற்றுங்கள்.

 குழந்தையுடன் நேரம் செலவழியுங்கள். பொருள்களால் அன்பை ஈடு செய்யாதீர்கள். பயணம் கூட்டிப் போங்கள். விளையாடுங்கள்.

எதிர்த்துப் பேசக் கூடாது, கோபப்படக் கூடாது, மரியாதை தர வேண்டுமென நீங்கள் குழந்தையிடம் எதிர்பார்த்தால், அதை முதலில் நீங்கள் பின்பற்றுங்கள்.

சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது எல்லாம் த்ரில்லுக்காகத்தான் பருவ வயதில் தொடங்குகிறது. பின்னர் அதுவே பழக்கமாகிறது. வீட்டில் யாருக்கேனும் இந்தத் தீய பழக்கங்கள் இருந்தால், அவர்களை ரோல் மாடலாகக் குழந்தை எடுத்துக்கொள்ளும்.

வளர் இளம் பருவம் – பொதுவான நலப் பிரச்னைகளும் காரணங்களும்

1.  குழப்பம் - பெரியவர்களாகப் பொறுப்புகளை ஏற்பது, குழந்தையாகத் தன் விருப்பங்களை நிறைவேற்றுவது இரண்டுக்கும் இடையில் அல்லாடுவது.

2.  உணர்ச்சிவசப்படுதல் – ஹார்மோன்களே உபயம். எமோஷனலாக இருப்பார்கள். கோபம், மகிழ்ச்சி, கவலை என எந்த உணர்வு வந்தாலும் டூ மச் ஆக இருக்கும்.

3.  மூட் ஸ்விங் - தங்கமாய்ப் பேசுவார்கள். திடீரென எரிந்துவிழுவார்கள். இதுவும் ஹார்மோனின் வேலைதான்.

4.  மன அழுத்தம்/பதற்றம் – பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆதரவாக இல்லாததால் உண்டாகிறது. விளையாட்டு மறுக்கப்படுவதால் செரட்டோனின் ஹார்மோன் சுரப்பு தடுக்கப்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கிறது.  

5. சிகரெட், மதுப் பழக்கம் – குடும்பப் பிரச்னை, மன அழுத்தம், படிப்புச் சுமை, நட்பில் முறிவு போன்றவையே போதையைத் தேடிப் போகச் செய்கின்றன.

6. சத்துக் குறைபாடு – படிப்பு, டியூஷன், பிற வகுப்புகள் என ஓடிக்கொண்டே இருப்பதாலும், தோற்றம் குறித்துக் கவலைப்படுவதாலும் உணவுப் பழக்கம் சீர்குலைகிறது.

7. மாதவிலக்குக் கோளாறுகள்: அதீத உதிரப்போக்கு, உதிரப்போக்கின்மை, வயிற்றுவலி போன்றவை உடல் மற்றும் மனச் சோர்வை உண்டாக்குகின்றன. பசி, தூக்கம், ஓய்வு ஆகியவை சரியாகக் கையாளப்பட்டால் சரியாகிவிடும்.

8.   உடல் பருமன் – விளையாட்டு இல்லாதது, பசித்து உண்ணாதது, தூக்கமின்மை மூன்றும் எடையைப் பெருக்குகிறது. 

9.  தூக்கமின்மை – குழப்பமான மனநிலை, உறவுச் சிக்கல், பாலுணர்வு, சத்துக் குறைபாடு, குடும்பச் சூழல் எனப் பலவும் இதற்குக் காரணமாகின்றன.

10. வன்முறை – முரட்டுத்தனம்தான் வீரம் என்ற மூட நம்பிக்கையைக் கற்பிக்கும் கலாசாரம். திரைப்படங்களின் உந்துதல். குடும்பச் சண்டைகளின் விளைவு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism