Published:Updated:

கோலி 25

கோலி 25
பிரீமியம் ஸ்டோரி
கோலி 25

பரிசல் கிருஷ்ணா

கோலி 25

பரிசல் கிருஷ்ணா

Published:Updated:
கோலி 25
பிரீமியம் ஸ்டோரி
கோலி 25

கோபக்கார இளைஞன். இந்திய கிரிக்கெட்டின் போஸ்டர் பாய். ஆடும் ஒவ்வொரு மேட்சிலுமே அப்டேட் ஆகிறது கிரிக்கெட் வரலாறு. `சச்சினுக்குப் பிறகு யார்?’ என்ற கேள்விக்கு ரன்களால் பதில் சொன்ன அதிரடி பேட்ஸ்மேன் கோலியின் வின்னிங் 25 இங்கே!   

கோலி 25

1   வரும் நவம்பர் ஐந்தாம் தேதி தனது 29-வது பிறந்தநாளைக் கொண்டாடவிருக்கும் கோலி பிறந்தது டெல்லியில். அப்பா கிரிமினல் வழக்கறிஞர். அண்ணன், அக்காவுக்குப் பிறகு பிறந்த கடைக்குட்டி கோலி.

  2    சச்சின், ஷேவாக், கங்குலி, அசாருதின் ஆகியோரின் பேட்டிங் ஸ்டைலைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். அதனால்தான் கோலியிடம் நான்கு பேரின் ஸ்டைலையும் பார்க்கமுடியும். 

  3  மிகவும் துடுக்கான, எல்லாவற்றுக்குமே கொந்தளிக்கும் டீன்ஏஜ் பையன்போல மைதானத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவராக இருந்தாலும், பேட்டிங்கில் கோலி காட்டும் நிதானம் ராகுல் டிராவிட்டிடம்கூடப் பார்க்காத ஒன்று. இன்றைய தேதிக்கு கிரிக்கெட்டை இவ்வளவு நேர்த்தியாக ஆடும் ஒரே பேட்ஸ்மேன் கோலி மட்டுமே.

  4  ‘‘நான் கிரிக்கெட் ஆடத்தொடங்கியபோது மிகவும் பேஷனோடு, ஆர்வத்தோடு ஆடத்தொடங்கினேன். ஆனால், சின்ன வயது என்பதாலோ என்னவோ, என்னுடைய ஃபோகஸை பாதியில் இழந்துவிட்டேன். என் அப்பாவின் திடீர் மரணம் என்னுடைய கவனத்தை மீண்டும் கிரிக்கெட் பக்கம் கொண்டுவந்தது. ஆனால், ஐபிஎல் கொண்டாட்டம் என்னை மீண்டும் பார்ட்டிகளுக்கு அழைத்துச்சென்றது. என்னுடைய ஆட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டேன். அந்த நிலையிலிருந்து இன்று இந்தியாவின் கேப்டனாவதற்காக நான் கொடுத்த உழைப்பு நானே எதிர்பார்க்காதது’’ என்பார் கோலி.

  5    டாட்டூக்களின் அதிதீவிர ரசிகன். உடலில் பல இடங்களில் டாட்டூக்களைப் பார்க்கலாம். தனது நட்சத்திரம், பெற்றோர் பெயர்கள், தியானத்தில் இருக்கும் சிவன் என்று பலவற்றில் அவருக்குப் பிடித்த டாட்டூ, இடது கையில் அவர் பதிந்திருக்கும் வாளுயர்த்தி இருக்கும் சாமுராய் டாட்டூதான்.

  6    விராட் கோலியின் முதல் க்ரஷ், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர். ஆனால், அவருக்கு மிகவும் பிடித்தவர் ஸ்பானிய நடிகையும் மாடலுமான, பெனலோப் க்ரூஸ்.

  7     பந்துகளை பயமின்றி அனாயாசமாக எதிர்கொள்ளும் கோலிக்கு, பயம் ஒரே விஷயத்தில்தான். அது, உயரம். “எது என்னமோ... சின்ன வயசுல இருந்து, உயரம்னா பயம்” என்பார்.

  8   
களத்தில் கோபப்படுபவர், ஆக்ரோஷமானவர் என்ற பெயர் இவருக்குண்டு என்பது சொல்லத் தேவையே இல்லாத விஷயம். ஆனால், அந்தக் கோபம் பற்றி இவர் சொல்வது என்ன தெரியுமா? “என் கோபம்தான்... என் பலம்!”

9   டஸ்டர், ஃபார்ச்சூனர், ஆடி சீரிஸில் 6, 7, 8 என்று பல கார்கள் வைத்திருந்தாலும், கோலியின் கனவுக் கார் ஆஸ்டன் மார்ட்டின்.

 10   பல பாராட்டுகளைப் பெற்றாலும், விராட் பிரியமாய் நினைப்பது விவியன் ரிச்சார்ட் சொன்னது. விராட் கோலி தன்னைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார் ரிச்சர்ட்ஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோலி 25

  11    டெல்லியில், கர்நாடகாவுக்கு எதிராக ரஞ்சி போட்டியின்போது, கோலி 40 ரன்களில் இருக்க அந்த நாளின் போட்டி நிறைவுக்கு வந்தது. அன்று இரவு, திடீரென கோலியின் தந்தை மரணமடைந்துவிட்டார். பலத்த மனப்போராட்டங்களுக்குப் பிறகு அடுத்தநாள் மைதானத்துக்குச் சென்று ஆட்டத்தைத் தொடர்ந்து, 90 ரன்கள் எடுத்தார். பேட்டிங் முடிந்ததும் நேராக அப்பாவின் இறுதிச்சடங்கில் சென்று கலந்து கொண்டார். விளையாட்டுத்தனமாய் இருந்த தன் வாழ்வை மாற்றிய தருணமாக இதைக் குறிப்பிடுவார் கோலி.

  12    கிரிக்கெட்டுக்கு அடுத்து ஃபுட்பால், டென்னிஸ் இரண்டுமே பிடித்த விளையாட்டுகள். இந்தியன் சூப்பர் லீகின் கோவா டீமின் இணை உரிமையாளராகவும், டென்னிஸில், UAE ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார்.

  13   அணியில் கோபம், சண்டைகள் எல்லாம் தாண்டி, விராட் கோலியின் இணைபிரியா நண்பன் ஷிகர் தவான். டெல்லி அணிக்காக ரஞ்சி விளையாடும் காலத்திலிருந்து நண்பர். தன்னைப்போலவே கோபக்காரர் என்று ஆரம்பித்து இருவருக்குள்ளும் அப்படி ஒரு பிணைப்பு.

  14    எந்த பெளலரையும் எளிதில் சமாளிக்க புதிய புதிய டெக்னிக்குகளைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகம். யாருடைய பெளலிங்கை எதிர்கொள்ளச் சிரமப்படுவீர்கள் என்ற கேள்விக்கு விராட் கோலி சொல்லும் பதில்: தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன்.

  15    பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கும் விராட், தனது மனதுக்குப் பிடித்த சாதனையாகக் குறிப்பிடுவது, தனது முதல் உலகக்கோப்பைப் போட்டியிலேயே சதம் அடித்தது.

  16    இவரது செல்லப்பெயர்: ச்சிக்கூ! “ச்சிக்கூ... ஒரு செல்ஃபி ப்ளீஸ்’ என்று ரசிகர்கள் அதிக உரிமையாக அழைக்கிறார்கள். காரணம் தோனிதான்” என்பார் கோலி. ஒரு போட்டியில், ஸ்டெம்ப் மைக்கில் சத்தமாக தோனி கூப்பிட்டதுதான் காரணம்.

  17     ஃபிட்னஸுக்கு மிகமிக முக்கியத்துவம் கொடுப்பார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் வொர்க் அவுட்தான். “130 கோடி பேரின் பிரதிநிதிகளாக இருக்கும் 15 பேரில் ஒருத்தராக இருக்கிறேன். அதை நியாயப்படுத்துவது என் கடமை” என்பார்.

  18    உணவுப் பிரியர். அம்மா சமைக்கும் பஞ்சாபியின் ஃபேமஸான ‘ராஜ்மா சாவல்’ அவருக்குப் பிடித்த உணவு. பட்டர் சிக்கனும் பிடித்த உணவாக இருந்தது. ஆனால், கடந்த மூன்று வருடங்களாக சிக்கன் சாப்பிடுவதை விட்டுவிட்டார்.
 
  19    விராட் கோலி சொல்லும் பன்ச்: “தினமும் கடின உழைப்பை வெளிப்படுத்தினால், யாருக்கும் பதில் சொல்லத் தேவையிருக்காது!”

கோலி 25

  20    உலகத்தில் எந்த நாட்டுக்கும் போகப்பிடிக்கும் என்பவர், போக விரும்பும் இடமாகக் குறிப்பிட்டது, விண்வெளியை. “அங்கே போய் என்ன இருக்கிறதென்று பார்க்க ஆவல்” என்கிறார் கோலி.

  21    கோலியின் ஃபேவரிட் ஸ்டார்ஸ், ஹாலிவுட்டின் ஜானி டெப், ஏஞ்சலினா ஜோலி. பாலிவுட்டில் அமீர்கான், ஐஸ்வர்யா ராய். இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு லைக்ஸ் அதிகம்.

  22    நேரம் கிடைக்கும்போது டிவியும் பார்ப்பதுண்டு. குறிப்பாக சீரிஸ் ரசிகர். அமெரிக்காவின் த்ரில்லர் சீரிஸான ‘ஹோம்லேண்ட்’ (Homeland) கோலியின் ஃபேவரிட். அடுத்த இடத்தில் இருப்பது ப்ரேக்கிங் பேட். (Breaking Bad.)

  23
    ஹேர்ஸ்டைலை அடிக்கடி மாற்றிக் கலக்குவார். சில வருடங்களுக்கு முன், இவரது ஹேர் ஸ்டைல் பரவலாகப் பேசப்பட்டு, “யார் அந்த ஹேர் ஸ்டைலிஸ்ட்?” என்று பலரும் கேட்டார்கள். அமைதி காத்தவர், சில மாதங்களுக்குப் பிறகு உண்மையைப் போட்டுடைத்தார். முயன்று பார்க்கலாம் என்று அவர் தனக்குத் தானே வெட்டிக்கொண்டதுதான் அந்த ஸ்டைல்!

  24    ‘`கிரிக்கெட் பேட் என்பது, எனக்கு  பொம்மை கிடையாது; என்னுடைய ஆயுதம். அதுதான் என்னை இந்த உலகுக்கு அடையாளம் காட்டியது; எனக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது. அந்த ஆயுதத்தை எப்போதும் என் கையில் வைத்திருப்பேன். அதை யாரும் என்னிடமிருந்து அவ்வளவு எளிதில் பறித்துவிட முடியாது!” என்பார் கோலி.

  25  
   டிரஸ்ஸிங்கில் மிகவும் ஆர்வம் கொண்ட கோலிக்குப் பிடித்த டிரஸ்ஸிங் ஆளுமை, அமெரிக்காவின் பாடகரும் நடிகருமான ஜஸ்டின் டிம்பர்லேக். (Justin Timberlake)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism