வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (04/09/2018)

கடைசி தொடர்பு:17:11 (04/09/2018)

``அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாச் சிலம்பம் கற்றுக்கொடுக்கிறேன்!" - `சிலம்பம்' சூர்யா

ஆகஸ்ட் 29-ம் தேதி, 'வீரத்தமிழ் புரட்சிப் பெண்கள் நலச் சங்கம்' சார்பில், செங்கொடி அவர்களின் நினைவாக 10 பெண் ஆளுமைகளுக்கு விருது கொடுத்தாங்க. அதில், 'டாக்டர் அனிதா' விருது எனக்கு வழங்கப்பட்டது.

ரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்யணும்னு நினைச்சேன். அதைத்தான் இப்போ செஞ்சுட்டிருக்கேன்'' எனப் புன்னகைக்கிறார், சூர்யா. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்தவர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்குச் சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறார். தவிர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும் சிலம்பம் கற்றுக்கொடுக்கிறார்.

'சிலம்பம்' சூர்யா

"என் சொந்த ஊர், பொன்னேரி. சின்ன வயசுலேயே அப்பா இறந்துட்டாங்க. அம்மா கூலி வேலை பார்த்து என்னையும் அக்காவையும் படிக்கவெச்சாங்க. அரசுப் பள்ளியில்தான் படிச்சோம். என் தாய்மாமா ஹரிதாஸ், சிலம்பம் மாஸ்டர். அவர்கிட்ட சின்ன வயசிலிருந்து நானும் அக்காவும் சிலம்பம் கத்துக்கிட்டோம். அவர் மற்றவர்களுக்குச் சிலம்பம் கற்றுக்கொடுத்து அதில் கிடைக்கும் பணத்தில்தான் எங்களைப் படிக்கவெச்சார். மாமா உதவியால்தான் இப்போ எம்.பில் படிக்கிறேன். என் அக்காவுக்குக் கல்யாணமாயிடுச்சு. நானும் அக்காவும் சேர்ந்து பல சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று வருகிறோம்.

இதுவரை மாவட்ட அளவில் 32 போட்டிகளிலும், ஸ்டேட் லெவலில் 25 போட்டிகளிலும் ஜெயிச்சிருக்கேன். 10 நேஷனல் போட்டிகளில் முதல் பரிசைத் தட்டிருக்கேன். ஜிம்னாஸ்டிக், கராத்தே, யோகா, பறையாட்டமும் எனக்குத் தெரியும். எங்களுடைய 'சுப்பிரமணிய ஆசான் சிலம்பக்கூடம்' மூலமா பலரும் சிலம்பம் கத்துக்கிறாங்க. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, என்னையும் அக்காவையும் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க. அங்கே எங்களுடைய சிலம்பாட்டத்தைப் பார்த்துப் பலரும் பாராட்டினாங்க. அமெரிக்கத் தமிழர்கள் 'எங்களுக்கும் சிலம்பம் கத்துக்கொடுங்க'னு கேட்டாங்க. எங்க கலைக் குழு சார்பாக, அங்கிருக்கும் இரண்டு மாகாணங்களுக்குப் போய் பயிற்சி கொடுத்தோம். இப்போ அமெரிக்காவில் எங்க மாணவர்கள் 75 பேர் இருக்காங்கன்னு சொல்லவே பெருமையா இருக்கு'' எனப் பூரிப்புடன் சொல்கிறார் சூர்யா.

சூர்யா

"எங்களைப் பற்றி கேள்விப்பட்டு, ஊரில் பல பெற்றோர்கள் அவங்க பசங்களை சிலம்பப் பயிற்சிக்குச் சேர்த்துட்டுப் போறாங்க. நான் அரசுப் பள்ளியில் படித்தவள். அந்தச் சூழல் எப்படி இருக்கும்னு தெரியும். தனியார் பள்ளியில் படிக்கும் பசங்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும்பாலும் கிடைக்கிறதில்லை. என்னை மாதிரி திறமை இருக்கும் மாணவர்களுக்கு என்னால் முடிஞ்ச உதவியைச் செய்யணும்னு முடிவு பண்ணினேன். கடந்த மூன்று வருஷமா அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி கொடுத்துட்டிருக்கேன். எல்லாக் குழந்தைகளும் ஆர்வமாக் கத்துக்கிறாங்க. சந்தோஷமா இருக்கு.

ஆகஸ்ட் 29-ம் தேதி, 'வீரத்தமிழ் புரட்சிப் பெண்கள் நலச் சங்கம்' சார்பில், செங்கொடி அவர்களின் நினைவாக 10 பெண் ஆளுமைகளுக்கு விருது கொடுத்தாங்க. அதில், 'டாக்டர் அனிதா' விருது எனக்கு வழங்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாப் பயிற்சி கொடுக்கிறதுக்காக இந்த விருது கிடைச்சது. அந்த விருதை வாங்கும் தகுதி எனக்கு இருக்கான்னு தெரியலை. ஆனால், அது எனக்கான பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கு. என் அம்மாவும் மாமாவும் கொடுத்த ஊக்கம்தான் இந்த அளவுக்கு என்னை உயர்த்திருக்கு. ஒருவேளைச் சாப்பாட்டுக்கு வழி இல்லாத சூழ்நிலையிலும் கல்வியையும் கலையையும் விடாமல் தொடர்ந்தேன். என் மாஸ்டர் மாதிரி இந்தச் சிலம்பக் கலையை வளர்க்கணும். நிறைய பேருக்குக் கற்றுக்கொடுத்து அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோகணும். அரசு வேலைப் பட்டியலில் சிலம்பத்தில் சாதிச்சவங்களுக்கு இடமில்லை என்பது வருத்தமா இருந்தாலும், இந்தக் கலையைப் பலர் கத்துக்க என்னால் முடிஞ்சதைச் செய்வேன்'' என நம்பிக்கை ததும்பப் பேசுகிறார் சூர்யா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்