Published:Updated:

நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு

நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு

மருதன்

‘ஒரு மனிதன் கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருக்கிறான்.  அருகில் ஒரு சிறுமி. கீழே தரையில் ஒரு சிங்கம் செத்து விழுந்து கிடக்கிறது. வீரனே, நீ ஒரு குழந்தையைக் காப்பாற்றிவிட்டாய் என்று எல்லோரும் அவனைப் பாராட்டுகிறார்கள். அப்போதுதான் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்பது தெரியவருகிறது. உடனே எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். ஓர் அப்பாவி சிங்கத்தை இந்தப் பயங்கரவாதி அநியாயமாகக் கொன்றுவிட்டான்!’ நேற்று எனக்கு வந்த வாட்ஸ் அப் இது என்று சொல்லி, தன் அருகிலிருந்தவரிடம் காண்பித்தார் காலித். அந்த அறையில் சிரிப்பொலி பரவுகிறது.

சிரியாவிலுள்ள ஹோம்ஸ் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் காலித். தற்சமயம் அவர் அமர்ந்திருப்பது

நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு

ஜோர்டானில் உள்ள கிழக்கு அம்மான் பகுதியில் அமைந்திருந்த ஒரு சமுதாயக் கூடத்தில். மொத்தம் பதினொரு பேர் அங்கே திரண்டிருந்தனர். அவர்கள் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள். சிலர் இராக்கிலிருந்தும் சிலர் சிரியாவிலிருந்தும் இன்னும் சிலர் வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். அனைவரும் இஸ்லாமியர்கள்.

அடர்த்தியான மீசையைக் கொண்டிருக்கும் அகமதுவின் வயது 54. தன்னைச் சுற்றி எழுந்த சிரிப்பலைகளை அவர் பொருட்படுத்தவில்லை. அவர் கையில் ஒரு பை. கத்தை கத்தையாகக் காகிதங்கள் அதிலிருந்து பிதுங்கிக் கொண்டிருந்தன.  வீட்டை விட்டு வெளியில் எங்கே போனாலும் அவற்றை அவர் அள்ளியெடுத்துக்கொண்டு சென்றாகவேண்டும். இராக்கிலுள்ள ஃபலூஜா என்னும் இடத்தைச் சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரங்களை அவர் வைத்திருந்தார். தான் இராக்கிலிருந்து வெளியேறிவிட்டவன் என்பதற்கான அத்தாட்சி அவரிடம் இருக்கிறது. தனக்கு எந்த நாடும் இல்லை, தான் ஓர் அகதி என்பதற்கான அதிகாரபூர்வமான சான்றுகளையும் அவர் வைத்திருந்தார். இந்த மூன்றையும் தேவைக்கேற்ப அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யார் எப்போது எதைக் கேட்பார்கள் என்று சொல்லமுடியாது என்பதால், ஒரு தேநீர் குடிக்கப் போகவேண்டுமென்றாலும் பையோடுதான் அவர் சென்றாக வேண்டும். அந்தப் பையைத் தொலைப்பது எதிர்காலத்தையும் கடந்தகாலத்தையும் ஒருசேரத் தொலைக்கும் செயல் என்பதால் ஒரு கையில் பிடித்துக்கொண்டேதான் இன்னொரு கையால் அவர் தேநீரையும் அருந்தியாக வேண்டும்.

நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு

அகமது அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். ஃபலூஜாவில் இருந்த ஓர் உள்ளூர்ப் பத்திரிகை அலுவலகத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். நடப்பு அரசியலை உன்னிப்பாகக் கவனித்து அவர் கட்டுரைகள் எழுதிவந்தார். இராக்கைப் பொறுத்தவரை நடப்பு அரசியல் என்பது போரை மையப்படுத்தியே இயங்கிக்கொண்டிருந்தது. இன்று நேற்றல்ல, இராக் ஒரு போர்க்களமாக மாறிப் பல ஆண்டுகள் ஆகின்றன. மூன்று காரணங்கள்:

முதலில் சதாம் உசேன். பக்கத்து நாடான குவைத்தைத் தன் பூட்ஸ் காலால் மிதித்து நசுக்கிவிடமுடியும் என்னும் நம்பிக்கையுடன் போர் இயந்திரத்தை ஏவி விட்டார் சதாம். முன்னதாக, 1980 தொடங்கிப் பக்கத்து நாடான இரான் நாட்டின்மீது இராக் விட்டுவிட்டுப் போர் தொடுத்துக்கொண்டிருந்தது. எது இரு நாடுகளுக்குமான எல்லை என்பதில் ஆரம்பித்த தகராறு. குவைத்தைப் பொறுத்தவரை அதைத் தனியொரு நாடாகவே அவர் கருதவில்லை. இராக்கின் ஓர் அங்கம்தான் என்று சொல்லிவந்தார் அவர். அதைக் குவைத் ஏற்றுக் கொள்ள மறுத்தபோது, உலக வரைபடத்திலிருந்து அந்தச் சின்னஞ்சிறிய நாட்டை அகற்றிவிட முடிவெடுத்தார் சதாம். அப்படியே இரானையும். இரண்டும் சாத்தியமாகவில்லை என்றாலும், இராக் சிதறத் தொடங்கியது.

இரண்டாவது, ஜார்ஜ் புஷ்.  செப்டம்பர் 11 தாக்குதலுக்குச் சதாம்தான் காரணம் என்று சொல்லி இராக்குக்குள் நுழைந்தன அமெரிக்கப் படைகள். பயங்கர ஆயுதம் எதுவும் அங்கே அகப்படவில்லையென்றாலும் சதாம் நீக்கப்பட்டார். ஆனால், சதாமைவிடப் பல மடங்கு அதிக அழிவை அமெரிக்காவால் ஏற்படுத்த முடியும் என்பதை இராக்கியர்கள் கண்கூடாகத் தெரிந்துகொண்டனர். மூன்றாவது காரணம் அல் கொய்தா. சிதறிக்கொண்டிருக்கும் நிலத்தில்தான் வலுவாகக் காலூன்ற முடியும் என்பது அல் கொய்தாவுக்குத் தெரியும் என்பதால், அவர்களும் தங்கள் பங்குக்கு இராக்கைச் சிதறடிக்க ஆரம்பித்தனர்.

மே 2011-ல் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டபோது அல் கொய்தாவின் கதை அத்தோடு முடிவுக்கு வந்துவிடும் என்று பலரும் நினைத்தனர். ஆனால், அல் கொய்தா தொடர்ந்து தன் கரங்களை வலுப்படுத்திக்கொண்டே சென்றது. ஜனவரி 2014-ல் ஃபலூஜா அல் கொய்தாவின் பிடிக்குள் சென்றது. அது அகமதுவின் நகரம். அகமதுவுக்கு நெருக்கமான நகரம். தன் நகரமும் நாடும் மெல்ல மெல்ல இறந்துகொண்டிருப்பதை அவர் கண்டார். சதாமின் மறைவுக்குப் பிறகு இராக்கிய அரசு அமெரிக்காவின் செல்ல நாயாக மாறிவிட்டது. ஒசாமாவின் மறைவுக்குப் பிறகு அல் கொய்தா அடிபட்ட புலியாக மாறிவிட்டது. புலி, நாய் இரண்டுமே ஒன்றையொன்று எதிர்த்துக் கொண்டிருக்கின்றன. இராக்கைப் பொறுத்தவரை இவை இரண்டுமே ஆபத்தானவை. இரண்டுமே எதிர்க்கப்பட வேண்டியவை. இரண்டின் பிடியிலிருந்தும் சிவிலியன்கள் மீட்கப்பட்டாக வேண்டும்.

ஃபலூஜாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை இராக்கிலுள்ள மற்ற நகரங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். என் நாட்டுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகம் அறிந்துகொள்ள வேண்டும். எனக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம், பேனா. என் பேனாவைக் கொண்டு இராக்கிய அரசின் செயலற்ற தன்மையை நான் பதிவுசெய்ய வேண்டும். என் பேனாவைக் கொண்டு அமெரிக்காவின் சட்டவிரோத அத்துமீறல்களை உலகறியச் செய்ய வேண்டும். இதே பேனாவைக் கொண்டு அந்நிய பயங்கரவாத சக்தியான அல் கொய்தாவின் ஆக்கிரமிப்பு களையும் நான் படம் பிடித்தாக வேண்டும். இவ்வளவையும் செய்துமுடிக்கும் திறன் இருக்கிறதா என் பேனாவுக்கு?  திறனைவிட முக்கியம் துணிச்சல். அது அகமதுவிடம் மிகுதியாக இருந்தது. செய்திக் கட்டுரைகளைத் தொடர்ந்து அவர் எழுதிக்கொடுத்துக்கொண்டே இருந்தார்.

நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு

அப்போதுதான் அது நிகழ்ந்தது. அகமது பணியாற்றிக்கொண்டிருந்த பத்திரிகை அலுவலகம் ஒரு நாள் திடீரென்று காணாமல் போய்விட்டது. அல் கொய்தா ஆட்கள் குண்டு வீசித் தகர்த்துவிட்டார்கள் என்று தெரிந்துகொண்டார் அகமது. தன்னைப் பற்றித் தொடர்ந்து செய்தி வெளியிட்டுவந்த ஓர் எதிரியை அல் கொய்தா அழித்துவிட்டது.  தன்னுடைய பேனா அமைதியாக்கப்பட்டு விட்டதை உணர்ந்தார் அகமது. வேறொரு பத்திரிகையைக் கண்டறிந்து, தொடர்புகொண்டு செய்தி வெளியிடுவது இனி சாத்தியமில்லை. ஒரு பத்திரிகை அலுவலகத்தைக் குண்டு வீசி அழிக்கத் தெரிந்த இயக்கத்தால் இன்னொன்றையும் அதேபோல் அழிக்க முடியாதா என்ன?

அகமதுவோடு பணியாற்றிவந்த இன்னொரு பத்திரிகையாளரை அல் கொய்தா ஆட்கள் கண்டறிந்து நடு வீதியில் நிற்க வைத்துச் சுட்டுக்கொன்றுவிட்டார்கள். அப்போதுதான் அகமதுவுக்குப் புரிந்தது. அல் கொய்தா கண்மூடித்தனமாகத் தாக்கிக் கொண்டிருக்க வில்லை. தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களை வேட்டையாடிக் கொன்றுகொண்டிருக்கிறது. அப்படியானால் அதிகக் கட்டுரைகளை எழுதி வெளியிட்ட என்னையும் அவர்கள் இந்நேரம் தேடிக்கொண்டிருக்கலாம் இல்லையா?

நடந்தது அதுதான். தன் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அகமதுவைச் சிலர் வழிமறித்து நிறுத்தினார்கள். முகமூடி அணிந்த மூன்று பேர். அப்படியே கொத்தாகப் பிடித்து காரைத் திறந்து பின்னால் அகமதுவைப் போட்டு மூடிவிட்டு ஓட்டிச்சென்றுவிட்டார்கள்.  குலுங்கியோடிய வண்டியில் காலைக் குறுக்கிப் படுத்துக்கிடந்த அகமது  தன் வாழ்க்கை இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதை உணர்ந்தார். தன்னைச் சுட்டுக்கொல்வார்களா அல்லது கழுத்தை அறுத்துக் கொல்வார்களா என்பது மட்டும்தான் புரியாமல் இருந்தது.

இருள் படர்ந்திருக்கும் ஓர் அறையில் கொண்டுசென்று அகமதுவைத்  தள்ளினார்கள். ஓர் இருக்கையில் அவர் கட்டிப்போடப்பட்டார். அது ஒரு கட்டடத்தின் பாதாள அறை. அந்த அறையில் மேலும் சிலர் தன்னைப்போலவே சிறை வைக்கப்பட்டிருந்ததை அகமது உணர்ந்தார். பேச முடியாதபடிக்கு அவர்களுடைய வாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. கண்களும் கட்டப்பட்டிருந்தன.  அகமதுவைப் போலவே. கழிப்பறைக்குப்  போகக்கூட ஒருவருக்கும் அனுமதியில்லை என்பதால் அந்த இடம் சகிக்கமுடியாத நாற்றத்துடன் இருந்தது. உணவு கொடுக்கப்படவில்லை. அருந்த நீரில்லை. எப்போதும் அங்கே இருள்  மட்டுமே இருந்ததால் பகலா இரவா என்பதைக் கண்டறிய முடியவில்லை. மொத்தம் மூன்று நாள்கள் அகமது அந்த அறையில் கடும் பட்டினியில் கடும் நாற்றத்தில் கடும் மரண பயத்தில் உறைந்துகிடந்தார்.

பிறகு  அகமதுவின் முகத்தில் கட்டப்பட்டிருந்த துணி விலக்கப்பட்டது. தலைவர்போல் தோற்றமளிக்கும் ஒருவர் உள்ளே நுழைந்தார். கைவிளக்கைக் கொண்டுவரச் சொல்லி அகமதுவின் முகம் நெருக்கத்தில் ஆராயப்பட்டது. சில விநாடிகள்தாம். அந்தப் பத்திரிகை ஆசிரியர் வேறொரு ஆள், இவனில்லை என்று சொல்லிவிட்டார் அந்தத் தலைவர். முகமதுவின் முகத்தில் மீண்டும் கறுப்புத் துணி கட்டப்பட்டது. மீண்டும் காரில் அள்ளி வந்து போட்டார்கள். ஒரு மணி  நேரம் வண்டி குலுங்கியபடி பறந்தது. உடலெல்லாம் வலித்தது. பிறகு ஓரிடத்தில் நிறுத்தி அகமதுவைத் தூக்கி வெளியில் வீசிவிட்டு மறைந்துவிட்டார்கள். மெள்ள மெள்ள சுதாரித்துக்கொண்டு முதலில் தன் கைக் கட்டுகளை அவிழ்த்துக்கொண்டார். பிறகு முகத்தில் உள்ள துணியை விலக்கிக்கொண்டு சுற்றிலும் ஒருமுறை பார்த்தார். பிறகு தன் வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு

உடனடியாகத் தன் மனைவியை அழைத்துக்கொண்டு ஃபலூஜாவை விட்டு வெளியேற முடிவு செய்தார். இங்கிருப்பது இனியும் பாதுகாப்பானதல்ல. பத்திரிகை ஆசிரியரை வேட்டையாடி முடித்த பிறகு, அவர்களுக்கு என் பெயரும் அடையாளமும் தெரியவரலாம். அப்போது என்னைத் தேடுவார்கள். இன்னொருமுறை மரணத்தின் வாய்க்குள் சென்றுவருவது சாத்தியமில்லை. 2007-ம் ஆண்டு அகமதுவும் அவர் மனைவியும் ஜோர்டான் வந்துசேர்ந்தனர். இருவரும் இப்போது அகதிகள்.

‘என்னிடம் ஒன்றுமே இல்லை. ஒரே ஒரு பேனா வாங்க வேண்டும் என்று விரும்பினேன். முடியவில்லை. என்னால் ஜோர்டானில் வேலை எதுவும் செய்ய முடியாது. நான் அகதி என்பதால் பணியாற்றுவதற்கான ஆவணங்களை என்னால் பெறமுடியாது. ஒரே ஒரு பென்சில் மட்டும் வாங்கினேன். சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுத ஆரம்பித்தேன்.’ அந்தப் பென்சிலும் நோட்டும் எப்படிக் கிடைத்தது என்பதையும் அகமது விவரித்தார். ‘அகதிகளுக்காகப் பணிபுரியும் ஒரு தொண்டு நிறுவனத்துக்காகச் சிறிது வேலை செய்தேன். நான் பத்திரிகையாளர் என்பதால் வகுப்பு எடுக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது பென்சிலும் நோட்டும் கிடைத்தன.’

அகமது தன் பையை இறுக்கப் பிடித்தபடி அந்த அறையில் இருந்த மற்ற அகதிகளுடன் சேர்ந்து அமர்ந்திருந்தார். ‘நான் ஃபலூஜாவைச்  சேர்ந்தவன் என்பதற்கான அத்தாட்சியை எனக்கு யார் அளித்தது தெரியுமா? இராக்கை ஆக்கிரமித்த அதே அமெரிக்க ராணுவம்தான். பிறகு ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடமிருந்து எனக்கான அடையாள அட்டை வந்தது. பார்க்கிறீர்களா?’ தன்னிடம் அதுவரை உரையாடிக்கொண்டிருந்த அமெரிக்கப் பத்திரிகையாளரிடம் தன் ஆவணத்தை நீட்டுகிறார் அகமது.

அகமது ஜோர்டான் வந்துசேர்ந்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  இன்னமும் அவர் ஓர் அகதிதான். எந்த நாட்டுக்குச் செல்வது என்பதை ஓர் அகதி முடிவு செய்ய முடியாது. ஏதேனும் ஒரு நாடு அவரை ஏற்றுக்கொள்ள முன்வந்தால்தான் உண்டு. அப்படி ஏற்பதற்கு நேர்காணலில் தேர்ச்சிபெற வேண்டும். நீ ஃபலூஜாவில் என்ன செய்துகொண்டிருந்தாய்? அல் கொய்தாவுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? அல் கொய்தா ஏன் உன்னைக் கடத்த வேண்டும்? உன் தொழில் என்ன? நீ வேலை செய்த பத்திரிகை யாருடையது? அமெரிக்காவை விமர்சித்திருக்கிறாயா? மீண்டும் மீண்டும் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்து ஓய்ந்துபோய்விட்டார் அகமது.

நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு

அகமது மட்டுமன்று, அந்த அறையில் இருந்த 11 பேருமே ஏதேனும் ஒரு நாட்டிலிருந்து இன்றாவது அழைப்பு வராதா என்னும் எதிர்பார்ப்புடன் அங்கே காத்திருந்தனர். பல ஆண்டுகளாக அவர்கள் மீண்டும் மீண்டும் அந்த அலுவலகத்துக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய அகதி அட்டைகளைத் தொடர்ந்து புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து அவர்கள்  நேர்காணல்களில் பங்கேற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இன்னும் பத்தாண்டுகள் கழிந்தாலும்  அவர்கள் ஜோர்டானில் பணியாற்றவோ சம்பாதிக்கவோ முடியாது. முகாம்தான் ஒரே ஆதாரம். அவர்கள் எல்லோருமே தங்களுடைய படிப்பை, திறமையை அமைதியாக வீணடித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருமுறையும் நம்பிக்கையோடு எல்லா ஆவணங்களையும் அவர்கள் கொண்டு வருவார்கள். திரும்பிப் போகும்போது முகம் சோர்ந்துபோயிருக்கும். இதென்ன வாழ்க்கை,  இதற்குப் போரிலேயே செத்திருக்கலாமே என்று தோன்றும். பிறகு மீண்டும் சில வார இடைவெளியில் மலர்ந்த முகத்துடன் திரும்பி வருவார்கள்.

அகமது நினைத்துக்கொண்டார். நான் அகதியாக மட்டும் இருந்திருந்தால் ஒருவேளை  புகலிடம் கிடைத்திருக்கலாம். ஆனால், முஸ்லிமாகவும் இருந்துவிட்டதால் அப்பாவி சிங்கத்தைக் கொன்றவனாக என்னை எல்லோரும் பார்க்கிறார்கள். நாங்கள் வேட்டைக்காரர்கள் அல்லர், வேட்டையாடப்படுபவர்கள் என்று எப்படி இந்த உலகுக்குப் புரியவைப்பது?

- சொந்தங்கள் வருவார்கள்