Published:Updated:

“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்!”

“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்!”

ஆர்.சரண், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்!”

ஆர்.சரண், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

Published:Updated:
“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்!”
பிரீமியம் ஸ்டோரி
“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்!”

“நான்... சாதிக்கப் பிறந்தவன்! சாதிக்கவே பிறந்தவன்! நான் வாழும் காலத்திலும் வாழ்ந்த பின்னரும் என் பெயரை நிலைநாட்டிச் செல்வேன் நிச்சயமாய்! நான் தெருவில் இறங்கி நடந்து வரும்போது, இச்சமுதாயம் என்னை இரு கைகூப்பி வணங்கவேண்டும்! அதற்கு... என்னைத் தகுதிப்படுத்துவேன்... தராதரப்படுத்துவேன்... நிச்சயமாய்! சத்தியமாய்! நான் பிறந்தது... இறப்பதற்கல்ல! சாதிப்பதற்கே! சாதிப்பதற்கே!”- மைக் பிடித்து ஒரு மத போதகரின் தோரணையில் உறுதிமொழியை அந்த மனிதர் வாசிக்கிறார். அவர் முன் நிற்கும் ஒரு பெரும் இளைஞர்கூட்டமே ராணுவ ஒழுங்கோடு ஒரு கையை நெஞ்சுக்கு நேராக நீட்டி உறுதிமொழியை உளப்பூர்வமாக எடுத்துக்கொள்கிறது.

நாள்: சனிக்கிழமை, காலை. இடம்: விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்திருக்கும், வருவாய்த்துறையினருக்குச் சொந்தமான ஒரு கீற்றுக்கொட்டகை.தீப்பெட்டித் தொழிற்சாலைகளுக்குள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் கந்தக பூமியைச் சேர்ந்த பலர் இன்று இவர் புண்ணியத்தில் அரசுப்பணியில்  இருக்கிறார்கள். சத்தமே இல்லாமல் பெரும் சாதனையைத் தனியொரு நபராகச் செய்துகொண்டிருக்கும் அந்த மனிதரின் பெயர் மாரிமுத்து. ராஜபாளையத்தின் வட்டாட்சியராக இருக்கிறார்.

“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்!”

2007-ம் ஆண்டு ஒரு வார இறுதிநாள்களில் 60 மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி-க்கான இலவசப் பயிற்சி வகுப்பெடுக்க ஆரம்பித்தவரிடம், அதேபோன்ற வார இறுதிநாள்களின் வகுப்பில் இன்று 3,000 பேர் அமர்ந்திருக்கிறார்கள். அன்று சிறு கட்டடத்திற்குள் நின்றபடி சொல்லிக் கொடுத்தவர் இன்று அந்தக் கட்டடத்தைத் தாண்டி, விசாலமான கூரைக்கொட்டகைக்குள் பெரும் மாணவர் கூட்டத்தின் முன் நின்றபடி பாடமெடுக்கிறார்.   ‘I can do’ என அவர்கள் கையைத் தூக்கி கோஷம் போடுவது அந்த வளாகமெங்கும் எதிரொலிக்கிறது. உறுதிமொழி நேரம் முடிந்ததும் ‘தன்னம்பிக்கை நேரம்.’  அடுத்த கால்மணிநேரம் தெக்கத்தித் தமிழில், பாசிட்டிவான வார்த்தைகளை மட்டுமே பேசுகிறார். அலெக்ஸாண்டரில் ஆரம்பித்து ஏ.ஆர்.ரஹ்மான் வரை சாதித்தவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்பதாய் நீள்கிறது.  அவர் பேச்சு  தெளிந்த நீரோடையைப்போல இருக்கிறது. வார்த்தைகள்  தேர்ந்த பேச்சாளரைப்போலவும், தன்னம்பிக்கைக் கட்டுரையாளரைப்போலவும் நேர்த்தியாய் எடிட் செய்யப்பட்டிருக்கிறது. கேட்பவர் யாரையும் அந்த ‘தன்னம்பிக்கை நேரம்’ மெஸ்மரிஸம் செய்து எனர்ஜி ஏற்றுவதை உணர முடிந்தது.

சரியாகக் காலையில் 10.30க்குப் பாடமெடுக்க ஆரம்பிக்கிறார் மாரிமுத்து. அவர் கையில் எந்தப் புத்தகமுமோ சிறு குறிப்புமோ இல்லை. கணீரென்ற குரல் ரேடியோவில் வரும் விளம்பரங்களை ஞாபகப்படுத்துகிறது. நடுவில் இரண்டு முறை டீ பிரேக். ஒரு லன்ச் பிரேக். அவ்வளவுதான். இருட்டத் துவங்கும்போது வகுப்பு முடிகிறது. மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு  மணிமணியாகப் பதில்  சொல்கிறார். கிளம்பும்போது அவர் அன்று நடத்திய பாடத்திலிருந்து தேர்வு வைக்கிறார். மாணவர்களுக்கு டீ கொடுப்பதும், தேர்வுத்தாளைக் கொடுத்துத் திருத்தித் தருவதுமாகப் பரபரப்பாக இருக்கிறார்கள் மாரிமுத்துவிடம் பயிற்சி பெற்றுத் தேர்வாகித் தற்போது அரசுப்பணியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள். கடந்தவாரம் வைத்த தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கியவர்களுக்குப் பரிசு கொடுக்கிறார். உற்சாகமாக மாணவர்கள் கைதட்டுகிறார்கள்.
 
மதிய உணவு நேரம் வரை நானும் மாணவர்களோடு உட்கார்ந்து பாடங்களைக் கவனித்தேன். கணிதம், வேதியியல் என எட்டிக்காயாய்க் கசக்கும் பாடங்களைக்கூட அவ்வளவு எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறார். உளவியல்  அணுகுமுறையோடு அவர் எடுக்கும் வகுப்புகளை, என் இத்தனை வருடப் பள்ளி மற்றும் கல்லூரி அனுபவத்தில் நான் பார்த்ததோ உணர்ந்ததோ இல்லை. வகுப்பு முடித்துக் கிளம்பும்போது, பலர் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி என மாணவர்கள் தங்கள் ஊரைச் சொல்லச்சொல்ல ஆச்சர்யம் அதிகமானது. கோவையிலிருந்து வந்திருக்கும் 43 வயதான தனலெட்சுமியிடம் பேசினேன்.  “கோயம்புத்தூர் சூலூர் பக்கத்துல சுல்தான்பேட்டையிலிருந்து வர்றேன். நைட் ஏழரைக்கு அங்கே ட்ரெய்ன் ஏறுவேன். மிட் நைட் ஒன்றரைக்கு விருதுநகர் வரும். ரயில்வே ஸ்டேஷன்லயே பாத்ரூம் போயிட்டு, காலையில அம்மா உணவகத்துல சாப்பிட்டுட்டு, மதியம் சாப்பாடு வாங்கிட்டு அப்படியே முதல் ஆளா க்ளாஸுக்கு வந்து உட்கார்ந்துருவேன். வகுப்பு முடிஞ்சு அன்னிக்குச் சாயங்காலம் ஆறே முக்காலுக்கு ட்ரெயினைப் பிடிச்சா ராத்திரி 2 மணிக்குக் கோவை போயிருவேன். அங்கேயிருந்து என் கிராமத்துக்குப் போய்ச்சேர விடியக்காலை 5 மணி ஆகிடும். ஸ்கூல்ல படிக்கிற 3 பசங்களை விட்டுட்டு வாராவாரம் மிஸ் பண்ணாம வந்திருவேன். ஃபேமிலி ஃப்ரெண்ட் சொல்லித்தான் க்ளாஸுக்கு வந்தேன். இப்ப டெஸ்ட்ல நான் அவர்கிட்ட பரிசு வாங்குற அளவுக்கு 200க்கு 200 அடிக்கிறேன். சீக்கிரமே க்ரூப் எக்ஸாம்ல பாஸாகிடுவேன்!” என்கிறார் நம்பிக்கையுடன்.

தூத்துக்குடியைச் சேர்ந்த 39 வயதான செல்லத்துரைச்சி பேசும்போதே உடைந்துபோய் அழுகிறார்.  “வாழ்க்கைல நிறைய தோல்விகள். அதுல ரெண்டு  தற்கொலை முயற்சிகளும் அடக்கம். கணவரும் 5 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார்.  என்னோட தம்பி சொல்லி இங்க வந்தேன். ஒரு வருஷமா கோச்சிங் வந்துட்டிருக்கேன். ஆரம்பத்துல என் மூளையால  எதையுமே கிரகிக்க முடியல. இன்னிக்குப் படிச்சது நாளைக்கு மறந்தாக்கூடப் பரவாயில்லை. எனக்கு இன்னிக்கே மறந்துரும். எல்லாம் காலியா இருந்துச்சு. வீட்டுப்பிரச்னைக்காகத்தான் க்ளாஸுக்கு வந்தேன். சார் எப்பவுமே பாடம் எடுக்குறப்போ  அஞ்சாம் க்ளாஸ் ஸ்டூடன்ட்டா இருக்கச் சொல்வார். அதுல தப்பில்லைனும் சொல்வார். ஆரம்பத்துல சாரோட தன்னம்பிக்கை நேரத்துக்காக மட்டும்தான் க்ளாஸுக்கு வந்தேன். இன்னிக்கு என் லைஃபையே அவர் உதாரணமா சொல்ற அளவுக்கு வளர்ந்திருக்கேன். க்ரூப் 4  வரைக்கும் வந்திருக்கேன்.

சீக்கிரமே க்ரூப்-1 வரைக்கும் ஜெயிப்பேன். புத்தருக்கு எப்படி போதிமரமோ அதுமாதிரி எனக்கு இந்த இடம்!” - என்று அவர் சொல்லும்போதே குரலில் நம்பிக்கையின் அடர்த்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்!”

சிவகாசி ஆமத்தூரைச் சேர்ந்தவர் சிவசங்கர லட்சுமி. வி.ஏ.ஓ-வில் ஆரம்பித்து க்ரூப் 2 வரை டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கிறார். பள்ளத்தாக்கைச் சிகரமாக்கிய வாழ்க்கை அவருடையது.  “இப்போ மதுரை கெஸட் ஆபீஸில் அசிஸ்டென்ட்டா இருக்கேன். நான் அப்போல்லாம் படிக்கிறப்ப புத்தகத்துல கண்ணீர் விழுந்து ஈரமாகும் சார். இன்னிக்கு, இவ எந்திரிச்சு நின்னுட்டாளானு ஆச்சர்யமா பார்க்குறாங்க. மூத்த பாப்பா பத்தாவது படிக்குது. 2 பெண் குழந்தைங்க. ஒரு பையன். 2016-ல குடிக்கு அடிமையான என் கணவர் தற்கொலை பண்ணிக்கிட்டார். அப்போ நான் சார் க்ளாஸுக்கு வந்துட்டிருந்தேன்.  வாழ்க்கைல அடுத்து என்ன பண்றதுனு புரியலை. டெத் சர்ட்டிஃபிகேட் வாங்க அவ்ளோ சிரமப்பட்டேன். சார் உதவி செஞ்சார். கடந்தகாலத்தை நினைச்சாலே இப்பவும் நடுங்கும்... ‘இவள்லாம் பிழைக்க மாட்டா. தூக்கு மாட்டிக்குவா’னு என் காதுபடவே பேசுவாங்க. மாரிமுத்து சார், ‘இதுவும் கடந்து போகும்’,  ‘நீங்க ஜெயிப்பீங்கம்மா’னு சொல்வார். க்ளாஸுக்கு வந்தேன். முதல் முயற்சியிலேயே தேர்வானேன். எல்லாத்துலயும் ஜெயிச்சேன். என் கணவர் எனக்கு அதிகமான பிரச்னைகளை மட்டும்தான் விட்டுட்டுப் போனார். ஆனா, அதையெல்லாம் தாண்டி, ‘நான் விழுந்தவ, நானே எந்திரிச்சுக்குவேன்’னு சொந்த பந்தங்களை விட்டு விலகி வாழ்ந்தேன். இன்னிக்கு அவங்க எங்ககூட வானு கூப்பிடுற சூழல்ல இருக்கேன். அப்போல்லாம் தன்னம்பிக்கை நேரத்துக்காகவே க்ளாஸுக்கு ஓடி வருவேன். பாடத்தைவிட அவர் நமக்குச் சொல்லிக் கொடுக்குற தன்னம்பிக்கைதான் சார் என்னை ஜெயிக்க வெச்சது. இன்னிக்கு எல்லோரும் என்னை மேடம்னு கூப்பிடறப்போ அவ்ளோ பெருமையா இருக்கு. ‘பயிற்சி+விடாமுயற்சி = வெற்றி’ இதான் எங்க சார் சொல்லிக் கொடுத்த  சக்சஸ் ஃபார்முலா!” சொல்லும்போதே சாதித்துவிட்ட பெருமிதம் வார்த்தைகளில்!

பெண்களின் சாதனைக் கதைகளைக் கேட்ட எனக்கு ராமமூர்த்தியின் வெற்றிக்கதையும் செம எனர்ஜியாக இருந்தது.

“இப்ப  வி.ஏ.ஓவா இருக்குற நான், இதோ இந்த இடத்துல ஆடு மேய்ச்சிட்டிருந்த ஆளு சார். நம்ப மாட்டீங்க. எங்க அப்பா, தாத்தா, அவங்க அப்பானு எல்லோருமே விருதுநகர் கலெக்ட்ரேட்டுக்குள்ள ஆடு மேய்ச்சவங்க. 2010-ல  இங்கே ஏன் இவ்ளோ கூட்டம்னு க்ளாஸ் முடிஞ்சதும் சார்கிட்டேயே  போய்க் கேட்டேன். அவர் வி.ஏ.ஓ, டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்குப் பயிற்சி கொடுக்குறேன்பான்னு சொன்னார். ‘என்னைச் சேர்த்துக்குவீங்களாய்யா?’னு கேட்டேன். ‘நீதான்யா கண்டிப்பா படிக்கணும். நாளைக்கு வகுப்புக்கு வா’னு சொன்னார்.

ஞாபக சக்தி கம்மியான மாணவன். முடியுமானு பயமா இருந்துச்சு. பொழப்பை விட்டுட்டு இங்கே வந்து உட்கார்றோமேனு ஆரம்பத்துல குழப்பம் வேற. ‘நிறைய படிக்க வேணாம். படிச்சதையே திருப்பிப் படி’னு அவர் சொன்ன முதல் மெசேஜ் அப்படியே பதிஞ்சுச்சு. தன்னம்பிக்கை நேரத்துல அவர் சொல்ற விஷயம் ஒரு வாரம் எனர்ஜி கொடுக்கும். வி.ஏ.ஓ ஆகணும். சேர்ல உட்காரணும்கிறதுதான் என்னோட கனவு. அதை நிறைவேற்றிட்டேன். மத்த ஆசை இல்லை. ஒரே முயற்சில கிடைச்சிருச்சு. ‘நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்’னு சார் சொல்வார். பிறந்த ஊருக்குள்ள எப்படி எப்படியோ திரிஞ்சேன். இப்போ நாலு பேரு எனக்கு வணக்கம் வைக்கிறாங்க. என்மூலமா தலைமுறை மாற்றம் வந்துருச்சு” என்கிறார் பெருமிதத்துடன்.

தன் மாணவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்த தாசில்தார் மாரிமுத்து, நடுவில் பிரேக் டைமில் வந்து தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டார்.  அதன்பிறகு வகுப்பில் செம பிஸியாகிவிட்டார். வகுப்பு முடிந்தபிறகு வந்த அவரிடம் பேசினேன்.                   “விருதுநகர் மாவட்டம் கூமாப்பட்டி என்னோட சொந்த ஊர். அப்பா தச்சுத் தொழிலாளி. அம்மா கூலித் தொழிலாளி. அப்பா உடம்புக்கு முடியாம படுத்த படுக்கையா இருந்தார். அம்மா ரொம்பக் கஷ்டப்பட்டுதான் என்னைப் படிக்க வெச்சாங்க. நடுத்தெருவில் வீடில்லாமல் தவிச்ச நாள்கள் உண்டு. படிப்புனு ஒண்ணு இல்லைனா நான் இந்நேரம் மக்கி மண்ணாகியிருப்பேன். எனக்கு ஒளியேற்றி வெச்ச நல்ல உள்ளங்களை எப்பவுமே மனசில நினைச்சுட்டே இருப்பேன்.

ஸ்காலர்ஷிப்புக்காகத் தாலுகா ஆபீஸ் போனப்போ ரொம்பநாள் என்னை அலைக்கழிச்சாங்க. அப்போ முடிவு பண்ணினேன், நாம அரசாங்க வேலைக்குத்தான் போகணும்னு. போட்டித்தேர்வுகள் எழுதி இன்னிக்கு நான் தாசில்தாரா நிக்கிறேன். நாம பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாதுனு நினைச்சேன். மீனைக் கொடுக்குறதைவிடத் தூண்டிலைக் கொடுக்குறது புத்திசாலித்தனம்னு சொல்வாங்க இல்லையா... முதன்முதலா 2007-ல ஆதரவற்ற மாணவர்களுக்கு வருவாய்த்துறைக்குச் சொந்தமான இந்த இடத்துல டி.என்.பி.எஸ்.சி வகுப்பெடுக்க ஆரம்பிச்சேன். எங்கிட்ட படிச்சு க்ரூப் தேர்வுகள்ல பாஸான  மாணவர்கள் சொல்லிச்சொல்லி அப்படியே மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகிடுச்சு. சனிக்கிழமை 1,500 பேருக்கும், ஞாயிற்றுக்கிழமை 1,500 பேருக்கும்னு ரெண்டு பேட்ச்சா மாத்தி சனி ஞாயிறுகளில் வகுப்பெடுக்கிறேன். எல்லா ஊர்களிலிருந்தும் இங்கே வர்றாங்க.  கட்டடம் பத்தாம இப்போ கூரை போட்டுச் சொல்லிக்கொடுக்கிறேன். எப்பவும் கடந்த காலத்தை நான் மறக்க மாட்டேன். இதே கலெக்டர் ஆபீஸ்ல அழுதுக்கிட்டு நின்னவன் நான். இன்னிக்கு இதே இடத்துல 2000 பேருக்குக்கிட்ட, பத்து வருஷமா உருவாக்கி, அரசாங்கத்துக்குக் கொடுத்திருக்கேன்.  ஆனா, அதையெல்லாம் நான் சாதனையா நினைக்கல. ‘ஒரு அதிகாரியைக் கல்யாணம் பண்ணியாச்சு. சனி ஞாயிற்றுக்கிழமைல வெளிய சந்தோஷமா போகலாம்’னு நினைச்சுதான் என் மனைவி சியாமளா தேவி கல்யாணம் பண்ணியிருப்பாங்க. இப்போ பத்து வருஷமா புயல் மழையானாலும் சரி, சனி ஞாயிறு வகுப்புக்கு லீவு விட்டதில்லை.  அன்னிக்கு காய்ச்சல் தலைவலினு படுத்ததில்லை. நெருங்கிய சொந்தங்கள்ல கல்யாணம் காட்சினு விசேஷம் வெச்சாக்கூட நான் போக மாட்டேன். அதனால இழந்த உறவுகள் நிறைய உண்டு.

“நாலுபேரு உன்னைப் பார்த்து வணக்கம் சொல்லணும்!”

ஆனா, என் மனைவி சியாமளா தேவியும் என் பசங்களும் இதையெல்லாம் சொல்லிக்காட்டி ஒருநாளும் சண்டை போட்டதில்லை. ரெண்டுநாளா நின்னுட்டே பாடமெடுக்கிறதால ஞாயிற்றுக்கிழமை இரவு என்னோட கால்கள் ரணவலி கொடுக்கும். ‘இதெல்லாம் தேவையா உங்களுக்கு?’னு வீட்ல கேட்டதில்லை. அவங்களோட தியாகத்துக்கு முன்னாடி நான் பண்றதெல்லாம் ஒண்ணுமில்லைங்க!” என்று அடக்கமாய்ச் சொல்லி வெள்ளந்தியாய்ச் சிரிக்கிறார், பண்பால் உயர்ந்த தாசில்தார் மாரிமுத்து. 

`நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்ற வரியின் அர்த்தம், அவர் வாழ்க்கையின்வழி எனக்குப் புரிந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism