மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

kamalhassan
பிரீமியம் ஸ்டோரி
News
kamalhassan

ரஜினி என் பெயரைச் சொல்வதோ, அவரைப்பற்றி நான் சொல்வதோ தவறில்லையே. அதேபோல்தான் இதுவும்.

டந்த வாரத்துக் கட்டுரை பற்றி இரு விளக்கங்கள். ஒன்று, மதம் குறித்து நான் பேசியது. அதற்கு நாலாபக்கமும் விவாதங்கள். என் பேச்சில் கடினத் தொனி இருப்பதாக வடநாட்டு ஊடகங்கள் எடுத்து வைக்கின்றன. நான் தீவிரவாதம் என்றால் அவர்கள் ‘டெரர்’ என்று அடிக்கிறார்கள். முன்புதான் நாம் `சதக் சதக்’, `ரத்தம் சொட்டச் சொட்ட’, `கத்தி குத்தக் குத்த...’ என்று செய்திகளைப் பரபரப்பாக்கி எழுதுகிறோம் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போது நாம் அதிலிருந்து மாறிக் காலங்கள் பல ஆகின்றன. ஆனால் அந்த ‘சதக்’கை இப்போது அவர்கள் பிடித்துக்கொண்டு தொங்குகிறார்கள். அவர்களின் டி.ஆர்.பி பரபரப்பிலும் எனக்கு ஒன்றே ஒன்று பிடித்திருந்தது. தமிழ் ஊடகங்கள் அனைத்தும் ‘ஒரு வார இதழில் வந்த...’ என்று இழுத்தபோது, அவர்கள் ‘ஆனந்த விகடனில் வந்த’ என்று வெளிப்படையாகச் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு முன்னேற்றம். ரஜினி என் பெயரைச் சொல்வதோ, அவரைப்பற்றி நான் சொல்வதோ தவறில்லையே. அதேபோல்தான் இதுவும்.

என்னுள் மையம் கொண்ட புயல்
என்னுள் மையம் கொண்ட புயல்

விஷயத்துக்கு வருகிறேன். நான் எல்லாத் தீவிரவாதத்தையும் எதிர்க்கிறேன். எம்மதமாக இருந்தாலும்

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அதன்பேரில் தீவிரவாதம் வரும்பட்சத்தில் எனக்குச் சம்மதம் இல்லை. மதங்கள் எதிலும் போர் தொடுக்கச் சொல்லவேயில்லை.  கிறிஸ்து பிறந்த யூதேயாவில் புரட்சி ஏற்பட்டது. அதில் பொந்தி பிலாத்துவினுடைய ஆட்சியை எப்படியாவது ஆட்டிவிடவேண்டும் என்கிற ஆர்வம் யூதர்களுக்கு இருந்தபோதுகூட இயேசுவின் நல் சீடர்களாக இருந்தவர்கள் அந்த வன்முறை வேண்டாம் என்று தடுத்ததாகத்தான் நமக்குச் செய்திகள் வருகின்றன. பைபிளைத் திருத்தம் செய்ய எத்தனை முறை முற்பட்டாலும் அதில் இருக்கும் உண்மை இன்னும் பிரகாசமாகத்தான் இருக்கிறது.  இப்படி எல்லா மதங்களும் அன்பையும்,  அமைதியையும்தான் போதிக்கின்றன.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அடுத்து இன்னொரு விளக்கம். எண்ணூர்க் கழிமுகத்தின் ஆக்கிரமிப்புகள் குறித்துப் பேசியபோது நித்தியானந்த் ஜெயராமன் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதைப் படித்துவிட்டு என்னை அழைத்தார். ‘ஐயய்யோ சார், என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டது உங்கள் பெருந்தன்மை. ஆனால் ‘இது நான் மட்டும் செய்யும் சாகசம்’ என்ற தொனியில் அமைந்துள்ளது. இதன் பின்னால் பலர் இருக்கிறார்கள் என்பதே உண்மை’ என்று பதறினார். ‘ஏன் எங்களின் பெயர்களை விட்டீர்கள்’ என்று மற்ற சூழலியலாளர்கள் கேட்காததும், தன் பெயர் மட்டும் வந்ததை நினைத்து நித்தியானந்தம் பதறுவதும்தான் அவர்களின் குணம்.

ஆனால், அந்தக் குணத்தை உணராது, நமக்காக வீதியில் நின்று குரல் கொடுப்பதற்கென்றே பிறந்தவர்கள் என்று நினைத்து, அவர்களைக் கடந்துபோய்க்கொண்டே இருக்கிறோம். ‘அவர்கள் நம்மவர்கள்’ என்ற எண்ணம் நமக்கு இல்லாததால்தான் அரசு அவர்கள்மீது தைரியமாக வழக்குத் தொடுக்கிறது, கைது செய்து உள்ளே தள்ளுகிறது. ஆனால், அவர்கள்தாம் நாம் கரையேற, நம்மைக் கரைசேர்க்க உதவும் கலங்கரை விளக்கங்கள். ஆமாம், அந்தக் கலங்கரை விளக்கங் களோடுதான் இன்று நான் கைகோத்துள்ளேன். இந்தச் சமூகம் மேம்பட அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனையெத்தனை திட்டங்களை வைத்துள்ளார்கள் என்று நினைக்கையில் அவர்கள் எனக்கு ஆதர்சமாக மாறிப்போகிறார்கள்.

இந்தச் சமூகச் செயற்பாட்டாளர்களின் குரல்களைப் பெருங்குரலாக மாற்ற வேண்டும் என்ற என் பேராசையின் வெளிப்பாடே நான் அறிமுகப்படுத்தும் இந்தச் செயலி. (Mobile App)  ஆம், கல்லா கட்டும் கறைபடிந்த ஆட்சியாளர்களை வெளுத்து, துவைத்து, தூய்மைப்படுத்தி மக்களுக்குச் செயல்பட வைப்பதே இந்தச் செயலியின் நோக்கம். இதில் சமூகச் செயற்பாட்டாளர்களும் என் லட்சக்கணக்கான நற்பணி இயக்கத்தாரும் இணைந்து இருப்பார்கள். லஞ்ச லாவண்யங்களை, அரசின் பாராமுகங்களை... இதில் நீங்கள் பட்டியலிடலாம். இந்தச் செயலி வழி இணைந்திருப்பவர்கள் உங்களின் குறைகளைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் எடுத்துவைத்து நீதிபெற உதவி செய்வார்கள்.

‘அந்தச் சமூகச் செயற்பாட்டாளர்களை உங்கள் இயக்கத்துடன் இணைக்கப்போகிறீர்களா’ என்று சிலருக்கு மட்டும் சில கேள்விகள் எழும். அவர்கள் என் ரசிகர்கள் அல்லர், நான் அழைத்ததும்  வந்து என்னுடன் இணைந்துகொள்ள. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் புரிந்துவைத்துள்ளதால் இயல்பாக இணக்கமாக எங்களால் இயங்க முடிகிறது. அந்தவகையில் நல்லது செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தில் இணைந்துள்ளோம். அதனால் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூவரும் முதற்கட்டமாக எங்களுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அருண் கிருஷ்ணமூர்த்தி ஆறு, ஏரி, வாய்க்கால், குளம்... என நம் பாரம்பர்ய நீர்நிலைகள் குறித்த விழிப்பு உணர்வை என் நற்பணி இயக்கத்தாருக்குத் தருவார். அதை எங்கள் இயக்கத்தார் நம் தமிழக மக்களுக்கு மடைமாற்றுவார்கள். மக்களும் இயக்கத்தாரும் தங்கள் பகுதியில் இருக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்யும் பணிகளை அரசின் ஒப்புதலுடன் மேற்கொள்வார்கள். ஓராண்டுக்குள், ஈராண்டுக்குள், மூன்றாண்டுக்குள்... சீரமைக்கும் நீர்நிலைகளைப் பொறுத்து இப்படி டார்கெட் ஃபிக்ஸ் செய்துகொள்வோம். இதற்கு, கோடிகளில் பணம், பொக்லைன் போன்ற முரட்டு இயந்திரங்கள் தேவை என்று எண்ணம் வேண்டாம். சாதாரண மண்வெட்டிகளும் சாமானிய மக்கள் செல்வங்களுமே போதுமானவை.

இப்படிச் செய்வதன்மூலம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சென்னை மக்கள் மழை வந்தால் மகிழலாம். ஆம், அந்த மழை மக்களை வதைக்காமல் பொருளாதாரத்தை வீணாக்காமல் நீரும் வீணாகாமல் அந்தந்த நீர்நிலைகளில் சேகரிக்கப்படும். இப்படி எளிய வார்த்தைகளைக் கோத்துச் சொல்வதால் இது ஏதோ இன்று தொடங்கி நாளை முழுமையடையும் திட்டம் என்று எண்ணிவிடாதீர்கள். ‘இன்னைக்கு விதைபோட்டுட்டு நாளைக்கே பழம் சாப்பிடணும்னு நினைச்சா முடியுமோ’ என்ற என் பட வசனத்தையே துணைக்கு அழைக்கிறேன். இது எங்களின் நீண்டகாலக் கனவு. ஆனால் சாத்தியமாகக்கூடியது.

அடுத்து, அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன். `மை சன் இஸ் எ சாஃப்ட்வேர் இன்ஜினீயர் இன் அமெரிக்கா’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வதுபோல், ‘என் மகன் கிராமத்துல விவசாயம் பண்றான்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் காலத்தை நோக்கி விவசாயத்தை நகர்த்தும் முனைப்பில் இருக்கும் போராளி.

சம்பா, குருவை என்று காலம் பிரித்துச் சாகுபடி செய்துகொண்டிருந்த விவசாயிகளை, சாகும்படி செய்தது யார் குற்றம்? காலங்காலமாகக் கொடுக்கும் இடத்தில் இருந்த இவர்களைக் கையேந்தும் இடத்துக்குத் தள்ளியது யார்? இனி வருங்காலம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையாகவும், இவர்களை மீண்டும் கொடுக்கும் இடத்தில் அமரவைப்பதாகவும் இருக்கும். அதற்கான முனைப்புதான் எங்களின் இந்த இணைப்பு.

அடுத்து, ‘அறப்போர்’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பார் ஜெயராமன். இவருடைய அணியின் பணிகள், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொள்ளும் பணிகளுக்கு நிகரானவை. இந்த ‘அறப்போர்’ இயக்கத்தை 2015-ல் ஊழலை எதிர்க்கக்கூடிய 25 முதல் 30 பேர் சேர்ந்து கட்டமைத்திருக்கிறார்கள். மக்கள் பங்கெடுக்கும் உண்மையான ஜனநாயகமாக, தொடர்ந்து கேள்விகள் கேட்கக்கூடிய ஜனநாயகமாக மாறும்போதுதான் இது உண்மையான மக்களாட்சியாக மாறும். அதைநோக்கி, இவர்கள் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள்; மக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் பற்றி மிகப்பெரிய அளவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்கிறார்கள். நீதியும் சமத்துவமும் உள்ள சமுதாயத்தை அமைக்கவேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கம். என் நோக்கமும் அதுதான் என்பதால் இவர்களுடன் இணைந்து பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன்.

இவர்களின் முக்கியமான கருவி, தகவல் அறியும் உரிமைச் சட்டம். இந்தச் சட்டத்தைப் பாமரர்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்கிறார்கள். ஆம், நமக்குக் கிடைத்த முதல் சுதந்திரத்தை நாம் யார் யாரிடமோ அடகு வைத்துவிட்டோம். அடகு வைத்த அந்தச் சுதந்திரத்தை மீட்க இந்தச்  சட்டம் ஒரு மிகப்பெரிய ஆயுதமாகப் பயன்படும். இந்தச் சட்டத்தைக் கடும் நெருக்கடிக்கு மத்தியில் இயற்றிய அரசு, அதைச் செயல்படுத்தத் தயங்குவதுதான் வேதனை. ‘அரசு வெளிப்படைத் தன்மையுடன் இயங்க வேண்டும்’ என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம். ஆனால், இருட்டில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் அரசு நடைமுறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டக் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டமே இருட்டில்தான் கிடக்கிறது என்பதே நிதர்சனம்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

அரசு, அரசு உதவி பெறும் அனைத்து அமைப்புகளும் இந்தச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இவற்றிலிருந்து உங்களுக்கு ஒரு தகவல் தேவை என்றால், நீங்கள் மனு செய்த குறிப்பிட்ட நாள்களுக்குள் அந்தத் தகவல் உங்களுக்குத் தரப்படவேண்டும். இல்லையென்றால் மேல்முறையீடு செய்யலாம். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் தகவல் ஆணையத்துக்குச் சென்று தகவல் பெறலாம். இதுதான் நடைமுறை. ‘எப்படித் தகவல் பெறலாம், எப்படித் தகவல் தரலாம்’ என்ற இந்த நடைமுறையை மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், ‘எந்தெந்தச் சட்ட நுணுக்கங்களை மேற்கோள்காட்டி எப்படியெல்லாம் தகவல்களைத் தராமல் இருக்கலாம்’ என்ற அடிப்படையில் அரசு அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக அறிகிறேன்.

மேலும், ஒரு நீதிமன்றத்தைப்போல் வெளிப்படைத் தன்மையுடன் இயங்கவேண்டிய தகவல் ஆணையமும் பூட்டிய அறைகளுக்குள் இருந்துகொண்டு தன்னை வெளிப்படுத்தத் தயங்குகிறது. இப்படி வெளிப் படைத்தன்மைக்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தையே இவர்கள் பூட்டிவைத்துள்ள அவலம் இங்கு மட்டுமே சாத்தியம். அந்தப் பூட்டை அறப்போர் இயக்கத்தார் போன்ற சிலர் முட்டி மோதி உடைக்கத் தொடங்கி அவலங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படி இந்தச் சட்டம் பற்றியும், அதன்மூலம் மேற்கொள்ள வேண்டிய நற்பணிகள் குறித்தும் என் இயக்கத்தாருக்கு இவர்கள் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவார்கள். இதன்மூலம் எளிய மக்களின் கரங்கள் வலுப்படும். ஊழல்கள் அம்பலப்படும். நாளடைவில் உண்மையான மக்களாட்சி மலரும்.

`இப்படி அரசைக் கேள்விகேட்டுக்கொண்டே இருக்கிறாயே... உன் நோக்கம்தான் என்ன?’ என்று சிலர் கேட்கலாம். அவர்களைப் பதில் சொல்லும் இடத்தை நோக்கி நகர்த்துவது. அதன் மூலம் அவர்களைச் செயல்பட வைப்பது. இதுதான் எங்களின் நோக்கம். ‘இல்லையில்லை... இதன்மூலம் பதிலளிக்கும் இடத்தை நோக்கி நீ நகர முயற்சி செய்கிறாய்’ என்ற சிலரின் சந்தேகப்பார்வையையும் புரிந்துகொள்ள முடிகிறது. முடிந்தால் செய்யுங்கள்; இல்லையேல் எங்களையாவது செய்ய விடுங்கள். ஆம் ‘செய் அல்லது செய்ய விடு’ என்கிறேன். இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?

- உங்கள் கரையை நோக்கி!

“பயப்பட வெறுக்கிறேன்!”

படம்: ஜெ.வேங்கடராஜ்

ருத்துவம் மற்றும் அதன் துணைப் படிப்புகளைக் கற்றுத்தரும், சென்னைப் புறநகரில் உள்ள `செட்டிநாடு ஹெல்த் சிட்டி’யின் கலைவிழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு அந்த மாணவர்களுடன் உரையாடினேன். அதன் தொகுப்பு:

 “கடந்த 50 வருடங்களில், உங்கள் ரசிகர்களிடமிருந்து கிடைத்த மறக்கமுடியாத விமர்சனம், ரியாக்‌ஷன் என்ன?”

 “நிறைய. பட்டியலிட்டால்  நேரம் போதாது. ஒவ்வொரு முறையும் புதிய புதிய விமர்சனங்களால், அன்பால் என்னை நெகிழ்த்துகிறார்கள். ஒன்றைச் சொல்லலாம். `விஸ்வரூபம்’ படப் பிரச்னைகளின்போது பல்வேறு அமைப்புகள், நபர்கள் என்னை மனரீதியாக, பணரீதியாக நெருக்கினார்கள். என் வீடு என் கையை விட்டுச் செல்லும் சூழல்கூட ஏற்பட்டதை ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டேன். சில ரசிகர்கள், தங்கள் வீட்டுப் பத்திரத்தை சாவியுடன் அனுப்பி, ‘என் வீட்டை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்றார்கள்.

நான் கோபத்தில்தான் அரசியல் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். அல்ல. நான் உங்களுக்கு, மக்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த அன்பு, உறவுகளிடம்கூடக் கிடைக்காதது. உறவுகள் வீட்டைப் பங்குகொள்ள நினைப்பார்கள். என் ரசிகர்கள், வீட்டைக் கொடுக்க நினைத்தார்கள். அதிலும் ஒருவர், தன் வீட்டை எனக்குக் கொடுத்துவிட்டால், அவருக்கு வீடில்லாத நிலை. அப்படியும் கொடுக்கத் தயாரானார்.”

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

“உங்கள் குடும்பத்தில் பலர் மருத்துவர்கள். நீங்கள் மருத்துவராக வேண்டும் என நினைத்ததுண்டா? அந்த வாய்ப்பு இப்போது உங்கள் முன் இருந்தால் டாக்டர், ஆக்டர் இரண்டில் எதைத் தேர்வு செய்வீர்கள்?”

 “நான் ரொம்பவும் பேராசைக்காரன். நான் இரண்டுமாக இருக்க விரும்புவேன். இரண்டுமே சமமான முக்கியத்துவம்கொண்டவைதாம். ஆனால் ஒன்று...  டாக்டர்கள் நினைத்தால், முழு முயற்சி செய்து பயிற்சி பெற்றால் நடிகராக முடியும். நடிகர்கள், டாக்டராவது சாத்தியமில்லை.”

 “உங்கள் வாழ்க்கையிலேயே மிகவும் வெற்றிகரமான சம்பவம், தோல்வியில் துவண்ட சம்பவம் எது? தோல்வியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”

 “சக்சஸ் என்பது என்ன? ஒரு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் செய்வதா... இல்லை. என் வாழ்நாளுக்குப் பிறகும் பேசப்படும் படம்தான் வெற்றி. நான் இருக்கும்போதே, என் படைப்பு மறக்கப்படுமானால் அதுவும் எனக்குத் தோல்வியே. தோல்வி என்பது, ஒரு விஷயத்தை எப்படிச் செய்யக்கூடாது என்று நமக்குக் கற்றுத்தருகிறது. எடிசன் சொன்னதுதான். `ஒரு பல்ப் எப்படிச் செய்யப்படக்கூடாது என்பதற்கான 1001 வழிகள் எனக்குத் தெரியும்’ என்றார்.’’

“உங்களிடம் உள்ளதில், நீங்கள் பெருமைப்படும் பண்பு என்ன?”

“இத்தனை வருட வாழ்வுக்குப் பிறகும் ஓர் ஆணாக இன்னும் என்னிடம் அன்பும், கண்ணீரும் நிறைய இருக்கின்றன. அதற்காகப் பெருமைப்படுகிறேன். ஏனென்றால், பெண்களிடம் ஆண்களைவிட அதீத அன்பும், அதிக கண்ணீரும் இருக்கின்றன. அந்த விஷயத்தில் நான் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறேன்.”

 “நீங்கள் 20 வருடங்களுக்கு முன்பே உடலுறுப்பு தானம் செய்தவர். அப்போதே எப்படி அப்படி ஒரு சிந்தனை வந்தது... ஏதாவது சம்பவத்துக்குப் பிறகு அது நடந்ததா?”

“வாழ்க்கை. ஆம், வாழ்க்கை என்பதும் ஒரு சின்னச் சம்பவம்தானே. அதுவரையிலான என் வாழ்வுதான் தானம் செய்யலாம் என்பதைக்  கற்றுக்கொடுத்தது. ‘உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும், உங்கள் உறவினர்கள் உங்கள் உடலை சொர்க்கத்துக்கு அனுப்ப நினைப்பார்கள். எதற்காக இந்த உடலுறுப்பு தானம்’ என்று என் நண்பர்கள் இதைக் கொஞ்சம் கிண்டலாகக் கேட்டார்கள். “என் உடலில் 15 மீட்டர் தோல் இருக்கிறது. ஏழு தொழுநோயாளிகளுக்கு அதைச் செருப்பாக்க முடிந்தால், இங்கேயே இருக்கிறது சொர்க்கம்” என்றேன். எதற்காக வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளுங்கள். ‘மருத்துவப்படிப்புக்குச் செய்யவேண்டும்’ என்று முன்னுதாரணமாக இருக்க ஆசைப்பட்டுச் செய்தேன்.

அதையும் மீறி, நாம் பார்க்காத, எப்படி இருக்கும் என்று தெரியாத சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்க இப்படி அலையும் கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை. அதை யாரும் பார்த்துவிட்டு வந்து, ‘நல்லா இருக்கு’ என்று சொல்லவும் இல்லை. எந்த ரியல் எஸ்டேட்காரரும் சுற்றிக்காட்டவும் இல்லை. நான் அந்த இடத்துக்குப் போக அலையவில்லை. அவ்வளவுதான். ‘என் உடல் மண்ணுக்கு’ என்பார்கள். அதை ஏன் மண்ணுக்குக் கொடுப்பானேன்.. அதனால் உங்களுக்குக் (மருத்துவத்திற்கு) கொடுக்கிறேன்.”
 
 “மருத்துவர்களைத் தவறாகவே சித்திரித்து நிறைய படங்கள் வருகின்றன. அதனாலேயே நாங்கள் (மருத்துவர்கள்) நிறைய கேலிகளையும் கேள்விகளையும் எதிர்கொள்கிறோம். மிகவும் வருத்தமாக உணர்கிறோம். உங்கள் கருத்து என்ன?”

 “வருத்தப்படாதீர்கள். என்னிடம் ஓர் அரசியல்வாதி `அரசியல்வாதிகள் எல்லோரும் ஊழல்வாதிகள் என்கிறீர்களே... நடிகர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்றால்  நீங்கள் வருத்தப்படமாட்டீர்களா?’ என்று கேட்டார். `என்னைச் சொல்லவில்லை; அது நானாக இருக்காது என்ற தைரியம் எனக்கு இருக்கிறது. உங்களுக்கும் அது இருக்க வேண்டும்’ என்றேன். எல்லாத்துறைகளிலும் பேராசையின் காரணமாகப் பழுதுபட்ட மனிதர்கள் இருப்பார்கள். அவராக நீங்கள் இருக்கக்கூடாது என்று முயற்சிசெய்ய ஆரம்பித்தாலே போதும். உங்கள் துறைக்கே கெட்டபெயர் வாங்கித்தரும் அந்தக் கேவலமான சிறுபான்மையை நீங்கள் இல்லாமல் செய்துவிட வேண்டும்.”

 “பெரிய தலைவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால், மக்கள் பாதிக்கப்பட்டார்கள். உங்கள் உடல்நலத்தை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?”

 “புகைபிடிப்பதை விட்டுவிட்டேன், படங்களிலும்கூட. நான் புகைபிடிக்க ஆரம்பித்தது, ‘சிவாஜி சார் மாதிரி ஸ்டைலாகப் பிடிக்க வேண்டும்’ என்றுதான். அது எனக்குப் பின்னாலும் தொடரக்கூடாது என்று நிறுத்திவிட்டேன். என்னைவிட, என்னை நேசிப்பவர் யாரும் இருக்க முடியாது. ஆக, நான் நேசிக்கும் என்னைப் பாதுகாப்பது என் கடமையும்கூட.”

 “உங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பயம் என்ன?”

 “பயம் பற்றிய பயம்தான். ஒருநாள் எதற்காகவாவது பயப்படுவேனோ என்று சிந்திக்கவே பயமாக இருக்கிறது. பயப்பட வெறுக்கிறேன். பயத்தை எதிர்கொண்டு வெல்ல நினைக்கிறேன்.”

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 6 - "செய் அல்லது செய்ய விடு!”

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.

- கமல்ஹாசன்

படங்கள்: ஜி.வெங்கட்ராம்