வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (06/09/2018)

கடைசி தொடர்பு:14:15 (06/09/2018)

சுவர்களில் ஆங்கில கிராமர்... வளாகம் முழுக்க வைஃபை... அசத்தும் `பொய்யாமணி’ அரசுப் பள்ளி!

இயற்கைக் காய்கறித் தோட்டம் தொடங்கி வைஃபை வசதி வரை, இந்தப் பள்ளியில் இல்லாத வசதிகளே இல்லை. உச்சகட்டமாக, ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து பள்ளிக் கட்டடச் சுவர்கள் முழுவதிலும் சங்க இலக்கியங்கள் தொடங்கி ஆங்கில இலக்கணமுறைகள் வரை சகல விஷயங்களையும் வண்ணமிகு ஓவியங்களாக வரைந்து காண்போரைச் சுண்டியிழுக்க வைத்திருக்கிறார்கள்.

சுவர்களில் ஆங்கில கிராமர்... வளாகம் முழுக்க வைஃபை... அசத்தும் `பொய்யாமணி’ அரசுப் பள்ளி!

அரசுப் பள்ளிகள் என்றாலே, `சிறப்பாகப் பாடம் நடத்தமாட்டார்கள்; பழைய கட்டடங்கள்தாம் இருக்கும். அங்கு எந்த வசதியும் இருக்காது' என்றுதாம் பலரும் கருத்துச் சொல்வார்கள். ஆனால், பல அரசுப் பள்ளிகள் கற்பித்தல் முறைகளிலும், கட்டடம் மற்றும் இன்னபிற வசதிகளிலும் தனியார் பள்ளிகளைத் தாண்டி சீரும் சிறப்புமாக இருக்கின்றன. அப்படிப்பட்ட அரசுப் பள்ளிகளில் ஒன்றுதான் கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தில் பொய்யாமணியில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி.

இயற்கைக் காய்கறித் தோட்டம் தொடங்கி வைஃபை வசதி வரை, இந்தப் பள்ளியில் இல்லாத வசதிகளே இல்லை. உச்சகட்டமாக, ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து பள்ளிக் கட்டடச் சுவர்கள் முழுவதிலும் சங்க இலக்கியங்கள் தொடங்கி ஆங்கில இலக்கணமுறைகள் வரை சகல விஷயங்களையும் வண்ணமிகு ஓவியங்களாக வரைந்து காண்போரைச் சுண்டியிழுக்க வைத்திருக்கிறார்கள். இவை அனைத்துக்கும் காரணமாக அனைத்து மாணவர்களும் உச்சரிக்கும் பெயர் பூபதி. இந்தப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

பூபதிஅவரிடமே பேசினோம். "இந்தக் கிராமம் கரூர் மாவட்டத்தின் கடைக்கோடி ஊர். இங்கு வசிக்கும் அனைத்து மக்களும் ஏழ்மையானவர்கள்தான். அதிகம் படிக்காதவர்கள். தங்கள் பிள்ளைகளுக்காவது சிறப்பான கல்வி கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள். நான் இந்தப் பள்ளிக்கு மூன்று வருடத்துக்கு முன்பு வந்ததும் அதை உணர்ந்தேன். இந்தப் பள்ளியில் டாய்லெட் வசதி உட்பட, எந்த வசதியும் அப்போது இல்லை. இதை மாற்ற நினைத்தேன்.

சமூக வலைதளங்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் ஸ்பான்ஸர்ஸ் பிடித்து, பள்ளியைக் கொஞ்சம் கொஞ்சமா மாற்றஅரசுப் பள்ளித் தொடங்கினேன். முதலில் நல்ல கழிவறை வசதியை அமைத்தோம். கழிவுநீரைக்கொண்டு இயற்கைக் காய்கறித் தோட்டம் அமைத்தோம். அவற்றைக்கொண்டுதான் மாணவர்களுக்குச் சத்துணவு சமைக்கப்படுகிறது.

பள்ளி வளாகம் முழுக்க வைஃபை வசதி செய்தோம். குளிர்சாதன வசதிகொண்ட கணினி ஆய்வகத்தை அமைத்தோம். மாவட்டத்திலேயே முதல்முறையாக, குளிர்சாதன வசதிகொண்ட வகுப்பறையை அமைத்தோம். இதனால், மக்கள் தனியார் பள்ளிகளில் படித்த தங்கள் பிள்ளைகளை இங்கே சேர்த்தார்கள்.

பள்ளி வளாகம் மட்டுமல்லாமல், மாணவர்களின் பெயர்களில் ஊர் முழுக்க மரக்கன்றுகளை நடவைத்தோம். ஸ்மார்ட் க்ளாஸ்ரூமை அமைத்தோம். பாடங்களை காட்சிகள் மூலம் நடத்த ஆரம்பித்தோம். பள்ளியில் உள்ள பெண் பிள்ளைகள் பயன்படுத்த, நாப்கின் அழிப்பான் இயந்திரத்தை வைத்தோம். அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தி, அரசுப் பள்ளிகளின் பெருமைகள் பற்றி லோக்கல் சேனல்களில் அவ்வப்போது விளம்பரம் செய்தோம்.

இதற்காக, எங்கள் பள்ளிக்குச் சமீபத்தில் ISO தரச் சான்றிதழ் கிடைத்தது. எனக்கு மாநில அரசு வழங்கும் மாவட்ட அளவிலான கனவு ஆசிரியர் விருதும் கிடைத்தது. சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஇராதாகிருஷ்ண சுவாமி அறக்கட்டளைதான் இதற்கான நிதியை வழங்கியது. இதைத் தவிர எங்கள் செலவில் மாணவர்களுக்கு விடுமுறை நாளில் கராத்தே, யோகா உள்ளிட்ட தற்காப்பு வகுப்புகளை நடத்த ஆரம்பித்தோம். பல மாணவர்களுக்கு சங்க இலக்கியங்கள் பற்றியும், தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாகச் சொல்லக்கூட தெரியாமல் இருந்தது.

அதனால், ஸ்ரீஇராதாகிருஷ்ண சுவாமி அறக்கட்டளையின் நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் செலவில் பள்ளிக் கட்டடச் சுவர்களிலும், காம்பவுண்ட் சுவர்களிலும் பல ஓவியங்களை வரைந்தோம். சங்க இலக்கியங்கள் பற்றிப் பட்டியல், ஆங்கில இலக்கணம், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய-மாநிலச் சின்னங்கள், தூய்மை இந்தியா பற்றிய விழிப்புஉணர்வுப் படங்கள், உலகம் மற்றும் கரூர் மாவட்ட வரைப்படங்கள், ஐந்திணைகள், காடு, மலை போன்ற இயற்கைச் சூழல்கள், அப்துல் கலாம் ஐயா பெயரில் அரங்கம் எனப் பல விஷயங்களை ஓவியங்களாகத் தீட்டினோம்.

அரசுப் பள்ளி ஆங்கில கிராமர்

இவை தவிர, நன்னடத்தை பற்றிய ஓவியங்கள், தலைவர்களின் உருவங்களையும் வரையவைத்தோம். மனதைக் கவரும் வகையில் ஓவியங்கள் அழகாக வரையப்பட்டுள்ளன. எங்கள் பள்ளியைக் கடக்கும் ஒவ்வொருவரும் ஒரு நிமிடம் நின்று இந்த ஓவியங்களைப் பார்த்துவிட்டுத்தான் செல்கிறார்கள். பலர் பள்ளிக்குள் வந்து எங்களைப் பாராட்டுகிறார்கள். பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் சக ஆசிரியர்களின் ஒத்துழைப்பு மட்டும் இல்லையென்றால், இவ்வளவு விஷயங்களையும் செய்திருக்க முடியாது.

இந்தத் தொடர் விஷயங்களால், பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஆர்வத்துடன் கல்வி கற்கிறார்கள். அரசுப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்றாலே, சமூகத்தில் சற்றுத் தகுதி குறைவாகவே பார்க்கப்படுகிறது. அந்த அவலத்தைப் போக்கத்தான் இப்படி நாங்கள் வேலைபார்க்கும் பள்ளியை எல்லா வகையிலும் தனியார் பள்ளிகளைத் தாண்டி மாற்றி அமைத்துள்ளோம். எங்கள் செயல்பாடு இன்னும் பல வகையில் சிறப்பாகத் தொடரும்" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்