வெளியிடப்பட்ட நேரம்: 17:27 (07/09/2018)

கடைசி தொடர்பு:17:38 (07/09/2018)

"நீ என்ன பண்ணணும்னு நான்தான் முடிவு பண்ணணும்..!'' கெலாடா குரங்குகளின் கெத்து

தலைவனாக இருக்கும் ஆண் குரங்கு தன்னை ஆரோக்கியமானவனாகக் காட்டிக்கொள்ள அடிக்கடி பல்வேறு வேலைகளில் ஈடுபடும். பாறைகளின் உச்சிக்குச் சென்று சத்தமிடுவது, பெண் குரங்குகளிடம் இணை சேருவது, மற்ற ஆண் குரங்குகளை அடித்து ஓட விடுவது என எப்போதும் ஒரு கெத்தோடு சுற்றிக்கொண்டே இருக்கும்.

லகிலிலுள்ள ஒவ்வோர் இனக் கூட்டத்துக்கும் ஒரு தலைவன் என்பவன் நியமிக்கப்படுகிறான், அல்லது தன்னையே தலைவனாக நியமித்துக்கொள்கிறான். அதற்காக நேரம் பார்த்து காய் நகர்த்துவதிலிருந்து, வஞ்சகம் செய்வது வரை எல்லாமே தனி ரகமாக இருக்கும். தலைவன் என்கிற இடத்தை நோக்கிய பயணத்தில் பல போராட்டங்கள் இருக்கும். ஒரு கூட்டத்தின் தலைவனாக வரும் வரை பிரச்னைதான். அந்தத் தலைவன் பதவியைத் தக்கவைப்பதில் மனிதனென்ன, குரங்கென்ன எல்லாமே ஒன்றுதான். ஒவ்வொன்றும் ஒரு வகை; அதில் கெலாடா தனி வகை.

குரங்குகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கெலாடா குரங்கு குறித்து எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பார்ப்பதற்குப் பபூன் வகை குரங்கு போல இருக்கும். உண்மையில் அவை பபூன் குரங்குகள் அல்ல. இவை எத்தியோப்பிய மலைக் காடுகளில் வாழும் உயிரினம். கடல் மட்டத்திலிருந்து 1,800 மீட்டரிலிருந்து 4,400 மீட்டர் கொண்ட சிகரம்தான் இவற்றின் வாழிடம். கெலாடா குரங்குகள் பெரிய பற்களைக் கொண்டவை. இந்த இனத்தில் ஆண் குரங்குகள் அளவில் பெண் குரங்கைவிட ஒரு மடங்கு பெரியவையாக இருக்கும். ஆண் பெண் வித்தியாசத்தை எளிதில் கண்டறிந்துவிடலாம். இவை பல்வேறு குடும்பங்கள் இணைந்த கூட்டமாக வாழும் இயல்புடையவை. ஒரு கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட குரங்குகள் இருக்கும். மனிதனைத் தவிர்த்து எண்ணிக்கையில் அதிகமாக வாழும் ஒரே இனம் கெலாடா குரங்குகள் மட்டும்தான். ஆண்கள், கூட்டத்தோடு இருந்தாலும் பெண்களே கூட்டத்தை வழி நடத்தும். ஆண்கள் வருவதும் போவதுமாக இருக்கும். இவை கழுதைப் புலிகள் மற்றும் சிறுத்தைகளுக்கு பயந்து மலையில் இருக்கிற சரிவான பாறைகளில் உறங்கும் பழக்கம் கொண்டவை. இவற்றின் சராசரி ஆயுள்காலம் 19 ஆண்டுகள்.

கெலாடா

ஆண் கெலாடா குரங்குகளின் நெஞ்சுப் பகுதியில் முடிகள் இல்லாத ஒரு பகுதி இருக்கும். அதற்கு BLEEDING HEART என்று பெயர். அந்த இடம் குரங்கின் மனநிலையைப் பொறுத்து நிறம் மங்கவோ, பொலிவாகவோ மாறும். அதன் உடலில் சுரக்கும் ‘டெஸ்டாஸ்டிரோன்’ என்ற ஹார்மோன் சுரப்பின் அளவைப் பொறுத்து அடர் சிவப்பு நிறமாக மாறும். இதுவே ஆண் குரங்கு பெண் குரங்குகளுடன் இணை சேர்வதற்கான நேரமாகப் பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெண் குரங்குகள், தலைவனின் ஆணைக்கு இணங்கிவிட வேண்டும். அடர் சிவப்பு நிறம் தலைவனுடைய பலத்தையும் வீரியத்தையும் மற்ற குரங்குகளுக்கு தெரியப்படுத்துகிறது. மற்ற ஆண் குரங்குகள் தலைவன் இருக்கிற இடத்தை விட்டே ஓடிவிடுகின்றன. கூட்டத்தில் இருக்கிற ஆண் குரங்குகள் தங்களின் எதிர்ப்பைக் காட்ட முயற்சி செய்தால் தலைவர் தன்னுடைய வேலையைக் காட்டிவிடுவார். தலைவனாக இருக்கும் ஆண் குரங்கு தன்னை ஆரோக்கியமானவனாகக் காட்டிக் கொள்ள அடிக்கடி பல்வேறு வேலைகளில் ஈடுபடும். பாறைகளின் உச்சிக்குச் சென்று சத்தமிடுவது, பெண் குரங்குகளிடம் இணை சேருவது, மற்ற ஆண் குரங்குகளை அடித்து ஓட விடுவது என எப்போதும் ஒரு கெத்தோடு சுற்றிக்கொண்டே இருக்கும். கூட்டத்தில் யார் எது செய்ய நினைத்தாலும் அதைத் தலைவனே முடிவு செய்பவனாக இருக்கிறான். 

பெண் குரங்குகள் தங்களுடைய குட்டியைப் பெரும்பாலும் இரவில் பெற்றெடுக்கின்றன. சராசரியாக, புதிதாகப் பிறந்த குட்டியின் எடை 464 கிராம் வரை இருக்கும். கூட்டத்தில் இருக்கிற மற்ற பெண் குரங்குகள் குட்டியை எப்போது வேண்டுமானாலும் கடத்திக் கொண்டு போய் விடலாம் என்பதால் பிறந்த ஐந்து வாரங்கள் வரை தன்னுடனே வைத்து பெண் குரங்கு வளர்க்கும். குட்டிகள் ஐந்து மாதங்கள் கழித்து தனியாகச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் ஆண் குரங்குகள் பருவமடைந்துவிடுகின்றன. பேச்சுலர்களாக இருக்கிற ஆண் குட்டிகள் தனிக் குழுவாகச் சேர்ந்துகொள்கின்றன. பருவமடைந்த பேச்சுலர்களால் உடனடியாகப் பெண் குரங்குகளோடு இணை சேர்ந்துவிட முடியாது. அதற்காக அவை எட்டில் இருந்து பத்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டும். அதற்குக் கூட்டத்தில் இருக்கிற தலைவன் தடையாக இருக்கிறான்.

தலைவன் பதவிக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம் என்பது தலைவனுக்கு நன்கு தெரியும். தலைவனாக இருக்கிற குரங்கும் ஒரு காலத்தில் பேச்சுலராக இருந்ததுதான் என்பதால் பேச்சுலர்கள் தலைவனுக்கு எதிராக என்ன செய்வார்கள் என்பதைத் தலைவனாக இருக்கிற குரங்கு தெரிந்து வைத்திருக்கும். தனக்கு எதிராக எந்த ஓர் ஆண் குரங்கும் எழுந்துவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்கும். இருக்கிற குரங்குகளுக்கு பயத்தைக் காட்டுவதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் கையில் கிடைக்கும் ஆண் குரங்குகளை அடித்து வெளுப்பதை வழக்கமாக வைத்திருக்கும்.

அடக்கி வைத்திருக்கிற கோபமும் அழுகையும் ஒரு நாள் வெடிக்கும் என்பது மனிதனோ, குரங்கோ அதுதான்  உலக நியதி. ஆண்டுகள் செல்ல செல்ல தலைவனாக இருக்கிற குரங்கு தன்னுடைய பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பிக்கும். உள்ளே பயத்தை வைத்துக் கொண்டு “தான் பலமாக” இருப்பதாக காட்டிக் கொள்ள அவ்வப்போது பாறைகளின் உச்சியில் அமர்ந்து ஆர்ப்பரிக்கும். ஆனால் அதனால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. ஏனெனில் தலைவனாக இருக்கிற குரங்கிற்கு வெளிப்படையான ஒரு பலவீனம் இருக்கிறது. அது, அதன் இயல்பான உடலமைப்பு. தலைவனின் நெஞ்சு பகுதியில் சுரக்கிற ‘டெஸ்டாஸ்டிரோன்’ ஹார்மோன் சுரப்பி குறையக் குறைய அதன் நெஞ்சு பகுதியின் அடர் சிவப்பு நிறம் குறைய ஆரம்பிக்கும். எவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தாலும் அடர் சிவப்பு நிறத்திற்கு மாறாமல் மங்கலாகவே இருக்கும். தலைவன் தன்னுடைய பலத்தை இழக்கிறான் என்பது அந்த நிறத்தை வைத்தே மற்ற குரங்குகள் அடையாளம் கண்டு கொள்ளும்.

கெலாடா குடும்பம்

Image Courtesy: dave watts

கூட்டத்தில் இருக்கிற பேச்சுலர் குரங்குகள், தலைவன் மீது கொடூர கோபத்துடன் இருக்க இணை சேராமல் இருப்பது மட்டுமே காரணமாக இருக்கிறது. கெலாடா கூட்டத்தில் இருக்கிற ஆண் குரங்குகள் பெண்களுக்காக நிகழ்த்துகிற சண்டைகளே அதிகம். பருவமடைந்த ஆண் பேச்சுலர் குரங்குகள் எப்படியாவது தலைவனை சாய்த்துவிட வேண்டுமென நேரம் பார்த்து காத்துக்கொண்டிருக்கும். தலைவனைச் சாய்ப்பது அவ்வளவு எளிதில்லை என்பது பேச்சுலர் குரங்குகளுக்கும் தெரியும். அதற்காக பேச்சுலர்கள் சில காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். தலைவனின் நெஞ்சு பகுதியில் சுரக்கிற ‘டெஸ்டாஸ்டிரோன்’ ஹார்மோன் சுரப்பி குறையக் குறைய அதன் அடர் சிவப்பு நிறம் குறைய ஆரம்பிக்கும். எவ்வளவு ஆக்ரோஷமாக இருந்தாலும் மங்கலாகவே இருக்கும். தலைவன் தன்னுடைய பலத்தை இழக்கிறான் என்பது அந்த நிறத்தை வைத்தே மற்ற குரங்குகள் அடையாளம் கண்டுகொள்கின்றன.

இப்போது பேச்சுலர் குரங்குகள் பருவ வயதில் இருப்பதால் அதனுடைய ஹார்மோன் சுரப்பி அதிகமாகச் சுரக்க ஆரம்பித்திருக்கும். இந்த நேரத்தில் இணை சேர கூட்டத்துக்கு வருகிற தலைவனை பேச்சுலர்கள் ரவுண்டப் செய்துவிடுகின்றன. தலைவனாக இருக்கும் ஆண் குரங்கு பேச்சுலர் குரங்குகளை எதிர்த்து நிற்கும், ஆனால் பேச்சுலர் குரங்குகள் கண் மூடித்தனமாகத் தாக்குதலைத் தலைவன் மீது தொடுக்கும். இந்தச் சண்டையைக் கூட்டத்தில் இருக்கிற எல்லா ஆண் பெண் குரங்குகளும் பார்த்துக்கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் இதிலிருந்து தப்பித்தால் போதுமென்று தலைவன் அங்கிருந்து தப்பித்து ஓடிவிடும். பேச்சுலர் கூட்டத்தில் இருக்கிற பலம் பொருந்திய ஆண் அடுத்த தலைமுறை பேச்சுலர்கள் வரும் வரை அதாவது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தலைவனாக இருக்கும்.

தென்னாப்பிரிக்காவின் University of the Free State (UFS) பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கெலாடா குரங்குகள் வாழ்வியலை ஆராய்ந்து அது குறித்து அறிக்கையைச் சமர்பித்திருக்கிறார்கள். தலைவனை ஏமாற்றி வேறோர் ஆண் குரங்கிடம் தொடர்பு வைத்திருக்கும் பெண் குரங்குகள் கூட்டத்தில் இருக்கின்றன. அவை தலைவனால் கண்டுபிடிக்கப்பட்டால், கூட்டத்தில் வைத்துச் சம்பந்தப்பட்ட குரங்கைக் கண் மூடித்தனமாக தாக்கும். சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நிகழும். குரங்குகளுக்குள் ஏமாற்றுவது மற்றும் கண்டுபிடிப்பது பற்றிய பயம் இருப்பதற்கான சான்றுகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விலங்குகள் உலகில் 'பயம்' மற்றும் 'கண்டுபிடிப்பு' குறித்துப் பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. குரங்குகள் பலவிதம்... அதில் ஒவ்வொன்றும்  ஒருவிதம்..!


டிரெண்டிங் @ விகடன்