``தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை!’’ - சாரு நிவேதிதா

``தன் பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் ஒன்றும் ரேப்பிஸ்டுகள் இல்லை!’’ - சாரு நிவேதிதா

`இந்தத் தேசம், இப்போதுதான் நிம்மதியான மூச்சுக்காற்றால் நிறையும்' - தன் பாலின உறவு குற்றமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு, தன் பாலின உறவுக்கு ஆதரவளித்தவர்கள் பதிவிட்ட செய்தி இது. 

தன் பாலின ஈர்ப்பு - சாரு நிவேதிதா

தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர் சாரு நிவேதிதாவிடம் தீர்ப்பு குறித்துப் பேசினோம்.

``இந்தத் தீர்ப்பு புரட்சிகரமான ஒரு தீர்ப்பு. `பெரும்பான்மை மக்கள் கூறும் கருத்துகளை, சிறுபான்மைத் தரப்பு ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை' என நீதிபதி கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியா போன்ற நாட்டில் மதரீதியாக அனைவரும் எதிர்க்கும் ஒரு விஷயத்துக்கு இப்படியான தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது முக்கியமான ஒன்று. மற்றவர்களுக்குப் பாதிப்பு வராத வரை என் உணவை எப்படி யாரும் தீர்மானிக்கக் கூடாதோ, அதுபோலத்தான் இதுவும்.

தன் பாலின ஈர்ப்புகொண்டவர்களை பலரும் `ரேப்பிஸ்ட்' என நினைக்கிறார்கள். ஒருவர் Gay என்பதால் அவர் எல்லா ஆண்களையும் கையைப் பிடித்து இழுப்பார் என நினைத்துக்கொள்கிறார்கள். அவர்களை பொதுச்சமூகம் கிண்டலும் கேலியும் செய்வது, அவர்கள் அருகில் அமரத் தயங்குவது  என்ற மனப்பான்மை பொதுச்சமூகத்துக்கு உள்ளது. Gay ஆக இருப்பவர்கள் அனைத்து ஆண்களையும் தவறாகப் பார்ப்பவர்கள் அல்ல. தான் விரும்பும், தன்னை விரும்பும் தன் பாலினத்தை மட்டும் நேசிக்கும் காதலுணர்வுகொண்டவர்கள். இது இயல்பானது. ஆண்-பெண் உறவு நிலையில் உள்ளவர்களைப்போலத்தான் இதுவும். வெளிநாடுகளில் திருமணம் செய்துகொண்ட இரு ஆண்களோ, இரு பெண்களோ மற்ற தம்பதியைப்போலத்தான் வாழ்கிறார்கள்.

சாரு நிவேதிதா

அன்பு, சண்டை, விவாகரத்து என அவர்கள் உறவிலும் உண்டு. இதைப் புரிந்துகொள்ள, ஏற்றுக்கொள்ள பொதுச்சமூகம் மறுக்கிறது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு அவர்களுக்கு அரசு தரப்பிலிருந்து எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது. ஆனால், பொதுமக்களின் மனநிலை மாறவேண்டும் என்றால், இதைப் பற்றி விரிவான உரையாடல்கள் வேண்டும்.

பள்ளிகளில், ஆசிரியர்கள் இதைப் பற்றிய தெளிவான உரையாடல்களை நிகழ்த்தவேண்டும். அப்போதுதான் சமூகத்தில் LGBTQ பற்றிய சரியான பிம்பம் உருவாகும். உரையாடல்களைத் தொடங்குவதுதான் குற்றங்களைக் குறைக்க வழி. இந்தத் தீர்ப்பைப்போலவே மற்றொரு முக்கியமான விஷயத்திலும் நீதிமன்றம் நெறிமுறைப்படுத்த வேண்டும். திருமணம் ஆகாத  ஓர் ஆணும் பெண்ணும் தங்களின் விருப்பத்தின் பேரில் உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதை தற்போது `விபசாரம் எனக் குறிப்பிட்டு கைதுசெய்யும் நடவடிக்கை உள்ளது. அது தவறான நடவடிக்கை. அது குற்றச்செயல் அல்ல. இதுபோன்ற தவறான பார்வைதான் சமூகத்தில் குற்றங்கள் நடக்க வழிவகை செய்யும்.

நமது சமூகத்தில் `விவாகரத்து' என்ற வார்த்தையே இன்னும் தவறான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அபிராமி என்கிற பெண் தனக்குத் திருமணமான பிறகு கணவரைப் பிரிந்து தனக்குப் பிடித்த ஒருவருடன் வாழ்ந்துள்ளார். ஆனால், அவரைப் பெற்றோரும் கணவரும் குழந்தைகளைக் காரணம் காட்டி  அழைத்து வந்த பிறகு ஏற்பட்ட விளைவு மோசமானது. விவாகரத்து என்பதன் மீதான சரியானப் புரிதல் இல்லாமையே இதற்குக் காரணம். பல வருடங்களுக்கு முன்னர் நான் தன் பாலின ஈர்ப்பு குறித்துப் பேசியபோது பலரும் என்னை எதிர்த்தார்கள். ஆனால், இன்றைய இளைஞர்களுக்கு அதைப் பற்றியப் புரிதல் இருக்கிறது" என்றார் சாரு நிவேதிதா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!