Published:Updated:

நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி

நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி

மருதன்

நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து இனவொதுக்கலுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் டெஸ்மாண்ட் டுட்டு. ஆங்கிலிக்கன் திருச்சபையின் முன்னாள் பேராயர். உலகம் நன்கறிந்த மனித உரிமைப் போராளி.  அமைதிக்கான நோபல் விருது பெற்றவர். இந்திய அரசிடமிருந்து காந்தி அமைதிப் பரிசையும் பெற்றிருக்கிறார். தற்சமயம் இவருக்கு 85 வயதாகிறது. நீண்டகாலமாக ஓய்வில் இருந்துவரும் டுட்டு முதல்முறையாக கடந்த செப்டம்பர் 7-ம் தேதி மீண்டும் உலகுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்.  தன்னைப் போலவே அமைதிக்கான  நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூச்சிக்கு டுட்டு எழுதியுள்ள திறந்த மடல் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 

நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதிஆங் சான் சூச்சியை அன்புக்குரிய சகோதரி என்று நேசத்துடன் அழைப்பது டுட்டுவின் வழக்கம். இப்போது எழுதிய கடிதத்தையும்கூட அப்படித்தான் அவர் தொடங்கியிருக்கிறார். `‘பல ஆண்டுகளாக உங்கள் புகைப்படத்தை என் மேஜைமீது வைத்திருந்தேன். மியான்மர் மக்களுக்காக நீங்கள் செய்த தியாகங்களையும் நீங்கள் சந்திக்க நேர்ந்த அநீதிகளையும் அந்தப் படம் எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். நீதியின் அடையாளமாகவும்  அந்தப் படம் எனக்குக் காட்சியளித்தது.

பொது வாழ்வில் நீங்கள் அடியெடுத்துவைத்த போது எங்கள் கவலையெல்லாம் பறந்துபோனது. ரோஹிங்கியா மக்கள்மீதான வன்முறை குறித்து இனி கவலைப்படவேண்டாம், இனி எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டோம். ஆனால் நடக்கவில்லை. இன அழிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது அல்லது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி

எனக்கு வயதாகிவிட்டது. உடல் தளர்ந்து விட்டது. முறைப்படி ஓய்வு பெற்றுவிட்டேன். பொது விவகாரங்களில் அமைதி காக்கவேண்டும் என்று சபதமும் ஏற்றுக்கொண்டிருந்தேன். ஆனால், இப்போது வாய் திறக்கவேண்டிய அவசியம் நேர்ந்துவிட்டது. ஆழமான சோகம் என்னைப் பேச வைத்துவிட்டது.

ஒரு நாடு தன் மண்ணில் வாழும் எல்லோருடைய உரிமைகளையும் விதிவிலக்கின்றி ஒன்றுபோல் மதிக்கவேண்டும். தன் மக்களுக்கு அமைதியான வாழ்வை அளிப்பது ஓர் அரசின் கடமை. மக்களின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அந்த நாட்டின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். அந்த வகையில், சூச்சி தலைமை தாங்கி வழிநடத்தும் நாட்டை இனியும் சுதந்தர நாடு என்று அழைக்க முடியாது.

 உங்களுக்குத் துணிச்சல் பிறக்கவேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். நீதிக்காக நீங்கள் குரல்கொடுக்க வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். மனித உரிமைகளுக்காகவும் ஒற்றுமைக்காகவும் உங்கள் குரல் ஒலிக்கவேண்டும். அதிகரித்துக்கொண்டே போகும் பதற்றத்தை நீங்கள் உடனடியாகத் தலையிட்டுக் குறைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.’’ என்று எழுதியிருந்தார் டெஸ்மாண்ட் டுட்டு.

அமைதிக்கான நோபல் பரிசை வாங்கிய அன்புக்குரிய சகோதரி, ரோஹிங்கியா விவகாரத்தில் அமைதி காப்பதை டுட்டுவால் ஏற்க முடியவில்லை. நெஞ்சில் தைத்த முள்ளாக அந்த அமைதி அவரை வாட்டியிருக்கிறது. ராணுவ ஆட்சியின் பிடியிலிருந்த மியான்மரை ஜனநாயகத்தை நோக்கி நகர்த்திச் செல்ல வேண்டும் என்று பலமுறை குரல் கொடுத்த சூச்சி, தன் சொந்த நாட்டில் நடைபெறும் இனவொழிப்பைக் கண்டும் காணாமலும் கடந்து செல்வதைவிடப் பெரிய முரண் இருக்க முடியுமா?  ‘`இந்த உயரத்தை அடைய உங்களுக்கு அமைதி உதவியிருக்கிறது என்றால், அதற்காக நீங்கள் கொடுக்க வேண்டிய விலை மிகப் பெரியதாக இருக்கும்’’ என்று எச்சரிக்கிறார் டுட்டு.

சூச்சியைப்போல், டுட்டுவைப்போல் உலக அமைதிக்கான நோபல்  விருதை வென்ற மலாலாவும் தன் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கிறார். நாட்டைப் பாதுகாக்க வேண்டிய படைகள் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பிரிவினர்மீது வன்முறையைப் பிரயோகிப்பதை மலாலாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அந்த வன்முறை எப்படியிருக்கும் என்பதை நேரடியாக உணர்ந்தவர் அவர். கிட்டத்தட்ட அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டவரும்கூட. ``ஒவ்வொருமுறை செய்தி வெளிவரும்போதும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரங்களை நினைத்து என் இதயம் உடைந்துபோகும்’’ என்கிறார் மலாலா.

சூச்சிக்காக எழுதப்பட்ட தனது கடிதத்தில் மலாலா இரண்டு விஷயங்களைக் கவனப்படுத்துகிறார். முதலில், குழந்தைகள். வன்முறை நிறைந்த இடத்தில் குழந்தைகளாக இருப்பது கொடூரமானது. வன்முறை குழந்தைகளின் உடலை மட்டுமன்று,  உள்ளத்தையும் சிதைத்துவிடும். இதை மலாலா ஸ்வாட் பள்ளத்தாக்கில் கண்கூடாகப் பார்த்திருக்கிறார். அவர் கேள்விப்படும் செய்திகள், மியான்மர் மற்றொரு ஸ்வாட் பள்ளத்தாக்காக மாறிக்கொண்டிருப்பதையே உறுதிப்படுத்துகின்றன. அதே பயங்கரவாதம்,  அதே வன்முறை. அம்மா, அப்பாவை இழந்து வீதிகளில் அழுதுகொண்டு ஓடும் குழந்தைகளின் முகங்களைத் தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் கண்டு கலங்கியிருக்கிறார் மலாலா. ஸ்வாட் பள்ளத்தாக்கில் இந்நிலை ஏற்பட்டதற்குக் காரணம் பயங்கரவாதிகள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மியான்மரில் அதேபோல் குழந்தைகள் பரிதவித்து நிற்பதற்குக் காரணம் அந்நாட்டின் அரசேதான் என்பது எவ்வளவு பெரிய கொடூரம்?

மலாலாவைப் பாதித்த முதல் விஷயம் இதுதான். ‘`மியான்மர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்படும் சிறு குழந்தைகளின் படங்களை நான் பார்த்தேன். இந்தக் குழந்தைகள் ஒருவரையும் தாக்கியதில்லை. இருந்தாலும் அவர்களுடைய வீடுகள் கொளுத்தப்படுகின்றன. இது ஏன் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’’ என்கிறார் மலாலா. இது பௌத்தர்களின் நிலம், வந்தேறி ரோஹிங்கியாக்களுக்கு இங்கே இடமில்லை என்னும் வாதம் அவரைத் திருப்திப் படுத்தவில்லை. ‘`அவர்களுடைய வீடு மியான்மர் கிடையாது என்றால் வேறு எங்கே இருக்கிறது?’’

ரோஹிங்கியாக்கள் பிறந்தது பர்மாவில், அவர்களுடைய தாய்நாடு அதுதான். பல தலைமுறைகளாக பர்மாவில் வாழ்ந்துவரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை  மியான்மரின் குடிமக்களாக அங்கீகரிக்கவேண்டும் என்கிறார் மலாலா. பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ தற்சமயம் ரோஹிங்கியாக்களால் நம்பமுடிந்த ஒரே நாடு பங்களாதேஷ் மட்டுமே என்பதையும் மலாலா நன்கு உணர்ந்திருக்கிறார்.  பர்மாவிலிருந்து உயிர் தப்பியோடும் லட்சக்கணக்கான ரோஹிங்கியாக்களின் நம்பிக்கை வங்காளதேசம் தான். `‘கொடூரமான வன்முறைத் தாக்குதல்களிலிருந்து தப்பியோடும் ரோஹிங்கியாக் குடும்பங்களுக்கு பங்களாதேஷைப்போல் பிற நாடுகளும் உணவு, இருப்பிடம் ஆகிய உதவிகளை அளிக்க முன்வர வேண்டும். இது பாகிஸ்தானுக்கும் பொருந்தும்’’ என்கிறார் மலாலா.

``ரோஹிங்கியா முஸ்லிம்களின் வேதனையான, வெட்கக்கேடான  துயரத்துக்கு எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறேன். நோபல் விருது பெற்றவரும் இதைச் செய்யவேண்டும் என்று காத்திருக்கிறேன்’’ என்கிறார் மலாலா. சூச்சிக்கு இவர் விடுக்கும் செய்தி இதுதான்: ``தயவு செய்து உங்கள் அமைதியைக் கலையுங்கள்!”

நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி

டுட்டுவின் செய்தியும் இதுவேதான். நோபல் விருது பெற்ற மூத்த போராளியும் இளம் போராளியும் தனித்தனியே சூச்சிக்குக் கோரிக்கை அனுப்பிவிட்டனர். தயவுசெய்து உங்கள் உதடுகளைப் பிரித்துப் பேசுங்கள் என்று மன்றாடிப் பார்த்துவிட்டனர். ஆனால், சூச்சியிடமிருந்து எந்த அசைவும் இல்லை.

இந்த இருவருக்கு மட்டுமன்று, உலகுக்கும்கூடப் புரியவில்லை. மியான்மரின் போராளிக்கு என்ன ஆகிவிட்டது? அயல்நாடுகளில் வளர்ந்து, கல்வி பயின்று 1989-ம் ஆண்டு நாடு திரும்பிய சூச்சியை பர்மிய ராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுச் சிறையில் அடைத்தனர். அமைதிக்கான நோபல் விருது பெற்ற பிறகும்  கிட்டத்தட்ட 15 ஆண்டுக்காலம் அடைபட்டுக் கிடந்த சூச்சி, நவம்பர் 2010-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். நவம்பர் 2015 தேர்தலில் போட்டியிட்ட சூச்சியின் நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி கட்சி வரலாறு காணாத வெற்றியை ஈட்டி மியான்மர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தையும் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரத்தையும் பெற்றது. அதிபர் பதவியில் வேறொருவரை அமரவைத்துவிட்டு அவருக்கும் மேலான ஒரு பதவியை உருவாக்கி (ஸ்டேட் கவுன்சிலர்) தன்னை அதில் பொருத்திக் கொண்டார் சூச்சி. எந்த மியான்மர் அவரை வீட்டுக் காவலில் வைத்ததோ அந்த மியான்மர் அரசு இப்போது சூச்சியின் கரங்களில்.

அதைக் கண்டு முதலில் மகிழ்ந்தவர்கள் அநேகமாக ரோஹிங்கியா மக்களாகத்தான் இருக்கவேண்டும். தொடர்ச்சியாக ராணுவச் சீருடை அணிந்தவர்களையே ஆட்சியாளர்களாகக் கண்டுவந்த ரோஹிங்கியாக்கள் முதல்முறையாக வண்ணப் பூக்களையும் புன்னகையையும் சூடி வலம்வந்த சூச்சியைக் கண்டு நம்பிக்கை கொண்டார்கள். ``எங்கள் நாடு அமைதிக்காக நீண்டகாலம் காத்துக்கொண்டிருக்கிறது’’ என்று அவர் அறிவித்தபோது, அவர் நம்மைப் பற்றிதான் பேசுகிறார் என்று ரோஹிங்கியாக்கள் உணர்ச்சிவயப்பட்டனர். `மியான்மரின் 90 சதவிகித பௌத்தர்கள் இனி சூச்சியைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குவார்கள், வந்தேறி என்று நாம் இனியும் தூற்றப்பட மாட்டோம், இனி அரசுப்படைகளால் தாக்கப்பட மாட்டோம்’ என்று அவர்கள் கனவு காண ஆரம்பித்தனர். `இனி, சூச்சி எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.  குழந்தைகளே,  ஒரு புதிய பர்மாவை இனி நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். இனி இங்கே நமக்கான குரல் ஒலிக்கும்’ என்று எதிர்பார்த்தனர்.

அந்தக் குரலை அவர்கள் கேட்கவும் செய்தனர். சூச்சி பேசினார். ``இங்கே எந்த இனவொழிப்பும் நடக்கவில்லை. எந்த மனித உரிமை மீறலும் நிகழவில்லை. உலகம் எங்கள் நாட்டைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.  அரசுப் படைகள் ரோஹிங்கியாக்களைத் தாக்கிவருவதாகவும் நாட்டைவிட்டு விரட்டிவருவதாகவும் சொல்லப்படுவது உண்மையல்ல. உண்மையில், அரசுப் படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிராகத்தான் நடவடிக்கை எடுத்துவருகிறது. அரசுப் படைகள் வன்முறையில் ஈடுபடவில்லை,  வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவரத்தான் முயன்றுவருகிறது. நாங்கள் பிரச்னையைத் தோற்றுவிக்கவில்லை, தீர்க்கத்தான் விரும்புகிறோம்’’ என்றார்.

சூச்சி தொடர்ந்து பேசினார். ``ரோஹிங்கியாக்களின் குடிசைகள் தீக்கிரையாக்கப்படவில்லை. அவர்கள் தாங்களாகவே தங்கள் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொள்கிறார்கள். அரசுப் படைகள்மீது எல்லோரும் குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், எப்படி அரசுப் படைகளைச் சிலர் குற்றம் சொல்கிறார்களோ அப்படியே அரசுப் படைகளும் வேறு சிலரைக் குற்றம் சொல்கிறார்கள். குற்றச்சாட்டு, எதிர்க் குற்றச்சாட்டு இரண்டையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும்.  ஒருபக்கத்தை மட்டும் பார்க்கக்கூடாது’’ என்று ஒருதலைப்பட்சமாகப் பேசினார் சூச்சி.

தங்களுடைய அத்தனை எதிர்பார்ப்புகளும் அத்தனை கனவுகளும் அத்தனை பிரார்த்தனைகளும் முடிவுக்கு வந்த அந்தத் தருணத்தை ரோஹிங்கியா மக்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க மறக்கப்போவதில்லை. ஏன் இப்படி நிகழவேண்டும் என்று அவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சொற்களெல்லாம் உண்மையிலேயே அவரிடமிருந்து புறப்பட்டு வந்தவையா அல்லது அவர் வகிக்கும் பதவியின் குரலா? உண்மையில் அவர் நல்லவர்தான், ராணுவம்தான் அவரைக் கட்டாயப்படுத்தி இப்படியெல்லாம் பேச வைக்கிறது, பாவம் அவர் என்ன செய்வார் என்று பரிதாபப்படுகிறவர்களும்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

சூச்சி மியான்மரின் நம்பிக்கை நட்சத்திரம் என்று நாம் நினைத்திருந்தோம். தவறு. அவர் பெரும்பான்மை பர்மியர்களின் தலைவர் மட்டுமே என்கிறார்கள் வேறு சிலர். அவர் 90 சதவிகித மக்களின் அணியில் இடம்பெற்றிருக்கவே விரும்புகிறார்.  அவர்களுக்குச் சூச்சி தேவைப் படுகிறார்கள். சூச்சிக்கும் அவர்கள் தேவை. இது ஓர் ஒப்பந்தம். இரு தரப்புக்கும் நலனளிக்கும் ஒப்பந்தம். ஒரு தலைவர் நீதியின் பக்கம் நிற்க வேண்டும் என்று அவசியமில்லை, பெரும்பான்மையின் பக்கம் நின்றாலே போதும். ஜனநாயகமோ நீதியோ அல்ல, ஓட்டுகளே அவருக்கு இப்போது முக்கியமாக இருக்கிறது. இமாலய வெற்றியின் மிதப்பில் இப்போது அவர் பூரித்துக் கிடக்கிறார். இந்தப் பூரிப்பு அவருக்கு முக்கியமானதாக இருக்கிறது. இப்போது அவரால் நம்மைப் பற்றிச் சிந்திக்கக்கூட முடியாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆதரிப்பதால் அவருக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா?

மாறாக, கெட்ட பெயரே கிடைக்கும். நீதிக்குக் குரல் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு அவர் நமக்காகப் பேசினால் ஒட்டுமொத்த பர்மாவும் அவரை வெறுத்தொதுக்க ஆரம்பித்துவிடும். அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குரல் கொடுக்கும் சில மனித உரிமைப் போராளிகளுக்காகவும் ஒருசில நோபல் விருதாளர்களுக்காகவும் சூச்சி தன் அரசியல் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வாரா என்ன? இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நாம் தெளிவடைய வேண்டும். இது நம் போராட்டம். இது நம் போர். நம்முடையது மூழ்கும் கப்பல். ‘ஓடிவந்து இதில் தாவிக் குதிக்க ஒருவரும் விரும்பமாட்டார்கள்;  அகதிகளைத் தவிர’ என்கிறார்கள் பாதிக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியாக்கள்.

நான் அகதி - 8 - வெறுக்கத்தக்க அமைதி

மலாலாவும் டுட்டுவும் சூச்சி வாய் திறக்க வேண்டும் என்கின்றனர். அவர் வாய் திறக்கும் ஒவ்வொருமுறையும் எங்கள் வலி அதிகரிக்கவே செய்கிறது என்கின்றனர் ரோஹிங்கியாக்கள். `எங்கள்மீதான இனவொழிப்புக்குக் காரணம் நாங்கள்தான் என்கிறார் அவர். எங்கள் குழந்தைகள் துப்பாக்கிகளைக் கண்டு வீறிட்டு அழுவதற்குக் காரணம் எங்கள் குழந்தைகள்தான் என்று அவர் நம்பச் சொல்கிறார். மியான்மர் ராணுவம் எங்களைத் துரத்தவில்லை, நாங்களே எங்களை வெளியேற்றிக்கொண்டிருக்கிறோம். மியான்மர் எங்களைத் தாக்கவில்லை, நாங்களே எங்களை அழித்துக்கொள்கிறோம். எங்களை நாங்களே வெறுத்துக்கொள்கிறோம். நாங்களே எங்களை அகதிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ரோஹிங்கியாவும் இதை நம்பவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இப்படி நம்புவது அவருக்கு வேண்டுமானால் அனுகூலமாக இருக்கலாம். நாங்களுமா அதைச் செய்யவேண்டும்?’

டெஸ்மாண்ட் டுட்டு தன்னுடைய அன்புக்குரிய சகோதரியின் புகைப்படத்தை இன்னமும் மேஜையின்மீது வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை. அவரைப் போலவே பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு கல்லூரியும் தனது கூடத்தில் சூச்சியின் புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தது. 1960களில் சூச்சி அரசியல், தத்துவம், பொருளாதாரம் பயின்றது இங்கேதான். தன்னுடைய 67வது பிறந்தநாளை சூச்சி இங்கே வந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். அந்த மகிழ்ச்சியில் பங்கேற்கும் விதமாகத் தன்னுடைய பெருமிதத்துக்குரிய பழைய மாணவிக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது ஆக்ஸ்ஃபோர்டு. ஆனால், இனியும் அதே பெருமித உணர்வைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்று ஆக்ஸ்ஃபோர்டுக்குத் தெரியவில்லை. ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் சூச்சியின் அணுகுமுறை ஏற்கத்தக்கதாக இல்லை என்கிறது அந்தப் பல்கலைக்கழகம். அத்தோடு சூச்சியின்  படத்தை  அகற்றி சரக்கு அறையில் ஒரு மூலையில் கிடத்தியுள்ளது.

சூச்சி தன் குடிமக்களைப் பாரபட்சமின்றி நடத்தவேண்டும் என்று விரும்புகிறோம். அதை அவர் செய்வார் என்று நம்புகிறோம் என்கிறது ஆக்ஸ்ஃபோர்டு. டுட்டுவும் மலாலாவும்கூட இதே நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். உலகின் நம்பிக்கையும் இதுதான். ஆனால், ரோஹிங்கியா அகதிகள் நம்பிக்கை குறித்துப் பேசத் தயங்குகிறார்கள். `எங்களுடைய உடைமை களையும் உறவினர்களையும் குழந்தைகளையும் நண்பர்களையும் தாய் மண்ணையும் இழப்பதற்கு முன்னால் நாங்கள் முதலில் துறந்தது எங்கள் நம்பிக்கையைத்தான். நம்பிக்கை என்னும் சுமையை நாங்கள் சுமக்க விரும்பவில்லை. அதற்கான வலு எங்களிடம் இல்லை, மன்னித்துக்கொள்ளுங்கள்.’

- சொந்தங்கள் வருவார்கள்