Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

கமல்ஹாசன்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

கமல்ஹாசன்

Published:Updated:
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

ரியலூர் அனிதா மரணித்த சமயத்தில் ஆறுதல் சொல்லவும் உதவி செய்யவும் என் நற்பணி இயக்கத் தோழர்களை அங்கு அனுப்பி வைத்திருந்தேன். அதற்கு

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

நன்றி தெரிவிக்க அனிதாவின் அண்ணனும் அப்பாவும் என்னை வந்து சந்தித்தனர். ‘இரண்டு நாளா உறவுக்காரங்க மாதிரி கூடவே இருந்தாங்க சார்’ என்றனர். நன்றி சொல்ல அவசியம் இல்லை என்றாலும், அது அவர்களின் பெருந்தன்மை.

அது கண்கலங்கவைத்த சந்திப்பு. ‘இப்ப என்ன தம்பி பண்ணிட்டிருக்கீங்க’ என்று அனிதாவின் அண்ணனிடம் விசாரித்துக்கொண்டிருந்தேன். ‘நான் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாராகிட்டிருக்கேன். இன்னொரு சகோதரர் எம்.எஸ்ஸி முடிச்சிருக்கார்’ என்றார். ‘என்ன கனவு, என்ன பண்ணணும்னு நினைக்கிறீங்க’ என்றேன். ‘அனிதா பேர்ல ஒரு லைப்ரரி வைக்கணும் சார்’ என்றார். என் 60 வயதில் இப்போது நான் நிறைவேற்றத் துடிக்கும் கனவை இந்த இளம் வயதில் அந்த சகோதரர் தூக்கிச் சுமக்கிறார். ‘எனக்கிருக்கும் அதே கனவு. சேர்ந்து பண்ணுவோம்’ என்றேன். 

 ‘கல்விதான் ஆதாரம். பொருளாதார, சமூகச் சுதந்திரத்தைக் கல்வியால் மட்டுமே பெற முடியும்’ என்பது பெரியவர்களின் கருத்து. அப்படி தனக்குக் கிடைக்காத அந்தக் கல்வியை ஒரு கூலித்தொழிலாளி, தன் அடுத்த தலைமுறைக்குக் கடத்தியிருக்கிறார். எவ்வளவு பெரிய கனவுடன் அந்தக் குடும்பத்தை அவர் வழிநடத்திவருகிறார் என்பது நம் அனைவருக்குமான பெரும் பாடம். அந்த மனிதர் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார் என்பது அவர்களின் குடும்பத்தைப் பார்த்தால் தெரிகிறது.

என் அலுவலகத்தில் நடந்த அந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை என்னிடம் காட்டினார்கள்.  ஒரு  கூலித் தொழிலாளி, ஒரு கல்வியாளர், எட்டாம் கிளாஸையே எட்டிப்பிடிக்கக் கஷ்டப்பட்ட கமல்... இப்படித்தான் அந்தப்படம் என் பார்வையில் பதிந்தது. அனிதாவுக்குக் கிடைத்த வாய்ப்புகள் அவரின் அப்பா காலத்தில் கிடைத்திருந்தால் அவரும் இன்று கல்வியாளர்தான். பள்ளியிலிருந்து நின்று, வெவ்வேறு வேலைகள் பார்த்து, சினிமாவுக்கு வந்த பிறகு மனம் சோர்ந்து, ‘செத்துப்போயிட்டா பரவாயில்லை’ என்று, தனியாக இருந்த பல நாள் நான் யோசித்ததுண்டு.

ஆனால், அந்த யோசனையை வளரவிடாமல் மடைமாற்றம் செய்து, வாழவேண்டும் என்ற ஆசையை இந்த உலகமும் அப்போதைய என் சூழலும்தாம் கற்றுத்தந்தன. ஆனால், ‘செத்தா பரவாயில்லை’ என்ற ஒரு சூழல் அனிதாவுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தச் சூழலை, கண்டிப்பாக அவரின் குடும்பம் உருவாக்கியிருக்காது. ஏனெனில், அனிதா அந்த வீட்டின் குலசாமி. ஆனால், மரணத்தை நோக்கித் தள்ளிய அது தவறான, மன்னிக்கப்பட முடியாத புறச்சூழல்.

இந்தச் சூழலில், பள்ளியிலிருந்து இடைநின்ற என்னைப் பல்வேறு விதமான ஆசிரியர்கள் எப்படி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துவந்தனர் என்பதைச் சொல்லலாம் என நினைக்கிறேன். ‘அப்படி இருந்த இவனே, இன்னைக்கு இப்படி வந்திருக்கான்னா, நாம கண்டிப்பா முன்னுக்கு வரலாம்’ என்ற நேர்மறை எண்ணத்தை விதைக்கும் என்பதால் இதைச் சொல்ல விழைகிறேன். மற்றபடி இது தன்னடக்கமோ, சுய விளம்பரமோ இல்லை.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

நான் பிறந்து வளர்ந்தது, தமிழ் தமிழ் என்று குரல் கேட்டுக்கொண்டிருந்த காலகட்டம். ஆனால், அப்போது என்னை ஆங்கில வழிக் கல்வியில்தான் சேர்த்து விட்டனர். நான் குழந்தையாக இருந்த அந்தச் சமயத்தில் என்னையும் சாருஹாசனின் மூத்த மகளையும் பார்த்துக்கொள்ள ஓர் ஆங்கிலோ இந்தியன் அம்மாவை வேலைக்கு அமர்த்தி யிருந்தனர். அவர்களுடன் ஆங்கிலத்தில்தான் உரையாட வேண்டிய சூழல். வீட்டில் பேசும் தமிழும் பிராமண மொழிதான்.

அந்தச் சமயத்தில் சண்முகம் அண்ணாச்சி நாடகக்குழுவில் சேர்ந்ததும் நான் தேடிப்போகாமல் யதேச்சையாக நடந்ததுதான். அப்போது எனக்கு எட்டு வயதிருக்கும். வீட்டில் புழங்கும் ஆங்கிலமும் பூஜையில் உச்சரிக்கும் சம்ஸ்கிருதமும் மட்டுமே தெரியும். ஆனால், அண்ணாச்சியிடம் போனபிறகுதான் அதே பக்தி, தமிழ்வழியானது. கோயில்களுக்குப் போகும்போது, ‘பாடு கமல்’ என்பார். ‘தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசி என்  உள்ளங்கவர் கள்வன்...’ என்று அந்தந்தக் கோயில்களுக்கேற்ற பாடல்களைப் பாடுவேன்.

‘குழந்தைகள் நாடகம்’ போடவேண்டும் என்று நினைத்துப் போட்டவர் அன்று அண்ணாச்சி ஒருவர்தான். குழந்தைகளைவைத்து ஒரு தொழில்முறை நாடகம் போடவேண்டும் என்பதே ஒரு வித்தியாசமான எண்ணம்தானே. அப்படி வெவ்வேறு ஊர்களுக்குப் பிள்ளைகளை அழைத்துச்செல்வார். அவர் குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் அப்போது டிராமாவில் நடித்துக்கொண்டிருந்தனர். பள்ளிக்கூடம் போய்விட்டு வந்ததும் நேராக அண்ணாச்சியின் `அவ்வையகம்’ போய்விடுவேன். குளிக்கவும், தூங்கவும்தான் எல்டாம்ஸ் சாலை வீட்டுக்கு வருவேன். பகவதி அண்ணாச்சி பிள்ளைகளுடனே வளர்வேன். சமைத்துக்கொண்டிருக்கும்போதே பாதி வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டு ஓடும் சுதந்திரத்தைத் தந்த வீடு.

அங்கு நடிக்கும்போது இருந்த சூழல், சுற்றி இருந்த நாடகக் கலைஞர்களின் பேச்சு, நகைச்சுவை... இவையெல்லாம்தான் எனக்கு ஆரம்பத்தில் தமிழார்வம் வரக் காரணம். அதுவும் அண்ணாச்சியே முக்கியமான முன்னுதாரணம். அவர் குரல் உயர்த்துவது, கோபப்படுவது அனைத்துமே ஏதோ ஸ்ருதியில் பாடுவதுபோல் இருக்கும். ‘எப்போதுமே ஒரு மனிதன் எப்படி அப்படி இருக்க முடியும்’ என்று வியப்பாக இருக்கும். அங்கு அண்ணாச்சியினுடைய நூலகம் ஒன்று இருந்தது. 10 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. ‘இதையெல்லாம் படிச்சிட்டுதான் அண்ணாச்சி இந்தளவுக்கு கம்பீரமா இருக்கார்’ என்று அந்த வயதில் ஆர்வமும் ஆசையுமாக அவ்வை இல்லத்தையே சுற்றிவருவேன்.  அண்ணாச்சிக்குப் பிறகு அவ்வளவு புத்தகங் களையும் காமராஜர் பல்கலைக்கழக்கத்துக்குக் கொடுத்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.

திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி. காரில் அந்த வழியாகக் கடக்கையில் அதன் கட்டடத்தைப் பார்த்தால் இப்போதும் தொண்டைக்குழி அடைக்கும். என் பிரதர் இன் லாவும்  அட்வகேட் ஜெனரலாக இருந்தவருமான பராசரன்தான் என்னை ஆசையாய் அங்கு சேர்த்து விட்டார். ஒருமுறை காலை அறுத்துக்கொண்டேன், இன்னொரு முறை மாடியிலிருந்து விழுந்துவிட்டேன்... என்று எனக்கு அங்கு சிறிதும் பெரிதுமாக ஓரிரு விபத்துகள். அவை என் தவறல்ல. அவை ரௌடியிசத்திலும் வராது. ஆனால், பள்ளியின் நற்பெயருக்கு ஏதேனும் களங்கம் வந்துவிடுமோ என்று பயந்த நிர்வாகம், ‘இந்தப் பையனை இங்கு வைத்துக் கொள்வது ஆபத்து. அழைத்துச்சென்றுவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டனர்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

படங்கள்: ஜி.வெங்கட்ராம்

அந்தச் சமயத்தில்தான் என் அம்மா எங்களுக்கு உறவாக இருந்த ஒருவரிடம் கெஞ்சிக்கூத்தாடி புரசைவாக்கத்தில் எம்.சி.டி.எம் பள்ளியில் கொண்டுபோய்ச் சேர்த்தார். அங்குதான் எனக்கு இன்னொரு சண்முகம்பிள்ளை கிடைத்தார். அற்புதமான தமிழ் ஆசிரியர். ஒருமுறை என்னை அழைத்தவர், ‘தம்பி, தமிழார்வம் உன் இயல்பிலேயே இருக்கு. நீ ஒரு தங்க மலர். தங்கமா இருந்து என்ன் பிரயோஜனம்? மலர்னா அது மணக்கவேண்டாமா? மணக்க வேண்டும் என்றால் நீ படிக்க வேண்டும்’ என்றார். அது எனக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. அவர்தான் மணிமேகலையை முதலில் படிக்கச்சொன்னவர்.

ஆனால், அங்குதான் ‘இந்த எஜுகேஷன் சிஸ்டம் சரியில்லை. படிப்பைப் பாதியில் விட்டுவிட்டுப் போய்விடலாம்’ என்று ஐவன் மார்ஷல் என்கிற சைனீஸ் பையன், விஜய் கோவிந்த் என்கிற மலையாளி, கமல்ஹாசன் என்கிற நான் ஆகிய மூவரும் சேர்ந்து முடிவெடுத்தோம். அது அந்த வயதுக்கே உரித்தான கோபம்.  9-ம் வகுப்புத் தேர்வை எழுத ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் பேசிவைத்து பேப்பரைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். ‘இதெல்லாம் வேஸ்ட். ஆந்திரா மெட்ரிக் எழுதிட்டு அப்படியே காலேஜ் போயிடலாம்’ என்று குறுக்குவழியில் மூவரும் முடிவு செய்திருந்தோம். ஆனால், ‘ஒன்பதாம் வகுப்பு இடை நின்ற வனாகவே வாழ்க்கை முழுவதும் தொடரப்போகிறோம்’ என்பது அப்போது எனக்குத் தெரியாது.

பிறகு நாங்கள் திட்டமிட்டபடி ஒரு டுட்டோரியலில் கல்வியைத் தொடர்ந்தோம். ஆனால், என்னுள் தமிழும் இறங்கவில்லை, மற்ற பாடங்களும் ஏறவில்லை. இதற் கிடையில் சண்முகம் அண்ணாச்சி நாடகக் கம்பெனியை மூடிவிட்டார். அதனால் அவ்வையகம் செல்வது நின்றது. மேலும் பக்தி மார்க்கத் திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி வந்து கொண்டிருந்த சமயம் என்பதால் தமிழுடனான தொடர்பும் விடுபட ஆரம்பித்தது.

ந்தச் சமயத்தில், கிளாஸிகல் டான்ஸ் கற்றுத்தரும் ஆசிரியர் ஒருவர் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்த அறைக்கு வாடகைக்கு வந்தார். ‘வீட்டிலேயே டான்ஸ் வகுப்புகளை நடத்திக்கொள்கிறேன்’ என்றார். ‘வீட்டிலேயே நடன வகுப்பு. நீயும் சும்மாதான் இருக்கிறாய்’ என்று அம்மா என்னையும் அதில் சேர்த்து விட்டார். அப்படித்தான் எனக்கு  பரதம் அறிமுகம் ஆனது. அந்த நடன ஆசிரியர் ஒருநாளைக்கு நான்கு பேட்ச் என்று பிரித்து வகுப்பெடுப்பார். நான் அந்த  நான்கு பேட்சுகளிலும் ஆடுவேன். இந்தத் தொடர் பயிற்சியால் எனக்கு பரதம் எளிதாக வந்தது.

‘எனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுத்துவிட்டேன். நீயும் நன்றாக ஆடுகிறாய். அரங்கேற்றம் பண்ணலாம். ஆனால், நான் கற்றுத்தந்தது என்னளவில்தானே தவிர, கற்றுக்கொள்ள எல்லையில்லை. அடுத்து வேறொரு நல்ல ஆசிரியரை நானே பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, அவரே வேறொரு மாஸ்டரை அழைத்து வந்தார். ஒரு வாத்தியார் இப்படிச் சொல்லவே மாட்டார். ஆனால், அவர் சொன்னார், செய்தார். அடுத்து குல்கர்ணி என்ற ஒருவர் கதக் கற்றுத்தர வந்தார். பிறகு கொஞ்ச நாள் குச்சுப்புடி கற்றுக்கொண்டேன். பிறகு வடநாட்டு நடன வகைகள். இப்படி வீட்டில் இசையொலி கேட்டுக்கொண்டே இருக்க என்னைத் தேடி வந்த ஆசிரியர்களும் முக்கியமான காரணம். அதன் வழிவந்த இதர மொழிப் பாடல்களால் தமிழுக்கும் மற்ற மொழிகளுக்கும் உள்ள வேற்றுமையும் ஒற்றுமையும் தமிழின் தனித்தன்மையும் புரிந்தது. பாரதியின் `யாமறிந்த மொழிகளிலே’ என்னும் வரியின் அர்த்தம் அனுபவத்தால் உணர்ந்தேன்.

நடன நிகழ்ச்சி ஒன்றுக்காக மகாராஷ்டிரா போய் காலை உடைத்துக்கொண்டேன். ஸ்டேஜில் இருந்த விளக்கு  நடனத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறதே என்று அதை தூரமாகத் தள்ளி வைக்கும்போது அதிலிருந்து எண்ணெய் சிந்தியிருக்கிறது. அதைக் கவனிக்காமல் காலை வைக்க, வழுக்கி விழுந்து காலில் சரியான அடி. ஃப்ராக்சர். ‘டான்ஸை விட்டுவிடுவதுதான் பெட்டர்’ என்றார்கள். ‘என்னடா இது இப்படி ஆகிவிட்டதே’ என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் அம்மை போட்டுவிட்டது. வழக்கமாக அம்மைக்கு மருத்துவமனையில் சேர்க்கமாட்டார்கள். ஆனால், அன்று என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டதால் தான் இன்று முகத்தில் தழும்புகள் இல்லாமல் இருக்கிறேன். அதிலிருந்து வெளியே வந்து மறுபடியும் இன்னொரு முறை அம்மை. பிறகு குணமாகி மீண்ட சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் வேலையும் இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தபோது, வீட்டின் கீழ் தளத்தில் இருந்த அம்புலி சலூனில் கொஞ்ச நாள் முடிதிருத்துநராக இருந்தேன். பிறகு அங்கிருந்த லாண்டரிக் கடை ஒன்றில் அயர்ன் பண்ணும் வேலையும் பார்த்தேன். அம்மாவுக்குத் தெரிந்தால் கடையை காலி பண்ணச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்து ஒரு கட்டத்தில் அவர்களே கடைக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.

நான் படிக்கவில்லை என்ற வருத்தம் என் அப்பாவுக்கு இருந்தது. அதனால் என்னை மட்டும் சென்னை வீட்டின் மொட்டைமாடி அறையில் தங்கவைத்துவிட்டு, வீட்டின் மற்ற அனைத்து போர்ஷன்களையும் வாடகைக்கு விட்டுவிட்டு, அம்மாவை அழைத்துக்கொண்டு பரமக்குடி சென்றுவிட்டார். அந்த மாடி போர்ஷன் அறையிலும் கொஞ்சமே கொஞ்சமாக, படுக்க மட்டுமே இடம் இருக்கும். மற்ற இடங்களில் சட்டி சாமான்கள் என்று பழைய பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். குளியலறை கிடையாது. கீழே உள்ள தரைத்தளத்தில்தான் குளியலறை. இது, வேண்டுமென்றே பண்ணிய ஏற்பாடாகத்தான் எனக்குத் தெரிந்தது. ஓடிவந்துடுவான் என்று நினைத்தனர். ஆனால், நான் போய் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் சென்டரில் வேலைக்குச் சேர்வேன் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

எல்டாம்ஸ் சாலையில் வீட்டுக்கு எதிரே நடந்துபோனால் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் சென்டருக்குள் போய்விடலாம். அதனால்தான் அம்மாவும் நம்பி அங்கு விட்டார்கள். மாதம்  120 ரூபாய் ஊக்கத் தொகை. அங்கு கிறித்துவப்பாடல்களைத் தமிழாக்கம் பண்ணுவார்கள். பார்வதி ராமநாதன் போன்ற பேச்சாளர்கள் வந்து பேசுவார்கள். அங்கு அடிக்கடி பட்டிமன்றம் நடக்கும். வெவ்வேறு ஊர்களுக்குப் போய் இயேசுநாதர் வேடம் போட்டுக்கொண்டு சிலுவையைத் தூக்கிக்கொண்டு போயிருக்கிறேன்.

அந்தச் சமயத்தில்தான் ‘அன்னை வேளாங்கண்ணி’ என்ற படத்தை அங்கு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் படத்தை திரு. தங்கப்பன் மாஸ்டர் தயாரிக்க இருந்தார். அவர் நடன ஆசிரியரும்கூட. அந்தப் படத்துக்கு ஒரு டான்ஸ் அசிஸ்டென்ட் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தார். அப்படித்தான் அவரிடம் சேர்ந்தேன். அந்த வகையில் கிறிஸ்டியன் ஆர்ட்ஸ் அண்டு கம்யூனிகேஷன் மையத்துக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும். அங்கு இருந்த சுவிசேஷ முத்து, ‘அன்னை வேளாங்கண்ணி’ படத்துக்கு வசனம் எழுதிய டி.தாசன் என்ற சங்கிலித்தொடர் தொடர்புகள்தான் ஆர்.சி.சக்தியையும் என்னிடம் கொண்டுவந்து சேர்த்தது.

சக்திதான் என் தமிழைக் கிண்டலடிக்க ஆரம்பித்தார். ‘இங்கிலீஷ்ல பேசினா பெரிய கொக்கா? இங்கிலாந்துக்குப் போனீன்னா அந்த ஊர்ல பேசுற பாஷை அவ்வளவுதானே?’ என்பார். அப்படிப் பேசிப்பேசியே எனக்குத் தமிழ் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவர் திரு. சுப்பு ஆறுமுகத்திடம் இருந்தவர். தி.மு.க தொண்டராகவும் மாறியவர். அதனால் ‘தீ பரவட்டும்’ போன்ற நிறைய புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் அப்போது தீவிர நாத்திகர். இந்த நாத்திகம் வீட்டில் சாருஹாசன் அண்ணனிடமிருந்தும் தாய்மாமாவிடமிருந்தும் வந்தது. அது சக்தி மூலமாகத் தொடர்ந்தது. அப்போது சக்தியும் நானும் பெரியாரின் கூட்டங்களுக்குச் செல்வோம்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

ஒருவேளை தமிழ்நாடு, கேரள எல்லைக்குள் இருந்ததால்தான் இது வந்திருக்கும் என நினைக்கிறேன். வடஇந்தியா, பெங்களூருவில் இருந்திருந்தால் இதற்கு வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும். எதுவும் பேசலாம் என்ற தமிழகச் சூழலும் பெரியாரைப் படித்துக் கற்றதும்தான் இதற்குக் காரணம் என நினைக்கிறேன். நான் பெரியார் பக்தனோ, தாசனோ, நேசனோ கிடையாது. அவரின் ரசிகன். ‘இவ்வளவு சுதந்திரம், பேச்சுரிமையை எனக்குக் கொடுத்தது இந்தாளுதான்’ என்கிற எண்ணம். சிலருக்கு அவர்  முரடரோ என்று தோன்றலாம். ஆனால், வளையாத நெம்புகோல்போல் அந்த உறுதி தேவையாகவும் இருந்தது.

ப்படி என் வாழ்க்கையில் வந்த வாத்தியார்கள் அனைவரும் எனக்கு வந்து வாய்த்தவர்கள்தாம். நானாகப்போய்த் தேடிக்கிடைத்தவர்கள் இல்லை. பெரியாரைக்கூட யாரோ அவரின் கூட்டங்களுக்கு என்னைக் கூட்டிக்கொண்டுபோய்தான் அறிமுகப் படுத்தினார்கள். இன்று பள்ளி கல்லூரிகளில் வாங்கும் கேப்பிடேஷன்  ஃபீஸ்களை நினைத்துப் பார்க்கையில், சம்பளமும் கொடுத்துப் படிப்பும் கொடுத்த என் வாத்தியார்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். பாலசந்தர், மாடியில் குடியிருந்த அந்த டான்ஸ் மாஸ்டர், ஆர்.சி.சக்தி... இவர்கள் யாருமே காசுப் பரிமாற்றத்துக்காகக் கற்றுக்கொடுத்தவர்கள் கிடையாது.

ஆனால், நான் தேடிப்போய் விரும்பி ஒரு மனிதரைக் கண்டுபிடித்தது என்று பார்த்தால் அது காந்திதான். காந்தியுடனான உறவை அற்புதமான சந்திப்பு என்பேன். முதலில் பெரியாரின் விமர்சனம்மூலம் அறிமுகமாகி, அம்பேத்கரின் விமர்சனம்மூலம், ‘ஆமாம், அந்த ஆள் தப்புதான் போலிருக்கிறது’ என்று முடிவுக்கு வந்து, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் காந்தி விமர்சனங்களை உள்வாங்கி... இந்தியாவைக் கண்டுபிடிக்க வந்த கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்ததைப் போல, நான் இவர்களின் வழியாக காந்தியைக் கண்டறிந்தேன் என்றே சொல்லலாம். 

இந்த மக்களைச் சென்றடைவதற்கான யுக்தியைத் தன் வாழ்முறையாகவே மாற்றிக் கொண்டவர் காந்தி. அவர் நல்லவர், கெட்டவர் என்பதைப்பற்றி நான் பேசவில்லை. அறிவும் யுக்தியும் அவரின் விரோதிகளைக்கூட அவரைப் பாராட்டவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கின. காந்தியாரின் மகன் இஸ்லாத்தில் சேருகிறார். அப்போது முஸ்லிம் லீக், ‘உங்கள் மகனே எங்கள் மதத்தில் சேர்ந்துவிட்டார்’ என்பதுபோல ஒரு தந்தி அனுப்புகிறது. ‘‘அதில் என்ன எனக்கு நஷ்டம்’’ என்ற தொனியில் பதில் கடிதம் எழுதிவிட்டுக் கடந்து போவதெல்லாம் அசாத்தியமான மனிதரால் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன.

ன்று சினிமாவில் என் ஆரம்ப காலகட்டங்களில் எனக்கு ஆசானாக இருந்து தமிழ் கற்றுத்தந்தவை சினிமாக்கள்தான். அதுவும் குறிப்பாக கண்ணதாசன், கலைஞர், சிவாஜி சார் ஆகியோர் வழி வந்த சினிமாக்கள். நான் கற்றுக்கொண்ட தமிழ் முழுவதும் இவர்களிடமிருந்து செவி வழி வந்ததுதான். சில உதாரணங்களுடன் சொல்கிறேன். அது சினிமாப் பாட்டுப் புத்தகங்கள் அதிகமாக விற்றுக்கொண்டிருந்த காலம். அதன் மூலம்தான் அனைவரின் பாடல்களும் எனக்கு வந்தடைந்தன. ‘கைராசி’ படத்தில் ‘அன்புள்ள அத்தான் வணக்கம். உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்’ என்று கண்ணதாசன் எழுதியிருப்பார். ‘ஆயிழை’ என்றால் ‘பெண்’ என்ற அர்த்தத்தைச் சொல்லிக்கொடுத்தது கண்ணதாசன்தான். இப்படிப் பாடல் புத்தகமே என் பாடப் புத்தகங்கள் ஆயின.

‘ஆகாரத்துக்காக அழுக்கைச் சாப்பிட்டுத் தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன், அதைப் போல...’ என்று அர்த்தம் பொதிந்த வரிகளை அறிமுகப்படுத்தியதும் இந்த சினிமாதான். ‘அனார் அனார் மறைந்துவிட்டாயா... என் மாசற்ற ஜோதிமலையே... பெண்ணின் பெரும்பொருளே/பேரழகின் பிறப்பிடமே/என் கண்ணில் படாமல் உன் கட்டழகைக் கல்லறைக்குள் மறைத்து விட்டார்களா மாபாவிகள். காதலுக்கோர் எடுத்துக் காட்டே, கவிஞர்களின் தொடுத்திட இயலா கற்பனை ஆரமே...’ இப்படி எங்கு போகிறது என்றே தெரியாத கவிதையா, உரைநடையா என்று சொல்லமுடியாத மயக்கும் தமிழைக் கலைஞரிடமிருந்தும் அதைப் பேசி நடிக்கும் அந்தக் கலையை சிவாஜி சாரிடமிருந்தும் கற்றேன் என்றால் அது மிகையில்லை.

ப்படி நான் சோர்ந்து கிடந்த தருணங்களில் எல்லாம் யார்யாரோ என்னை மாணவனாக ஏற்றுக்கொண்டு வழிநடத்தி உந்தித் தள்ளி இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அப்படியெனில் ‘கமல்’ என்பவன் தானாகவே வளர்ந்து வந்த ஒருமை அல்லன். அவன் பன்மை. இப்படிப் பலரால் பலம் சேர்க்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட பன்மை. இப்படியான புறச்சூழல் அனிதாவுக்கு அமையாததுதான் வேதனை. அந்தச் சூழல் வாய்க்கப்பெற்ற நான் அனிதாக்கள் போன்ற மகள்களுக்கு நண்பனாகவோ, ஆசிரியனாகவோ இருக்க வேண்டியது என் கடன் என்பதை உணர்கிறேன். அப்படியே இருப்பேன் என்ற உறுதியையும் வழங்குகிறேன்.

என்னை இன்னும் செதுக்கிய சில ஆசான்கள் பற்றி அடுத்தவாரமும் தொடர்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.