Published:Updated:

“அவங்கள உட்ராதீங்க சார்”

இரா.கலைச்செல்வன், படங்கள்: பா.காளிமுத்து

பிரீமியம் ஸ்டோரி

“‘டமால்... டமால்’னு ஏதோ குண்டு வெடிக்குற மாதிரி ஒரு சத்தம் சார். என்ன, ஏதுன்னு நான் சுதாரிக்கிறதுக்குள்ள அப்படியே முதுகு, கை, காலெல்லாம்  இறுகிடுச்சு. மரண வலி...  ஐயோன்னு நான் கத்துறதுக்குள்ள அப்படியே மயங்கிட்டேன். அப்புறம் பசங்க வந்துதான் என்னைத் தூக்கி வெளிய விட்டாங்க. ஒரு ஓரமா உட்காந்து நம்ம பசங்க எல்லோரும் பத்திரமா இருக்கோமான்னு பார்த்துக்கிட்டிருக்கோம்... ராஜேச மட்டும் காணோம். அவனோடது தான் மொத ஆட்டோ வேற... அப்படியே அப்பளமா நொறுங்கிப் போய் கிடந்துச்சு. எங்கேயாவது வெளிய இருக்கானான்னு தேடிட்டு இருந்தோம். ஒரு சந்தேகத்தோட, பெரிய பயத்தோடதான் அவன் ஆட்டோவ நெருங்குனோம். உள்ள... அப்படியே அவன் இடுப்புக்கு கீழ ஒரே ரத்தம் சார்...வெளிய தூக்கவே முடியல. டேய் ராஜேசு... ராஜேசுன்னு கத்துறோம் அவன் அசையவேயில்ல. மேல, கூரைய கிழிச்சுத் தூக்கலாம்னு தார்பாயக் கிழிச்சுத்  தூக்குறோம்... காலெல்லாம் அப்படியே கொழகொழன்னு கூழ் மாதிரி...” என்று சொல்லிக்கொண்டே வரும் அழுகையை அடக்க முடியாமல்...

“அவங்கள உட்ராதீங்க சார்”

“சார்... இதுதான் சார் ராஜேசு வீடு. நீங்க போய் பார்த்துட்டு வாங்க. என்னால முடியாது சார். நான் போனா, புள்ளைங்க என்கிட்ட வந்து ‘மாமா அப்பா வராதா?, அப்பா டூட்டியிலருந்து எப்ப வரும்?’னு கேட்குங்க... சாவுன்னா என்னான்னு எப்படி சார் அதுங்ககிட்டச் சொல்றது...” என்று பெரும் அழுகையோடு அங்கிருந்து நகர்கிறார் ஜெகதீசன். ராஜேஷின் நண்பர்.

“அவங்கள உட்ராதீங்க சார்”

வேலூர் மாவட்டத்தின் பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் இருக்கிறது ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷின் வீடு. மஞ்சள், நீலம், பச்சை எனப் பல வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்த அந்தப் புதிய வீட்டிற்குள் நுழைந்தோம். படியில் உட்கார்ந்துகொண்டு பச்சை நிற பலூனை ஊதிக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன்.

“டேய்...தனுசு இதுக்குமேல ஊதாதடா வெடிச்சிடும்” என மற்றொரு சிறுவன்

“அவங்கள உட்ராதீங்க சார்”

சொல்ல, இருவரும் சண்டையிட்டபடியே படியின்மேல் ஏறி ஓடினார்கள்.

நவம்பர் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.20. சென்னை கதீட்ரல் மற்றும் ஆர்.கே.சாலைச் சந்திப்பில் வரிசையாக இருபதிற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நின்றுகொண்டிருந்தன. நாள் முழுக்க ஆட்டோ ஓட்டிய களைப்பில் ஆட்டோவிலேயே கால்களை மடக்கி, சுருங்கிப் படுத்துக்கிடந்தார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள். பெரும் வேகத்தில் அந்தச் சாலையில் வந்துகொண்டிருந்தது அந்த வெள்ளை நிற செவர்லே க்ரூஸ் கார். உள்ளே 5 பேர். நண்பனின் மது விருந்தை முடித்துவிட்டுப் பெரும் போதையில் சீறிப்பாய்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். காரின் ஏசி குளிர் அவர்களுக்கு, போதையை இன்னும் இன்னும் அதிகப்படுத்தியிருக்க வேண்டும். விலையுயர்ந்த அந்தக் காரின் பவர் ஸ்டீயரிங்கிலிருந்து அதை ஓட்டியவரின் கை நழுவுகிறது. வந்த வேகத்தில் நேராக ஆட்டோவில் மோதுகிறது. வரிசையாக நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் சிதறி, சிதைந்துபோகின்றன. நசிந்து, நசுங்கிப் போகின்றன. இருந்தும் அந்தக் காரின் வேகம் குறையவில்லை. ஸ்டீயரிங் சுழன்ற வேகத்தில் பக்கத்திலிருந்த ட்ரான்ஸ்ஃபார்மரில் மோதியதில் அது வேரோடு கீழே விழுகிறது. காரின் ஏர் பேக்குகள் திறக்கப்பட்டதால், போதையிலிருந்த அனைவரும் மிகப் பத்திரமாக இருக்கிறார்கள். ஆட்டோவில் படுத்துக்கிடந்த பலருக்குக் கை, கால், முதுகு, இடுப்பில் பெரும் அடி. வரிசையின் முதலில் நிறுத்தியிருந்த ராஜேஷ் அந்தக் கணத்திலேயே உயிரிழந்து ஆட்டோவுக்குள் முடங்கிப்போனார்.

ராஜேஷின் வீடு நிசப்தமாயிருந்தது. அவரின் அப்பா பாலகிருஷ்ணன் மெதுவாகப் பேச ஆரம்பித்தார்...

“பிழைக்கத்தான் சார் போனான் என் பையன்...ஆனா, அவன இப்படிப் பொணமாக்கிட்டாங்களே சார்? நெஞ்சு வலிகாரன் சார் நானு. ஏற்கெனவே ஆபரேஷன் செஞ்சிருக்கேன். ஆனா, நான் இன்னும் உயிரோட இருக்கேனே சார்... என் புள்ள போயிட்டானே” என்று தலையில்  அடித்துக்கொண்டு அழுகிறார்.

“நைட்டு அந்நேரத்துக்குத் திடீர்னு போன் வந்தது. உங்க பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகிப்போயிடுச்சுன்னுதான் ஊர் பசங்க சொன்னாங்க. சரி...ஏதோ சின்னதாதான் இருக்கும். அவனப் போய் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடலாம்னு நினைச்சுட்டுத்தான் போனோம்... ஆனா, இப்படி ஆயிடுச்சே...” என்று இழப்பின் வலியை வார்த்தைகளால் கொட்டுகிறார்.

“அவங்கள உட்ராதீங்க சார்”

பரமேஸ்வரமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மட்டும் 600-க்கும் அதிகமானவர்கள் சென்னையில் ஆட்டோ ஓட்டுகிறார்கள். இவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தவர்கள். சிலர் சொந்த நிலங்களில், சிலர் விவசாயக் கூலிகளாக. ஆனால், தண்ணீரில்லாமல் போனது, ரியல் எஸ்டேட் வளர்ச்சி என விவசாயத்தை அழித்த பல காரணிகள் இவர்களையும் பிழைப்புத் தேடி வேறு தொழில்களுக்கு நகர வைத்தது. சென்னையில் ஆட்டோ ஓட்டுவதை யாரோ ஒருவர் தொடங்கி வைக்க, இன்று வீட்டிற்குக் குறைந்தது ஒருவர் இங்கு ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ப்ளஸ் 2 வரை படித்திருந்த ராஜேஷ் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைத்தார். ஆனால், கடுமையான வறுமை, அப்பாவிற்கும் அம்மாவிற்கும் மோசமான உடல்நிலை எனச் சூழல் இறுகியதால், ஆட்டோ தொழிலுக்கு வந்தார்.

“சார் ராஜேசுக்கு எந்தக் கெட்ட பழக்கமுமே கிடையாது சார். காலையில ஊர்ல இருந்து கிளம்பி ட்ரெய்ன்ல எக்மோர் போவோம் சார். ஒரு ஆட்டோவுக்கு ரெண்டு பேர். வாடகைக்கு ஆட்டோவை வாங்குனோம்னா, காலையிலருந்து நைட்டு வரை சவாரி. நைட்டு 12 மணிபோல எங்கேயாவது வண்டியப் போட்டுட்டுக் கொஞ்ச நேரம் கண் அசந்துட்டு, திரும்பவும் விடியற்காலையிலேயே சவாரி தேடிக் கிளம்பிடுவோம். இப்படி ரெண்டு நாளைக்கு ஒருமுறதான் வீட்டுக்கு வருவோம். குடிசையா இருந்தாலும் சொந்த வீடு, குடும்பம், புள்ளைங்க, சொந்தக்காரங்க, ஊர்க்காரங்கன்னு எங்களுக்கு அவ்வளவு நிம்மதியான வாழ்க்கை சார் ஊர்ல. என்ன... பொழைக்க முடியல அதுக்காண்டிதான் சென்னைக்கு வர்றோம். ரோட்டோரத்துல படுத்துக்கிடக்குறதுனால, எங்கள  அனாதைகள்னு நினைச்சுக்குறாங்களா சார்? குடிபோதையில வந்து கொன்னுட்டானே சார்... ஒரு உசுரே போயிடுச்சே...” என்று ஆற்றாமை தாளாமல் தங்கள் வாழ்வின் வலிகளைப் பகிர்கிறார் ராஜேஷுடன் ஆட்டோ ஓட்டும் பாலன்.

“அவங்கள உட்ராதீங்க சார்”

அமைதியாக இருந்த வீட்டில் திடீரென அழுகுரல் வெடித்தது. எல்லோரும் அந்த அறைக்குள் ஓடினார்கள். ராஜேஷின் மனைவி காயத்ரி, “உன்கூட நல்லா வாழணும்னு ஆசைப்பட்டுத்தான்யா வந்தேன். இப்படி என்னத் தனியா தவிக்க வுட்டுட்டுப் போயிட்டியே. ஐயோ சாமி எனக்கு ஒண்ணுமே புரியலயே...” என்று மாலை போடப்பட்டிருந்த ராஜேஷின் படத்தைப் பார்த்துக் கதறி அழுகிறார். சுற்றியிருப்பவர்கள் அவரை ஆசுவாசப் படுத்துகிறார்கள். சத்தம் கேட்டு வந்த ராஜேஷின் குழந்தைகள் தமிழ்ச்செல்வனும் தனுஷும் கதவு இடுக்கின் வழியாகப் பெரும்பயத்தோடும் மிரட்சியோடும் தங்கள் தாயைப் பார்க்கிறார்கள். 4 வயது சிறுவனான தனுஷ் பயத்தில் அழத்தொடங்குகிறான். அவனை அங்கிருந்து வெளியே தூக்கிவந்து சமாதானப்படுத்தியவாறே நம்மிடம் பேசுகிறார் காயத்ரியின் அப்பா சம்பத்.

“அவங்கள உட்ராதீங்க சார்”

“இப்படித்தான் சார்... ஏதோ புத்தி பேதலிச்ச மாதிரி புலம்பிட்டே இருக்கா. ஒரு நிமிஷம்கூட அவள விட்டுத் தனியா போக முடியல. புள்ளைங்க ரெண்டு பேரும் அம்மாகிட்ட போகவே பயப்படுதுங்க...”

ராஜேஷ் 4 மாதங்களுக்கு முன்புதான் புது வீட்டைக் கட்டி முடித்துள்ளார். இன்னும் சில வேலைகள் பாக்கியிருக்கின்றன. வீட்டிற்காகப் பல இடங்களிலும் கடன் வாங்கியுள்ளார். அதை இந்தக் குடும்பம்தான் அடைக்க வேண்டும். குழந்தைகள் இருவரையும் படிக்கவைக்க வேண்டும். ராஜேஷின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் மாதம் இருமுறை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். மாதம் இவர்களின் மருந்துகளுக்கும் மருத்துவத்திற்குமே சில ஆயிரங்கள் வேண்டும். கணவனை இழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையில் இருக்கிறார் காயத்ரி. இனி, இந்தக் குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது...

உறவினர்கள் எவ்வளவு முயன்றும் காயத்ரி பேசவேயில்லை. அழுதபடியே ஓர் ஓரமாக அமர்ந்திருந்தார். தன்னுடைய பச்சை பலூன் வெடித்துவிட்டதால் அழத்தொடங்கினான் தனுஷ்... அவன் அழுவதைப் பார்த்தபடி இருந்த காயத்ரி... “சார்... என் புள்ளையப் பாருங்க சார். கொள்ளி போடுற வயசா சார் அவனுக்கு? கொள்ளி போடுற வயசா அவனுக்கு? சார்...உட்ராதீங்க சார் அவனுங்கள. இன்னா சார் குடி அது?அவ்வளவு குடி? ஒரு உசுர வாங்குற அளவுக்குக் குடி? அவங்க ஏதோ  பணக்காரங்களாமே சார்? வெளிய வந்துடுவாங்களாமே? நம்மால ஒண்ணும் பண்ண முடியாதாமே சார்? அவங்கள தூக்குல போடணும் சார்... ஒருத்தரையும் விடக் கூடாது...” என்று சொல்லிக்கொண்டிருந்தவர் சட்டென அமைதியானார்.

“இல்ல இல்ல சார்... அவங்கள தூக்குல போட வேணாம் சார். அவங்க அம்மா பாவம். துடிச்சுப் போயிடுவாங்க. ஆனா சார்... அவனுங்க காலம்பூரா ஜெயில்ல இருக்குற மாதிரி செய்யணும் சார். காசிருந்தா காசில்லாதவனைக் கொன்னுடுவாங்களா? உட்ராதீங்க சார் அவனுங்கள... என் புருஷனைக் கொன்னுட்டானுங்க சார்...உட்ராதீங்க...” என்று கண்களில் கொதிக்கும் கோபத்தோடு பெருங்குரலில் கத்தி, கதறத் தொடங்கினார் காயத்ரி. அவரைச் சமாதானப்படுத்த கைத்தாங்கலாகப் பிடித்து அறைக்குள் இழுத்துச் சென்றார்கள்.

“காசிருந்தா இன்னா வேணாலும் பண்ணுவாங்களா? உட்ராதீங்க சார் அவனுங்கள...எம் புருசனக் கொன்னுட்டானுங்க சார்...கொன்னுட்டானுங்க சார்...கொன்னுட்டானுங்க சார்...ஐயோ...” எனக் காயத்ரி கதறும் குரல் அந்தத் தெரு முனைவரை கேட்டுக் கொண்டேயிருந்தது. இதோ...இன்னும் கூடத்தான், அந்தக் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது...

விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிவந்தது நவீத் அகமது (20). இவரோடு ஹரிகிருஷ்ணன் (20), வினோத் குமார் (20), கிஷோன் குமார் (19), விஷால் ராம்குமார் (18) ஆகியோர் இருந்துள்ளனர். அண்ணாநகரைச் சேர்ந்த நவீத்தின் தந்தை ஒரு தொழிலதிபர். காருக்குள் இருந்த 5 பேர் மீதும்  வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தற்போது சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு