"பாண்டா வடிவ சூரிய மின்சக்தி நிலையங்கள்..!” - சில சமயம் சீனா கெத்துதான்

சுமார் 100 மெகாவாட் உற்பத்தி செய்யும் இந்த பாண்டா சூரிய மின்சக்தி ஆலைகள் சீனாவின் பொக்கிஷமாகக் கருதப்படும் பாண்டாவை கொண்டாடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

டசீனாவில் டடோங் என்ற பகுதியை நீங்கள் விமானத்தில் கடக்க நேரிட்டால் கீழே இரண்டு பாண்டா கரடிகளை உங்களால் பார்க்க முடியும். அதில் ஒன்று உங்களை நோக்கிக் கையசைத்து கொண்டிருக்கும். இந்த பாண்டா கரடிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சூரிய மின்சக்தி பேனல்களால் கிட்டத்தட்ட 248 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பெரிய நிலப்பரப்பிலா என்று ஆச்சரியப்பட வேண்டாம் சீனாவில் இருக்கும் மற்ற சூரிய ஆலைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இது கொஞ்சம் சிறியது தான்.

ஆம் உலகத்தின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் சீனாவில்தான் உள்ளன. டெங்கேர் பாலைவனத்தில் இருக்கும் ஆலை 10,000 ஏக்கர் நிலப்பரப்பைத் தாண்டி விரிந்து 1,500 மெகாவாட்டிற்கும் மேல் மின்உற்பத்தி செய்கிறது. சொல்லப்போனால் நம் தமிழகத்தில் இருக்கும் கமுதி சூரிய மின்சக்தி ஆலைகளைக் கூட இந்த பாண்டா ஆலைகளை விட பெரியதுதான். இந்த பாண்டா ஆலைகளைத் தேசிய அளவில் செய்துவரும் சூரிய மின்சக்தி மாற்றங்களுக்கான ஒரு சின்னமாகவே வைத்துள்ளது சீனா.

சூரிய மின்சக்தியில் சீனாவின் ஆதிக்கம்

உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாதான் சூரிய உற்பத்தியிலும் இன்று முன்னணியில் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 130 கிகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டுள்ள சீனாவில் ஒரே நேரத்தில் அனைத்து சூரிய மின் சக்தி ஆலைகளும் இயங்கினால் அதில் கிடைக்கும் இயற்கைக்குத் தீங்கில்லா மின்சக்தி மூலம் பல நாடுகள் மற்ற மின்னுற்பத்தி மையங்களே இல்லாமல் இயங்க முடியும். சூரிய மின்சக்தி பேனல்கள் மற்றும் சாதனங்களும் கூட பெரும்பாலும் சீனாவில் இருந்தே உலகம் முழுவதும் உற்பத்தி செய்து அனுப்பப்படுகின்றன.   

சூரிய மின்சக்தி

இந்தியாவும் சமீபத்தில் சூரிய மின்சக்தியின் மீது பெரும் முதலீடு செய்து வருகிறது. சீனாவிற்கு அடுத்த பெரிய ஆலைகள் பலவும் இங்குதான் இருக்கின்றன. ஆனாலும் மிக அதிகமான மின் தேவையுள்ள நாடுகளான இவை இரண்டிற்கும் இவை மட்டும் போதாது என்பதுதான் வேதனை. இன்றும் சீனாவின் மின் தேவைக்கான மூன்றில் இரண்டு பங்கு மின் சக்தி இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கும் அனல் மின் நிலையங்களில் இருந்துதான் கிடைக்கின்றது. எப்படியும் சீனாவில் எடுக்கப்பட்டு வரும் இம்முயற்சியே அளப்பரியதுதான். 2020ம் ஆண்டுக்கான சூரிய மின்சக்தி இலக்கை மூன்று வருடங்களுக்கு முன்பே அடைந்துவிட்டிருக்கிறது சீனா. இந்த மின்சக்தியை வைத்து திபெத்திய சுற்றுவட்டாரங்களில் பெரிய நிலப்பரப்புகளில் இருக்கும் பனியை உருக்கி நல்ல நிலங்களாக மாற்றி மரங்கள் வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு திபெத்தைச் சுற்றிய அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றாலும் இது ஒரு பிரமாண்ட முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 

சீனா எதிர்கொள்ளும் சவால்கள்

இந்த மின் சக்தி உற்பத்தியிலும் பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது சீனா. சீனாவின் நடுவே செங்குத்தாக ஒரு கோடு வரைந்தால் கோட்டின் வலதுபக்கம் அதாவது கிழக்கில்தான் சீனாவின் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை வசித்து வருகிறது. அதே நேரம் அதிகபட்ச உற்பத்திக்காக இந்த மின் ஆலைகள் கடும் சூழல்களைக் கொண்ட மேற்கு சீனாவில் தான் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் மின்சக்தியைக் கொண்டுவருவதே சீனாவிற்கு பெரும் சவாலாக உள்ளது. 30 வருடங்கள் மட்டுமே உழைக்கும் என்பதால் 2040 முதல் இவற்றை மாற்ற வேண்டிய கட்டாயமும் அவர்களுக்கு இருக்கிறது. அதற்கான திட்டங்கள் என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை சீனா. இதையும் சரிவர செய்துவிட்டால் ஏற்கனவே சூரிய மின்சாதனங்களின் விலை வெகுவாக குறைந்து வரும் நிலையில் மொத்த உலகத்தையும் நல்ல வளமான சூரிய மின்னுற்பத்தியை நோக்கி நகர்த்த நல்ல ஒரு உத்வேகமாக அமையும் இது.

பாண்டா ஆலைகள் 

இந்த பாண்டா ஆலைகளைப் பொறுத்தவரை இரண்டு வகையான சோலார் பேனல்கள் மூலம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்று நல்ல கரும் நிறத்திலும், இன்னொன்று மெல்லிய கரும் நிறத்திலும் இருக்கும். இதன் மூலம் பாண்டாவின் இரு நிறங்களும் நிரப்பப்பட்டுள்ளது. இதைப் போன்றே சீனா முழுவதும் பல பாண்டா வடிவ ஆலைகளை அமைப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலும் இதைப்போன்ற கண்கவர் ஆலைகளை அமைக்கச் சீனா உதவவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சுமார் 100 மெகாவாட் உற்பத்தி செய்யும் இந்த பாண்டா சூரிய மின்சக்தி ஆலைகள் சீனாவின் பொக்கிஷமாகக் கருதப்படும் பாண்டாவை கொண்டாடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறது இதைக் கட்டிய பாண்டா க்ரீன் எனர்ஜி நிறுவனம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!