பிரீமியம் ஸ்டோரி
புதிய மனிதா

ஒரு ஷாக்

ஐபோன் X மாடலுக்கு வந்த வரவேற்பைப் பார்த்து “ஒரு ‘செம’ மொபைலைத் தந்துவிட்டோம்” எனச் சந்தோஷத்தில் இருந்தது ஆப்பிள். இதோ பிரச்னைகள் வரத் தொடங்கிவிட்டன. ஆப்பிள் ஃபேஸ் ஐடி தான் ஐபோன் X மாடலில் ஹைலைட். நம் முகத்தை மொபைல் அடையாளம் கண்டால்தான் அன்லாக் ஆகும். “10 லட்சத்தில் ஒருமுறை மிஸ் ஆகலாம். மற்றபடி, இந்தத் தொழில்நுட்பம் மிஸ்ஸே ஆகாது” எனக் கெத்து காட்டியது ஆப்பிள். “இருடி மாப்ள வறேன்” எனக் களத்தில் இறங்கிய ஒருவர்,  3டி பிரிண்டிங் மூலம் தனது முகத்தைப் போலவே மாஸ்க் ஒன்றைத் தயார் செய்தார். தனது ஐபோன் X மொபைலில் ஃபேஸ் ஐடியை ஆன் செய்துகொண்டார். மொபைலுக்கு முன்னால் 3டி மாஸ்க்கை வைக்க, மொபைல் அன்லாக் ஆகிவிட்டது. “இவ்ளோதாம்ப்பா உங்க டெக்னாலஜி” என அந்த வீடியோவையும் வெளியிட்டுவிட்டார். ஆண்ட்ராய்டு ரசிகர்கள் ட்ரோல் செய்ய, “நம்புற மாதிரியே இல்லையே இந்த வீடியோ”என டெக் ஆர்வலர்கள் சமாளிக்க, “நோ கமெண்ட்ஸ்” என ஆப்பிள் ஒதுங்க, ஷாக்கில் இருக்கிறார்கள் ஐபோன் ரசிகர்கள்.

புதிய மனிதா

ஒரு பன்ச்

“எந்தக் காலத்துக்கும் பொருந்தும் ஐடியா என ஒன்று கிடையவே கிடையாது. எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் புதிய ஐடியாக்களைக் கொண்டுவருவதுதான் வளர்ச்சிக்கான ஒரே வழி”

- சத்ய நாதெள்ளா

சி.இ.ஒ, மைக்ரோசாஃப்ட்.

புதிய மனிதா

ஒரு பிரச்னை

இணையத்தில் #RevengePorn என்பது மிகப்பெரிய பிரச்னை. பழிவாங்கும் நடவடிக்கையாக அந்தரங்கப் படங்களையோ, வீடியோக்களையோ வெளியிடுவதைத்தான் அப்படிச் சொல்வார்கள். இதைத் தவிர்ப்பதற்காக ஃபேஸ்புக் எத்தனையோ முயற்சிகளை எடுத்துவருகிறது. ஆனால், பலன் இல்லை. இந்தமுறை ஆஸ்திரேலியா நாட்டில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். ஃபேஸ்புக் யூஸர்ஸ் தங்களுடைய நிர்வாணப் படங்களை ஃபேஸ்புக்கிடம் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்துவிட்டால் அதை வைத்து, அவர்கள் வீடியோவை யாராவது வெளியிட்டாலும் ஃபேஸ்புக் முடக்கிவிடும் என்கிறார்கள். வீடியோவை அப்லோடு செய்ய எத்தனையோ இணையதளங்கள் உண்டு. அதில் அப்லோடு செய்துவிட்டு அந்த லிங்க்கை மட்டும் ஃபேஸ்புக்கில் போட்டால் என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை. ஃபேஸ்புக்கின் இந்த நூதன ஐடியா ஆஸ்திரேலியாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.

புதிய மனிதா

ஒரு கேட்ஜெட்

குழந்தை முதன்முதலில் தவழ்வது, வீட்டிலிருக்கும் வாண்டு அடிக்கும் பிரமாதமான கமென்ட்டுக்குக் குடும்பமே விழுந்து விழுந்து சிரிப்பது என `வாவ் மொமெண்ட்ஸ்’ எப்போதாவதுதான் நிகழும். அதைச் சரியான நேரத்தில் க்ளிக் செய்ய நினைப்போம்; ஆனால் முடியாது. செயற்கை நுண்ணறிவு(Artificial Inteligence) என்பதே நமக்காக வேலை செய்யத்தானே என நினைத்த கூகுள் இதற்கு ஒரு கேட்ஜெட்டை அறிமுகப்படுத்தியது. அதுதான் கூகுள் க்ளிப்ஸ். இது ஒரு AI கேமரா. வீட்டில் சரியான இடத்தில் இதைப் பொருத்திவிட வேண்டும். அதுவே யோசித்து, சரியான தருணத்தை மிஸ் செய்யாமல் படமெடுத்துவிடும்.

புதிய மனிதா

தாமாக யோசிக்கும் திறன் இதற்கு உண்டென்றாலும், நம்மையும் நம் வீட்டையும் புரிந்துகொள்ள அதற்குக் கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். அதன்பின், எது வழக்கமான நடவடிக்கை, எது ‘வாவ்’ மொமெண்ட் என்பதையெல்லாம் க்ளிப் தெரிந்துகொள்ளும்; தவறவிடாமல் க்ளிக்கிவிடும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் 24 மணி நேரமும் நம்முடனே இருக்கும் இந்த அறிவார்ந்த புகைப்படக்கலைஞர்.

ஒரு செயலி

‘இந்தியாவின் சிறந்த மொபைல் நெட்வொர்க்’ என ஒன்றைச் சொல்லிவிடவே முடியாது. பரந்து விரிந்த இந்தத் தேசத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு ‘சிறந்த நெட்வொர்க்” உண்டு. ‘டிக்டிக்’ என்ற ஆப்-ன் நிறுவனர்கள் அதையும் மறுக்கிறார்கள். ஒவ்வொரு தெருவிற்குமே இது மாறும் என்பது அவர்கள் வாதம். உங்கள் அலுவலகத்தில் நன்றாக இருக்கும் நெட்வொர்க் வீட்டுக்குச் சென்றால் டல் ஆகலாம். இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் சிறிய முயற்சியாகத்தான் ‘டிக்டிக்’ என்ற மொபைல் அப்ளிகேஷனை இவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஆப், உங்கள் ஏரியாவில் எந்த நெட்வொர்க் ஹீரோ, எது வில்லன் என்பதைச் சரியாகச் சொல்கிறது. TRAIன் டேட்டாவைப் பயன்படுத்துவதால் இதன் முடிவுகளை நம்பலாம். மேலும், லைவ் நிலவரம் என்ன என்பதையும் இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ளலாம். ரீசார்ஜ் ஆஃபர்கள், ஒரு நெட்வொர்க்கிலிருந்து இன்னொன்றுக்கு மாற உதவுவது என இன்னும் நிறைய விஷயங்களும் இந்த ஆப்-ல் உண்டு.

புதிய மனிதா

இப்போதைக்கு ஆண்ட்ராய்டுக்குத்தான் வந்திருக்கிறார்கள். விரைவில் ஆப்பிள் யூஸர்ஸூம் டிக்டிக்கலாம்.

டவுன்லோடு செய்ய: http://bit.ly/2AEV9Ly

ஒரு செய்தி

இந்தியாவின் மக்கள் தொகையில் 72 சதவிகிதம் பேர் 32 வயதுக்கும் குறைவானவர்கள். இனி வரும் ஆண்டுகளிலும் இந்தச் சராசரி குறைந்து கொண்டேதானிருக்கும். ஆனால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மக்களின் சராசரி வயது உயர்ந்துகொண்டேயிருக்கும். இளைஞர்கள்தான் டிஜிட்டல் உலகத்துக்குப் பேராதரவு தருபவர்கள் என்பதால் இந்தக் கணக்கு முக்கியமானதாகிறது. இதனால், டிஜிட்டல் விஷயத்தில் விரைவில் நாம் கில்லி ஆகிவிடலாம் எனச் சொல்லியிருக்கிறார் ‘நிதி ஆயோக்’ சி.இ.ஒ அமிதாப் கண்ட்.

புதிய மனிதா

இப்போது தெருவுக்கு ஒரு மளிகைக் கடை இருக்கிறதோ இல்லையோ, ஏ.டி.எம் இருக்கிறது இல்லையா? இன்னும் நான்கே ஆண்டுகள் தான். அதன்பின் இந்த ஏ.டி.எம்கள் காணாமல் போகும் என்கிறார் அமிதாப். அதன்பின், டெபிட் கார்டுகள் மற்றும் கிரெடி கார்டுகள் தேவைப்படாது. உப்பு, மிளகாயிலிருந்து உலக டூருக்கு டிக்கெட் வரை மொபைல் மூலமாகவே பணம் செலுத்தி வாங்கவிருக்கிறோம். ஷேர் இட் மூலம் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துகொண்டதுபோல பணத்தைப் பரிவர்த்தனை செய்யப்போகிறோம்.

டிஜிட்டலாக மாறுவதிலிருக்கும் ஒரு சிக்கலை நாம் புரிந்துகொள்வது அவசியம். 100 ரூபாய் நோட்டைக் கொடுத்து ஒரு பொருளை வாங்குவதற்கும், 2000ரூபாய் நோட்டைக் கொடுத்து வாங்குவதற்கும் நமக்கு வித்தியாசம் தெரியும். டிஜிட்டல் கரன்ஸியில் அந்த வித்தியாசம் புரியாமல் போகலாம். எல்லா தொகைக்கும் ஒரே க்ளிக்தான். அதனால் அதிகம் செலவழிக்க நேரிடலாம். இந்தப் பிரச்னையைச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், மாதக்கடைசி என்பது 10-ம் தேதியே வந்துவிடும். மைண்ட் இட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு