Published:Updated:

அறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்!

அறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்!
அறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்!

விகடன் டீம், படங்கள்: கே.குணசீலன், அரவிந்தன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்!

ல்விதான் சமூகத்தின் இருளை விரட்டும் பேரொளி. பாகுபாடற்ற கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் உறுதி செய்யப்படவேண்டும். அதை உறுதிப்படுத்த ஏழை மாணவர்களின் இறுதி நம்பிக்கை யான அரசுப்பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். உள்கட்டமைப்பினை வலுப்படுத்த வேண்டும். அதில் அரசுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்குமே பங்கிருக்கிறது.

அறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்!

அதற்காகவே,  ஆனந்தவிகடன் - ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து செயல்படுத்திவரும் ‘அறம் செய விரும்பு’ திட்டத்தில் அரசுப்பள்ளிகளை மேம்படுத்தும் நோக்கோடு சில மாதங்களுக்கு முன்பு களத்தில் இறங்கினோம். 

விகடன் நிருபர்கள், கல்விக்கெனக் களத்தில் நின்று பணியாற்றும் தொண்டு நிறுவனங்கள், செயற்பாட்டாளர்கள், வாசகர்கள் உதவியோடு நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கண்டறிந்தோம். அவற்றில் உடனடி உதவி அவசியப்படும் ஆறு பள்ளிகள் கண்டறியப்பட்டு செயலில் இறங்கினோம்.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் படிக்கும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்றான, காஞ்சிபுரம் மாவட்டம் செம்மஞ்சேரி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு 63.50 லட்சம் ரூபாய் செலவில் ஆறு புதிய வகுப்பறைகளும், சமையல்கூடமும் கட்டித்தந்தோம்.

அறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்!

வர்தா புயலால் பாதிப்புக்குள்ளான சாலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இரண்டு வகுப்பறைகள், 30 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, கும்பகோணத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியோடு  கைகோத்தது `அறம் செய விரும்பு.’  

அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, கும்பகோணத்தின் அடையாளங்களில் ஒன்று. 98 ஆண்டுகளாக ஏராளமான ஏழை மாணவர்களுக்குக் கல்விதரும் ஆலமரம். சிவகுருநாதப்பிள்ளை என்பவர் கொடுத்த அடிமனையில் 20 மாணவர்களோடு தொடங்கப்பட்ட பள்ளி இன்று 600 மாணவர்கள், 32 ஆசிரியர்கள் எனத் தழைத்து நிற்கிறது.

தறித்தொழிலாளர்கள், பாத்திரத் தொழிலாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலமே இந்தப் பள்ளிதான்.       
                                                       
உதவிகள் கிடைத்தால் இன்னும் நூறாண்டுகளுக்கு நிமிர்ந்து நிற்கத் தயார் என்று மௌனமாகச் சொல்லும் பரந்து விரிந்த விசாலமான வளாகத்தின்  ஒவ்வொரு அங்குலத்திலும்  பழைமையின் கீறல்கள்.

“இந்தப்பள்ளியோட வரலாற்றுல நிறைய நல்ல மனிதர்களோட பங்களிப்பு இருக்கு. அந்த வரிசையில, ‘அறம் செய விரும்பு’ எங்க பள்ளியைத் தேர்வுசெய்தது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்கு”- நெகிழ்ந்து பேசினார் பள்ளியின் தலைமையாசிரியர் சற்குருநாதன்.

பள்ளி, பாடங்கள் மட்டுமே போதிக்கும் இடம் அல்ல... மாணவர்களின்  திறனறிந்து அதற்கேற்ற திசையில் பயணத்தை ஆரம்பித்து வைக்கும் பயிற்சிப் பட்டறை. அப்படியான ஒரு பட்டறையாகவே இயங்குகிறது கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசுப்பள்ளி. தடகளம், வாள்வீச்சு, கபடி எனத் தஞ்சை மாவட்ட அளவில் விளையாட்டில் சிறப்பிடம் பெற்ற பள்ளி இது. போட்டோகிராபி கிளப், படைப்பாற்றல் குழு, உரையாடல் குழு, நாடகக்குழு எனக் கலை, இலக்கியம் உள்ளிட்ட சகல துறைகளிலும் மாணவர்களை ஆக்கபூர்வமாக உருவாக்கி வரும் இந்தப் பள்ளியை முழுமையாகப் புதுப்பிக்கும் பணியில் `அறம் செய விரும்பு’ குழு களமிறங்கியது.

10 லட்சம் ரூபாய் செலவில்,  5 பிளாக்குகளில் உள்ள 20 வகுப்பறைகளும் மராமத்துசெய்து, வண்ணம் தீட்டிப் புதுப்பிக்கப்பட்டன.

வட்டார அளவில் பொதுத்தேர்வு மையமாக விளங்கும் இந்தப் பள்ளியில் வினாத்தாள்களைச் சேமித்து வைக்க வசதியாக, தலைமையாசிரியர் அறைக்கு இரும்பு கிரில்கேட் அமைக்கப்பட்டது.

அறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்!

ஆங்காங்கே உடைந்து கிடந்த சுற்றுச்சுவர்கள் சீரமைக்கப்பட்டன.  மழைநீர் சேகரிப்புத் திட்டமும் வடிவமைக்கப்பட்டது. 

குடிநீர்க்குழாய்கள் புதுப்பிக்கப்பட்டன. நூற்றாண்டு காணவிருக்கும் பள்ளி, புத்தம் புதிதாக மாற்றப்பட்டது.

“ இது,  `அறம் செய விரும்பு’  எங்க பள்ளியோட நூற்றாண்டு விழாவுக்குக் கொடுத்த பெரிய பரிசு. இங்கே படிக்கும் எல்லாக் குழந்தைகளுமே அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்தவங்க தான். இந்தப்பணிகள் நிச்சயம், அந்தப் பிள்ளைகளுக்கு நம்பிக்கையளிக்கும். அவங்களை உற்சாகப்படுத்தும். நம்மோடு கைகோக்க, நமக்கு ஒளி கொடுக்க நிறைய உள்ளங்கள் இருக்காங்கங்கிற நம்பிக்கையை விதைக்கும். 

அறம் செய விரும்பு - கனவுகள் நனவாகும் காலம்!

கட்டடங்களைப் புதுப்பித்துக் கொடுத்ததால், 200 மாணவர்களுக்கு வசதியான வகுப்பறைகள் கிடைச்சிருக்கு. சுற்றுச்சுவர் உடைஞ்சு கிடந்ததால் இரவு நேரங்கள்ல சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்துக்குள்ள நுழையிற நிலை இருந்துச்சு. அதுக்கும், ‘அறம் செய விரும்பு’, தீர்வு கொடுத்திருக்கு.

பள்ளியின் சூழலைப் பார்த்து, இந்தப் பணிகளைச் செய்த காண்ட்ராக்டரே அவருடைய பங்களிப்பா மைதானத்தை  சீரமைச்சுக் கொடுத்திருக்கார். பள்ளி வளாகமே புதுசா மாறியிருக்கு. புதிய வகுப்பறைகள் கிடைத்ததால அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த முடியும்” என்று பள்ளியின் தலைமையாசிரியர் சற்குருநாதன் நெகிழ்ந்தார்.

மேம்படுத்த வேண்டிய வகுப்பறைகளும் நிறைவேற்றித்தரவேண்டிய கனவுகளும் இங்கே ஏராளமாக உண்டு. ஆனந்தவிகடன்- ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ் இணைந்து நடத்தும் ‘அறம் செய விரும்பு’  அந்தக்கனவுகளை நோக்கித் தொடர்ந்து பயணிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு