Published:Updated:

"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”

"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”
பிரீமியம் ஸ்டோரி
"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”

ம.குணவதி

"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”

ம.குணவதி

Published:Updated:
"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”
பிரீமியம் ஸ்டோரி
"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”

22 வயது... இன்ஜினீயரிங் படிப்பு... ஐ.டி வேலை... கைநிறைய சம்பளம்... நிறையவே உற்சாகம்... எதிர்கால லட்சியம் எனப் பல பல கனவுகளுடன் வாழ்ந்த இளைஞியின் வாழ்க்கை, ஒருவனின் கொலைவெறிக்காதலால் ஒரே இரவில் தீக்கிரையாகியிருக்கிறது.

"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”

வினோதினி, ஃபிரான்சினா, தன்யா, சோனியா, சுவாதி, வித்யா, நவீனா… இந்த முறை இந்துஜா. இந்தப் பெயர்ப் பட்டியல் நம் எல்லோருக்குமே நன்கு தெரிந்த பட்டியலாகவே இருக்கக்கூடும். ஆம், இவையெல்லாம் சமீப காலத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட இளம்பெண்களின் பெயர்கள். விவாதங்கள், ஃபேஸ்புக் கிசுகிசுக்கள், கலாசாரப் பிரசாரங்கள் எப்பொழுதையும் போலவே அப்பொழுதும், இப்பொழுதும் நடக்கின்றன. உடனுக்குடன் அழுது, உடனுக்குடன் சிந்தித்து, உடனுக்குடன் சிரித்து, உடனுக்குடன் மறந்துபோகும் வாய்ப்பை இந்தச் சமூக வலைதளங்கள் உருவாக்கிக் கொடுத்திருந்தாலும், இந்துஜா கொலைக்கான எதிர்வினைகளைக் கவனித்தால், பேசிப்பேசியே வீரியம் குறைந்துபோயிருப்பதை உணர முடிகிறது. `பெண்களின் மீதான தாக்குதல்கள் சகஜம்தான்’ என்கிற மனநிலை இளைஞர்களிடமும் வந்துவிட்டதோ என்கிற அச்சத்தையும் இது ஏற்படுத்துகிறது.

 ஆதம்பாக்கத்தில் இந்துஜா வசித்த அப்பார்ட்மென்ட்டில் உள்ள  வீடுகளில் இருக்கும் யாருமே இந்துஜா கொலைபற்றிப் பேசத்தயங்குகிறார்கள். வீட்டுக்கு மிக நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பேசினார். ``இந்துஜா அக்காவும், அந்தக் கொலைகாரனும் ஒரே ஸ்கூல்ல படிச்சவங்கதான். இந்த ஃப்ளாட்ல அவங்க 8 வருஷமா இருக்காங்க. அவங்க இருக்கிறதே இங்க நிறைய பேருக்குத் தெரியாது. அவ்ளோ சைலன்ட். ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் வேலையை ரிசைன் பண்ணிட்டு வீட்டுல இருந்தாங்க. அதுக்கு முன்னாடி ஐடி கம்பெனிலதான் வேலை. எங்கூட அடிக்கடி பேசுவாங்க. ரொம்ப அன்பா இருப்பாங்க’’ என்றவர், வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறார்.

``ஒண்ணுமில்லக்கா, என்னால நார்மலாக முடியல... எல்லாத்தையும் பக்கத்துல இருந்து பாத்துட்டேன். அன்னிக்கு, திங்கட்கிழமை நைட்டு மணி 8.45 இருக்கும்... செம மழை, யாரோ கத்துறமாதிரி பெரிய சத்தம். மழைல எங்கிருந்து சத்தம் வந்துச்சுனே புரியல. வெளிய ஓடி வந்து பார்த்தா, அக்கா வீட்லேருந்து ஒரு ஆளு கீழ வந்து பதற்றமேயில்லாம வண்டி ஸ்டார்ட் பண்ணி ஓட்டிட்டுப் போனான். ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்குப் போய்ப் பார்த்தா சுவரெல்லாம் கரி படிஞ்சு, வீட்டுக்குள்ள நெருப்பா இருந்துச்சு. ஹால்ல இருந்த  இந்துக்கா அம்மாவையும், தங்கை நிவேதாவையும் எப்படியோ நானும், கீழ் வீட்ல இருக்கறவங்களும் சேர்ந்து கீழ கூட்டிட்டு வந்து தண்ணி கொடுத்துட்டிருந்தோம். ரெண்டு பேரு உடம்புலயும் தீக்காயம்.. `இந்துவ பாருப்பா, என் புள்ளைய பாருப்பா’ன்னு கத்தினாங்க ரேணுகாம்மா. தீப்பிடிச்சதால மெயின் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு, சிலிண்டரைப் போய் முதல்ல ஆஃப் பண்ணோம். அதுக்குள்ள வீடு புகைமூட்டமாயிடுச்சு. பக்கத்து ஃப்ளாட்ல தண்ணி கேட்கிறதுக்காகக் கதவை வேகமா தட்டினோம். தொறக்கவேயில்ல... ச்சே… பயமாயிருக்கு இங்க வாழுறத நெனச்சாவே” - உடல் அதிர அழுகிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”

``கோபத்துல கீழ  ஓடி வந்து பக்கெட்ல தண்ணியெடுத்துட்டுப் போய் ஊத்தினோம்.. வீட்ல சோஃபால பிடிச்ச நெருப்பெல்லாம் அணைஞ்சப்புறம் மொபைல் லைட்டோட உள்ளே போய் பெட்ரூம் கதவைத் திறந்தப்ப இந்துஜா அக்காவோட கருகின உடம்புதான் தட்டுப்பட்டுச்சு… அக்கா, அக்கான்னு தட்டி கூப்பிட்டேன். அசைவே இல்ல... நானும், கீழ் வீட்டுப் பையனும் சேர்ந்து தூக்கினோம். `ஹூம்ம்ம்’னு ஒருமுறை சத்தம் வந்துச்சு அவ்வளவுதான். என் கை, சட்டையெல்லாம் சதையா ஒட்டிக்கிச்சு... ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணி, மத்த ரெண்டுபேரையும் முதல்ல இங்க இருக்குற பிரைவேட் ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டு போனோம். இந்துஜாக்கா அப்பவே இறந்துட்டாங்க. மத்தவங்கள கே.எம்.சி கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க. இந்துக்கா தம்பி மனோஜ் நைட்டு முழுக்க எங்க வீட்டுலதான் இருந்தான். கைகாலெல்லாம் உதற உதற அழுதான். அவனுக்கு இனிமே இது மறக்குமா? அக்காவப் பாக்கப் போகணும்னு வெளிய வெளிய ஓடினான்.  அவனை  சமாதானப்படுத்தவே முடியல.

காதலிக்கறதா சொல்லிட்டு ஒருத்தன் பெட்ரோல் ஊத்திக் கொளுத்தறான்னா, பக்கத்து வீட்டு மனுஷங்க சாகக் கிடக்கும்போது கூட  தண்ணி கொடுக்க மாட்டேங்குறாங்கன்றது ரொம்ப பயமாயிருக்குக்காக” என மீண்டும் அழுகிறார் இந்துஜாவின் பக்கத்து வீட்டுத் தம்பி.

வேளச்சேரியில் இருக்கும் ஆகாஷின் வீட்டைச் சுற்றி எப்போதும் ஒரு சிறுகூட்டம் இருந்துகொண்டே இருக்கிறது. எதிர்கொள்ளும் ஒவ்வொருவரையும் பதற்றத்துடன் எதிர்கொள்கிறார்கள் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள். அதே தெருவைச் சேர்ந்த ஆகாஷின்  நண்பரிடம் பேசினேன். “அவங்க லவ் பண்ணிட்டிருந்த விஷயம் ரெண்டு வீட்டுக்கும் தெரியும். செகண்ட் இயர் காலேஜ்ல இருந்து நின்னப்போ, நிறைய பேர் அவனுக்கு `தொடர்ந்து படிச்சு டிகிரி முடிடா’ன்னு அட்வைஸ் பண்ணாங்க. அவனுக்கு காலேஜ்லயும் பிரச்னைதான். யாருகிட்டயும் ஸ்மூத்தா இல்லை. `என்னதான் செய்யப்போற’ன்னு கேட்கும்போதெல்லாம், பிசினஸ், மார்க்கெட்டிங்னு வேற வேற ப்ளான சொல்லுவான். அவனோட பிரச்னையே பொறுமையில்லாததுதான். எல்லாமே அவனுக்கு உடனே நடக்கணும்.

"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”

காதல் விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் அவன் ரொம்ப வெறிபிடிச்ச மாதிரி இருந்தான். அந்தப் பொண்ணு அவன்கூட ஸ்கைப்ல பேச மறுக்குதுன்னு சொன்னான். இந்துஜா கிடைக்கலன்னா செத்துருவன்னுதான் சொல்லிட்ருந்தான். இப்டி கொலை செய்வான்னு நெனைக்கல. ஆகாஷ் யாருகிட்டயாச்சும் பேசியிருந்தா இப்படி நடந்திருக்காது” என்றார் ஆகாஷின் நண்பர்.

``இதுபோன்ற கொலைகள் புதுசா இன்னிக்கு நேத்து நடக்குறதில்ல... ரெண்டு நாள் அதைப்பத்திப் பேசிட்டுக் கலைஞ்சு போறது தவிர்த்து, வேற எதையுமே நாம பண்றதில்லை. குடும்பங்களும், பள்ளிகளும் கல்லூரிகளும், ஆண் பெண் ரிலேஷன்ஷிப்பைத் தெளிவா பேசுறதேயில்லை. குடும்பங்கள் ஏற்கெனவே பெண்களைத் தன்னோட உடைமைகளா வெச்சிருக்கிற நிலையில், கல்விக்கூடங்களிலும் கல்லூரிகளிலும், இன்னும் வேற எந்தச் சமூக அரங்கிலுமே பெண்களுக்கு ஸ்பேஸ் இல்லை. நம்மகிட்ட இருக்கிறதெல்லாம் என்ன? தூக்கிட்டுப் போய் தாலிகட்டுற, காதலை அடிமைத்தனமா காட்டுகிற, `ஒரு காதல் ஒரு முறைதான் பூக்கும்’ மாதிரியான லுனாட்டிக் திரைப்படங்கள்தானே? ஒரு அடலசன்ட் பொண்ணுகிட்டயும், பையன்கிட்டயும் நாம எல்லோருமா சேர்ந்து உயிரியல்பையும், உணர்வுகளைச் சரியா வழிப்படுத்தச் சொல்லிக்கொடுத்திருக்கோமா? சட்டம், பாதுகாப்புக் கலைகள்னு எல்லாத்தையும் வலியுறுத்துறதுக்கு முன்னாடி, வாழ்க்கைக் கல்வி இல்லைன்னா இது எல்லாமே வீண்தானே. இங்க தேவைப்படறதெல்லாம் பேசறதுக்கான ஸ்பேஸ்தானே. இப்படிக் குரூரமான வேலையைப் பார்த்த அந்தப் பையன்கிட்ட யாருமே பேசியிருக்கமாட்டாங்க. கம்ப்யூட்டரும் செல்ஃபோனும் சினிமாவும் அவனுக்கு எதைக் கத்துக்கொடுத்திருக்கும்னு நினைக்கிறீங்க?

சமூகத்தில எல்லோரும் காதலிக்கறாங்க. ஆனா காதலிக்கறது, காதலிக்கப்படறது யாருக்கும் தெரியக்கூடாதுன்னு நினைக்கிறது வினோதமில்லையா? Idea of masculinity-ஐ உடைச்சுப் போடுறதுதாங்க வழி. காதல்ல, தோல்வியா, கஷ்டமா இருக்கா, அழுன்னு அந்தக் கொடுமையைச் செஞ்ச பையனுக்கு யாராவது சொல்லியிருப்பாங்களா? அவனை அழவெச்சிருக்கணுமே, அதட்டியிருக்கணுமே. அந்தப் பொண்ணைக் கஷ்டப்படுத்துறதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்லன்னு கண்டிக்கவும் அதட்டவும், அணைச்சுப் புரிய வைக்கவும் சமூகத்தோட எல்லா இன்ஸ்டிட்யூஷனும் வேலை செஞ்சிருக்கணுமே?! இது இங்க இல்லைன்றதுதான் பிரச்னையே. இதை நாம் செய்யும்வரை இதுபோன்ற கொலைகளுக்கு தீர்வே கிடைக்காது” என்கிறார் ஆண், பெண் உறவுச்சிக்கல்களைத் தடுப்பதற்கான வாழ்க்கைக் கல்வியின் முக்கியத்தைப் பேசி, பல இடங்களில் அதற்கான வகுப்புகளையும் நடத்திவரும் கீதா நாராயணன்.

"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”

காதலின் பெயரிலான கொலைகள் குறித்து யாரிடம் பேசினாலும் எல்லோரும் கைகாட்டுவது சினிமாவைத்தான். சினிமா உலகம் என்ன சொல்கிறது என்பதற்காக இயக்குநர் ராமிடம் பேசினேன். “சினிமாதான் இந்தக் குற்றங்களுக்குக் காரணம் என்ற பொதுவான ஸ்டேட்மென்ட்டை என்னால் ஏற்கமுடியவில்லை. பொதுப்புத்தியின் வேல்யூ சிஸ்டத்தைத்தான் சினிமா வெளிப்படுத்திட்டே இருக்கு. முன்பு காதலை மறுக்கிறதென்பது ஆண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலையாக இருந்தது. ஆனால், உலகமயமாக்கலுக்குப் பிறகு, இந்த 20 வருடங்களில் பெண்களோட நிலை, கல்வி, வேலைவாய்ப்பு கொஞ்சமாவது முன்னேறியிருக்கு. முடிவெடுக்கிற நிலையில் பெண்கள் இருக்காங்க. பெண்களின் முடிவுகளை, சுயமாகத் தன்னைப் பாதுக்காக்கிற தன்மையை ஆண்கள் புரிஞ்சுக்கிறதே இல்ல. ஆண்களுக்கு இதைப் புரிய வைக்கிற ஸ்பேஸும் சமூகத்தில் இல்லை.

"இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது!”

ஸ்டாக்கிங் சரி என்பதை சினிமா கற்றுக்கொடுக்கல. ஆனால், பெண்கள் காதலை மறுத்தாலே, ஆண்களை ஏமாற்றுவதுதான்னு சினிமா சொல்லிக்கொடுக்குது. இதன் தாக்கம் சமூகத்தில் இருக்கவே செய்யுது. அதை ஒப்புக்கொண்டுதான் ஆகணும். சினிமாக்கள் இந்த விதத்தில் பொறுப்பாகக் காட்சிகளைக் கையாள வேண்டியது முக்கியம். பெண்கள்னா யார்? இந்தச் சொற்பமான முன்னேற்றத்தை அடையறதுக்கு எத்தனை போராட்டங்களை அவங்க  கடந்து வந்திருக்காங்க, பெண் என்பவள் சக மனுஷி, தன்னைப்போலவே எல்லா உணர்வுகளும், அறிவும் பொருந்திய உயிர்னு குடும்பங்களும், படிக்கிற இடமும் சொல்லணும். கல்விக்கூடங்கள், சமூகம், ஊடகங்கள், சினிமாக்கள், இலக்கியம்கிற எல்லாமும் சேர்ந்த கூட்டு முயற்சியால மட்டும்தான்  இந்த வன்முறைகள், பெண்மீதான வெறுப்பு களையப்படும்” என்றார்.

ஆசிட் வீச்சினால் கொல்லப்பட்ட காரைக்கால் வினோதினி, சென்னையைச் சேர்ந்த வித்யா ஆகியோரின்  கடைசி வார்த்தைகளை, யூ-ட்யூப் வீடியோவிலும், ஃபேஸ்புக்கை ஸ்க்ரோல் செய்யும்போதும் பலரும் கேட்டிருக்கக்கூடும். தற்கொலை செய்துகொண்ட, கொலைவெறித் தாக்குதல்களை எதிர்கொண்ட பல பெண்களின் வாக்குமூலங்கள் ஒரே குரலில் சொல்வது இதைத்தான். “இனிமே எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக்கூடாது.”

சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பணிகளும், மக்கள் எழுச்சிகளின்போது ஒதுக்கப்படும் சில கோடிகளும், நடவடிக்கைகளும், நிர்பயா நிதி, ஸ்வாதி செயலிகள் மட்டும் போதாது என்பது மட்டும் புரிகிறது. என்ன செய்யப்போகிறோம் நாம்?