`நீ கடவுளின் மகள்; உனக்கு எந்தக் குறையும் வராது' - வைக்கம் விஜயலட்சுமியை நெகிழவைத்த யேசுதாஸ் #VikatanExclusive

``கொஞ்சம் தாமதமாக என்றாலும், என்னை முழுவதாகப் புரிந்துகொண்ட மிக நல்ல மனிதர் வாழ்வின் துணையாக வந்திருக்கிறார்”

நேற்றைய இந்நேரத்தில், வைக்கம் விஜயலட்சுமி திருமணத்துக்கான நிச்சயம் நிறைவுபெற்றிருந்தது. வாழ்த்து மழையில் மகிழ்ந்துகொண்டிருந்தவரை தொலைபேசியில் அழைத்தோம்.

வைக்கம் விஜயலட்சுமியின் நிச்சயதார்த்தம்

``நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். மற்ற பெண்கள்போலவே எனக்கும் திருமணத்தின் மீது ஆர்வம் இருந்தது. எப்போது எனக்கான துணைவன் வருவார் என எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அது நேற்று நடந்திருக்கிறது. கொஞ்சம் தாமதமாக என்றாலும், என்னை முழுவதாகப் புரிந்துகொண்ட மிக நல்ல மனிதர் வாழ்வின் துணையாக வந்திருக்கிறார். நேற்று காலையிலிருந்தே எனக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து கவனித்துக்கொண்டார். அதைப்பார்த்து என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஆனந்தம். நானும் மகிழ்வின் உச்சியில் இருக்கிறேன். என் குருநாதர் யேசுதாஸ், தொலைபேசியில் வாழ்த்தினார். 'நீ கடவுளின் மகள். உனக்கு எந்தக் குறையும் வராது. எப்போதும் அந்தக் கடவுளின் ஆசி உனக்குப் பரிபூரணமாக இருக்கும்' என்றார். அவரின் வாழ்த்து என்னை வழிநடத்தும். என் திருமணம் நல்லபடியாக முடிய, நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே. என் திருமணத்துக்கும் அவசியம் வாருங்கள்” என்றார் உற்சாகம் சிந்தும் தேன் குரலில். 

குழந்தைத்தனமான அவரின் பொன் சிரிப்பு, எந்நாளும் நீடித்திருக்கும்! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!