இதுதான் நெக்ஸான் JTP மாடலா? டாடாவின் பர்ஃபாமன்ஸ் காம்பேக்ட் எஸ்யூவி!

இந்தக் காம்பேக்ட் எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல் 2020-ம் ஆண்டில் வெளிவந்த பிறகே பர்ஃபாமன்ஸ் மாடலும் வரும் எனத் தகவல்கள் வந்துள்ளன.

சமீபத்தில் வெளிவந்திருக்கும் டியாகோ NRG காரின் அறிமுகவிழாவில் பங்கேற்ற டாடாவின் பாசஞ்சர் வாகனப் பிரிவின் தலைவரான மயாங் பரீக், JTP கார்கள் பற்றிக் கேட்டபோது கூறியது இதுதான்; 'JTP கார்களுக்குத் தற்போது முன்னுரிமை வழங்கப்படுவது உண்மைதான். அவை உடனடியாகச் சாலைகளுக்கு வராது என்றாலும், உடனடியாக அறிமுகமாகும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். அடுத்த 8 வாரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்' என்றார். டியாகோ - டிகோர் - நெக்ஸான் என வரிசையாக வரலாம். 

 

நெக்ஸான்

 

அவர் சொன்னதை வைத்துப் பார்க்கும்போது, 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டியாகோ JTP மாடல், தீபாவளி பரிசாக முதலில் வரும் எனத் தெரிகிறது. பின்னர், ஏறக்குறைய அந்தக் காரில் இருக்கும் அதே அம்சங்களுடன் டிகோர் JTP வெளிவரலாம். ஆச்சர்யம் என்னவென்றால், நெக்ஸானின் JTP வெர்ஷனும் தயாரிக்கப்படும் என்பதுதான்! ஆனால், இது இந்தக் காம்பேக்ட் எஸ்யூவியின் பேஸ்லிஃப்ட் மாடல், 2020-ம் ஆண்டில் வெளிவந்த பிறகே பர்ஃபாமன்ஸ் மாடலும் வரும் எனத் தகவல்கள் வந்துள்ளன. 

 

நெக்ஸான்

 

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வரவிருக்கும் BS-VI மாசு விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்ட டர்போ இன்ஜின்கள், நெக்ஸான் JTP//பேஸ்லிஃப்ட் காரில் இருக்கலாம். எனவே, தற்போது 110bhp பவரை வெளிப்படுத்தும் இவை, இதனால் கூடுதல் பவரைப் பெறலாம். மேலும், இதில் இணைக்கப்பட்டிருக்கும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், கூடுதல் பர்ஃபாமன்ஸுக்கு ஏற்றபடி தயாரிக்கப்படலாம். கூடுதல் செயல்திறனைச் சமாளிக்கும்படி, காரின் சன்ஸ்பென்ஷனிலும் கணிசமான மாற்றங்கள் செய்யப்படலாம். டயர்/பிரேக் கூட மாறலாம்.

 

Nexon

 

JTP என்பது பர்ஃபாமென்ஸ் மாடல் என்பதால், வழக்கமான மாடலைவிட ஸ்போர்ட்டி அம்சங்கள், காரில் இடம்பெறலாம். எனவே, அகலமான ஏர் டேம், பெரிய பனி விளக்குகள், Smoked ஹெட்லைட்ஸ் மற்றும் டெயில் லைட்ஸ், புதிய அலாய் வீல்கள், சைடு ஸ்கர்ட், பின்பக்க Diffuser, சிவப்பு நிற வேலைப்பாடுகள் ஆகியவை இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. கேபினைப் பொறுத்தமட்டில், அது ஆல்-ப்ளாக் தீமில் இருக்கும் என்பதுடன், அலுமினியம் பெடல்கள் மற்றும் சிவப்பு நிற தையல் வேலைப்பாடுகளுடன்கூடிய லெதர் சீட்கள் ஆகியவையும் பொருத்தப்படலாம். முன்னே சொன்ன விஷயங்கள் எல்லாம், டியாகோ மற்றும் டிகோர் கார்களின் JTP மாடல்களில் இருப்பவையே! 

 

Nexon

 

இந்த நிலையில், கோவையைச் சேர்ந்த மோட்டார் விகடன் வாசகரான எஸ்.கோகுல் பிரசாந்த், எங்களுக்கு இந்த ஸ்பை படங்களை அனுப்பியுள்ளார்! PSG கல்லூரி அருகே டெஸ்ட் செய்யப்பட்டுக்கொண்டிருந்தபோது, இந்த மஞ்சள் நிற நெக்ஸானை அவர் படம்பிடித்திருக்கிறார். ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, கொஞ்சம் மாற்றங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஃபோர்டு எக்கோஸ்போர்ட் S மாடலுடன் போட்டிப்போடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!