வெளியிடப்பட்ட நேரம்: 11:11 (17/09/2018)

கடைசி தொடர்பு:12:04 (17/09/2018)

``நிர்வாண படங்கள் எடுக்கிறதும் சலிச்சுடுச்சு!’’ - `ப்ளேபாய்’ போட்டோகிராபர் ராமச்சந்திரன்

``நிர்வாண படங்கள் எடுக்கிறதும் சலிச்சுடுச்சு!’’ - `ப்ளேபாய்’ போட்டோகிராபர் ராமச்சந்திரன்

போட்டோகிராபியை முக்கிய அங்கமாய் சுமந்திருக்கும் சர்வதேச பத்திரிகை, `பிளேபாய் (Playboy)'. கவர்ச்சிக்குக் குறைவில்லாமல் பக்கங்களை நிரப்புவதில் இதற்கு நிகர் எதுவுமில்லை. இந்தப் பத்திரிகையின் கவர் மற்றும் நடுப்பக்கத்தில் தங்களின் புகைப்படம் வரவேண்டும் என்பதற்காக, `நான், நீ' என்று போட்டிபோட்டுக்கொண்டு நிர்வாணமாகவோ, அரை நிர்வாணமாகவோ போஸ் கொடுக்க தவம் இருப்பவர்களும் உண்டு. வெளிநாடுகளில் இது சாதாரணம். ஆனால், இந்தியர்களுக்கு அப்படி அல்ல என்றாலும், பிளேபாய் பத்திரிகையில் 6 ஆண்டுகளாய் இணைந்திருக்கும் `ஒன் அண்ட் ஒன்லி’ இந்தியர் ராமச்சந்திரன்.

பிளேபாய் ஃபோட்டோகிராபி

தன் 6 வருட அனுபவத்திலிருந்து, அவர் கற்றுக்கொண்ட போட்டோகிராஃபி முறை, ஆர்ட் மற்றும் சமூக முன்னேற்ற நோக்கம் போன்றவற்றை இணைத்து, `Medley of Art' எனும் புத்தகம் வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே சர்வதேச அளவில் பல விருதுகளை தட்டிச் சென்ற இந்தப் புத்தகம், இப்போது இந்தியாவிலும் வெளியாகியிருக்கிறது. இந்தப் புத்தக வெளியீட்டு விழாவை நடிகர் விஜய்சேதுபதி மற்றும் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தொடங்கிவைத்தனர். இதில், ராமச்சந்திரனின் ஆசிரியர் பிளேபாய் பத்திரிகையின் பிரபல மூத்த போட்டோகிராஃபர் ஜெர்மோ போஜனமி உட்பட பல சர்வதேச மாடல்களும் கலந்துகொண்டனர். மேலும் ராமச்சந்திரன், போட்டோகிராஃபியில் டாக்டர் பட்டமும் பெற்றவர். உலகளவில் டாப் 60 சிறந்த போட்டோகிராஃபர்களில் ராமச்சந்திரனும் ஒருவர். உலகளவில், திருநங்கைகளை வைத்து பிரமாண்டமான போட்டோஷூட் செய்த இந்த நூற்றாண்டின் முதல் போட்டோகிராஃபர்.

இப்படி அமைதியாய் பல சாதனைகளை படைத்திருக்கும் ராமச்சந்திரன் பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

`` `பிளேபாய்' பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு எப்படிக் கிடைத்தது? `பிளேபாயில் அப்படி என்ன ஸ்பெஷல்?"

``என்னுடைய சொந்த ஊர் கும்பகோணம். சின்னவயசுல இருந்தே பெரிய ஆளாகணும்னு கனவு மட்டும் இருந்துச்சு. ஆனா, எப்படி ராமச்சந்திரன்என்னவாகப் போறேன்னு எந்த ஐடியாவும் இல்ல. கனவுகள் ஒரு பக்கம் இருந்தாலும், நானும் எல்லாரையும் போல, கிடைக்கிற வேலைகளையெல்லாம் பார்த்துட்டு இருந்தேன். ஃப்ரீலான்ஸிங்ல நெறைய வேலைகள் செஞ்சேன். வேலைகளுக்கு நடுவுல போட்டோகிராஃபியையும் கத்துக்கிட்டேன். இந்த நேரத்துலதான் முருகன் இட்லி கடை உரிமையாளர் அவரோட ஹோட்டலுக்கு போட்டோ எடுத்துக்கொடுக்கச் சொன்னார். அதுதான் என்னோட வாழ்க்கையை மாத்திடுச்சுனும் சொல்லலாம். நான் அப்போ எடுத்த போட்டோ இன்னமும் அந்தக் கடைகள்ல இருக்கு. அது கொடுத்த ஊக்கம் என்னை அடுத்தடுத்த வாய்ப்புகளைக் கொடுத்துச்சு. அதுக்கு அப்பறம், ஃபேஷன், கிளாமர் போட்டோகிராஃபினு ட்ரை பண்ணினேன். சர்வதேச போட்டோகிராஃபி போட்டிக்கு, ஒரே ஒரு லைட் வெச்சு நான் எடுத்த போட்டோவை எல்லோரும் பாராட்டுனாங்க. விருதும் கிடைச்சுது. இதுதான் நான் பிளேபாய் பத்திரிகைக்குப் போறதுக்கு மிகப் பெரிய காரணமா இருந்துச்சு. 

இங்க, நிர்வாண போஸ் கொடுக்க பெரிய போட்டியே வரும். அதுலயும் அட்டைப் படத்துக்காக போரே வரும். பின்ன, ஒரே நாளில் மரியாதை, விளம்பரம், சினிமா வாய்ப்புகள்னு எல்லாம் வாசல் தேடி வருமே! விடுவாங்களா!"

``கட்டுப்பாடுகள் நிறைந்த தமிழ்நாட்டிலிருந்து, முற்றிலும் எதிர்மறையான `நிர்வாணப் புகைப்படங்கள்' எடுப்பதிலிருந்த சவால்கள் என்ன?"


``ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. நிர்வாணப் புகைப்படம்னு ஏற்கெனவே தெரிஞ்சிருந்தாலும், பதற்றம் இருந்துச்சு. ஆனா, இவ்வளவு பெரிய நிறுவனத்துல வேலை செய்றோம், நல்லா வொர்க் பண்ணணும்னு என்னை நானே ஊக்கப்படுத்திட்டு போட்டோகிராஃபி மேல நம்பிக்கை வெச்சு, வேலை செய்ய ஆரம்பிச்சேன். நான் எப்போதும் என்னோட வொர்க் பண்ணப்போற மாடல்ஸ்கூட நல்ல friendly ரிலேஷன்ஷிப் மெயின்டைன் பண்ணிப்பேன். அவங்க கம்ஃபர்டபிளா இருந்தாதான், நாம நினைக்கிற போட்டோ கிடைக்கும். புதுப்புது ஐடியா கிடைக்க நிறையா டிராவல் பண்ணணும். ஒரே இடத்துல இருந்துட்டு நல்ல போட்டோகிராஃபி வரும்னு நினைக்குறது ரொம்பத் தப்பு. நமக்கு ஒரு விஷயம் வேணும்னா நாமதான் அந்த இடத்தைத் தேடி போகணும். அந்தத் தேடல்கள் இருந்தாதான் நிறைவான புகைப்படங்கள் கொடுக்க முடியும். இதெல்லாம் நான் பிளேபாய்ல கத்துக்கிட்ட விஷயங்கள். இப்போ எனக்கு இந்த நிர்வாணப் புகைப்படம் எடுக்கிறதும் சலிச்சுடுச்சு. இன்னும் நம்ம திறமையை வளர்த்துக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்போ வந்ததுதான், ஆர்ட் போட்டோகிராஃபி"

திருநங்கை ஃபோட்டோகிராபி

``இந்த ஆர்ட் போட்டோகிராஃபில திருநங்கைகளை கொண்டு வந்தது ஏன்?"

``என்னோட நண்பர் ஒருவர் `அரவாணி உலகத்து அதிசயம்'னு ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அந்தப் புத்தகம்தான் இப்படியொரு எண்ணம் உருவானதுக்குக் காரணம். இந்த போட்டோகிராஃபிக்காக பலபேரைச் சந்திச்சு பேசுனேன். `ஏற்கெனவே எங்களை ரொம்பக் கேவலமா பேசுறாங்க, இதுல இப்படி போஸ் கொடுக்கச் சொல்லி அசிங்கப்படுத்தப் பார்க்கிறீங்களா?'.. இதுதான் பலபேரோட கேள்வியா இருந்துச்சு. அவங்களுக்குப் பொறுமையா போட்டோகிராஃபியோட மதிப்பை எடுத்துச் சொல்லி, 15 திருநங்கை மாடல்களை உருவாக்கி, ஷூட் பண்ணினேன். ரொம்ப நல்லா வந்திருக்கு. இந்த நிர்வாண ஆர்ட் போட்டோகிராஃபிக்கு மற்ற நாடுகள்ல ரொம்ப நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு"

``இவ்வளவு அழகான புகைப்படங்களை கொடுக்கும் `ராமச்சந்திரன்', கேமரா வழியா பார்க்கிறது என்ன?"

``எப்போதுமே என் கண் பார்க்கறதுக்கு முன்னாடி, மைண்ட் பார்த்துடும். ஒரு ஷூட் பண்ணுறப்போ, யாருக்காகப் பண்ணுறோம், யாருக்குப் பிடிக்கும்னு ரெண்டு விஷயங்களை கவனத்துல வெச்சிட்டுப் பண்ணணும். அப்போதான் முழுமையான அவுட்புட் கிடைக்கும். நான் எப்போதும் போட்டோகிராஃபிக்கான கதையை எழுதுவேன், மனசுக்குள்ளேயே அதைக் காட்சிப்படுத்திப் பார்ப்பேன், அதை அப்படியே நேர்ல கொண்டு வர ட்ரை பண்ணுவேன். சரியா வரலைனா, எத்தனை முறைனாலும் அது சரியா வரவரைக்கும் திரும்பத் திரும்ப ட்ரை பண்ணுவேன். இந்த ஆர்ட் போட்டோகிராஃபில CG வேலைப்பாடுகளோ போட்டோஷாப் வேலைப்பாடுகளோ எதுவும் இல்லை. எல்லாமே ஒரிஜினல். எல்லாத்தையும்விட என்னோட பெரிய நம்பிக்கை, நாம நல்ல வழிகளை அமைச்சோம்னா, கண்டிப்பா நல்ல மனிதர்கள் அந்த வழில வருவாங்க" என்கிறார் ராமச்சந்திரன்.


டிரெண்டிங் @ விகடன்