வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (17/09/2018)

கடைசி தொடர்பு:15:50 (17/09/2018)

பெரியாரை வாயளவில் அல்ல... மெய்யளவில் பின்பற்ற வேண்டும்... ஏனென்றால்?!

பெரியாரை வாயளவில் அல்ல... மெய்யளவில் பின்பற்ற வேண்டும்... ஏனென்றால்?!

ந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு, நமது அரசியல் பண்பாடு குறித்து சிறிது சிந்தனை செய்துபார்ப்போம். `அரசியல் பண்பாடு' என்ற சொல், அரசியல் கட்சிகள், அவற்றின் கொள்கைகள் - நடைமுறைகள், அரசாங்கங்களின் சட்டதிட்டங்கள் - நடைமுறைகள், மக்கள் தம் சொந்த நலன் குறித்த விழிப்புஉணர்வு ஆகிய மொத்தத்தையும் குறிக்கிறது.  

தமிழகத்தில் அரசியல் பண்பாடு மிக மோசமாக இருக்கிறது. எங்கும் ஊழல் தாண்டவம் ஆடுகிறது. இதனால் திராவிடக் கழகங்களை ஒழித்து, தமிழக மண்ணில் ஆன்மிக ஆட்சியின் கொடியை நாட்டுவோம் என்ற குரல் ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்தக் குரல் ஓரளவுக்கு வெகுசன ஊடகங்களின் தயவைப் பெற்று, வெகுசன மனநிலையில் ஏற்பைப் பெற்றுள்ளது போன்ற தோற்றம் நிலவுகிறது. மற்றொரு புறம் தமிழகத்தில் திராவிடக் கழகங்களின் ஆட்சியால் தமிழகம் செழிப்பாக உள்ளது, வளமும் நலமும் பெற்று விளங்குகிறது, ஊழல் எதிர்த்துப் போராடவேண்டிய தீமை என்று முழங்குகிற கழகங்களின் குரலுக்கும் வலுவாக ஒலிக்கவே செய்கிறது. 

தந்தை பெரியார்

இந்த இரண்டு குரல்களுக்கும் நடுவில்தான் உண்மை இருக்கிறது. இந்தியாவில் பிற மாநிலங்களைவிட ஒட்டுமொத்தமாக நோக்கினால், பொருளாதார வளத்திலும் மக்கள் நலத்திலும் தமிழகம் சிறப்பாக விளங்குகிறது. ஆனால், இந்த வளமும் நலமும் போதாதது; இன்னும் வளர வேண்டும். அதற்கு நமது அரசியல் பண்பாடு வளர வேண்டும். இப்போது தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் அரசியல் விழிப்புஉணர்வு பெற்று விளங்குகின்றனர். அரசின் திட்டங்களைப் பற்றிக் கேள்வி எழுப்புகின்றனர். தங்களது சொந்தக் கருத்துகளை முன்வைத்து விவாதிக்கின்றனர். ஆயினும் மக்களின் இந்த விழிப்புஉணர்வியின் வளர்ச்சி வேகத்துக்கு ஏற்ப அரசியல் கட்சிகள் முகம்கொடுக்க முடியவில்லை. அவர்கள் மிகப்பழைய நடைமுறைகளையே கைக்கொண்டுவருகின்றனர். ஜனநாயக அரசியல் பண்பாடு இன்னும் தமிழகத்தில் செழித்து வளரவில்லை என்பதை, அரசின் திட்டங்கள் குறித்த எதிர்க்கருத்துகளை வெளியிடுவதற்கு உள்ள தடைகளும் கைதுகளும் காட்டுகின்றன. அதேவேளையில், மிகச்சாதாரண பிரச்னைகளைக்கொண்டு, வலதுசாரிகள் பலம்பெற்றுவிட முயலும் காட்சிகள் மிக வேடிக்கையானவை.

இந்தப் பின்னணியில்தான் பெரியார் முன்னெடுத்த அரசியல் பண்பாடு குறித்த விழிப்புஉணர்வு தேவைப்படுகிறது. பெரியார் இயக்கம் சீர்திருத்த இயக்கம், பண்பாட்டு இயக்கம் என்று இப்போது அழுத்திச் சொல்லப்படுகிறது. பெரியார் இயக்கம் ஓர் அரசியல் இயக்கமும்கூட என்பது அவ்வளவாக வலியுறுத்திச் சொல்லப்படுவதில்லை. அவர் சமூக வேறுபாடுகளுக்கும், சமத்துவங்களுக்கும் எதிர்த்துப் போராடியதோடு, சமூக வேறுபாடுகளையும் சமத்துவங்களையும் பேணிய அரசு நிறுவனத்தையும் அரசாங்கங்களையும் அரசாங்கங்களை நடத்திய கட்சிகளையும் எதிர்த்துப் போராடி வந்தார். இவ்வாறு அவர் முன்னெடுத்த அரசியல் இயக்கம் சுயமரியாதையையும் பகுத்தறிவையும் முன்னிறுத்திய அரசியல் பண்பாட்டைப் பேணி வளர்த்தெடுத்தது.

தந்தை பெரியார்

பெரியாரது அரசியல் பண்பாட்டில் சுயமரியாதை என்பது தனிமனித சுயமரியாதையை முன்னிறுத்தியது. அதேவேளையில் பொதுவெளியில் மக்கள் தம்மை விமர்சிக்கும்போது, எனது சுயமரியாதைக்கு இழுக்கு வந்துவிட்டது என்று கூப்பாடு போடுவது அன்று; மாறாக அத்தகைய விமர்சனங்களை உளமார வரவேற்று மக்கள் விழிப்புஉணர்வை வளர்த்தெடுத்தல் ஆகும். 

பெரியாரது அரசியல் பகுத்தறிவு முழுக்கவும் நவீன அறிவியல் வளர்ச்சிகளையும் திட்டங்களையும் புகழ்பாடுவது அன்று. அந்த வளர்ச்சிகளும் திட்டங்களும் மக்கள் நலன்களுக்குப் பயன்படுகின்றனவா என்று கேள்வி எழுப்புதல் ஆகும். மனிதர் ஒவ்வொருவரும் பகுத்தறிவைக்கொண்டு பொதுநலத்தைப் பேணுவது ஆகும்.

வகுப்பு துவேசம், தேசவிரோதம் போன்ற சொற்களைக் கேட்டவுடன் அறிவைப் பயன்படுத்தாது, தலையாட்டும் போக்கு நமது பொதுவெளியில் அதிகம். இந்தப் போக்கைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தேர்தல் லாபத்தை ஈட்டி, ஆட்சிக் கட்டிலில் ஏறப் போட்டியிடுவதுதான் நமது அரசியல் கட்சிகளின் போக்காக உள்ளது. இதற்குப் பதிலாக பெரியாரை வாயளவிலும் பேனர் அளவிலும் மட்டுமல்லாது மெய்யாகவே பின்பற்ற அரசியல் கட்சிகள் முயலுதல் தமிழக அரசியல் பண்பாடு சிறக்கப் பயன்படும்.