வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (17/09/2018)

கடைசி தொடர்பு:12:50 (17/09/2018)

பெட்ரோல் விலை ரூ.2 குறைப்பு! மம்தா, சந்திரபாபுவைத் தொடர்ந்து குமாரசாமியும் நடவடிக்கை!

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து இதுவரை இல்லாத அளவு உச்சம் தொட்டுவிட்டது. தமிழ்நாட்டில் தற்போது பெட்ரோல் 85.31 ரூபாய்க்கும், டீசல் 78 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்தியாவில் இருப்பதிலேயே அதிகமாக மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலை உயர்வால் அதிருப்தியில் இருக்கும் மக்களை நிதானப்படுத்த மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஆந்திரா அரசுகளைத் தொடர்ந்து தற்போது கர்நாடகாவும் பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது.

கர்நாடகா பெட்ரோல் விலை

பெட்ரோல் மீது விதிக்கப்படும் செஸ் வரியை இன்று முதல் 2 ரூபாய் குறைப்பதாக அறிவித்திருக்கிறார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. இந்த அறிவிப்பு உடனே செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடக பட்ஜட் தாக்கல் செய்திருந்தபோது பெட்ரோல்-டீசல் விலையின் மீது 2 சதவிகித வரியை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் பெட்ரோல் விலை 82.84 ரூபாயாக குறைந்துள்ளது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோல், டீசல் மீது 27 சதவிகிதமாக இருந்த VAT வரியை 34 சதவிகிதமாக உயர்த்தியது தமிழக அரசு. இதைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமலேயே உள்ளது. தற்போது புதிய உச்சம் தொட்டிருக்கும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த அண்டை மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி குறையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.