நகரமயமாக்கலில் தொலைந்த தென்னமெரிக்கா! -தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 14 | Corrupted South America - Stories of water mafia episode 14

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (17/09/2018)

கடைசி தொடர்பு:15:21 (24/09/2018)

நகரமயமாக்கலில் தொலைந்த தென்னமெரிக்கா! -தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 14

தென்னமெரிக்க மத்திய அமெரிக்க நாடுகளின் அரசியல் களம் புதியதொரு பரிமாணத்தை எய்திக் கொண்டிருக்கிறது. அதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. எங்கு திரும்பினாலும் நீர்சார்ந்த போராட்டங்கள்...

நகரமயமாக்கலில் தொலைந்த தென்னமெரிக்கா! -தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம் 14

உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கும் தண்ணீருக்கான போராட்டங்கள் அரசியல் வரலாற்றையே மாற்றி எழுதுமளவுக்கு வலிமைகொண்டவை. மற்ற பகுதிகளைவிடத் தென்னமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது தண்ணீர். இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் பெரு நிறுவனங்களை ஆதரிக்கும் அரசுகள் அதற்கிடையில் இல்லாமல் போய்விடுமளவுக்கு மக்கள் எழுச்சி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். நவீனகால அரசியல் களத்தில் தண்ணீர் தவிர்க்கமுடியாத பங்கை எய்திக்கொண்டிருக்கிறது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளால் மக்கள் கொதிப்படைந்திருக்கிறார்கள். அந்தக் கோபம் அரசியல் கட்சிகளிலும் பிரதிபலிக்கிறது. அந்தப் பிரதிபலிப்பின் விளைவுதான் பல வருடங்களாகப் பெரும்பான்மையை நிரூபித்துவந்த அரசியல் கட்சிகள் நன்மதிப்பை இழந்துகொண்டிருப்பது. 

தென்னமெரிக்கா, மத்திய அமெரிக்க நாடுகளின் அரசியல் களம் புதியதொரு பரிமாணத்தை எய்திக்கொண்டிருக்கிறது. அதில் தண்ணீரின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. எங்குத் திரும்பினாலும் நீர்சார்ந்த போராட்டங்களும், அதை வழிநடத்தும் சமூக இயக்கங்களும் அரசுக்கு எதிராகக் கடுமையாக இயங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. அவர்கள் இப்போதுதான் மனித வரலாற்றைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ``தண்ணீர்தான் எல்லாம். அதைக் காப்பாற்றுங்கள்" என்ற பழங்குடிகளின் வாழ்க்கைத் தத்துவத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளார்கள். இந்த ஜனநாயக இயக்கங்கள் தனியாரை ஆதரிக்கும் அரசுகளை ஒதுக்கத் தொடங்கியுள்ளார்கள். சுரங்கத் தொழிற்சாலைகள், குளிர்பான தொழிற்சாலைகள் போன்றவற்றைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். அவை தவறான முறையில் தண்ணீர் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.

தண்ணீரைக் காப்பதற்கான குரல்கள் தென்னமெரிக்க முழுவதும் எதிரொலிப்பதைக் கேட்கமுடிகிறது. அந்தக் குரல் சமமான பங்கீடு மற்றும் பொறுப்புஉணர்வை மொத்த கண்டத்துக்கும் எடுத்துரைக்கின்றது. தலைமுறைகள் கடந்த பயன்பாட்டுக்குத் தேவையான தண்ணீர் இருப்பைத் தக்கவைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார்கள். ஆனால் அவர்களின் கனவுகளை நனவாக்கக்கூடிய வலிமையான அரசியல் சூழல் அங்கு நிலவவில்லை. அப்படியோர் ஆரோக்கியமான அரசியல் களம் அமைந்தாலும் அதை அவர்கள் தக்கவைத்துக்கொள்ள அந்நாடுகளின் முதலீட்டாளர்கள் விடுவதில்லை. நிலையற்ற அரசியல் அங்குள்ள மக்களைத் தங்கள் கனவுகளை முன்னெடுக்க விடாமல் தடுத்துக்கொண்டேயிருக்கின்றது.

தென்னமெரிக்கா

Photo Courtesy: Claire Rigby

அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8  அத்தியாயம் 9 அத்தியாயம் 10

நிலையற்ற அரசியல் நிலையற்ற நிர்வாகத்துக்கு இட்டுச்செல்கிறது. நிலையற்ற நிர்வாகம் மக்களுக்குத் தேவையான கட்டுமானங்களை நிர்மாணிக்கத் தவறுகிறது. அது நிலையற்ற பொருளாதாரத்துக்கு வழிவகுக்கிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாத நாடுகளில் அன்றாட வாழ்வியலும் மோசமாகிறது. அதற்குச் சிறந்த உதாரணமாக நிற்கின்றது பிரேசிலின் ஃபவேலா டோ மொய்னோ (Favelo Do Moinho). பிரேசிலில் மக்கள்தொகை அதிகம் கொண்டிருக்கும் சாவோ பாலோவிலிருக்கும் 2500 மக்கள் வசிக்கும் நகர்ப்புறக் குடிசைப் பகுதி. சாவோ பாலோவின் இரண்டு பெரிய நீர்நிலைகள் பயன்படுத்த முடியாத வகையில் தொழிற்சாலைகளால் மாசடைந்துவிட்டதால் அதன் மக்கள் சமீப காலங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பல ஆண்டுகளாகவே ஃபவேலா டோ மொய்னோவில் வாழும் மக்கள் அத்தனை பேருக்கும் அன்றாடத் தண்ணீர் வசதிக்கு இருப்பது ஒரேயொரு பி.வி.சி குழாய் மட்டுமே. அந்த மெல்லிய குழாய் முன்னால் பல மணிநேரங்களாக நிற்கும் மக்களில் எப்போதும் கடைசியாக நிற்பவர்களுக்குத் தண்ணீர் கிடைப்பதேயில்லை. 

300 மீட்டர் குழாய்தான் அப்பகுதி முழுவதுக்குமான நீராதாரம். பல ஆண்டுகளுக்கு முன்னால் நல்லெண்ணத்தோடு ஒரு நீர்மேலாண்மை வாரிய அதிகாரி அமைத்துக்கொடுத்ததுதான் இந்தக் குழாய்வசதி. அதைத்தான் அந்த மக்கள் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில சென்டிமீட்டர் மட்டுமே விட்டம்கொண்ட அந்தக் குழாயில் எவ்வளவு தண்ணீர் கிடைத்துவிடும். மிகக் குறைவான தண்ணீரை வைத்தே அங்கு வாழும் 900 குடும்பங்களின் அன்றாட வாழ்க்கை. இதுதொடர்பாக கனக்டாஸ் (Conectas) என்ற தன்னார்வ அமைப்பு ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் ஆவணம் சமர்ப்பித்தது. அங்கு வாழும் மக்களுக்கு வேறொரு பகுதியில் குடியிருப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாக அரசாங்கம் அறிவித்தது. தங்களுக்கான வேலைகளை டோ மொய்னோவில் வைத்துக்கொண்டு வேறோர் இடத்துக்குக் குடிபோவதால் அவர்கள் எந்த விதத்தில் பயனடைந்துவிடுவார்கள். இருபது வருடங்களுக்கும் மேலாக அங்கு வாழும் அந்த மக்களுக்குத் தங்கள் உரிமைகள் தெரிந்திருக்கின்றது. தங்கள் நிலத்தைவிட்டுச் செல்ல அவர்கள் தயாரில்லை. அடிப்படைத் தேவைகளை அங்கேயே செய்து தருமாறு போராடிக்கொண்டிருக்கிறார்கள். தென்னமெரிக்காவைப் பொறுத்தவரை எங்கு தண்ணீர் உள்ளதோ அங்குதான் பற்றாக்குறையும் நிலவிவருகிறது. ``தண்ணீருக்கான சவுதி அரேபியா" என்ற பிரேசிலின் முக்கிய நகரம் தண்ணீர் பற்றாக்குறையில் வாடுவதே அதற்குச் சாட்சி. இதுதான் மொத்த தென்னமெரிக்காவின் நிலையும்.

பூமியில் அதிகமாக நகரமயமாக்கலுக்கு ஆளான பகுதி தென்னமெரிக்கா. 1950-லிருந்து 2010-ம் ஆண்டுக்குள் நகரத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 30 சதவிகிதத்திலிருந்து 85 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையோடு சுமார் 55 பெரிய நகரங்களும் 2000 நகரங்களும் தென்னமெரிக்காவில் தற்போது இருக்கின்றன. உலகின் எந்தப் பகுதியும் இந்த அளவுக்கு நகரமயமானது கிடையாது. நகரமயமாவதில் முதலும் முக்கியமானதும் தரமான, திட்டமிடப்பட்ட கட்டுமானங்கள். ஆனால் அது தென்னமெரிக்காவில் செய்யப்படவில்லை. எது மக்களுக்குச் சமூகப் பொருளாதார நலன்களை நல்கவேண்டுமோ அந்த நகரமயமாதலே மக்களிடமிருந்த சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்துவிட்டது. கிராமங்களில் போதுமான அடிப்படை வசதிகளும் வேலை வாய்ப்பும் கிடைக்காமல் நகரங்களுக்குக் குடிபெயரும் மக்களைக் கிரகித்துக் கொள்ளமுடியாமல் நகரங்கள் திணறுகின்றன. அவற்றோடு அதில் வாழும் நகரவாசிகளும்தாம். பிரச்னைகளைச் சரிசெய்வதை மறந்துவிட்டுத் தங்கள் நலன்களை மட்டுமே பார்த்துக்கொள்வதில் மட்டுமே நின்றுவிட்டனர் முக்கியப் பொறுப்பிலிருந்தவர்கள். இதன்விளைவாக வறுமையும் நகரமயமாக்கப்பட்டது. இப்போது தென்னமெரிக்காவின் நகர மக்கள் தொகையில் 25% பேர் நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில்தாம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நகர ஏழைகள் அடிப்படைச் சேவைகளும் வசதிகளும் கிடைக்காத இடங்களில்தாம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். குடிபெயர்ந்து வருபவர்களுக்கான கட்டுமானங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் ஆங்காங்கே சில இரும்புத் தகரங்களையும், தார்ப்பாய்களையும் வைத்து வீடுகட்டி வாழத்தொடங்கிவிட்டார்கள்.

தென்னமரிக்கா போராட்டங்கள்

``அரசாங்கமே! எங்களுக்குச் சுகாதாரமான குடியிருப்புகளை அமைத்துத் தருவதாகச் சொன்னீர்கள். உங்களை நம்பி ஆசையோடு கனவு கண்டதை நினைத்து வெட்கப்படுகிறோம்" என்று கூறும் போராட்டப் பலகை

Photo Courtesy: Live Windwill Motion

நகராட்சி நிர்வாகத்தில் முறையான திட்டமிடல் இல்லை. அரசாங்கத்தின் வீடமைப்புத் துறையும் செயலற்றுக் கிடப்பதால் தனியார் மனை விற்பனையாளர்களின் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டன. இதனால் தனிப்பட்ட வாழ்விடம் அமைத்துக்கொள்வது செலவு மிகுந்ததாக மாறிவிட்ட சூழலில் ஏழை மக்களுக்குக் குடிசைகளை அமைத்து வாழ்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. அப்படி வாழ்பவர்கள் அரசாங்கத்திடம் அடிப்படை வசதிகளைக் கேட்டுப்பெற முடிவதில்லை. இதனால் அவர்கள் மத்தியில் தண்ணீர் மாஃபியாக்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கேட்டோஸ் (Gatos) என்றழைக்கப்படும் இவர்கள் நகரங்களுக்கு வெளியிலிருக்கும் நீர்நிலைகளிலிருந்து தண்ணீரை லாரிகளில் நிரப்பிக் கொண்டுவந்து அதை அதிக விலைக்குக் குடிசை மக்களிடம் விற்கிறார்கள். தென்னமெரிக்க மக்களில் 77 சதவிகிதம் பேர் சுகாதாரமான வாழ்விடம், சுத்தமான குடிநீரின்றி தவிக்கிறார்கள். நகரங்களின் கழிவுநீரில் வெறும் 28% மட்டும்தான் முறையாகச் சேகரிக்கவே படுகிறது. மற்றதெல்லாம் அப்படியே நீர்நிலைகளில் கலந்துவிடுகின்றது. இத்தகைய சூழலில் பொருளாதார பிரமிடின் விளிம்புநிலையில் வாழும் மக்கள் அடிப்படை வசதிகளுக்கு அவதிப்படுவதில் ஆச்சர்யமில்லை. அவர்கள் தங்கள் தேவைகளுக்கு மாஃபியாக்களையும் கூலிப்படைகளையும் நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்துக்கும் இதுவே காரணம். தென்னமெரிக்க நாடுகள் இந்த அவலநிலையிலிருந்து முன்னேறிவரப் பல வருடங்களாகப் போராடிக்கொண்டுதானிருக்கின்றன. ஆனால் வீட்டுவசதி, குடிநீர் சுத்திகரிப்பு, சுகாதாரம் போன்ற துறைகளில் முதலீடு செய்வதை அரசுகள் மந்தப்படுத்திக்கொண்டேயிருப்பது முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கிறது. போதாக்குறைக்குத் தென்னமெரிக்க நாடுகள் ஊழல் நிரம்பியுள்ளது. 2014-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்த லாவோ ஜாடோஸ் என்ற ஒரேயோர் ஊழல் குற்றச்சாட்டில் பதினைந்து நாடுகள் சிக்கியிருப்பதுவே இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. 

குடியிருப்பு

Photo Courtesy: Xinhua -Jon Fabrigar

மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்குச் சிறப்பான கட்டுமானங்கள் தேவைப்படுகின்றன. அதை ஏற்படுத்த ஸ்திரமான அரசாங்கம் அமையவேண்டும். மாறிக் கொண்டேயிருக்கும் தென்னமெரிக்காவில் அரசியல் களத்தில் அதன் மக்களின் அன்றாட வாழ்வும் ஊசலாடிக் கொண்டே இருக்கின்றது. அரசாங்கம் சிலரின் ஆசைகளுக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டிருக்கிறது. தண்ணீரும் மற்ற இயற்கை வளங்களும் அனைவருக்குமானது. அதைப் பொதுவானதாக வைத்திருப்பதில் தென்னமெரிக்க நாடுகள் தோல்வியடைந்துவிட்டன. அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் எல்லாமும் எல்லாருக்கும்தான் என்பதைப் பின்பற்றுவதில் அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள்.

- தொடரும்


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close