`கணவரின் ஆணவக்கொலைக்கு நீதி வேண்டும்' - பிரனய் மனைவி அம்ருதா உருக்கம் #JusticeForPranay | intercaste honour killing at Telangana - Girl needs justice

வெளியிடப்பட்ட நேரம்: 16:18 (17/09/2018)

கடைசி தொடர்பு:16:18 (17/09/2018)

`கணவரின் ஆணவக்கொலைக்கு நீதி வேண்டும்' - பிரனய் மனைவி அம்ருதா உருக்கம் #JusticeForPranay

பிரனய்

தெலங்கானாவில் 2 நாள்களுக்கு முன்னால், கர்ப்பிணி மனைவி (அம்ருதா)யின் கண்ணெதிரே கணவனை ஆணவக்கொலை செய்த சம்பவம் நாடு முழுக்க ஒரு பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது.  பிரனய்  பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற ஒரே காரணத்துக்காக, அம்ருதாவின் அப்பா இந்த கொடுஞ்செயலை செய்தார். தற்போது, அம்ருதா, தன் கணவர் பிரணயின் கொடூரமான மரணத்துக்கு நீதி வேண்டி, 'ஜஸ்டிஸ் ஃபார் பிரனய்'  முகநூல் பக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே, ஆயிரக்கணக்கானோர் அவருடைய பக்கத்தை லைக் செய்ததோடு, அவருடைய போராட்டத்துக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

 

 

அம்ருதா

அம்ருதா தொழிலதிபரின் மகள். அவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரனய் குமார் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.  பணத்தையும், சாதியையும் காரணம் காட்டி தன் மகளின் காதலை எதிர்த்திருக்கிறார் அம்ருதாவின் தந்தை. சாதியைவிட நேசித்தவனின் அன்புதான் பெரியது என்று, கடந்த ஜனவரி மாதம் பிரனயைத் திருமணம் செய்துகொண்டார் அம்ருதா. தற்போது காதலின் பரிசாக அம்ருதா கருவுற்றிருக்கும் தருணத்தில்தான், கணவர் பிரனயை கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கிறார் அம்ருதாவின் அப்பா.  

முகநூல்

வயிற்றில் குழந்தையுடன், மாதாந்திர செக்கப் முடித்துவிட்டு மருத்துவமனையைவிட்டு வெளியே வந்த அம்ருதாவின் கண் எதிரிலேயே பிரனயை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இன்னமும் உலகத்தைப் பார்க்காத அந்தச் சிசுவை, பிறப்பதற்கு முன்னாடியே தகப்பனில்லாத குழந்தையாக்கிவிட்டது சாதியம். 

அப்பாப் பற்றிய பகிர்வு

அம்ருதாவின் முகநூல் பக்கம் முழுக்க, அம்மாவாகப் போகிற பெண்களுக்கான அறிவுரைகள், குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம், பிறந்த குழந்தைக்கு டயப்பர் போடுதல் என்று தாய்மை பொங்கும் கட்டுரைகள் நிறைந்து கிடக்கின்றன. பச்சிளம் குழந்தை தொடர்பான பத்திரிகைகளை எல்லாம் லைக்  செய்திருக்கிறார் அம்ருதா. இவையெல்லாம், அம்ருதாவும் பிரனயும் தங்கள் குழந்தையின் வரவை எவ்வளவு ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் என்பதற்கான சந்தோஷ சாட்சிகளாக இருக்கின்றன. அந்த சந்தோஷத்தை தொடர்ந்து அனுபவிக்க தற்போது பிரனய் தான் இல்லை. 

அம்ருதாவின் முகநூல் பக்கத்தில் இருந்த, நம் கண்களை குளமாக்கிய ஒரு ஓவியத்தையும், அதில் இருந்த வாசகத்தைப் பற்றியும் கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். அந்த ஓவியத்தில் அம்மா ஒருவர்  தன் குழந்தையை மடியில் வைத்தபடி ஒரு கூடையில் அமர்ந்திருக்கிறார். அந்தக் கூடையை ஓர் அப்பா தலைக்குமேல் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறார். அந்த ஓவியத்தின் மேலே, `இந்த உலகம் தாயன்பை மட்டுமே பேசுகிறது. தந்தைகளின் தியாகத்தைப் பற்றி பேசுவதே இல்லை' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. செப்டம்பர் 9-ம் தேதி இந்த ஓவியத்தை தன் முகநூல் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் அம்ருதா. அப்பாக்கள் தினத்தில், அப்பாவுடன் இருக்கும் தன் புகைப்படத்தைப் போட்டு, `உங்களை எப்போதும் நேசிக்கும் மகள்' என்று கமென்ட் செய்திருக்கிறார் அம்ருதா. அப்பாக்களின் தியாகத்தைக் கொண்டாடிய, அப்பாவைக் கொண்டாடிய ஓர் இளம் பெண்ணின் வாழ்வு அவளுடைய அப்பாவாலேயே வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது மனதைக் கனக்கச் செய்கிறது!