'இர்கான் இன்டர்நேஷனல்' ஐ.பி.ஓ  வெளியீடு! - முதலீடு செய்யலாமா?  | IRCON International IPO opens: Should you subscribe?

வெளியிடப்பட்ட நேரம்: 21:28 (17/09/2018)

கடைசி தொடர்பு:18:42 (20/09/2018)

'இர்கான் இன்டர்நேஷனல்' ஐ.பி.ஓ  வெளியீடு! - முதலீடு செய்யலாமா? 

இர்பான் இன்டர்நேஷனல் நிறுவனம், 470 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக 99,05,157 ஈக்விட்டி பங்குகளை வெளியிட உள்ளதாக...

 'இர்கான் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் ஐ.பி.ஓ பங்கு வெளியீடு இன்று தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிற ஓர் அரசு நிறுவனம் ஆகும்.  

இர்கான்

இந்த நிறுவனம், ரயில்வே, நெடுஞ்சாலை, விமானம், மின்சாரம், தொழில்துறை மேம்பாடு உள்ளிட்ட மிகப் பெரிய உட்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தும் பொறியியல் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 

2018, மார்ச் மாத கணக்கின்படி சுமார் 22,406.8 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆர்டர்களைக் கொண்ட வலுவான ஆர்டர் புத்தகத்துடன் இருப்பதோடு, எடுத்துக்கொண்ட திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய வரலாற்றையும் கொண்டிருக்கிறது. மேலும், ஆரோக்கியமான நிதி நிலையையும் தொழில் மூலதனத்துக்குத் தேவையான ரொக்க பணத்தையும் கொண்டிருப்பதோடு, நியாயமான மதிப்பீடுகளையும் கொண்டுள்ளது. இந்நிறுவனத்துக்கு இலங்கை, தென்னாப்பிரிக்கா, அல்ஜீரியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில், 26 திட்ட அலுவலகங்கள் உள்ளன. 

இந்த நிலையில், இர்பான் இன்டர்நேஷனல் நிறுவனம், 470 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக 99,05,157 ஈக்விட்டி பங்குகளை வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி இப்பங்கு வெளியீடு இன்று (17.9.2018) தொடங்கிய நிலையில், 19-ம் தேதியுடன் முடிவடைகிறது.  

பங்கு ஒன்றின் விலை, 470 - 475  ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


இந்த நிறுவனம், தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, 5 லட்சம் பங்குகளை ஒதுக்கியுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் அந்த நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்கு, ஒரு பங்கின் விலையில், 10 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒருவர், குறைந்தபட்சம், 30 பங்குகள் மற்றும் அதன் மடங்குகளில் முதலீடு செய்யலாம்.

இர்கான் இன்டர்நேஷனல், நடப்பு 2018-19-ம் நிதியாண்டில், புதிய பங்கு வெளியீடு மேற்கொள்ளும், ஒன்பதாவது நிறுவனம். அத்துடன், பங்கு விலக்கல் திட்டத்தின் கீழ், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கும், இரண்டாவது பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்துக்கு, வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, அல்ஜீரியா ஆகிய நாடுகளில், 26 திட்ட அலுவலகங்கள் உள்ளன. 


'நீண்ட கால முதலீட்டாளர்கள் வாங்கலாம்!'

இந்த நிலையில், 'இர்கான் இன்டர்நேஷனல்' பங்குகளை வாங்கலாமா, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து பங்குச் சந்தை ரெஜி தாமஸ்அனலிஸ்ட்டான ரெஜிதாமஸிடம் கேட்டபோது, "முதல் அம்சம் என்னவென்றால் 'இர்கான் இன்டர்நேஷனல்' ஒரு பொதுத்துறை நிறுவனம் என்றாலும், என்னைப் பொறுத்தவரை மிகுந்த எச்சரிக்கையுடன்தான் இப்பங்கைக் கையாள வேண்டும். ரயில்வே துறை சார்ந்த திட்டங்களைத்தான் இந்த நிறுவனம் பெரும் அளவில் எடுத்துச் செய்கிறது. மின்சாரம் தொடர்பான திட்டங்களையும் எடுத்துச் செய்கிறது என்றாலும், அது பெரிய அளவில் இல்லை. 

2016 முதல் 2018-ம் நிதியாண்டு வரை 30 சதவிகிதம் வருவாய் ஈட்டியுள்ள போதிலும், அது ஈட்டிய லாபம் வெறும் 2.3 சதவிகிதம் அளவிலேயே உள்ளன. வருவாய் வளர்ச்சி உள்ள போதிலும், லாப வளர்ச்சி காணப்படவில்லை. இதற்கு, செலவு அதிகமாக இருக்கலாம் அல்லது இதன் நிதி வேறு எதற்காவது பயன்படுத்தப்பட்டு வரலாம். வரவிருக்கும் நாள்களில் இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கலாம் எனத் தற்போது சொல்கிறார்கள். ஆனால், வருவாய் அதிகரிப்பு ஏற்ற லாபமும் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்த நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். வடகிழக்கு ரயில்வே உள்ளிட்ட 3 ரயில்வே துறைதான் இதன் முக்கியமான வாடிக்கையாளர்களாக உள்ள நிலையில், அதைச் சற்று ரிஸ்க்கான அம்சமாகவே பார்க்க வேண்டும். 

இருப்பினும் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள், இந்தப் பங்குகளை ரூ. 2 லட்சம் வரைக்கும் முதலீடு செய்து வாங்கலாம். செப்டம்பர் 26-ல் இந்தப் பங்கு பட்டியலிடப்படலாம் எனச் சொல்கிறார்கள். எனவே, அவசரம் காட்டாமல், இந்தப் பங்கு பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் வரை காத்திருந்து, அதன் பின்னரும் வாங்கலாம்" எனச் சொல்லி முடித்தார். 

ரெஜிதாமஸைப் போன்றே, ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ், சென்ட்ரம் வெல்த் ரிசர்ச், மெக்தா ஈக்விட்டிஸ், எஸ்.பி.ஏ செக்யூரிட்டீஸ், சாய்ஸ் புரோக்கிங், எஸ்எம்சி ரிசர்ச் உள்ளிட்ட நிதி முதலீட்டு நிறுவனங்களும், நீண்ட கால அடிப்படையிலான முதலீட்டுக்கு இந்தப் பங்கைப் பரிந்துரை செய்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close