வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (18/09/2018)

கடைசி தொடர்பு:09:40 (18/09/2018)

`இணைந்தது வோடபோன்- ஐடியா...' - இணைக்குமா வாடிக்கையாளர்களை?

இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஏர்செல், டாடா டோகமோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் சேவை வழங்கி வந்தன. 

ஐடியா

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அறிமுகமானது ஜியோ. சலுகை விலையில் சேவைகளை வழங்கியதன் மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்களை ஜியோ தனதாக்கியது. இதனால், மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வர்த்தகரீதியில் பெரும் இழப்பைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. வோடபோன், ஏர்செல், ஐடியா ஆகிய நிறுவனங்களும் வர்த்தகரீதியில் பாதிப்படைந்தன. இதையடுத்து ஏர்செல் நிறுவனம் கடன் சுமையால் தன் சேவையை இந்த வருடம் தொடக்கத்தில் நிறுத்திக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில்தான் போட்டியைச் சமாளிக்க வோடபோன் - ஐடியா இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டு செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் அந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதையடுத்து, நிறுவனத்தின் பெயரை, 'வோடபோன் ஐடியா லிமிடெட்' என மாற்றி இருப்பதாக, ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் முதன்மை இடத்தில் இருந்து வந்த, 'ஏர்டெல்' நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை இணைக்கச் சலுகைகள் வழங்க வழிவகை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, வோடபோன் - ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 40.8 கோடியாக உயர்ந்துள்ளது. சந்தைப் பங்களிப்பு 35 சதவிகிதமாகும். இந்நிறுவனத்தின் தலைவராக, ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவரான, குமாரமங்கலம் பிர்லா பொறுப்பேற்கிறார். நிர்வாகக் குழுவில் இயக்குநர்கள் எண்ணிக்கை 12 ஆக இருக்கும். ``இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இது, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இது, மாபெரும் வணிகத்தை உருவாக்குவதை விடவும் பெரியதாகும். புதிய இந்தியாவை உருவாக்கவும், இளைஞர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யவும் உதவும் வகையில் எங்கள் பார்வை இருக்கும்" என்று குமாரமங்கலம் தெரிவித்துள்ளார்.