எது அறிவு... யார் அறிவாளி... அறிவாளிகளைத் தீர்மானிப்பது யார்?! - உலக அறிவாளர்கள் தினம் | Who decides the intelligence of a person World Scholars day

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (18/09/2018)

கடைசி தொடர்பு:14:00 (18/09/2018)

எது அறிவு... யார் அறிவாளி... அறிவாளிகளைத் தீர்மானிப்பது யார்?! - உலக அறிவாளர்கள் தினம்

எது அறிவு... யார் அறிவாளி... அறிவாளிகளைத் தீர்மானிப்பது யார்?! -  உலக அறிவாளர்கள் தினம்

``டேய் அங்க பாரு உன் சட்டை மேல பல்லி!" என்று பதறவிட்டு, ``ஏமாந்துட்டியா... ஏப்ரல் ஃபூல்! ஏப்ரல் ஃபூல்" என்று மற்றவர்களை ஏமாற்றி சந்தோஷப்படும் `முட்டாள்கள் தினம்' பற்றி தெரியாத ஆள்களே இருக்க முடியாது. ஆனால், தினம் தினம் ஏதோ ஒருவகையில் நம் அறிவை மேம்படுத்தியவர்களுக்கு நன்றி கூறும் ஒரு நாளான `அறிவாளர்கள் தினம்' பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் (எனக்கே நேற்று தான் தெரியும் ).  இந்த தினத்தன்று வெளிநாடுகளில், ஒருவருக்கொருவர் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வார்களாம். இதன் முக்கியமான நோக்கம், அனைவருக்கும் படிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதுதான்.

அறிவாளர்கள் தினம்

ஒருவரை அறிவாளி/முட்டாள் எனத் தீர்மானிப்பது யார். `முட்டாள்' என்று ஒதுக்கிவைக்கப்பட்ட எத்தனையோ பேரை பிற்காலத்தில், `தலைசிறந்த அறிவாளி' எனத் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறார்கள். சாக்ரடீஸ் முதல் பாரதியார் வரை, அவர்களின் குடும்பத்தாரிடமிருந்தே `முட்டாள்' பட்டம் பெற்ற பலரை, இன்று வரை நாம் கொண்டாடிவருகிறோம். இந்நிலையை என்னவென்று சொல்வது. இங்கு யார் அறிவாளி... யார் முட்டாள்?   

ஏன், எதனால், எப்படி, போன்ற கேள்விகளில் பிறந்த எத்தனையோ பதில்களை நாம் தினமும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். முதல்முதலில் நெருப்பைக் கண்டறிதலிருந்து, தனிநபருக்கு எவ்வளவு IQ (Intelligent Quotient) இருக்கிறது என்பதை யூகிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். இப்படி ஒவ்வொரு நாளும் மனிதன், அறிவை வளர்த்துகொண்டேதான் இருக்கிறான். அப்படி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ வியப்பூட்டும் அத்தியாவசிய பொருள்களால்தான் இன்று நாம் அதிநவீன வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 2000`s கிட்ஸ்களுக்கு பெரிய விஷயமாகத் தோன்றாத பொருள்களெல்லாம், 90`s கிட்ஸ்களுக்கு வரப்பிரசாதம். இப்படிதான் ஒவ்வொரு தலைமுறையினரிடமும் பல `வாவ்!' கதைகள் இருக்கும். `ஆஹா!' என்று பலமுறை நம்மை பிரமிக்கவைத்த பல தொழில்நுட்ப உபகரணங்களைக் கண்டுபிடித்த மறக்க முடியாத விஞ்ஞானிகளில், தாமஸ் ஆல்வா எடிசன், கிரஹாம்பெல், அலெக்ஸ்சாண்டர் ஃபிளெம்மிங், ரைட் பிரதர்ஸ், நியூட்டன், ஜேம்ஸ் வாட், ஐன்ஸ்டீன், சார்லஸ் பாபேஜ், கலிலியோ, ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்றோர் என்றைக்கும் ஸ்பெஷல் இடம்பிடித்தவர்கள்.

அறிவாளர்கள் தினம்

``அப்படினா ஏதாச்சும் கண்டுபிடிச்சாதான் அறிவாளியா?" என்கிற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. இவர்கள் நம் கண்ணுக்குத் தெரிந்த அறிவாளிகள். அவ்வளவுதான். தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், அதை அனைவரும் பயன்படுத்தும் முறையைச் சொல்லிக்கொடுக்கும் அடிப்படை கல்வி முதல் எது சரி, எது தவறு என்பதைப் பகுத்தறிந்து செயல்பட வேண்டும் என்று போதிக்கும் நம் பெற்றோர்கள் மற்றும் சமூகப் பகுத்தறிவாளர்கள் வரை அனைத்திலும் அனைவரிடமும் `அறிவு' சார்ந்த விஷயங்கள் உள்ளன. ஹிட்லர் முதல் பெரியார் வரை ஒவ்வொருவரின் எண்ணங்களும் கருத்துகளும் மாறுபடுமே தவிர, தனிப்பட்ட நபரின் அறிவாற்றலை அவ்வளவு எளிதில் எடை போட்டுவிட முடியாது.

சிறு வயதிலிருந்து, `ஒழுங்கா படி. அப்போதான் அறிவு வளரும்' என்ற வாசகத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். நானும் ஒருகட்டம் வரை அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அதையும் மீறி எத்தனையோ உண்மை விஷயங்கள் இருக்கின்றன என்பதை வெளியுலகை தனியாய் நின்று போராடும்போதுதான் தெரிந்தது. இதேபோல் எத்தனையோ பேர் வெறும் பாடப்புத்தகத்தில் இருக்கும் வரிகளை மட்டுமே உண்மை என நம்பி விவாதிக்கின்றனர். நடைமுறை வாழ்க்கையைச் சொல்லித்தரும் `மனிதர்களை'விட சிறந்த புத்தகம் எதுவுமில்லை. மனிதர்களைப் படிப்பதும் அவ்வளவு எளிதல்ல. படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாத எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் ஒரே அழகிய புத்தகம். 

எங்க தேடினாலும் உலக அறிவாளிகள் தினம்னு ஒன்னு இல்லைன்னு உங்களுக்கு ஏதாவது தோணுதா பாஸ். எனக்கு இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிச்சதுல இருந்து தோணுது. ஒருவேளை புத்திசாலிகள் எல்லாம் சேர்ந்து ஒருத்தர முட்டாளாக்க முட்டாள்கள் தினம் உருவாக்குன மாதிரி, முட்டாள்கள் எல்லாம் சேர்ந்து , புத்திசாலிகளுக்கும் ஒரு நாள உருவாக்கித் தொலைவோம்னு, இப்படி பண்ணியிருப்பாங்களோ? . என்னவோ போங்க !!! 

இதைப் படிக்கும் ஒவ்வொரு சக புத்திசாலிக்கும் வாழ்த்துகள் !


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close