``ஓர் அணு உலை வெடித்தால்..!” - #Pandora திரைப்படம் சொல்லும் முக்கியச் செய்தி | An important message from pandora movie

வெளியிடப்பட்ட நேரம்: 14:24 (18/09/2018)

கடைசி தொடர்பு:18:48 (18/09/2018)

``ஓர் அணு உலை வெடித்தால்..!” - #Pandora திரைப்படம் சொல்லும் முக்கியச் செய்தி

நூறு சதவிகிதம் பாதுகாப்பானது என்று அரசு உத்திரவாதம் அளித்த புகுஷிமா அணு உலை சிதைந்த வரலாற்றை இரண்டேகால் மணிநேரத்துக்குள் கடத்துகிறது பண்டோரா திரைப்படம்.

``ஓர் அணு உலை வெடித்தால்..!” - #Pandora திரைப்படம் சொல்லும் முக்கியச் செய்தி

ணு சக்திக்கு எதிரான மாணவர்கள் இயக்கம் `பண்டோரா’ எனும் தென்கொரியத் திரைப்படத்தைச் சென்னையில் கடந்த 15-ம் தேதி திரையிட்டார்கள். அணு சக்திக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்தப் படத்தை இயக்கியவர் தென்கொரிய இயக்குநரான பார்க் ஜியோங்-வூ (Park Jeong-woo). கடந்த 2016-ம் ஆண்டில் வெளியான இந்தத் திரைப்படம் உலகம் முழுவதிலும் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்தத் திரைப்படத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னர், நாம் ஒரு காட்சியை கற்பனை செய்து பார்ப்போம். ஓர் அணையின் மிக அருகில் ஒரு கிராமம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். திடீரென ஒரு நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக அந்த அணையில் சிறியதாக விரிசல் விட ஆரம்பிக்கிறது. அதிகாரிகள் அணையைச் சுற்றியிருக்கும் மக்களை எச்சரிக்கை செய்து வெளியேறச் சொல்லலாம் என அரசிடம் பரிந்துரைக்கிறார்கள். ஆனால் அரசோ குறைவான நேரத்தில் அவ்வளவு மக்களையும் வெளியேற்றுவது கடினமான காரியம், இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்கிறது. எப்படியாவது விரிசலைச் சரி செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறது. ஆனால் அது நடக்காமல் போகவே அந்த விரிசல் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிறது. இறுதியாக வேறு வழியின்றி இன்னும் அரை மணிநேரத்தில் அணை உடையப்போகிறது என்று அரசு அறிவிக்கிறது. அணை உடைந்து பேரிடராக மாறுகிறது. இதை, அணை உடைவதோடு மட்டுமின்றி வேறு இயற்கைப் பேரிடர்களுக்கும் பொருத்திப்பார்க்கலாம். இப்படிப்பட்ட நிகழ்வுகளில் பாதிப்பு இருந்தாலும்கூட ஒரு நாள் அதிலிருந்து மீண்டு வர முடியும். ஆனால் அதுவே அணைக்குப் பதிலாக அந்த இடத்தில் ஓர் அணு மின் நிலையம் இருந்தால் என்ன நடக்கும், அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதைத்தான் காட்சிப்படுத்தியிருக்கிறது பண்டோரா திரைப்படம்.

திரைப்படம்

தென்கொரியாவில் உள்ள ஒரு சிறிய நகரம்தான் இந்தப் படத்தின் கதைக்களம். ஆனால், ஜப்பானின் புகுஷிமாவில் நடைபெற்ற அணு உலை விபத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தின் கடற்கரையில் அமைந்திருக்கும் ஹான்பியூல் அணுமின் நிலையத்தில் பணிபுரிகிறார் கதாநாயகன் ஜே-ஹைக். ஆனால் அதற்குப் பல காலம் முன்னரே அணு உலை அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் அறிமுகமான விஷயம். அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போதுதான் அணு உலையின் கட்டுமானம் தொடங்குகிறது. அதைப் பார்க்கும் சிறுவர்களுக்கு எழும் கேள்வி, `அதற்குள் என்ன இருக்கிறது' என்பதுதான். ``அதுக்குள்ள பெரிய ரோபோ இருக்குது" இல்லை ``அது பெரிய பிரஷர் குக்கர்" எனச் சிறுவர்களுக்கே உரித்தான கற்பனைக் கதைகளுடன் ஆரம்பிக்கிறது படம். வளர்ந்த பின்னர் அந்த அணுமின் நிலையத்திலேயே வேலைக்குச் செல்கிறார்கள் ஜே-ஹைக்கும் அவனது நண்பர்களும். ஆனால் ஜே-ஹைக்-க்கு இந்த அணு உலையின் மீது நம்பிக்கை இல்லை, எப்படியும் ஒருநாள் இதனால் பேரழிவு உறுதி என்பதில் உறுதியாக இருக்கிறான். எனவே எப்படியாவது இந்த அணு உலையிலிருந்து வெகு தொலைவுக்குத் தனது குடும்பத்தினரை அழைத்துச் சென்று விட வேண்டும் என்பது அவனது எண்ணம். ஆனால், அணு உலையைப் பற்றிய இவனது எண்ணம் தவறானது என்கிறார்கள் குடும்பத்தினர். அது மிகவும் பாதுகாப்பானது என்று அரசு உறுதியளித்திருப்பதாக அவனிடம் கூறுகிறார்கள். எனவே ஜே-ஹைக்கின் திட்டத்துக்குக் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. அவனுக்கு அணு உலையில் பணி புரிவதற்கு விருப்பம் இல்லையென்றாலும் குடும்பத்தின் பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச்செல்ல வேண்டிய கட்டாயம். தவிர ஜே-ஹைக்கின் தந்தை மற்றும் சகோதரர் இருவரும் அணு உலையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது விபத்தில் இறந்திருப்பார்கள். இதுவும் ஹைக்குக்கு மன உளைச்சலைத் தந்து கொண்டிருக்கும் ஒரு விஷயமாக இருக்கும்.

பண்டோரா

திடீரென்று ஒரு நாள் நிலநடுக்கம் நகரத்தைத் தாக்குகிறது. ஜே-ஹைக்-க்கும் அவனது நண்பர்களும் அணு உலையின் உள்ளே மாட்டிக் கொள்கிறார்கள். இந்த நிலநடுக்கத்தினால் அணு உலையின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் பிரச்னை ஏற்படுகிறது. அணு உலையைக் குளிர்விக்கும் அமைப்பின் ஏதோ ஒரு பகுதியில் கசிவு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. சிக்கலான அந்த அமைப்பின் எந்தப் பகுதியில் கசிவு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து சரி செய்வது என்பது இயலாத விஷயம் என்பதை அணு மின் நிலையத்தில் இருப்பவர்கள் உணர்கிறார்கள். மறுபுறம் அணு உலையில் உள்ளே அழுத்தம் நொடிக்கு நொடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதைச் சரி செய்யாவிட்டால் அணு உலை வெடிக்கும் நிலைக்குச் செல்வது உறுதி.

 அணு உலை

அணு மின் நிலையத்தில் இவ்வளவு பிரச்னை இருக்க அதை நாட்டின் அதிபருக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்கிறார் பிரதமர். அணு உலை தொடர்பாக அனைத்து முடிவுகளையும் அவரே எடுக்கிறார். அணு உலை தொடர்பான செய்திகள் கூட ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்கிறது அரசாங்கம். நகரத்தில் இருக்கும் மக்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அணு உலையில் இருக்கும் பாதிப்பைப் பற்றிய தகவல்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கிறது மறுபுறம் அணு உலையின் அழுத்தம் அதிகரித்து வெடிக்கிறது. இதற்கிடையே நகரத்தில் இருப்பவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறது அரசு. ஒரு கட்டத்துக்கு மேல் கதிர்வீச்சின் அளவு அதிகமாவதை உணர்ந்த அதிகாரிகள் மக்களை பற்றிக் கவலைப்படாமல் இடத்தை விட்டு ஓடுகிறார்கள். அப்பொழுதுதான் பாதிப்பின் தீவிரம் பொதுமக்களுக்குத் தெரிய வருகிறது. அணு உலையில் ஏற்பட்ட சேதத்தை கண்ணால் பார்க்கிறார்கள். அரசு தங்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பதையும், அணு உலை என்றுமே பாதுகாப்பானது இல்லை என்றும் உணர்கிறார்கள். அடுத்ததாக அந்த இடத்தை விட்டு புறப்படத் தயாராகிறார்கள், அதில் ஜே-ஹைக்கின் குடும்பத்தினரும் அடக்கம். வெளியில் நிலைமை இப்படியிருக்க அணு உலையின் உள்ளே இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் அதிகமான கதிர்வீச்சுக்கு உள்ளாகிறார்கள்.

அணு உலை

அதிகக் கதிர்வீச்சின் காரணமாக மீட்புப்படையினர் உள்ளே செல்லத் தயங்குகிறார்கள். இறுதியாக அதிபருக்கு நிலைமை தெரிய வருகிறது. அனைத்து அதிகாரத்தையும் கையில் எடுத்துக் கொள்கிறார். இனிமேல்தான் சொல்வதை மட்டும் நிறைவேற்றினால் போதுமானது என்று உத்தரவிடுகிறார். கடல் நீரைப் பயன்படுத்தி உலையைக் குளிர்விக்கும் வேலையை மீட்புப்படையினர் தொடங்குகிறார்கள். இந்நிலையில் அணு உலையில் அடுத்ததாகப் பெரிய ஆபத்து ஒன்று உருவாகிறது. மீதமுள்ள அணு எரிபொருள் மூழ்க வைக்கப்பட்டிருக்கும் தொட்டியின் நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. நீர் மட்டம் குறைந்தால் எரிபொருள் உருகும் அது காற்றில் கலந்தால் இன்னும் மிகப்பெரிய பேரழிவாக மாறும் நிலைமை. தொட்டியின் விரிசலைச் சரி செய்வதற்குக் குழுவினர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன. இறுதியாக யாரும் எதிர்பாராத ஒரு முடிவைக் கையில் எடுக்கிறான் ஜே-ஹைக். தன் உயிரைக் கொடுத்து அந்தப் பிரச்னையைச் சரி செய்கிறான். தன் குடும்பத்துக்காகவும், தனது ஊருக்காகவும் உயிரைத் தியாகம் செய்வதாக இறுதியாக வீடியோவில் தெரிவிக்கிறான் ஜே-ஹைக். கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டதனால் யாரும் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக அணு உலையைச் சுற்றியுள்ள பகுதிகள் வேலியிடப்பட்டு இருப்பதைக் காட்டுவதோடு முடிகிறது படம்.

பண்டோரா

இந்தத் திரைப்படத்தின் நிகழ்கால சாட்சியாக இருக்கிறது புகுஷிமா. நூறு சதவிகிதம் பாதுகாப்பானது என்று அரசு உத்தரவாதம் அளித்த புகுஷிமா அணு உலை சிதைந்த வரலாற்றை இரண்டேகால் மணிநேரத்துக்குள் நமக்குள்ளே கடத்துகிறது பண்டோரா. விபத்து நடந்து 7  வருடங்களுக்கு மேலாகியும் புகுஷிமாவில் கதிர்வீச்சின் தாக்கம் குறையவில்லை. இந்த நொடியில் கூட பல டன் கதிர்வீச்சு நீர் பசிபிக் பெருங்கடலில் கலந்துகொண்டிருக்கிறது. அதை எப்படித் தடுப்பது என்று அரசுக்கு இன்று வரை தெரிவில்லை. புகுஷிமா இனிமேல் மனிதர்கள் வாழத் தகுதியில்லாத இடமாகத்தான் இருக்கப்போகிறது. புகுஷிமா அணு உலையில் இருந்த அதி தீவிரமான கதிர்வீச்சைப் பொருட்படுத்தாமல் உள்ளே சென்று பாதிப்பைச் சரி செய்வதற்குப் பலர் முன்வந்தார்கள். அப்படிச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் அடுத்த சில வருடங்களில் கதிர்வீச்சின் தாக்கத்தின் காரணமாக இறந்தார்கள். அவர்கள் செய்த தியாகத்தையும் எடுத்துக்காட்டுகிறது இந்தத் திரைப்படம். அணு உலை வெடித்த நிலையில்கூட கடல் தண்ணீரை எடுத்து அணு உலையைக் குளிர்வித்தால் அது கெட்டுப் போய்விடும். அதன் பிறகு உலையைச் சரிசெய்ய அதிக பணம் செலவாகும் என்று சுயநலத்தோடு யோசிக்கும் அரசாங்கத்தின் கோரமுகம் வரை பண்டோரா திரைப்படத்தில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. அணு சக்தி எந்த விதத்திலும் பாதுகாப்பானது இல்லை என்ற கருத்தை பார்வையாளர்களுக்கு மிகச் சரியாகக் கடத்துகிறது பண்டோரா.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close