கார் வாங்கும்போதே எக்ஸ்டன்டட் வாரன்ட்டி தேவையா?! | Does car need an extended warranty? Pros and cons...

வெளியிடப்பட்ட நேரம்: 07:17 (19/09/2018)

கடைசி தொடர்பு:08:18 (19/09/2018)

கார் வாங்கும்போதே எக்ஸ்டன்டட் வாரன்ட்டி தேவையா?!

கார் வாங்கும்போதே எக்ஸ்டன்டட் வாரன்ட்டி தேவையா?!

தீபாவளி வருவதால் இப்போதே தள்ளுபடி என்று சொல்லி எக்ஸ்டன்டட் வாரன்ட்டி இலவசம், குறைந்த விலையில் அதிக வாரன்ட்டி என போஸ்டர்களை ரெடியாக வைத்திருப்பார்கள். ஒரு காரை வாங்கும்போது அதற்கு இரண்டு முதல் மூன்றாண்டுகள் வரை வாரன்ட்டி தருவார்கள். எக்ஸ்டன்டட் வாரன்ட்டி என்றால் ஐந்தாண்டுகள் வரை நீடிக்கும். கார் வாங்கும்போது இதற்காக கணிசமான அளவு தொகையை நாம் செலவிடுவோம். 

எக்ஸ்டன்டட் வாரன்ட்டி

எக்ஸ்டன்டட் வாரன்ட்டியைப் பொறுத்தவரை சிலருக்கு அதிக ஆண்டுகள் வாரன்ட்டி தந்தால் காரின் தரம் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு. முதல் முறை கார் வாங்குகிறவர்கள் ``மெக்கானிக்க தேடி, அலஞ்சி, எதுக்கு நமக்குத் தொல்லை... எக்ஸ்டன்டட் வாரன்ட்டி வாங்கிட்டு சந்தோஷமா போய்டுவோம்" என்ற எண்ணத்தில் இருப்பார்கள். இந்த எக்ஸ்டன்டட் வாரன்ட்டி நமக்குத் தேவையா? எதன் அடிப்படையில் இதைத் தேர்ந்தெடுப்பது என்பதைப் பார்ப்போம்.

யார் வாங்கலாம்?

முன்பெல்லாம் கார் என்றால் இரும்பும், பிளாஸ்டிக்கும் சேர்ந்த மெக்கானிக்கல் பாகங்களாக மட்டுமே இருக்கும். இப்போது வரும் மாடர்ன் கார்களில் மெக்கானிக்கல் பாகங்ளுக்கு இணையாக எலெக்ட்ரானிக் கருவிகள் வருகின்றன. கார் மாடர்ன் ஆவதால் அதன் தரம் குறைகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், மாடர்ன் கார்கள் பராமரிப்புச் செலவைக் குறைக்கிறது. ஆனால், ஒருமுறை பழுது ஏற்பட்டால் பர்சில் பாம் வைத்துவிடுகிறது. முந்தைய தலைமுறை கார்களில்  ECU பழுதென்றால் 10,000 ரூபாய்க்கு மேல் ஆகாது, ஆனால், தற்போதைய மாடர்ன் கார்களில் ECU-வுக்கு 30,000 ரூபாய் வரை செலவாகிறது. அதனால், எலெக்ட்ரானிக் அதிகமாக இருக்கும் கார்களை வாங்குபவர்களுக்கு எக்ஸ்டன்டட் வாரன்ட்டி நிம்மதியைத் தரும்.

கார் வாங்கும்போது வாரன்ட்டி வாங்கவேண்டுமா?

`வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்’ என்பதுபோல, டொயோட்டா, ஹோண்டா போன்ற கார்கள் நம்பகத்தன்மை அதிகமானவை என்ற நினைப்பு உண்டு. இதனால், அதிக வசதிகளுடன் தரமான ஒரு மாருதி கார் வந்தாலும் ஹோண்டாவை தேடிப்போகிறவர்கள் இருக்கிறார்கள். சிலர் ஹோண்டாவே வேண்டாம், ஃபோக்ஸ்வாகனும் ஃபியட்டும் போதும் என்பார்கள். நம்பகத்தன்மை என்பது தயாரிப்பாளரைப் பொருத்தும், கார் மாடல்களைப் பொருத்தும் மாறுபடும். சில மாடல்கள் அதிக மெயின்டனன்ஸ் வைப்பதாக இருக்கும், சில மாடல்ளை சர்வீஸ் செய்வது கடினமான வேலையாக இருக்கும், சில கார்களுக்கு மெக்கானிக்குகளே கிடைக்கமாட்டார்கள். எந்த காராக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் நாம் விட்டுக்கொடுத்தாக வேண்டியிருக்கும். அப்படித் தரத்தில் விட்டுக்கொடுக்கும் சூழல் ஏற்பட்டால் எக்ஸ்டன்டட் வாரன்ட்டி வாங்கிவிடுங்கள். 

ஒரு காரை 3 ஆண்டுகளுக்கு மேல் வைத்திருக்கும் எண்ணம் இருந்தால் எக்ஸ்டன்டட் வாரன்ட்டி வாங்குங்கள். இல்லையென்றால் ஸ்டான்டர்ட் வாரன்ட்டியே போதுமானது. 3 ஆண்டு கழித்து வேறு கார் மாற்றினாலும் கூடுதல் வாரன்ட்டி இருப்பதால் காரின் விலையை அதிகரித்துச் சொல்லமுடியும். கம்பெனி வாரன்ட்டி இருக்கும் கார்கள் சுலபமாக விற்றுவிடும்.

எக்ஸ்டன்டட் வாரன்ட்டி வாங்கும்போது இதையெல்லாம் பார்க்க வேண்டும்:

வாரன்ட்டியை யார் தருகிறார்கள் என்பதற்கு முன்னுரிமை தர வேண்டும். வாரன்ட்டியை காரின் தயாரிப்பாளரும் தருவார்கள், டீலரும் தருவார்கள். தயாரிப்பாளர் தரும் ஸ்கீமில் பொதுவாக ஸ்டான்டர்டு வாரன்ட்டியில் கவர் ஆகும் எல்லா பாகங்களும் வந்துவிடும். இதுவே டீலர் வாரன்ட்டி என்றால் அதில் பல விஷயங்கள் மாற்றியிருப்பார்கள். பாகங்களை மாற்றித் தருவதில் முரண்பாடுகள் இருக்கும்.

வாரன்ட்டி

எக்ஸ்டன்டட் வாரன்ட்டி வாங்கும் முன்பு அந்த வாரன்ட்டியில் என்னவெல்லாம் அடக்கம் என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். காசு கொடுக்கும் முன்பே எதெல்லாம் வாரன்ட்டியில் கவர் ஆகாது என்பதைத் தெளிவாக கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வாரன்ட்டி சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் படியுங்கள். ஏனென்றால் சில வாரன்ட்டிகளில் இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தவிர வேறு எந்தப் பழுதென்றாலும் அதற்குக் காசு வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டிருப்பார்கள்.ford extended warranty

சில தயாரிப்பாளரிடம் கார் வாங்கும்போது கூடுதல் வாரன்ட்டியை வாங்க வேண்டும். சில நிறுவனங்களிடம் காரின் ஸ்டான்டர்டு வாரன்ட்டி முடியும் முன்பு எப்போது வேண்டுமானாலும் வாரன்ட்டியை புதுப்பிக்கலாம் என்பார்கள். அதனால், கார் வாங்கும்போதே வாரன்ட்டியைப் பற்றி முழுவதும் தெரிந்துகொண்டு வாங்குங்கள்.

காரை சரியான முறையில் சர்வீஸ் செய்து, சரியான இடைவெளியில் பயன்படுத்தினால் முதல் 50,000 முதல் 80,000 கிலோ மீட்டருக்கு மெக்கானிக்கல் பாகங்களில் பிரச்னை என்பதே வராது. ஆனால், எலெக்ட்ரிக்கல் பிரச்னைகளைப் பொறுத்தவரை எப்போது வரும், எதனால் வரும் என்றே சொல்லமுடியாது. வாங்கியிருக்கும் வாரன்ட்டியின் எலெக்ட்ரிக்கல் கோளாறு கவர் ஆகவில்லை என்றால் எக்ஸ்டன்டட் வாரன்ட்டி வாங்குவது வீண். பெட்ரோல் கார்களை ஒப்பிடுகையில் டீசல் கார்கள் அதிக மெயின்டனென்ஸ் வைக்கும். அதனால், வாரன்ட்டியின் விலையைப் பார்த்துவிட்டு பெட்ரோல் காருக்கு கூடுதல் வாரன்ட்டி தேவையா என இரண்டுமுறை யோசித்து வாங்குங்கள். 


டிரெண்டிங் @ விகடன்