``அடமானம் வைச்ச வீட்டை இன்னும் மீட்க முடியலைங்க'' - கலங்கும் கஞ்சா கருப்பு மனைவி! | "We still couldn't get her home back!", Ganja Karuppu's wife sangeetha sharing her feeling

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (19/09/2018)

கடைசி தொடர்பு:13:35 (19/09/2018)

``அடமானம் வைச்ச வீட்டை இன்னும் மீட்க முடியலைங்க'' - கலங்கும் கஞ்சா கருப்பு மனைவி!

தான் நடித்த படங்கள் முதல் பிக்பாஸ் வீடு வரைக்கும் ஜாலி மனிதராகவே இருந்துவந்த கஞ்சா கருப்பு , 'வேல்முருகன் போர்வெல்' படத்தைத் தயாரித்து வெளியிட்ட பிறகு, பெரிய பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டார். 'அந்தப் படத்தை தயாரிக்கும்போது, பண விஷயத்தில் பலரும் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் அதனால், தான் வசித்து வந்த வீட்டைக்கூட விற்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் பேட்டியளித்திருந்தார். தற்போது எப்படியிருக்கிறார் கஞ்சா கருப்பு என்று தெரிந்துகொள்ள அவர் மனைவி சங்கீதாவிடம் பேசினேன். 

கஞ்சா கறுப்பு மனைவியுடன்

``அந்தப் படத்தை இவருக்குத் தயாரிக்கிற ஐடியால்லாம் இல்லவே இல்லைங்க. நீங்க கையெழுத்து போட்டாதான் பணம் கிடைக்கும்'னு சொல்லி இவரை ஏமாத்திட்டாங்க. இவர் எல்லாரையும் நம்பிடுவாருங்க. அதனால்தான், அவ்வளவு பெரிய நஷ்டத்துல மாட்டிக்கிட்டோம். கஞ்சா கருப்பு படம் தயாரிக்கிறதால ரொம்ப பிசியா இருப்பாருன்னு அந்த நேரத்துல மத்தவங்களும் இவரை நடிக்கக் கூப்பிடலை. ஒரு கட்டத்துல குடியிருக்கிற வீட்டை விற்கிற நிலைமைக்கும் வந்துட்டோம். நல்லவேளையாக முதல்ல வீட்டை அடமானம் வைச்சு கடனை அடைக்கலாம்னு முடிவெடுத்து, அடமானம் மட்டும் வைச்சாரு. ஆனா, அதையே இன்னமும் மீட்க முடியலை. 

குழந்தைகள்

ஆனா, முன்னவிட இப்ப நிலைமை பரவாயில்லைங்க. 'தர்மதுரை' படத்துக்கு அப்புறம் மறுபடியும் அவருக்கு வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிடுச்சு. சண்டைக்கோழி பாகம் 2, களவாணி பாகம் 2, சோனியா அகர்வால் கூட ஒரு படம், ஒரு மலையாளப்படம்னு பண்ணிக்கிட்டிருக்காங்க. நஷ்டப்பட்டு அவர் வீட்ல இருக்கிறப்போ, ' என் சினிமா என்னை கை விடாது'ன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பாரு. அது நிஜம்தாங்க. அவரு நம்பின சினிமா மறுபடியும் எங்களை வாழ வைக்க ஆரம்பிச்சிடுச்சு'' என்று உருகியவரிடம், உங்கள் கணவர் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட அப்பா என்ற கேள்விக்கு, ``அவர் ரொம்ப ஃபிரெண்ட்லியான அப்பாங்க. கண்டிப்பே காட்டத்தெரியாத அப்பான்னும் அவரைச் சொல்லலாம். ஊருக்கு வந்துட்டார்னா, பிள்ளைங்களைப் பள்ளிக்கு கூட்டிக்கிட்டுப் போய் விடறது வரைக்கும் அவர்தான் செய்வார். பையன் தருண்காந்தி சிலம்பம் கத்துக்கிறான்னு சொன்னதும், 'இந்தக் காலத்துல பெண் குழந்தைகளுக்கும் சிலம்பமாடத் தெரியணும்னு சொல்லி, அனாமிகாவையும் சேர்த்துவிடச் சொன்னாரு. அப்பா சொன்னதால, 5 வயசுலேயே எங்க பொண்ணு சிலம்பம் கத்துக்கிட்டு இருக்கா'' என்றவரின் பேச்சில் கணவரின் மீதான பாசம் பளிச்சென தெரிகிறது.