வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (19/09/2018)

கடைசி தொடர்பு:17:00 (19/09/2018)

வங்கிகள் இணைப்பு - பங்குச் சந்தையில் ரூ. 20,000 கோடி இழப்பு!

விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைக்கும் மத்திய அரசின் திட்டம், மும்பை பங்குச் சந்தை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பட்டியலிடப்பட்டுள்ள 22 வங்கிகளின் சந்தை மதிப்பில்  சுமார்  20,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வங்கிகள் இணைப்பு

இந்திய பொதுத்துறை வங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டவை ரிசர்வ் வங்கியின் பிஏசி (Prompt Corrective Action-PAC) என்னும் அமைப்பின் கீழ், தீவிர கண்காணிப்பில் இருந்துவருகின்றன. இந்த வங்கிகளால் மேற்கொண்டு எந்தப் புதிய பெரிய கடன்களையும் அனுமதிக்க இயலாத அளவுக்குப் பிரச்னையில் தத்தளித்துவருகின்றன. 

அப்படி தத்தளித்துவரும் வங்கிகளைக் காப்பாற்றும் நடவடிக்கையாகவே, கடந்த ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் மகிளா வங்கி உள்ளிட்ட 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்த நிலையில், தற்போது  விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் விரைவில் இணைக்க உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

கடன் வசதிகளை அதிகப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்திருந்த ஜெட்லி, "இந்த இணைப்பின் மூலம் நாட்டின் 3-வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இது உருவெடுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கூறிய 3 வங்கிகளை ஒன்றாக இணைப்பதன்மூலம், அவ்வங்கிகள் இன்னும் வலிமைபெற்று, நிலைத்தன்மையுடன் செயலாற்றி, மக்களுக்கு அதிகமான கடன்களை வழங்கும் ஸ்திரத்தன்மை பெறும்.

தற்போது, வங்களின் கடன் அளிக்கும் வசதி மிகவும் மோசமாக இருக்கிறது, இதனால், கார்ப்பரேட் துறை முதலீடு பாதிக்கிறது. அதிகமான வராக்கடனை அளித்து, வங்கிகளின் சொத்துகள் குறைந்துவருகின்றன. இந்த மூன்று வங்கிகளையும் இணைப்பதன்மூலம் வங்கிச் செயல்பாடுகள் வலுப்பெறும். இந்த இணைப்பு மூலம் இந்த 3 வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் எந்தவிதமான பாதிப்பும், குறைபாடும் ஏற்படாது. பெரும்பாலான பங்குகள் அரசின் கைவசமே இருக்கும்" என்று கூறினார்.

இந்த நிலையில், இந்த இணைப்பு நடவடிக்கை மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமையன்று அதிர்வலைகளை ஏற்படுத்தின. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 22 வங்கிகளின் சந்தை மதிப்பில், ஏறக்குறைய 2.8 பில்லியன் டாலர் ( இந்திய ரூபாயில் 20,000 கோடிக்கும் அதிகம்) இழப்பு ஏற்பட்டது. 

இதுபோன்ற இணைப்பு நடவடிக்கை வரும் காலத்திலும் மேற்கொள்ளப்பட்டால், தாங்கள் பங்குகள் வைத்துள்ள வங்கிமீது, இணைப்புக்கு உள்ளாகும் வங்கியின் கடன் சுமை ஏறிவிடும் என்ற அச்சம் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கள் வங்கிப் பங்குகளை அதிகம் விற்கத் தொடங்கினர். இதனால், அவற்றின் விலை சரிவடைந்து, வங்கிகளின் சந்தை மதிப்பும் சரிவடைந்தது. 

பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பங்கு விலை 16 சதவிகிதமும், விஜயா வங்கியின் பங்கு விலை 5.8 சதவிகிதமும் சரிவடைந்த நிலையில், இந்த இணைப்பால் பயனடைந்த தேனா வங்கியின் பங்கு விலை மட்டும் 20 சதவிகிதம் உயர்ந்தன. தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ், கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத சரிவைச் சந்தித்தது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க