பட்டுப்போன மரங்களையும் துளிர்க்கச் செய்யும் வைக்கோல் தொழில்நுட்பம்! | Tips to resurrect very old tree using the natural technique

வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (19/09/2018)

கடைசி தொடர்பு:19:35 (19/09/2018)

பட்டுப்போன மரங்களையும் துளிர்க்கச் செய்யும் வைக்கோல் தொழில்நுட்பம்!

முருங்கை குச்சியை நட்டுவைத்தால் வளரும் என்பது அனைவருக்கும் தெரியும்; இதேபோல வேப்பம் குச்சியையும் நட்டு வளர்க்கலாம்.

பட்டுப்போன மரங்களையும் துளிர்க்கச் செய்யும் வைக்கோல் தொழில்நுட்பம்!

நாம் வசிக்கும் வீடாக இருந்தாலும், விவசாயம் செய்யும் இடமாக இருந்தாலும் அங்கு மரங்கள் இருப்பதைப் பெரும்பாலானோர் விரும்புவதுண்டு. ஆனால், அதைப் பாதுகாத்து வளர்ப்பது கொஞ்சம் சவாலான விஷயம்தான். அந்த சவாலான விஷயங்கள்தாம் மரம் வளர்க்கும் ஆசையையே போக்கிவிடுகிறது. தோட்டத்தில் வளர்த்தால் ஆடு, மாடுகள் கடித்துவிடாமல் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். ஆடு, மாடு வராத இடமாக இருந்தால் வளரும்போது காற்றில் ஒடிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். மர வகைகளில் முருங்கை என்று சொன்னாலே பலருக்கு அதிலிருந்து ஒரு குச்சியை வெட்டி தனியாக நடுவதுதான் ஒரு ஞாபகம் வரும். அதேபோல வெட்டி தனியாக நட்டால் வளர்கின்ற பல மரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதில் வேப்ப மரத்தில் இருக்கும் கிளையை வெட்டி தனியாக நடவு செய்து துளிர்க்கச் செய்திருக்கிறார் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்த நடராஜன் என்ற இயற்கை விவசாயி. மேலும், வைக்கோல் மூலமாக அவற்றுக்கு பாதுகாப்பளிக்கும் முறையையும் கற்றுத்தருகிறார்.

மரம் - வைக்கோல்

காலை வேளையில் பண்ணை வேலைகளில் ஈடுபட்டிருந்த நடராஜனைச் சந்தித்துப் பேசினோம். "நான் கடந்த 5 வருஷமா இயற்கை விவசாயம் செய்துக்கிட்டு வர்றேன். அதனால இயற்கை சார்ந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள்ல அதிகமா கலந்துக்குவேன். முக்கியமா பசுமை விகடன்ல வர்ற 60 சதவிகிதம் பேரையாவது நேர்ல பார்த்திருப்பேன். அப்படித்தான் எனக்கு திருநெல்வேலி சோலைவனம் பண்ணை அறிமுகமாச்சு. அங்க முருங்கை தவிர மத்த மரங்களை வெட்டி எப்படி நடணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. பயிற்சி எடுத்துக்கிட்டாலும், மரங்களை வெட்டி நட்டது இல்லை. என் வயல்ல நெல்லுதான் எப்பவுமே பிரதான பயிர். நெல்லுக்கு வயல் தயார் செய்யுறப்போ வயல் ஓரமா இருந்த ரெண்டு வேப்ப மரத்துல கிளைகளைக் கவாத்து செஞ்சு வயல்ல மட்குறதுக்குப் போட்டேன். அப்போ மரக்கிளை குச்சிகள் மட்டும் மிச்சம் இருந்துச்சு. மூணு அடி உயரமா குச்சிகளை வெட்டி வயல் ஓரமா நடலாம்னு தோணிச்சு. 40 சென்ட்ல கத்தரி, தக்காளி, வெண்டைனு பல பயிர் சாகுபடி செய்திருக்கேன். அதனால் அந்த வயல் ஓரமா நடலாம்னு தோணுச்சு. இப்படி நடுற மரங்களுக்கு ஈரப்பதம் இருந்துக்கிட்டே இருக்கணும். அதனாலதான் காய்கறி வயல் ஓரமா நடவு செய்ய முடிவு செஞ்சேன். ஒவ்வொரு குச்சியையும் மூணு அடிக்கு அளவு வச்சு வெட்டுனேன். அதில் சில குச்சிகள் நாலு அடி உயரத்துலேயும் நடவு செய்திருக்கேன்.

நடவு செய்யும்போது சில வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். இல்லைனா குச்சிகள் வளராம போயிடும். வயல் ஓரமா ஓர் அடிக்கு குழி எடுக்கணும். அதுல கனஜீவாமிர்தம் ஒரு கைப்பிடியளவு, மாட்டு எரு இரண்டு கைப்பிடியளவு போடணும். அப்புறமா வேப்பங்குச்சியோட மறு முனையில மாட்டுச் சாணத்தை வச்சு மொழுகிடணும். கடைசியா வைக்கோலை கயிறா திரிச்சு குச்சியோட அடிப்பகுதியில இருந்து மேல் பகுதி வரைக்கும் சுற்றிவிடணும். அதேபோல சுற்றும்போது மேல் பகுதியில் கொஞ்சம் இடைவெளி விட்டு சுற்ற வேண்டும். அதிலிருந்துதான் முளைப்பு அதிகமாக வெளிப்படும் என்பதுதான் அதற்குக் காரணம். தினமும் வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது வேப்பங்குச்சிகளுக்கும் பாயும். அதேபோல வாய்க்கால்ல இருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து வைக்கோல் மேல ஊற்றணும். வைக்கோல் எப்பவுமே ஈரப்பதத்தோட இருக்குற மாதிரி கவனிச்சுக்கணும். வைக்கோலை வாடவிட்டா குச்சி முளைக்காம போயிடும். இப்படியே பராமரிச்சுக்கிட்டே வந்தா சரியா 25 நாள்ள இருந்து 30 நாடள்களுக்குள்ள துளிர்விட ஆரம்பிச்சிடும். 30 நாள்கள்ல நீங்க ஒரு கன்று வாங்கிட்டு வந்து நட்டால்கூட இவ்வளவு உயரம் வளருமாங்குறது தெரியலை. 30 நாள்ள 3, 4 அடிக்கு ஒரு மரத்தையே வளர்த்தெடுக்கலாம். மரம் வளர்க்குறதுக்கு முக்கியமான காரணம், அந்த மண்ணுல உயிர் இருக்கணும். அப்போதான் குச்சிகள் மரமாகும்" என்றார் நடராஜன்.

மரங்கள் - வைக்கோல்

இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் 150 ஆண்டுகள் பழைமையான கடம்பம் மரம் ஒன்றை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். திடீரென்று பட்டுப்போன அம்மரம், கடந்த சில நாள்களுக்கு முன்னர் உயிர்ப்பித்துள்ளது. பட்டுப்போன மரத்தின்மீது மாட்டுச்சாணம், வேப்ப எண்ணெய், மஞ்சள் ஆகியவற்றைக் குழைத்துப் பூசியும் வைக்கோலைக் கயிறுபோலத் திரித்து மரத்தைச் சுற்றியும் வைத்தியம் பார்த்திருக்கிறார்கள். 

மரங்களை வளர்ப்பது தவிர, பட்டுப்போன மரங்களை வளர்க்கவும் இத்தொழில்நுட்பம் உதவுகிறது. மரங்கள் நாட்டுக்குத் தேவை என்கிற சூழலில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அவசியமான ஒன்றுதானே.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close