வெளியிடப்பட்ட நேரம்: 13:37 (20/09/2018)

கடைசி தொடர்பு:13:39 (20/09/2018)

'நீ வேண்டாம்' என ஒரு பெண் சொன்னால், ஆண் ஏன் அவமானமாக உணர்கிறான்?

``நிலானியை மறக்க முடியவில்லை. அதனால்தான் பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டேன்’’ - இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால், சின்னத்திரை நடிகை நிலானியைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய உதவி இயக்குநர் காந்தி என்கிற லலித்குமார் காவல்துறையிடம் சொன்ன வார்த்தைகள் இவை. இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள்... பிறகு பிணக்கம் ஏற்பட்டுப் பிரிந்தார்கள் என்பது வரை ஊடகத்தில் தினம் தினம் வெளியாகிக்கொண்டிருக்கிறது. காதலோ, ரிலேஷன்ஷிப்போ... ஒருவர் வேண்டாம் என்று சொல்வதால் தன்னையே மாய்த்துக்கொள்வது, சொன்னவரைக் கொலை செய்வது எல்லாம் என்ன மாதிரியான மனநிலை என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் வாசுகி மதிவண்ணனிடம் பேசினோம்.

நிலானி

``ஒரு பெண் காதலிக்க மாட்டேன் என்று மறுத்தால், `அவள் வாய்தான் மறுக்குது; மனசு உன்னைத்தான் லவ் பண்ணுது' என்பது போன்ற சினிமா டயலாக்குகள்தான், துரத்தித் துரத்தி ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கு ஆண்களுக்குக் கிடைக்கிற உந்து சக்தி. தன் காதலை ஒரு பெண் மறுக்கிறாள் என்றால், அதற்கு நியாயமான காரணம் ஏதாவது இருக்கிறதா என்று ஆண்கள் தேடலாம் அல்லது குறைந்தபட்சமாக யோசிக்கவாவது செய்யலாம். அல்லது அந்தப் பெண்ணிடமே நேரிடையாகக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். அப்படிச் செய்தாலே இன்றைக்கு நடக்கின்ற ஆசிட் வீச்சுகள், கொலைகள் தடுக்கப்படும். நிஜ வாழ்க்கையில் ஒரு பெண்ணை துரத்தித் துரத்தி காதலித்து அவள் மறுத்துவிட்டால் உடனே ஆண் என்கிற ஈகோ அடிபட்டுவிட்டதாக எண்ணுகிறார்கள் சில ஆண்கள். தவறு அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

வாசுகி மதிவண்ணன்   *  காதலோ, லிவ்ங் டு கெதரோ, திருமணப் பந்தமோ... எந்த ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் அதில் பிணக்கு ஏற்பட்டு 'வேண்டாம்' என்று சொல்கிற பெண்ணை வற்புறுத்தி மறுபடியும் அந்த ரிலேஷன்ஷிப்பை புதுப்பிக்க முடியாது என்கிற முதிர்ச்சி ஆணுக்கு இல்லையென்றாலும் பிரச்னை வரும். 

   * எல்லா ஆண்களுக்குமே தன் காதல் உண்மையானது என்கிற எண்ணம் இருக்கிறது. அதனால், தன்னுடைய காதலை ஒரு பெண் மறுக்கும்போது, 'என்னுடைய உண்மையான காதலையே ஏத்துக்க மாட்டியா' என்று கட்டுப்படுத்த முடியாத கோபம் வந்துவிடுகிறது. அந்தக் கோபம், கொலை, தற்கொலை என்பது போன்ற தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறது. 

* ரிலேஷன்ஷிப்பில் பிரிவு ஏற்பட்டு இருவரும் பிரிந்த பின்னர்... ஆணின் மனம் அதைப் பெரும் அவமானமாக, அசிங்கமாக, தோல்வியாக எடுத்துக்கொண்டு பழிவாங்கும் குணத்தைப் பிரயோகிக்க ஆரம்பிக்கிறது. அதுவரை இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம், வீடியோ என அத்தனை அந்தரங்கமான விஷயங்களையும் பொதுவெளியில் பரப்பிவிடுவது இதனால்தான். தன்னையே மாய்த்துக்கொள்வதும் இதில் ஒரு வகைதான். அதாவது இறந்த பிறகும் என் நினைவு, உன்னால்தான் நான் இறந்தேன் என்கிற குற்ற உணர்ச்சி உன்னைச் சாகடிக்கட்டும் என்று நினைக்கிறார்கள். 

* இன்னொரு வகை ஆண்கள் இருக்கிறார்கள். பிரிவு ஏற்பட்டு விலகிய பிறகு அதெப்படி என்னை அவள் வேண்டாம் எனலாம் என்று சொல்லி, பெண்ணுக்கென்று ஒரு விருப்பம் இருக்கும் என்பதையே மனதால், உணர்வால்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.   

*மற்றொரு வகை ஆண்களோ... அவ என்னை வேண்டாம்னு சொல்லிட்டா... என்னை வேண்டாம்னு சொன்னவளைப் பத்தி நான் ஏன் நினைக்கணும், ஏன் ஃபீல் பண்ணனும், ஏன் என் உடலை வருத்திக்கணும் என்று சொல்லி உடனடியாக அந்தச் சூழ்நிலையிலிருந்து வெளியில் வர துடிப்பார்கள். இது ஒரு வகையில் நல்ல குணமே. எதையுமே வற்புறுத்தி வரவழைக்க முடியாது என்பதுதான் உலக வாழ்க்கையின் நிதர்சனம்

* மென்மையான சுபாவம் கொண்ட ஆண்களுக்குச் சிறு வலியைக்கூட தாங்கிக்கொள்ள முடியாது. அதுவும் ரிலேஷன்ஷிப் எனும்போது சுக்குநூறாக உடைந்துபோவார்கள். அவர்களுக்கு நிச்சயம் கவுன்சலிங் தேவை.

* நிலானியின் வழக்கிலும் இருவரும் சேர்ந்து ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள்... பிணக்கம் ஏற்பட்டுப் பிரிந்தார்கள். பேசி சுமுகமாக பிரிந்திருந்தால் பிரச்னை வந்திருக்காது.

லலித்குமார்

* சிறு வயதில் ஒரு காதல் தோல்வி சம்பவத்தைப் பற்றி, ஒரு சிறுவனின் அம்மாவோ அல்லது அப்பாவோ, 'இப்படி அவமானப்படுகிறதைவிட இவன் செத்துப்போயிடலாம்' என்றோ, அல்லது 'இப்படிப்பட்ட பொண்ணுங்களை கொன்னுடணும்' என்பதுபோலவோ பேசி, அது அந்தச் சிறுவனின் மனதில் ஆழப்பதிந்தும் போயிருந்தால்... பல வருடங்கள் கழித்து, அந்தச் சிறுவன் தன் வாழ்க்கையில் ஒரு காதல் தோல்வியைத் சந்திக்கும்போது கொலையாகவோ, தற்கொலையாகவோ வெடிக்கும். 

* ரிலேஷன்ஷிப்பில் பிரிவு வராமல் இருக்க இருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். சந்தர்ப்பமோ, சூழ்நிலைகளோகூட ரிலேஷன்ஷிப்பில் பிரிவு ஏற்பட ஒரு காரணமாக அமையலாம். ரிலேஷன்ஷிப்பில் பிரிவு என்பதைத் தவிர்க்க முடியாது என்கிற உண்மையை உணரும் வரை வலிக்கும் மனதுக்குத் தீர்வு என்பது கிடையாது.


டிரெண்டிங் @ விகடன்