பேடிஎம்-ல் இலவச பணப் பரிமாற்றம் சாத்தியமாவது எப்படி? | money transaction without charges: the background details

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (20/09/2018)

கடைசி தொடர்பு:20:10 (20/09/2018)

பேடிஎம்-ல் இலவச பணப் பரிமாற்றம் சாத்தியமாவது எப்படி?

பேடிஎம்மைப் பொறுத்தவரை, பேடிஎம் மால் என்ற ஆன்லைன் விற்பனைத்தளம் இருக்கிறது. ஒருவர் விற்க விரும்பும் பொருட்களை அதில் டிஸ்ப்ளே செய்யலாம்.  விற்பனையால் பேடிஎம் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை கட்டணமாகப் பெற்றுக்கொள்ளும்.

ஆன்லைன் பணப்பரிமாற்ற முறைகளான NEFT, RTGS மூலம் பணம் அனுப்பும்போது, வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றத்துக்காக கட்டணம் பிடிக்கிறார்கள். ஆனால் பேடிஎம் போன்றவை மூலம் அனுப்பினால் மட்டும் கட்டணம் எதுவும் பிடிப்பதில்லை. இதன் காரணமாகவே, மக்கள் இத்தகைய பணப் பரிமாற்ற முறைக்கு மாறுகிறார்கள். இவர்களால் மட்டும் எப்படி இலவச சேவை வழங்க முடிகிறது என்று ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? 

பேடிஎம்

இதுகுறித்து, பேமென்ட்ஸ் டொமைன் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட் என்.சபாபதியிடம் கேட்டபோது, ''பேடிஎம்மைப் பொறுத்தவரை, பேடிஎம் மால் என்ற ஆன்லைன் விற்பனைத் தளம் இருக்கிறது. ஒருவர் விற்க விரும்பும் பொருள்களை அதில் டிஸ்ப்ளே செய்யலாம். விற்பனையால் பேடிஎம் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை கட்டணமாகப் பெற்றுக்கொள்ளும். அடுத்து, பேமென்ட் பேங்காகவும் பேடிஎம் செயல்படுகிறது. இதில், வங்கிகளைப் போல அனைத்து பரிமாற்றங்களையும் செய்யலாம். ஆனால், கடன் மட்டும்  வழங்க முடியாது. டெபாசிட்டுகளுக்கு 4.5 சதவிகிதம் வட்டி வழங்குகிறார்கள். இந்தத் தொகையை வேறு இடத்தில் கூடுதல் வட்டிக்கு டெபாசிட் செய்து லாபமீட்டுவார்கள். கூடுதலாக, அந்நிறுவனங்களுக்குரிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள், வீட்டுக் கடன், கார் கடன் போன்றவற்றையும் தங்களது தளத்தில் விற்பார்கள். 

என்.சபாபதிஅவர்களின் இன்னொரு பெரிய பலம் என்னவென்றால், தங்களிடமுள்ள சுமார் 12 கோடி  பயனாளர்களைத் தங்களது அனைத்து விற்பனைகளுக்கும், சேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்வார்கள். பேடிஎம் வாலட்டில் பயனாளர்களால் செலுத்தப்படும் தொகையில் பயன்படுத்தப்படாத குறிப்பிட்ட தொகையை, எஸ்க்ரோ அக்கவுன்ட் (escrow account) மூலம் வங்கியில் வைத்திருப்பார்கள். அதற்கான வட்டி என்பதே பெரிய தொகையாகக் கிடைக்கும். மேலும், பேமென்ட் கேட்வே மூலமாக நடக்கும் பணப் பரிமாற்றத்துக்காக, குறிப்பிட்ட கட்டணத்தை நிறுவனங்களிடமிருந்து வாங்குவார்கள். உதாரணமாக, ரயில்வே டிக்கெட் புக்கிங்கிற்காக ரயில்வே துறை செலுத்தும். இப்படியாக பேமென்ட் பேங்கிங்கில் ஈடுபடும் தனியார் நிறுவனங்கள், தங்களிடமிருக்கும் பயனாளர்களின் மூலம் மறைமுகமாக பல்வேறு வகைகளில் வருமானம் பார்ப்பதால், பணப் பரிமாற்றத்துக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து பெறவேண்டிய கமிஷனில் கவனம் செலுத்துவதில்லை" என்றார்.

தேநீரை இலவசமாக சுவைக்கக்கொடுத்து, மக்களுக்குப் பழக்கப்படுத்திய பழைமையான வியாபார உத்தியைத்தான் தங்களுக்கான வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் பலப்படுத்துவதற்கு பேடிஎம் போன்ற நிறுவனங்களும் செயல்படுத்துவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, நாம் செலுத்தும் கட்டணம் இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.