வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (20/09/2018)

கடைசி தொடர்பு:20:25 (20/09/2018)

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் உயர்வு: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு?

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புப் பத்திரங்கள்...

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை  மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புப் பத்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதம், வரும் அக்டோபர் மாதம் முதல் உயர்த்தப்பட உள்ளது.  

சிறு சேமிப்பு

வங்கிகள், குறிப்பாக நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, காலாண்டு அடிப்படையில் இந்த வட்டி உயர்வை அமல்படுத்த மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. 

உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் எவ்வளவு?:

நடப்பு 2018-19-ம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டுக்கான வட்டி விகிதம், பிபிஎஃப் ( PPF) எனும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் என்எஸ்சி (NSC) என்னும்  தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கு தற்போதைய 7.6 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

அதேபோன்று, கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 7.3 சதவிகிதத்திலிருந்து 7.7 சதவிகிதமாகவும், முதிர்வு காலம் முன்பு இருந்த 118 மாதங்களுக்குப் பதிலாக 112 மாதங்களாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டமான சுகன்யா ஸ்மிர்தி என்ற செல்வமகள் சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம் 0.4% உயர்த்தப்பட்டு 8.5 சதவிகிதமாக வழங்கப்படும். 

மேலும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்புத் திட்டத்துக்கான வட்டி விகிதம், 8.3 சதவிகிதத்திலிருந்து 8.7 சதவிகிதமாகவும், 5 ஆண்டுகளுக்கான ரெக்கரிங் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 6.9 சதவிகிதத்திலிருந்து 7.3 சதவிகிதமாகவும், 5 ஆண்டுகளுக்கான டெபாசிட்டுகளுக்கான  வட்டி விகிதம், 7.4 சதவிகிதத்திலிருந்து 7.8 சதவிகிதமாகவும்  அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கான டெபாசிட்டுகளுக்கு 6.9 சதவிகிதத்திலிருந்து 7.2 சதவிகிதமாகவும், 2 ஆண்டுகளுக்கு 6.7 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகவும், 1 ஆண்டுக்கு 6.6 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஷியாமாளா கோபிநாத் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில், இந்த வட்டி விகித உயர்வு அமல்படுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு காலாண்டு முடிவிலும், மேற்கூறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, புதிய வட்டி விகிதத்துக்கு ஏற்ப, அடுத்த காலாண்டுக்கான வட்டி விகிதம் மாற்றியமைக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க