'பெண் ஏன் அடிமையானாள்?' நூலுக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் விமர்சனம்! | Government school students review periyar's popular book 'Penn Yen Adimaiyanal'!

வெளியிடப்பட்ட நேரம்: 15:23 (21/09/2018)

கடைசி தொடர்பு:15:23 (21/09/2018)

'பெண் ஏன் அடிமையானாள்?' நூலுக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் விமர்சனம்!

'பெண் ஏன் அடிமையானாள்?' நூலுக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் விமர்சனம்!

கவல் தொழில்நுட்பக் காலத்தில், அதுவும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்ததும் புத்தகங்கள் படிப்பது என்பது குறைந்துகொண்டே போகிறது. என்பதே பலரின் எண்ணம். ஆனால், சரியான புத்தகத்தை மக்களிடையே கொண்டு செல்லும்போது அதற்கு நல்ல வரவேற்பு பெறும் என்பது சமீபத்திய உதாரணம்தான் கவிஞர் தம்பியின் செயல்பாடு. 

தந்தை பெரியார் எழுதிய நூல்களில் புகழ்பெற்றது `பெண் ஏன் அடிமையானாள்?'. சமூகம் சார்ந்து வாசிக்க விரும்புபவர்களுக்கு முதல் நூலாக அறிமுகப்படுத்தக்கூடிய இந்நூல், இதுவரை சமூகத்தில் நிலவிய அறிவுக்குப் பொருந்தாத, சமத்துவம் இல்லாத மூட கருத்துகள் மீது அதிர்ச்சி அளிக்கும் விதமான மாற்றுக் கருத்துகளை முன் வைத்தது. எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள்  எனப் பலரும் தங்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த நூலாக, இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. இவ்வளவு சிறப்புமிக்க இந்த நூலை ஒரு லட்சம் பிரதிகள் அச்சிட்டு, அதுவும் குறைந்த விலையில் விற்பனை செய்வது என முடிவெடுத்தார் கவிஞர் தம்பி. அது குறித்து அவரிடம் பேசினேன். 

பெண்

``இன்றைக்கு தினசரிகளை எடுத்துப் பார்த்தால், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளே தலைப்புச் செய்திகளாகி விட்டன. இவற்றைப் படித்துவிட்டு இயல்பாகக் கடந்துபோகும் மனநிலைக்கும் சமூகம் வந்துவிட்டது துயரம்தான். இதை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது. ஆண், பெண் ஆகிய இருபாலினம் குறித்த புரிதலைச் சமூகத்துக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, பெண் மீது `புனிதம்' என்ற பெயரில் சுமத்தப்பட்டிருப்பவை சுமைகளே என்று இளம்தலைமுறையினருக்குச் சொல்ல வேண்டும். இந்த வேலையைத் தந்தை பெரியாரின் எழுத்துகள் எந்தத் தயக்கமுமின்றி சொல்லுபவை. அதிலும், `பெண் ஏன் அடிமையானாள்?' எனும் நூல், பெண்களே தங்களைப் பற்றிய கற்பிதங்களிலிருந்து வெளிவர வேண்டிய விஷயங்களையும் இணைத்துப் பேசியிருக்கும். எனவே இந்த நூலை பரவலாகக் கொண்டுசெல்ல வேண்டும் என நினைத்தேன்" என்றவரிடம், ``ஒரு லட்சம் பிரதிகள் என ஏன் முடிவெடுத்தீர்கள்?" என்றேன். 

சிரித்துக்கொண்டே, ``ஒரு லட்சம் அல்ல, பத்து லட்சம் பிரதிகளைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். ஆனால், இப்போதைய பதிப்புச் சூழல் ஆயிரம் பிரதிகள் எனும் காலம் மாறி, 100 அல்லது 200 பிரதிகள் அச்சிடுவதாகி விட்டது. இதில் நான் ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடப் போகிறேன் என்றதுமே பலருக்கு ஆச்சர்யம், சிலர் கேலியாகவும் பார்த்தார்கள். ஆனால், அதிக பிரதிகள் அச்சிடும்போது விலையையும் குறைக்க முடியும் என்பதால், இந்த நூல் 10 ரூபாய் மட்டுமே என விலை நிர்ணயித்தோம். அட்டைக்கு மிக அழகான, அர்த்தபூர்வமான ஓவியத்தை சந்தோஷ் நாராயணன் வரைந்து தந்தார். 

பெண் ஏன் அடிமையானாள்? பெரியார்

தமிழ்நாடு முழுக்க, இந்த நூலை கொண்டுசேர்க்க பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்ஸியத் தோழர்கள் உதவியாக இருக்கிறார்கள். பல தலைவர்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் வீடியோவில் இந்த நூல் பற்றிப் பேசி செய்திகளைப் பரப்புகிறார்கள். குறிப்பாக, பள்ளி ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவு மொத்தமாக நூல்களை வாங்கி, மாணவர்களைப் படிக்க வைக்கின்றனர். இந்தச் செயல்பாடு மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு இந்த வயதிலேயே ஆண், பெண் பற்றிய தெளிவைக் கொண்டு சேர்த்துவிட்டால், அடுத்த தலைமுறையின் சிந்தனையும் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்காக, ஒவ்வொரு மாணவரின் கையிலும் இந்தப் புத்தகத்தைச் சேர்க்க முயற்சி எடுக்கிறேன். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பேருதவியாக இருக்கிறது. 

அரசுப் பள்ளி

எங்களின் நன்செய் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் `பெண் ஏன் அடிமையானாள்?' நூல் ஒரு லட்சம் பிரதிகள் என்ற இலக்கில் இதுவரை 40 ஆயிரம் பிரதிகள் விற்றுவிட்டன. இது கொடுத்திருக்கும் நம்பிக்கை இன்னும் 60 ஆயிரம் பிரதிகளை எளிதாக விற்றுவிடலாம் என்ற துணிச்சலையும் தந்துள்ளது." என்கிறார் உற்சாகமாக. 

திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப் பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள் நூல் 200 பிரதிகள், சிலரின் நன்கொடையில் வாங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து, அப்பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமியின் கருத்தைக் கேட்டபோது, `என்னை விட, இந்தப் புத்தகத்தைப் படித்த மாணவர்கள் சிலர் பேசுவதைக் கேளுங்க" என்றார். ஆர்வத்துடன் பேசிய மாணவர்களிலிருந்து ஒரு சிலரின் கருத்துகள்: 

 7ம் வகுப்புப் படிக்கும் சிநேகா: ``பெரியார் எழுதின பெண் ஏன் அடிமையானாள்னு ஒரு புத்தகம் இருக்கு. அதை நீங்கல்லாம் படிக்கணும்னு டீச்சர் சொல்லிட்டே இருப்பாங்க. இப்போ, கரிகாலன் மற்றும் சிவகுருநாதன் ஆகியோரின் உதவியால் எங்களுக்கு இந்தப் புத்தகம் கிடைச்சுது. அதுக்காக, 2 பேருக்கும் நன்றி. அப்பா மட்டும்தான் வெளியே போய்ட்டு வரணும், அம்மா வீட்டுக்குள்ளேயே இருக்கணும் என்பது மாறணும். பெண்களும் நாலு இடங்களுக்குச் செல்வது தப்பில்லை என்று எழுதியிருந்தது புது விஷயமா இருந்துச்சு."
 
8ம் வகுப்புப் படிக்கும் ஆர்.மோகனப்ரியா: `கற்பு' என்ற கட்டுரை எனக்குப் புடிச்சுது. ஏன்னா, கற்பு என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒண்ணுதானு சொன்னதுதான் சரியானது. அப்பறம், கற்பு என்று சொல்வதே, பெண்ணை அடிமைப்படுத்தத்தான் என்பதும் தெரிஞ்சுது. 

அரசுப் பள்ளி

6ம் வகுப்புப் படிக்கும் கே.பூமல்லி: மனைவி இறந்துட்டா, அந்தக் கணவன் இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிறார். அந்த மனைவியும் இறந்துட்டா, இன்னொரு கல்யாணமும் செஞ்சுக்கிறார். ஆனா, கணவன் இறந்துட்டா, அந்தப் பொண்ணு இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கக் கூடாது என்பது சரியில்ல. இதைத்தான் பெரியார் இதில் சொல்லியிருக்கார்.  

8ம் வகுப்புப் படிக்கும் என். தட்சணா: இந்தப் புத்தகத்தில படிச்சது எல்லாம் புதுசா இருந்துச்சு. ஆண்களுக்கு இருக்குற சுதந்திரம் பெண்களுக்கு இல்லன்னு புரிஞ்சுது. பெண்களுக்குத் தொந்தரவு ஏதும் கொடுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. 

8ம் வகுப்புப் படிக்கும் சக்திவேல்: `பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்' என்ற கட்டுரையைப் படிச்சப்ப, ஷாக்கா இருந்துச்சு. என்னடா இது! ஆண்களையே குறை சொல்ற மாதிரி இருக்கேன்னு நினைச்சேன். ஆனா, முழுப் புத்தகம் படிச்சப்பறம்தான் அது தப்புன்னு புரிஞ்சுது. பெண்களும் நம்மள மாதிரிதான். அவங்களுக்கு நம்மளால எந்தக் கஷ்டமும் வரக் கூடாது.  


டிரெண்டிங் @ விகடன்