வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (21/09/2018)

கடைசி தொடர்பு:13:10 (14/10/2018)

குள்ளர்கள் குடியிருப்பு... தங்கப் புதையல்... அமானுஷ்யம் நிறைந்த போதைமலை நோக்கி ஒரு பயணம்!

போதைமலையில் இருக்கும் குட்டிவீடுகள் குள்ளர்கள் வாழ்ந்ததா? அமானுஷ்ய மலையில் ஒரு திகில் பயணம்! 

குள்ளர்கள் குடியிருப்பு... தங்கப் புதையல்... அமானுஷ்யம் நிறைந்த போதைமலை நோக்கி ஒரு பயணம்!

புரிபடாத பல ரகசியங்கள் ஆங்காங்கே புதைந்து கிடக்கின்றன. அப்படியான ஒன்றுதான், நாமக்கல் மாவட்டம் போதைமலை குள்ளர்கள் வசிப்பிடம். இந்த மலையில் அவர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளதாக மலைவாழ் மக்கள் நம்பி வருகின்றனர். குள்ளர்களுடைய வசிப்பிடமாகக் கூறப்படும் வரிசையான வீடுகள் அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அமானுஷ்யத்தன்மையுடன் இருக்கிறது. குள்ளர்களை தேடியலையும் சாமியார்கள் ஒருபுறமும், குள்ளர்கள் மறைத்து வைத்திருப்பதாகக் கூறப்படும் தங்கப் புதையலைத் தேடி சிலர் மறுபுறமும் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். போதைமலையின் மர்ம முடிச்சை அவிழ்த்துப் பார்க்க நானும் போதைமலையை நோக்கிப் பயணப்பட்டேன்!

போதைமலை

ராசிபுரம் அருகே உள்ளது வடுகம் கிராமம். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரம் பயணித்தால், பச்சைப் போர்த்திய போதைமலையின் அடிவாரம் நம்மை வரவேற்கிறது. கடல் மட்டத்திலிருந்து 750 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது போதைமலை. இங்கே 5 கி.மீ. தூரத்தில் மேலூரும் அங்கிருந்து 2.கி.மீ. தொலைவில் கீழூரும் அமைந்திருக்கின்றன. இங்கே மலைவாழ் மக்கள் மிகக் குறைவாகவே வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கொல்லிமலையிலிருந்து இடம்பெயர்ந்து வந்து இங்கே வசிக்கிறார்கள். பேருந்து வசதி இல்லை. நடைப்பயணமாகத்தான் செல்ல வேண்டும். இரு கிராமங்களையும் சேர்த்தால் மொத்தம் 1,500 வீடுகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான வீடுகள் பூட்டியே கிடக்கின்றன. இந்த வீடுகளில் வசித்த பலர் குடிபெயர்ந்து மலையின் அடிவாரத்தில் உள்ள பட்டணம் முனியப்பம்பாளையத்துக்கு (ப.மு.பாளையம்) வந்து விட்டனர். தங்களுடைய குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை தேவைகளுக்காக அவர்கள் இங்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. 

போதைமலை

வயது முதிர்வின் காரணமாக, போதைமலையிலிருந்து ப.மு.பாளையத்துக்கு வந்து தங்கியிருந்த சுமார் 90 வயதுள்ள மலைவாழ் இனத்தைச் சேர்ந்த சடையன் என்பவரைச் சந்தித்து, ``போதைமலையில் குள்ளர்கள் வசித்தது உண்மையா?” என்று கேட்டேன். 

``என்னோட தாத்தா குள்ளர்களைப் பார்த்திருக்காரு. அவங்களைப் பத்தி நிறைய சொல்லியிருக்காரு. நம்மள மாதிரி வளர்ந்த ஆளுங்கள பார்த்தவுடனே கண்ணிமைக்கிற நேரத்துல மறைஞ்சு போயிடுவாங்களாம். `நிறைய சக்தி படைச்சவங்க. அதனால எப்பேர்பட்ட பாறையையும் அவங்க பெயர்த்து எடுத்துடுவாங்க'ன்னு தாத்தா சொல்லுவாரு. பகல்ல அவங்கள எங்கேயும் பார்க்க முடியாதாம். ராத்திரியில மட்டும்தான் வெளியே வருவாங்களாம். குள்ளர்கள் நிறைய தங்கத்தை ரகசியமா பதுக்கி வச்சிருந்திருக்காங்க. அந்தப் புதையலைத் தேடி எங்க தாத்தா கூட போதைமலை முழுக்க அலைஞ்சிருக்காரு. கடைசிவரைக்கும் கண்டுபிடிக்க முடியல. ஆனா, அதை தேடிக்கிட்டு இப்போ நிறைய பேரு இந்த மலைக்கு வராங்க. ஆனா, இன்னிக்கு வரைக்கும் யாருக்கும் அந்தப் புதையல் சிக்கல. நான் குள்ளர்களை இதுவரைக்கும் பார்த்ததில்ல” என்கிறார் சடையன்.

போதைமலையிலுள்ள மேலூரில் இருந்து 2 கி.மீ. தூரம் நடந்தால் மிகப் பெரிய பாறை ஒன்று வருகிறது. இங்குதான் குள்ளர்கள் வசித்ததாகக் கூறப்படும் பகுதி உள்ளது. குள்ளர்களின் வசிப்பிடமாகக் கூறப்படும் பாண்டியராஜன் வீடு மற்றும் அரண்மனை வீடுகள் சிதிலமடைந்து கிடக்கின்றன. செடிகளும் மரங்களின் வேர்களும் வீடுகளுக்குள் புகுந்து ஓர் அமானுஷ்யமான தோற்றத்தில் நமக்குக் காட்சியளிக்கின்றன. அரண்மனை வீடுகள் மட்டும் சுமார் 25-க்கும் மேலுள்ளன. 

போதைமலை

அவை மிகச் சிறிய வடிவில் உறுதியான கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் மூன்று அடி உயரமும் மூன்று அடி அகலமும் நான்கு அடி நீளமும் கொண்டதாக இருக்கின்றன. நுழைவாயிலை ஓர் அடி விட்டம் கொண்டதாக அமைத்திருக்கிறார்கள். இதனை மூடுவதற்கு வீட்டின் மீது 20 டன் எடை கொண்ட பாறாங்கற்களை வைத்திருக்கிறார்கள். மேலும், அந்தப் பகுதியில் கோபுரம் போன்று கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அறிவியல் தொழில்நுட்பம் சாத்தியமாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் குள்ளர்கள் இவ்வளவு துல்லியமாக எப்படி தங்களுடைய வாழ்விடத்தை அமைத்துக்கொண்டார்கள் என்கிற கேள்வி, அதைப்பார்க்கும் எவருக்கும் எழும்!

போதைமலை

`உண்மையில் இங்குக் காணப்படுபவை குள்ளர்களின் இருப்பிடமா... அல்லது வேறு ஏதேனும் வரலாற்று பொக்கிஷமா?’ என்று கல்வெட்டு ஆய்வாளர் துரைசாமியிடம் கேட்டோம். 

``போதைமலையில் குள்ளர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுவது முழுக்க முழுக்க யாரோ கிளப்பிவிட்ட கட்டுக்கதை. இங்கே புதையல் ஆய்வாளர் துரைசாமிஇருக்கிறது என்று யாரோ கூறியதை கேட்டுக்கொண்டு பல பேர் இங்கு வந்து செல்கிறார்கள். மலையில் இருக்கும் அந்த சிறிய வீடுகளைப் பார்க்கும்போது அவையெல்லாம் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் வகையைச் சேர்ந்தவையாக இருக்க வேண்டும். புதிய கற்காலத்தை சேர்ந்த சில ஆயுதங்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால் இதைச் சொல்கிறேன். அவையெல்லாம் மூதாதையர் நினைவாகக் கட்டப்பட்டவையாக இருக்கும். 

அந்தக் காலத்தில் எல்லாம் வயது முதிர்ந்த பின்னர் உடல் தளர்ந்து உயிர் மட்டும் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும். அப்படிப்பட்ட முதியோர்களைக் கொண்டு வந்து இங்குவிட்டு, மிகப் பெரிய கற்களைக் கொண்டு மூடியிருப்பார்கள். இவை அனைத்தும் கல்லறை இடமாக இருந்திருக்க வேண்டும். இவ்வளவு துல்லியமாக எப்படிக் கற்களை வெட்டினார்கள், துளைகளை அமைத்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் மட்டும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், இதனைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை” என்கிறார் துரைசாமி. 

எது எப்படியோ போதைமலை பயணம் அலாதியான ஒன்றுதான்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க