தனிநபர் விபத்து பாலிசித் தொகை ரூ.15 லட்சமாக உயர்வு! | Mandatory personal accident cover for vehicle owners raised to Rs 15 lakh

வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (21/09/2018)

கடைசி தொடர்பு:20:20 (21/09/2018)

தனிநபர் விபத்து பாலிசித் தொகை ரூ.15 லட்சமாக உயர்வு!

தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது.

வாகன உரிமையாளர்களுக்கான குறைந்தபட்ச தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்திலிருந்து 15 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் உயர்த்தியுள்ளது. இதற்கான ஆண்டு பிரீமியம் 750 ரூபாயாக இருக்கும். சாலை விபத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தனிநபர் விபத்து பாலிசி

தற்போது வரை கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, வாகன உரிமையாளர் இறந்தால், இரு சக்கர வாகனம் என்றால், ஒரு லட்சம் ரூபாய், நான்கு சக்கர வாகனம் என்றால், இரண்டு லட்சம் ரூபாய், இழப்பீடு தொகையை, அவரின் வாரிசுகள் பெறலாம். இந்தத் திட்டம் 2002 ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்தது. அதற்கு முன், இந்த இழப்பீட்டு தொகையும் கிடையாது.

இந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள தனிநபர் விபத்து பாலிசிக்கான ஆண்டு பிரீமியம் (15 லட்சம் ரூபாய்க்கு) 750 ரூபாயாகும். முன்னர் இது இரு சக்கர வாகனத்துக்கு 50 ரூபாயாகவும், நான்கு சக்கர வாகனத்துக்கு 100 ரூபாயாகவும் இருந்தது. 

15 லட்சம் ரூபாய்க்கு மேல் பாலிசி தொகையை விரும்புபவர்கள், அதிக தொகையிலான பிரீமியத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று ஐ.ஆர்.டி.ஏ எனப்படும் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (The Insurance Regulatory and Development Authority of India - IRDAI) தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் சி.இ.ஓ-வுமான தபான் சிங்கல், இது ஒரு முக்கியமான மற்றும் சரியான நடவடிக்கை என்றும், பாலிசிதாரர்கள் ஒருவேளை விபத்தில் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ, அவருக்கு அல்லது அவரின் குடும்பத்தினருக்கு ஒரு சிறந்த நிதி ஆதாரமாக இது அமையும் என்றும் கூறியுள்ளார். 

முன்னதாக சாலை விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை, கடந்த 2017-ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையால்தான், விபத்து ஏற்படுகிறது. தானாக யாரும் காயத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை; இறப்பதற்கும் முன்வருவதில்லை. வாகனங்களை ஓட்டும்போது, சிறிய தவறுகள், தடுமாற்றம் காரணங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. உரிமையாளருக்கு ஏற்படும் உயிரிழப்பு, காயங்களால், அவர்களின் வாரிசுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

தனி நபர் விபத்து பாலிசி திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன், அமலுக்கு வந்தது. அப்போது, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, போதுமானதாக இருந்திருக்கலாம். தற்போது, மருத்துவ சிகிச்சை செலவு அதிகமாகிவிட்டது. வாகன விபத்துகளால் உயிரிழப்பு, படுகாயங்கள் ஏற்படும்போது பாதிக்கப்படுவது, அவர்களின் வாரிசுகளும்தான். அவர்களின் குடும்பமே முடங்கிப் போய்விடுகிறது.

வாகனம் ஓட்டுபவரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்தில், மூன்றாம் நபர் உயிரிழந்தாலோ, படுகாயம் ஏற்பட்டாலோ, அவரின் குடும்பத்துக்கு, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து போதிய இழப்பீடு கிடைக்கும். அதுவே, வாகன உரிமையாளரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு, உயிரிழந்தாலோ, காயம் அடைந்தாலோ, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கிடைக்காது; இது, துரதிர்ஷ்டவசமானது.

எனவே, அதிகரிக்கும் மருத்துவ சிகிச்சை செலவு, அன்றாட வாழ்க்கை செலவு உயர்வின் அடிப்படையில், கட்டாய தனிநபர் விபத்து பாலிசி தொகையை, 15 லட்சத்துக்கும் குறையாமல் உயர்த்த வேண்டும்" எனக் காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க