செலவு விகிதம் குறைவு: செபி நடவடிக்கையால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்? | SEBI action: The cost rate is low

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (21/09/2018)

கடைசி தொடர்பு:12:56 (01/10/2018)

செலவு விகிதம் குறைவு: செபி நடவடிக்கையால் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்?

மியூச்சுவல்  ஃபண்டுகளில் முதலீடு ரூ. 25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில் செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மிக அதிகத் தொகையை  நிர்வகிக்கும் திட்டங்களுக்கு இந்தச் செலவீனத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது செபி.

இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையைக் கட்டுப்படுத்தும் செபி அமைப்பு, சமீபத்தில்  மியூச்சுவல் ஃபண்டுகளின்  மொத்தச் செலவு விகிதத்தைக் குறைத்துள்ளது. முன்னர் 2.5% என இருந்தது. தற்போது 1.5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 

அட்டவணை

மொத்த செலவு விகிதம் ( Total expense ratio TER)

அது என்ன மொத்த செலவு விகிதம்? ஒவ்வொரு  ஃபண்ட் திட்டத்துக்கும் அதை நிர்வகிப்பதற்காக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளும். அந்தத் திட்டத்தை சந்தைப்படுத்துவதற்கான செலவும் இதில் அடங்கும். இந்தச் செலவு மற்ற நாடுகளோடு ஒப்பீட்டால்,  இந்தியாவில் அதிகம் என்று செபி  அமைப்பு சொல்லிக்கொண்டே இருந்தது. தற்போது, மியூச்சுவல்  ஃபண்டுகளில் முதலீடு ரூ.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மிக அதிகத் தொகையை  நிர்வகிக்கும் திட்டங்களுக்கு இந்தச் செலவீனத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது செபி. இதனால் யாருக்கு லாபம் என்று பார்க்கலாம். 

யாருக்கு லாபம்?

உதாரணமாக, ஒரு  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஒரு திட்டத்தில் சுமார் 10,000 கோடி நிர்வகித்துவருகிறது என்று வைத்துக்கொள்வோம் தற்போது அதன் மொத்த செலவு விகிதம் 1.75 சதவிகிதம் என்று இருந்தால், ரூ.10,000 ஒருவர் முதலீடு செய்தால் ரூ.175 கழித்துக் கொள்ளப்படும். தற்போது அது, 1.5% ஆக குறைக்கப்படும்போது 0.25% குறைகிறது. முதலீட்டாளர்களுக்கு ரூ. 25 அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.  ஒவ்வொரு தடவை முதலீடு செய்யும்போதும் ரூ. 25 அதிகமாக அவரின் கணக்கில் சேர்கிறது. இதுபோல 20 வருட முதலீட்டில் 15 சதவிகித லாபம் கிடைத்தால், நமக்கு அதிகமாகக் கிடைக்கும் தொகை சுமார் ரூ. 40,000 ஆக இருக்கும்.

sebi

யாருக்கு பாதிப்பு? 

செபியின் புது நடவடிக்கையால் பெரிய திட்டங்களை நிர்வகித்துவரும் நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படும். மேலும் ஃபண்டு நிறுவனங்கள், திட்டங்களைச் சந்தைப்படுத்துவதற்கான செலவுகளைக் குறைத்துக்கொள்ளும். மேலும், ஏஜென்ட்டுகளுக்குக் கிடைக்கும் தொகை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. 

செலவைக் குறைத்தால் மியூச்சுவல் நிறுவனம் சந்தைப்படுத்துவது குறையும் என்று கூறப்படுகின்றது. அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காலமே பதில் சொல்லும். இந்த நடவடிக்கைகளால் புதிய முதலீட்டாளர்களுக்கு லாபம் என்ற நோக்கில் முதலீடுகள் வரவேண்டும் என்பதே செபியின் எதிர்பார்ப்பு.