வெளியிடப்பட்ட நேரம்: 12:26 (22/09/2018)

கடைசி தொடர்பு:17:52 (22/09/2018)

இந்த 6 விஷயங்களைச் செய்தால் உங்கள் காரின் மைலேஜ் அதிகரிக்கும்!

என்னதான் கார்களில் ட்ரிப் மீட்டர், மைலேஜ் மீட்டர் இருந்தாலும், நாம் ஒவ்வொருமுறையும் காரில் போடும் பெட்ரோல்/டீசலுக்கு, வாகனம் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதைக் கச்சிதமாகக் கண்டுபிடிப்பது கடினமாகத்தான் இருக்கிறது!

`உங்க வண்டி என்ன மைலேஜ் தருது பாஸ்?' - ஒருகாலத்தில் புதிதாக கார் வாங்குபவர்களின் முதல் கேள்வியாக இருந்த இது, தற்போது வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரின் மனதிலும் தவிர்க்க முடியாத சந்தேகமாக மாறிவிட்டது. அதற்கேற்றபடி, நாடெங்கும் புதிய உச்சத்துக்கு சென்றிருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல்/டீசல் விலையே இதற்கான முக்கியக் காரணம் (பெட்ரோல் - 85.58 ரூபாய்; டீசல் - 78.10 ரூபாய்).

சரியாக ஓர் ஆண்டுக்கு முன்னால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 73.05 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலின் விலை 61.82 ரூபாயும் இருந்தது. ஆக, பெட்ரோல்/டீசலுக்கு இடையேயான விலை வித்தியாசம், ஒரு வருடத்தில் 11.23 ரூபாயிலிருந்து 7.48 ரூபாய்க்குச் சரிந்திருக்கிறது. இப்படி நிலைமை கட்டுக்குள் வராமல் சென்றுகொண்டிருப்பதால், கார் தயாரிப்பாளர்கள் தமது புதிய தயாரிப்புகளின் மைலேஜை ஸ்பெஷலாகக் குறிப்பிடுவதையும் பார்க்க முடிகிறது.

மைலேஜ்

ஆனால், இது சாலைகளில் காரை ஓட்டாமல் `Indian Driving Cycle'-க்கு ஏற்ப வரையறுக்கப்பட்ட விதிகளின்படி `Rolling Dyno' அமைப்பில் ARAI-க்குச் சொந்தமான லேப்பில் டெஸ்ட் செய்யப்படும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனாலேயே அராய் மைலேஜுக்கும் ஆன்-ரோடு மைலேஜுக்கும் ஏக வித்தியாசம் இருப்பது புலப்படும். ஏனெனில், தினசரி டிராஃபிக், சாலையின் நிலை ஆகியவை லேப் டெஸ்ட்டில் இருக்காது. எனவே, என்னதான் கார்களில் ட்ரிப் மீட்டர், மைலேஜ் மீட்டர் இருந்தாலும், நாம் ஒவ்வொருமுறையும் காரில் போடும் பெட்ரோல்/டீசலுக்கு, வாகனம் எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை கச்சிதமாகக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய தொகுப்பை இப்போது காணலாம். 

ஃபுல் டேங்க் செய்ய வேண்டும்

பெட்ரோல்

`பெட்ரோல்/டீசல் இருக்கிற விலைவாசியில, ஃபுல் டேங்க் போடச் சொல்லி வெறுப்பேத்துறீங்களா?' என உங்களின் கோபக்குரல் கேட்கிறது. இருந்தாலும், நீங்கள் பயணித்த தூரத்துக்கு உங்கள் கார் எவ்வளவு எரிபொருளைப் பயன்படுத்துகிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்கான சுலபமான வழி இதுதான். பங்குக்குச் சென்று காரில் எரிபொருளை நிரப்பும்போது, அதிக அழுத்தத்தில் டேங்க்குக்குள்ளே நுழையும் எரிபொருள் ஆனது, ஏற்கெனவே டேங்க்கில் இருக்கும் காற்றை வெளியே அனுப்பிவிடும்.

தற்போதைய மாடர்ன் கார்களில் இருக்கும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம், பயன்படுத்தாத எரிபொருளை மீண்டும் டேங்க்குக்கே அனுப்பக்கூடிய திறனைப் பெற்றுள்ளன என்பதையும் நினைவில்கொள்ளவும். எனவே, எரிபொருள் அளவு கட்-ஆப் ஆன பிறகே, காரின் டேங்க்கை ஃபுல் செய்ய வேண்டும். அதேபோல எரிபொருள் பைப்பை டேங்க்கின் வாய்ப்பகுதிக்குள்ளே முழுமையாக வைத்திருப்பதைவிட, மேலோட்டமாக வைத்திருக்கும்போது இன்னும் அதிக எரிபொருளை டேங்க்குக்குள் செலுத்த முடியும். இதற்காக காரை ஒருமுறை அலுங்கிக் குலுக்க வேண்டாம் மக்களே!

ஒரே பங்க்கில் எரிபொருள் நிரப்பவும்

பங்க்

உங்கள் காருக்கு விலை மதிப்புள்ள பெட்ரோல்/டீசல் போடுவதைவிட, எந்த பங்க்கில் அதை வாங்குகிறோம் என்பதும் கவனிக்கத்தக்க அம்சம். எனவே, கன்சிஸ்டன்ஸிக்காக பெரும்பாலும் ஒரே பங்க்கில் உங்கள் காருக்கான எரிபொருளை நிரப்பிக்கொள்வது நலம். இவற்றில் காணப்படும் எலெக்ட்ரானிக் பம்ப் துல்லியமாக இருக்கின்றன என்றாலும், வெவ்வேறு பங்க்குகளில் மெல்லிய வித்தியாசம் இருக்கலாம். ஏனெனில், ஒரு பிராண்டு பெட்ரோல்/டீசல் (BP, ESSAR HP, IOCL, RELIANCE, SHELL) என மெயின்டெயின் செய்யாமல் இருந்தால், அது உங்கள் காரின் மைலேஜை பாதிக்கலாம். சிற்சில இடங்களில் அந்தந்த எரிபொருள் நிறுவனங்களே தமக்குச் சொந்தமாக பங்க்குகளை நடத்திவருகின்றனர். அங்கே தரம் மற்றும் கொள்ளளவுக்கு கியாரன்ட்டி தரலாம். மறவாமல் டயர் காற்றழுத்தத்தையும் செக் செய்யவும். காஸ்ட்லி என்றாலும், முடிந்தால் நைட்ரஜன் அடித்துக்கொள்வது பல வகையில் ப்ளஸ்ஸாக இருக்கும். விலை அதிகமான ப்ரிமியம் பெட்ரோல்/டீசலும் பயன்படுத்தலாம். 

ஓடோமீட்டர் மற்றும் ட்ரிப்மீட்டர்

இன்ஸ்ட்ரூமென்ட்

ஓரளவுக்கு பர்ஃபெக்ட்டான மைலேஜைக் கண்டுபிடிக்க, காரின் ஓடோமீட்டர் மற்றும் ட்ரிப்மீட்டரை கருத்தில்கொள்ளவும். ஓடோமீட்டரில் உங்கள் கார் இதுவரை எவ்வளவு கிமீ ஓடியிருக்கிறது என்பதும், ட்ரிப்மீட்டரில் செட் செய்யப்பட்ட குறிப்பிட்ட தருணத்திலிருந்து முடியும் வரை எவ்வளவு கிமீ ஓடியிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். பெரும்பான்மையான கார்களில் இப்போது 2 ட்ரிப் மீட்டர்கள் இருப்பதால், முதல் Trip A மீட்டரை டேங்க்கில் எரிபொருள் நிரப்பும்போது செட் செய்துவிட்டு, அது முடியும்போது ரீ-செட் செய்துகொள்ளலாம். நீங்கள் போவது நீண்டதூரம் என்றால், Trip B மீட்டரை ரிட்டர்ன் வரும்போது பயன்படுத்திக்கொள்ளலாம். காரின் டிஸ்பிளேவில் DTE இருந்தால் இன்னும் சூப்பர்.

காரை ஓட்டும் முறை

ரோடு

நீங்கள் உங்கள் காரை ஓட்டும் சாலை அல்லது கூடுதலாக ஏற்றும் பொருள்கூட, காரின் மைலேஜில் பெரிய தாக்கத்தைக் கொண்டுவரலாம். வழக்கமான பாதையிலிருந்து விலகி, மாற்றுப்பாதையில் சென்றால் அது இன்னும் மைலேஜைக் குறைக்கும். எனவே, முடிந்தவரை நீங்கள் காரை ஓட்டும் முறை மற்றும் வழி ஆகியவற்றை சீர்படுத்திக்கொள்ளுங்கள். ஏசி அளவு, கியர் மாற்றும் முறை, டயர் பிரஷர், பிரேக் பயன்பாடு ஆகியவை இதில் அடங்கும்.

காரின் கண்டிஷன்

டயர்

ஒரு காரின் மைலேஜில், டயர் காற்றழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறைவான காற்றழுத்தத்தைக்கொண்ட டயர், வழக்கத்தைவிட சுழல்வதற்குக் கஷ்டப்படும். எனவே, கார் சீராக ஓடுவதற்கு இங்கே வழக்கத்தைவிட அதிக எரிபொருள் தேவைப்படும். அதிக காற்றழுத்தம் இருந்தால், அது காரின் ஓட்டுதல் தொடங்கி டயர் தேய்மானம் மற்றும் சஸ்பென்ஷனைப் பாதிக்கும். மேலும் ஏர் ஃபில்டர், இன்ஜின் ஆயில், கூலன்ட்/Fluids ஆகியவை சரியான அளவில் கண்டிஷனில் இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்துகொள்ளவும். கார் சுத்தமாக இருந்தாலே எல்லாம் கரெக்ட்டாக இயங்கும். ஆக, வார இறுதி நாளில் இதையெல்லாம் செக் செய்யவும்.

தொழில்நுட்பத்தின் உதவி

நேவிகேஷன்

இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில் எல்லாவற்றுக்கும் ஆப்கள் வந்துவிட்டன. எனவே, கார்களில் போடும் எரிபொருளின் அளவு, சர்வீஸ் ஷெட்யூல், EMI கால்குலேஷன், மேப், டிப்ஸ் எனப் பலவற்றுக்கும் ஆப்கள் இருக்கின்றன. இது ஜிபிஎஸ்-ஸை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் என்பதால், பெரும்பாலும் இவை தரும் டேட்டா தெளிவாகவே இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க