வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (22/09/2018)

கடைசி தொடர்பு:16:50 (22/09/2018)

``அப்துல்கலாம் வழியில் நானும் பயணிக்கிறேன்!”- மயில்சாமி அண்ணாதுரை

கலாம் வழியில் மயில்சாமி அண்ணாதுரை

அப்துல் கலாம் போலவே மாணவர்களோடு கலந்துரையாடுவதில் ஆர்வம் கொண்ட ஓய்வுபெற்ற இஸ்ரோ அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளிக்கு வந்திருந்தார். அவரிடம் நாம் முன் வைத்த கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றுவதை அறிவியல் தொழில்நுட்பம் மூலமாக மாற்றமுடியும் என்பதை அறிவியல் ஏற்கெனவே நிரூபித்திருக்கிறது. அந்தந்த மாநில அரசுகளும், சமுதாயமும் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் மனிதர்களைப் பயன்படுத்தாமலேயே கழிவுகளை அகற்ற முடியும். அதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.

செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் முன்னேறி இருந்தாலும் வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமானதாக இல்லையே? 

மழை வரப்போவதையும் மழை நீர் எங்கு தேங்கும் என்பது குறித்தும் தொலை உணர்வு மையங்கள் மூலமாக நம்மால் சொல்லிவிட முடியும். முன்பெல்லாம் மேகக் கூட்டங்கள் அதிகமாக இருக்கும்போது மழையின் அளவைக் கணிக்க முடியாமல் இருந்தது. ஆனால், இப்போது செயற்கைக் கோள்கள் மூலமாக மழை வருவதற்கு முன்பே அதைச் சொல்லிவிட முடியும். ஆனால், இந்தச் சமிஞ்சைகளை எல்லாம் தாண்டி நகர்ப்புற கட்டமைப்பை நாம் எப்படி நிர்ணயித்து இருக்கிறோம் என்பது  கவனிக்க வேண்டிய விஷயம்.

முன்பு மாணவர்களோடு உரையாடுவதற்கும் ஓய்வுபெற்ற பிறகு உரையாடுவதற்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?

இப்போது நிறைய நேரம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன். கலாம் வழியிலேயே தொடர்ந்து பயணிக்கிறேன். எதிர்காலத்தில் சில திட்டங்களையும் யோசித்திருக்கிறேன். என்னுடைய நண்பர்கள், துறை வல்லுநர்கள் என அனைவரும் மாணவர்களோடு உரையாட முன்வர வேண்டும்.