பல நாள்களாக முகத்தைப் பராமரிக்கவில்லையா?! மம்மி மாஸ்க் பயன்படுத்தலாம்! #BeautyTips | Special beauty tips for your makeover using Apple

வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (23/09/2018)

கடைசி தொடர்பு:18:16 (23/09/2018)

பல நாள்களாக முகத்தைப் பராமரிக்கவில்லையா?! மம்மி மாஸ்க் பயன்படுத்தலாம்! #BeautyTips

வெயிலால் சருமம் கறுத்துப்போன பெண்களும், முகத்தை மாதத்துக்கு ஒரு தடவைகூட பராமரிக்க முடியாத பெண்களும் இந்த மம்மி மாஸ்க் தெரபியை டிரை பண்ணுங்கள். சருமம் பளிச்சென்று மாறிவிடும்.

வேலை... வேலை... வேலை என்று அவ்வை சண்முகி ரேஞ்சுக்கு வீடு, ஆபீஸ், குழந்தைகள் என ஓடிக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். இதில் தினமும்கூட அல்ல, வாரத்துக்கு ஒரு தடவைகூட அழகுக்கு மெனக்கெட முடிவதில்லை பெண்களால். அப்படிப்பட்டவர்கள் இந்த  'மம்மி மாஸ்க் தெரபி'யை முயன்று பார்க்கலாம் . கிடைக்கிற நேரத்தில் கீழே சொல்லப்பட்டிருக்கிற ஆப்பிள் கலவையைச் செய்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால் நேரம் கிடைக்கும்போது முகத்தில் அப்ளை செய்துகொள்ளலாம். முகத்துக்கு ப்ளீச், ஃபேஷியல் செய்த எஃபெக்ட் கிடைக்கும். அது என்ன மம்மி மாஸ்க் தெரபி? அழகுக்கலை நிபுணர் கீதா அசோக் சொல்கிறார்.

மம்மி மாஸ்க்

''ஒரு கனிந்த ஆப்பிளைத் தோல் சீவி, விதை நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். இந்த ஆப்பிள் பேஸ்ட்  3 டீஸ்பூன்,  ஆப்பிள் சிடர் வினிகர்  2 டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சோளமாவு  ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.  இந்த ஆப்பிள் பேக் திக்காக இருக்க வேண்டும். பேண்டேஜ் துணியை உங்கள் முகம் அளவுக்கு வெட்டி, அதில் கண் மற்றும் மூக்கு வருகிற இடங்களில் சின்னச்சின்ன வட்டமாக வெட்டி எடுத்துவிடுங்கள். இந்த பேண்டேஜ் துணியை முகத்தின் மீது போடுங்கள். அதன் மேல் திக்கான ஆப்பிள் பேக்கை தடவி விடுங்கள். இதன் மேலே மற்றொரு பேண்டேஜை  (மேலே சொன்னபடியே வெட்டி) போட்டுக்கொள்ளவும். அரை மணி நேரம் முகத்தில் இது ஊற வேண்டும். இதை ஆப்பிள் பேக் தெரபி அல்லது மம்மி மாஸ்க் தெரபி என்று சொல்வோம். இந்த மாஸ்க்கை முகத்தில் போட்ட பிறகு அதை கைகளால்  லேசாக அழுத்தி விட வேண்டும். அப்போதுதான் ஆப்பிள்சாறும், ஆப்பிள் சிடர் வினிகரும் சருமத்தின் அடி ஆழம் வரை சென்று சருமத்தைப் பளிச்சிட வைக்கும், வெயிலால் சருமம்  கறுத்துப்போன பெண்களும் , முகத்தை மாதத்துக்கு ஒரு தடவைகூட பராமரிக்க முடியாத பெண்களும் இந்த மம்மி மாஸ்க் தெரபியை டிரை பண்ணுங்கள். சருமம் பளிச்சென்று மாறிவிடும் . 

அழகு

இந்த அழகு சிகிச்சைக்கு ஏற்றது, விரல் வைத்து அழுத்தினாலே அழுந்துகிற ஆப்பிள்தான் . அந்தளவுக்குக் கனிந்த ஆப்பிள்தான் எஃபெக்டிவாக சருமத்தில் வேலை பார்க்கும். காயாக இருக்கிற ஆப்பிளைத் பயன்படுத்தினால் , ஹைப்பர் சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது . முக சருமத்தில் அரிப்பு உண்டாகும் அல்லது வியர்க்குரு போல முகத்தில் பொரி பொரியாக வந்துவிடும்.  

கீதா அசோக்நான் மேலே சொன்ன ஆப்பிள் பேக்கை வார இறுதியில் ரெடி செய்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டால், அது  15 நாள்கள்  வரை கெடாது. தேவைப்படும்போது சிறிதளவு எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், சோள மாவை மட்டும் முகத்தில் போடும்போதுதான் சேர்க்க வேண்டும். 

இது ஆப்பிள் சீசன் என்பதால்,  ஆப்பிளை வைத்துச் செய்கிற தலைமுடிக்கான ஒரு டிப்ஸையும் சொல்லிவிடுகிறேன். 

தலைமுடியை நீண்ட நாள்கள் பராமரிக்காமல் விட்ட பெண்கள் , ஒரு ஆப்பிளைத் தோல் சீவி, விதை நீக்கி அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த ஆப்பிள்  3 டீஸ்பூன், தேன் டீஸ்பூன்  1 டீஸ்பூன், விளக்கெண்ணெய் 1 டீஸ்பூன், கிளிசரின் 1 டீஸ்பூன், சர்க்கரை  2 டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளவும். இதை ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு, ஒரு நாள் முழுக்க அறை வெப்பநிலையில் வைத்துவிடவும். மறுநாள் காலையில், முடியைச் சிக்கில்லாமல் வாரி, சின்னச்சின்னக் கற்றைகளாகப் பிரித்து, ஆப்பிள் கலவையை தடவ வேண்டும். தலையில் ஷவர் கேப் போட்டுக் கொண்டு  2 மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும்.  பிறகு, நார்மல் தண்ணீரில் அலசி விட வேண்டும். சுடுநீர் பயன்படுத்தக்கூடாது. உடனே கூந்தலில் எந்த வித்தியாசமும் தெரியாது. மறுநாள்  தலையை வாரினால், கூந்தல்  நிஜமாகவே பட்டுப்போல பளபளப்பாகும்.

கூந்தல் பராமரிப்பு

ஆப்பிளில் இருக்கிற பெக்டின் கூந்தலுக்குப் பளபளப்பையும் மிருதுத்தன்மையையும் கொடுக்கவல்லது. ஆனால், இதைச் செய்துகொள்வதற்கு முந்தைய நாளே கூந்தலில் நன்கு அழுக்குப்போக எண்ணெய்க்குளியல் எடுத்திருக்க வேண்டும்.''

என்ன இந்த வீக் எண்ட் ஆப்பிளை வைத்து உங்கள் சருமத்தையும் கூந்தலையும் பராமரிக்க நீங்கள் ரெடிதானே..?


டிரெண்டிங் @ விகடன்