Published:Updated:

“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு!”
“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு!”

சக்தி தமிழ்ச்செல்வன், படங்கள்: க.பாலாஜி

பிரீமியம் ஸ்டோரி

மார்கழியில் நடந்தது மக்கள் இசைப் புரட்சி! இதுவரை மரணவீடுகளிலும், குறுக்குச் சந்துகளிலும், ஆடி மாதத் திருவிழாக்களிலும் மட்டுமே ஒலித்த சட்டி மேளம், பறை இசைக்கருவிகளுடன் கோட் சூட் அணிந்த பாடகர்கள் மேடை ஏறிய  அந்த இசை நிகழ்வு சென்னை இதுவரை கண்டிராத மாற்றத்துக்கான முதல் நிகழ்வு!

“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு... அதனாலதாண்டா கொடுக்குறாங்க கோட்டாவுல சீட்டு...

உதவியில்லடா அதன்பேர் உதவியில்லடா... உன் காலடியில் பிழைப்பதெல்லாம் பதவியில்லடா...

கூலிக்கு மாரடிச்ச காலமெல்லாம் போச்சுடா...காலுக்குச் செருப்பு வந்து ரொம்ப நாளு ஆச்சுடா...

மாட்டப் புடிச்சி கட்டி வச்ச கைகளைப் பாரு... இப்ப நோட்டப் புடிச்சி போறோம்டா நாங்களும் ஸ்கூலு...

ஆயிரம் வருஷமாச்சு நிலைமைய மாத்த... நீ இலவசம்னு சொல்லதடா தகாத வார்த்த...

சலுகையில்லாடா... சலுகையில்லாடா... என் உரிமையைத்தான் பறிக்க உனக்கு உரிமையில்லடா...’’

- என அறிவின் வார்த்தைகளில் அறிவும் முத்துவும் பாட, போர்க்குரலாக ஒலித்தது இட ஒதுக்கீட்டுப் பாடல்!

ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக மாற்றத்துக்கான சமத்துவ விதை மனித மனங்களில் ஆழமாக வீசப்படுவதற்கான முயற்சிகள் நடக்கின்றன. அப்படியான ஒரு முயற்சியைத் தங்கள் கானா இசையின் வழியாக விதைத்தது The Casteless Collective இசை நிகழ்ச்சி. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும், மெட்ராஸ் ரெக்கார்ட்ஸும் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.
 “சென்னையப் போல ஊரே இல்ல, சென்னைய நம்பி வாடா உள்ள’’ என கானாவின் தாய்வீடான சென்னையை வரவேற்று ஒலித்த முதல் பாடல் சாதாரண இசை நிகழ்ச்சிக்கான முன்னோட்டத்துடனேயே தொடங்கியது. ஆனால், போகப்போக பாடல்வரிகளிலும் இசையிலும் அரசியல் அனல் பறந்தது. 

“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு!”

குணா, பாலச்சந்தர், முத்து, தரணி, தினேஷ், நந்தன், கௌதம், சரத், இபு என ஒவ்வொருவரின் குரலிலுமே ஒலித்தது சாதிக்கு எதிரான சமூக நீதி. குழுவின் ஒரே பெண் பாடகரான இசைவாணியும் கானா பாடல்களால் பின்னிப் பெடலெடுத்தார்.  

“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு!”

இட ஒதுக்கீட்டுப் பாடல், ஆணவப் படுகொலைக்கு எதிரான பாடல், விவசாயக் கூலிகளின் துயரைச் சொல்லும் பாடல், மீனவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் பாடல், பிளாட்பார்ம் பாடல், மனிதர்களே மலம் அள்ளும் இழிவுக்கு எதிரான பாடல் எனப் பல பாடல்கள் பார்வையாளர்களையும் போராட்டத்துக்கு அழைத்தன.

தாராவியிலிருந்து ஸ்டோனி சைக்கோ, டோப் டேடி, அபிஷேக் என மூன்று மும்பை இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் ‘ராப்’ இசையைச் சென்னை கானாவுடன் இணைத்து அசத்தினார்கள். இவர்கள் `காலா’ படத்திலும் பாடியிருக்கிறார்கள்.

“உன் பாட்டனெல்லாம் வெச்சான்டா என் பாட்டனுக்கு வேட்டு!”

சென்னையின் ‘குரங்கன்’ இண்டிபெண்டன்ட் இசைக்குழுவின் தயாரிப்பாளர் டெம்னா  குழுவின் ஒட்டுமொத்த இளைஞர்களுக்கும் பாடல் தயாரிப்பில் உறுதுணையாக இருந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து கிடார் இசைக் கலைஞர் சாஹிப் சிங்கும், டிரம்ஸ் பிளேயர் சௌந்தர்ராஜனும் குரங்கனிலிருந்து வந்திருந்தார்கள்.   ஐ.ஏ.எஸ் போட்டித் தேர்விற்குத் தயாராகிவரும் அறிவின் எழுத்துகள்தான் பாடல்களில் தெறித்த அத்தனை அரசியல் கருத்துகளும். செல்லமுத்துவும்,  லோகனும் சில பாடல்களைப் பாடி எழுதியிருந்தனர்.

``மாற்றத்துக்கான அரசியலைக் கலைகளின் வழியே கொண்டு செல்வதற்கான ஒரு முதற்கட்ட முயற்சிதான் இந்த இசை நிகழ்ச்சி. இளைஞர்கள் அனைவரும் அரசியல் வயப்படுங்கள், தங்களுக்கான அரசியலைப் புரிந்துகொள்ளுங்கள். அதுதான் சமத்துவத்துக்கான வழி’’ என்றார் பா. ரஞ்சித்.

அரசியலுக்குக் கலையே ஆயுதம் என்று அரங்கமும் ஆமோதித்து ஆர்ப்பரித்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு