அமேசானின் 'ட்விட்ச்' கேமிங் ஆப், சீனாவில் தடை விதிக்கப்பட்டது ஏன்?! | Reasons behind banning Twitch app in China

வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (23/09/2018)

கடைசி தொடர்பு:20:19 (23/09/2018)

அமேசானின் 'ட்விட்ச்' கேமிங் ஆப், சீனாவில் தடை விதிக்கப்பட்டது ஏன்?!

இவ்வளவு பாப்புலரான ஆன்லைன் கேமிங் ஆப் சீனாவில் தடைசெய்யப்படுவதற்குக் கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளே முக்கிய காரணமாக அமைந்தன.

அமேசானின் 'ட்விட்ச்' கேமிங் ஆப், சீனாவில் தடை விதிக்கப்பட்டது ஏன்?!

மேசான் நிறுவனத்தின் பிரபலமான லைவ் ஸ்ட்ரீமிங் கேமிங் ஆப் ட்விட்ச் (Twitch) சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஸ்டோரிலிருந்தும் இந்த ஆப் நீக்கப்பட்டுள்ளது. தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களுக்கு இணையதளங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாகக்கூறி, வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் போன்றவற்றைச் சீன அரசாங்கம் ஏற்கனவே முடக்கியுள்ளது. அதேபோல தற்போது இந்த கேமிங் ஆப் தடைசெய்யப்பட்டிருப்பது அமேசான் நிறுவனத்திற்கு மட்டுமின்றி, சீன மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்ச்

கடந்த 2014, ஆகஸ்ட் மாதத்தில்தான் ட்விட்ச் நிறுவனத்தை 970 மில்லியன் அமெரிக்க டாலருக்கு அமேசான் நிறுவனம் விலைக்கு வாங்கியது. அதன்பின் ட்விட்ச் லைவ் ஸ்ட்ரீமிங் கேம் உலகம் முழுவதும் பிரபலமானது. இந்த ஆப்-ஐ உலகம் முழுக்க சுமார் 15 மில்லியன் மக்கள் தினமும் பயன்படுத்துகிறார்கள். நடப்பு 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில், சர்வதேச அளவில் டாப் 20 வீடியோ கேம்களை ட்விட்ச் ஆப் மூலமாகப் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 82% என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கடுத்தபடியாக யூடியூப் கேமிங் ஆப் 18% பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

இவ்வளவு பாப்புலரான ஆன்லைன் கேமிங் ஆப் சீனாவில் தடைசெய்யப்படுவதற்குக் கடந்த மாதம் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளே முக்கிய காரணமாக அமைந்தன. ஆம், அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இ-ஸ்போர்ட்ஸை (E-Sports) ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் சேர்த்துக்கொள்ளலாமா என்ற யோசனை பரவலாக ஏற்பட்டது. எனவே நடந்துமுடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாகச் சோதனை அடிப்படையில் பாப்புலரான இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளை  சேர்த்திருந்தார்கள். இந்த விளையாட்டில் பங்குபெற்று சீனா 2 தங்கம் வென்றது. இந்தியா ஒரு வெண்கலம் வென்றது. (இது சோதனை அடிப்படையிலானது என்பதால் பதக்கப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை). அடுத்து, 2022-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை சீனா நடத்தவுள்ள நிலையில் அதில் இ-ஸ்போர்ட்ஸ் முதன்முறையாக சேர்த்துக்கொள்ளப்படும் எனத் தெரியவருகிறது. 2024ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும் இ-ஸ்போர்ட்ஸ் அங்கம் வகிக்கக்கூடும். 

amazon

ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஒளிபரப்பிய சிசிடிவி தொலைக்காட்சி நிறுவனம், இந்த இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுகளை மட்டும் ஒளிபரப்பவில்லை. எனவே அந்த டிவிக்கு மாற்றாக 'ட்விட்ச்' ஆப் மூலமாக சீன மக்கள் இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுப்போட்டியைக் கண்டுகளித்தனர். அதன்காரணமாக, சீன இளைஞர்களிடையே பாப்புலரான இந்த ஆப், சீனாவில் பாப்புலராக உள்ள இலவச ஆப்-களில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதுதான் சீன அரசுக்குப் பிடிக்காமல் போனது. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த எந்த நிறுவனமும் சீனாவில் வளர்ச்சி பெறுவதை அந்த அரசாங்கம் விரும்புவதில்லை. அதனால்தான் உடனடியாக அந்த ஆப்-புக்கு தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் ஆன்லைன் கேமிங் இண்டஸ்ட்ரியின் மதிப்பு 33 பில்லியன் டாலராக உள்ளது. இதுவே சீனாவில் 38 பில்லியன் டாலராக உள்ளது. அமெரிக்காவைவிடச் சீனாவில் இதன் வளர்ச்சி அதிகரித்திருப்பது இந்த அரசாங்கத்திற்கு உறுத்தலாக இருந்தது. எனவே ஆன்லைன் கேமிங் இண்டஸ்ட்ரிக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவெடுத்தது. சீன இளைஞர்களையும், சிறுவர்களையும் பெரிதும் ஈர்த்து, அவர்களது நேரத்தை வீணடிப்பதோடு, பண இழப்புக்கும் காரணமாக இருக்கும் முன்னணி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களின் லைசென்சுகளை புதுப்பிக்க மறுத்தது. இதன்படி தற்போது ட்விட்ச் லைவ் ஸ்ட்ரீமிங் கேமிங் ஆப் தடைசெய்யப்பட்டிருக்கிறது. அமேசானின் ட்விட்ச் நிறுவனத்தின் அதிரடி எழுச்சியும், தற்போதைய தடையும் சீன இளைஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


டிரெண்டிங் @ விகடன்