வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (24/09/2018)

கடைசி தொடர்பு:11:38 (24/09/2018)

இரு மடங்கான புலிகளின் எண்ணிக்கை! - பாராட்டுகள் நேபாள் #HatsOff

நவம்பர் 2017 முதல் ஏப்ரல் 2018 வரை நேபாள் புலிகளின் கணக்கெடுப்பு நடந்தது. 'டெராய் ஆர்க்' என்ற நிலப்பகுதி, பல்லுயிர்ச்சூழல் நிறைந்தது. இந்தியாவோடு அதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறது. நேபாளின் அதிகமான புலிகள் வாழும் பகுதியாக அது கருதப்படுகிறது. கேபரா டிராப்புகள், மனிதத் தேடல்கள் மூலமாகப் புலிகளின் இருப்பைக் கணக்கிட்டார்கள். அதற்கு முன், 2013-ம் ஆண்டு நடத்திய புலிகள் கணக்கெடுப்பில், அந்நாட்டில் 198 புலிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

சமீபத்திய கணக்கெடுப்பின் அறிக்கையை அந்நாட்டு அரசாங்கம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, நேபாளில் 235 புலிகள் வாழ்வதாக அறிவித்துள்ளார்கள். 2009-ம் ஆண்டு 121 புலிகளே வாழ்ந்துகொண்டிருந்த நாட்டில், தற்போது அதைவிட இரண்டு மடங்கு அதிகமான புலிகள் வாழ்கின்றன.

நேபாள்

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகளுக்கான உச்சி மாநாட்டில் ஓர் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. புலிகளின் வழித்தடங்களைக் கொண்டுள்ள நாடுகள், தத்தம் நாடுகளில் அவற்றின் எண்ணிக்கையை 2022-க்குள் இரண்டு மடங்காக உயர்த்த வேண்டுமென்பதே அந்த உறுதிமொழி. இதே வேகத்தில் சென்றால், அந்தத் தீர்மானத்தை முதல் ஆளாக நிறைவேற்றுவது நேபாளாகத்தான் இருக்கும்.

2011 முதல் 2018-க்குள் காண்டாமிருகங்கள் அந்நாட்டில் ஒன்றுகூட வேட்டையாடப்படவில்லை. கடந்த மே மாதம்தான் அதைக் கொண்டாடினார்கள். பல்லுயிர்ச்சூழலுக்கு அவர்கள் தந்த முக்கியத்துவத்துக்குப் பரிசாகத் தற்போது, மற்றுமொரு நற்பெயரும் வாய்த்துள்ளது. "நேபாளில் கணக்கெடுக்கப்பட்ட ஒவ்வொரு புலியும் உலகத்துக்கு மிக முக்கியமானது" என்கிறார் அந்நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் பிரதிநிதி டாக்டர். கானா எஸ் குருங் (Dr.Ghana S Gurung).

நடிகரும் சூழலியல் ஆர்வலருமான லியானார்டோ டிகாப்ரியோ, "நேபாளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாம் ஒன்றுபட்டு உழைத்தால், உலகின் பல்லுயிர்ச்சூழலைப் பாதுகாக்க முடியும். அப்போது, அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றுவதுகூட சிரமமாக இருக்காது; அதை நேபாள் நமக்கு உணர்த்தியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.