நீதிபதி... நவீன நாடகங்களின் முன்னோடி...!? பம்மல் சம்பந்த முதலியார் யார்? | Story about Pammal Sambandha Mudaliar on his death anniversary

வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (24/09/2018)

கடைசி தொடர்பு:17:58 (24/09/2018)

நீதிபதி... நவீன நாடகங்களின் முன்னோடி...!? பம்மல் சம்பந்த முதலியார் யார்?

பல்வேறு மொழிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தமிழ் நாடகமாக அரங்கேற்றி, உரையாடல் மூலம் சமூகக் கலாசார உணர்வுகளைப் பரப்பினார்.

நீதிபதி... நவீன நாடகங்களின் முன்னோடி...!? பம்மல் சம்பந்த முதலியார் யார்?

முத்தமிழில் உரைநடைத் தமிழாக விளங்குவது நாடகத் தமிழ். நடிகர், நடிகைகள், ஒளி அமைப்பு, ஒப்பனை, ஆடை அலங்காரம், அரங்க அமைப்பு என நாடகக் கலையின் மீது அதீத ஆர்வம்கொண்ட அனைவரும் தன் திறமையை வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர்ந்தனர். சமூக, வரலாற்று, புராண, குடும்ப நாடகங்கள் எனப் பல்வேறு வகையான நாடகங்களின் அன்றைய வீச்சு, நாட்டின் அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்ததாக இருந்தது. அப்படிப்பட்ட தமிழ் நாடகங்களின் தந்தை எனப் போற்றும் பம்மல் சம்பந்த முதலியாரைப் பற்றி இன்று தெரிந்துகொள்வதில், தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைகொள்ளலாம்.
 
1873-ல் பம்மலில் பிறந்த சம்பந்த முதலியார், சென்னையையே தனக்கான வாழ்க்கைக் களமாக அமைத்துக்கொண்டார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தொடங்கிய அவரின் கல்வி, நவீன ஆங்கில அறிவுடன் சிறந்து விளங்கியது. கல்விக்கு நடுவே சமூக மேம்பாடு குறித்தும் அவர் இளமையிலேயே ஆழ சிந்திக்கவும் தொடங்கினார். அதன் வெளிப்பாடாகவே ஏதேனும் ஒரு வகையில் மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வு, கருத்துப்பரிமாற்றம், தகவல் பகிர்தல் போன்ற சமூகநலச் செயல்களைச் செய்ய எண்ணினார்.

சம்பந்த முதலியார்மாநிலக் கல்லூரியில் பி.ஏ படித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடப்பிரிவு, சட்டக் கல்லூரியில் சட்டம் என, தன்னை சகல துறைகளிலும் தேர்ந்த அறிஞனாக  வடிவமைத்துக்கொண்டார். வழக்குகளைத் திறம்பட வாதாடி, குறைந்த செலவிலும் காலத்திலும் முடித்து, தன்னை நாடி வந்தோருக்கு நாளும் நலம் பல செய்தார். கடமையை கண்ணியத்தோடு ஆற்றிய இவரை, காலம் நீதிபதியாக்கி அழகு பார்த்தது. சிறந்த வழக்குரைஞராக எல்லோராலும் பாராட்டுப் பெறும் வகையில் உயர்ந்தார் சம்பந்த முதலியார். ஒவ்வொரு வழக்கிலும் தான் வழங்கும் நீதி, அறத்தைப் பாதுகாக்கும் வகையில் பார்த்துக்கொண்டார்.

பல்வேறு மொழிகளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்து தமிழ் நாடகமாக அரங்கேற்றி, உரையாடல் மூலம் சமூகக் கலாசார உணர்வுகளைப் பரப்பினார். கால நேரம் நிர்ணயிக்காமல் நடந்துகொண்டிருந்த நாடகத்தை, 3 மணி நேரம் என ஒரு கால அளவுக்குள் கொண்டுவந்து புதுமையைப் படைத்தார். கதை, நடிப்பு, இயக்கம், நவீன கருத்துகள்கொண்ட வசன உச்சரிப்பு, சீர்த்திருத்தமான காட்சியமைப்பு, நடிப்பு, ஆக்கமான சிந்தனை, தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொள்ளும் உழைப்பு இவற்றால் அபாரமான படைப்புகள் நாளும் வெளிவந்தன. கால நிகழ்வுகளை கவனத்தில்கொண்ட தேடல், கலை மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்ற செயல்படும் பாங்கு, மேல்நாட்டு அமைப்பு முறையிலான நாடகமாக்கம் எனச் செயல்பட்டு, அசைவற்றுப்போயிருந்த நாடகத்துக்கு உயிர் கொடுத்ததால்தான் இவரை `தமிழ் நாடகத் தந்தை' என வரலாறு வாரி அணைத்துக்கொள்கிறது. இதனால் தமிழ் நாடகத்தில் தலைப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரையிலான அனைத்துத் துறையிலும் புதுமையைப் புகுத்தி, அப்போதைய சமூக மாற்றத்துக்கு ஏற்ப ஆக்கக்கூறுகளைச் செய்ய முயன்றார் பம்மல் சம்பந்த முதலியார்.

நல்ல சிந்தனைகளுக்கும் தெளிவான செயல்களுக்கும் மக்கள் மத்தியில் எழுந்த வரவேற்பின் காரணமாக, உடன் இருந்த வி.கிருஷ்ணமாச்சார்லு மாதிரியான நண்பர்களின் உதவியுடன் 1891-ம் ஆண்டு சென்னையில் `சுகுண விலாச சபை' என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். அவர் எழுதிய நாடகங்களில் `புஷ்பவல்லி', `அமலாதித்யன்', `மனோகரா' போன்றவை முக்கியமானவை. இவரது குழுவில் ஆண்களே பெண் வேடமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கலை உலகில் நாடகத் துறையின் மூலம் ஆழ்ந்த தொண்டாற்றினார். இவரின் சாதனைகளை கெளரவப்படுத்தும்விதத்தில் 1959-ம் ஆண்டு `பத்ம பூஷண்' விருதை அளித்துப் பாராட்டியது இந்திய அரசு.

கலைத்தாயின் இளைய மகனாக காலம் கடத்திய இவர், 1964-ல் கலை உலகப் பணியையும் பயணத்தையும் முடித்துக்கொண்டார். இருப்பினும், கலையின் வழியே மக்கள் மனங்களில் இன்றும் மறையாதிருக்கும் அவரைப் போற்றி, அவரின் உன்னதப் படைப்புகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே, அவரின் நினைவுதினமான இன்று நாம் அவருக்கு செய்யும் உண்மையான அஞ்சலி. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close