Published:Updated:

நான் அகதி! - 16 - எங்கே என் வீடு?

நான் அகதி! - 16 - எங்கே என் வீடு?
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அகதி! - 16 - எங்கே என் வீடு?

மருதன்

ன்றைய வேலை முடிந்து ஹஷீம் களைப்புடன் வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது யாரோ

நான் அகதி! - 16 - எங்கே என் வீடு?

பின்தொடர்வது போலிருந்தது. திரும்பிப் பார்த்தார் ஹஷீம். திக்கென்றது. அதிகாரி ஒருவர் அருகில் வந்து நின்றார். நீங்கள் தவறே செய்யாவிட்டாலும் சீருடை அணிந்தவர்களைக் கண்டு உங்கள் உடலும் உள்ளமும் தன்னிச்சையாகப் பதறினால், நீங்களும் அகதியே.

‘`எங்கே உன் ஐடி?’’

ஹஷீம் தயங்கினார். ‘`என்னிடம் எதுவும் இல்லை. நான் ஒரு சிரியன்.’’

சொல்லிமுடித்ததுமே உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அச்சம் பரவுவதை உணர்ந்தார் ஹஷீம். ஸ்டேட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன்ஸ் சர்வீஸ் என்று அழைக்கப்படும் உளவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைக் கண்டு அகதிகள் மட்டுமல்ல எகிப்தியர்களே அஞ்சுவது வழக்கம். தேசப் பாதுகாப்பு என்னும் பெயரில் இவர்கள் இழைக்கும் மனித உரிமை மீறல்கள் பிரசித்தி பெற்றவை. இவர்கள் எவரையும் எதையும் செய்யலாம். எந்த விதிமுறைகளும் இவர்களுக்குப் பொருந்தாது. எவரும், எதுவும் இவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை. சீருடை அணிந்து மிடுக்குடன் நடைபோடும் இவர்கள் அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத அடியாள்கள் என்பது ஊருக்கே தெரியும்.

எகிப்தியர்களுக்கே கேட்க நாதியில்லை என்னும்போது பூஞ்சையான ஓர் அகதியால் என்ன செய்துவிட முடியும்? தன்னைச் சுற்றி வந்து தோளின்மீது கைபோட்ட அந்த அதிகாரியை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் ஹஷீம். சில நிமிடங்களில் ஒரு கார் அருகில் வந்து நின்றது. காரின் கதவு எப்போது திறந்தது, தான் எப்போது உள்ளே திணிக்கப்பட்டோம் என்பதை ஹஷீமால் உணரமுடியவில்லை.

நான் அகதி! - 16 - எங்கே என் வீடு?

ஹஷீம் தன் மனைவி, குழந்தைகளுடன் எகிப்தில் நுழைந்தது ஜூன் 2013 இறுதியில். சிரியா, ஜோர்டான், செங்கடல் மூன்றையும் கடந்து நுவீய்பா என்னும் துறைமுகத்துக்குள் அவர்கள் காலடி எடுத்துவைத்தனர். அப்போது ஹஷீமிடம் நூறு அமெரிக்க டாலர் எஞ்சியிருந்தது. கொண்டுவந்திருந்த எல்லாப் பணமும் பயணச் செலவுக்கே போய்விட்டது. இறங்கியதும் முதல் வேலையாக டாலரைக் கொடுத்து எகிப்தியப் பணமாக மாற்றிக்கொண்டார். நூறு டாலர் 650 எகிப்திய பவுண்டாக மாறியிருந்தது. இனி துறைமுகத்திலிருந்து நண்பர்கள் கொடுத்த முகவரிக்குச் சென்று சேரவேண்டும். சீட்டை எடுத்துப் பார்த்தார். 10 ரமதான் என்று மட்டுமே எழுதியிருந்தது. இது தெருவின் பெயரா, ஊரின் பெயரா அல்லது வீட்டு எண்ணா? அப்பா முடிவுசெய்து வந்து எழுப்பட்டும் என்று குழந்தைகள் தரையில் படுத்து உறங்கிவிட்டிருந்தனர்.

வட்டமிட்டுக்கொண்டிருந்த வண்டிகளை அணுகி, 10 ரமதான் வரமுடியுமா என்று கேட்டார் ஹஷீம். ஓட்டுநர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு போனார்கள் அல்லது பதிலே சொல்லாமல் அடுத்த பயணியை நோக்கி நகர்ந்தார்கள் அல்லது ஏதோ ஏசினார்கள். அந்த இடம் அருகிலில்லை, நூற்றுக் கணக்கான மைல்களைக் கடந்து தலைநகரம் கெய்ரோவுக்குக் கிழக்கே செல்லவேண்டும் என்று பிறகுதான் புரிந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒருவர் சூயஸ் வரை அழைத்துச் செல்வதற்கு ஒப்புக்கொண்டார். அங்கிருந்து 10 ரமதான் செல்ல ஒரு மணி நேரம் மட்டுமே ஆகும் என்று சொன்னார். 10 ரமதானுக்கு மற்றவர்கள் 1500 பவுண்டுகள் கேட்டபோது இவர் சூயஸ் வரை செல்வதற்கு 400 பவுண்டு மட்டுமே கேட்டதால் உடனே ஒப்புக்கொண்டார் ஹஷீம். உன் குடும்பம் மட்டுமல்ல, போகும் வழியில் எத்தனை பேரை வேண்டுமானாலும் ஏற்றிக்கொள்வேன், முரண்டு பிடிக்கக்கூடாது என்றொரு நிபந்தனையையும் அந்த ஓட்டுநர் விதித்திருந்தார். மறுக்கும் நிலையில் இல்லை ஹஷீம். மேலும் ஒரு காரில் எத்தனை பேரை ஏற்றிக்கொள்ள முடியும்? ஆனால் அந்தத் திறமைவாய்ந்த ஓட்டுநர், கார் பிதுங்கி வழியும் அளவுக்குப் பலரை அடைத்துக்கொண்டபிறகுதான் வண்டியை எடுத்தார்.

நான் அகதி! - 16 - எங்கே என் வீடு?

சூயஸிலிருந்து இன்னொரு கார். கையிலிருந்த எல்லாவற்றையும் துடைத்துக் கொடுத்தபிறகே வண்டி நகர்ந்தது. நீ கொடுத்ததற்கு இதுவரைதான் வண்டி வரும் என்று சொல்லி ஓரிடத்தில் இறக்கிவிட்டுவிட்டு வண்டி அகன்றது. பசி, களைப்பு. கையில் காசில்லை. எங்கே தங்குவது என்று தெரியவில்லை. 10 ரமதான் என்பது என்ன என்று நடந்தபடி தேடத் தொடங்கினார்  ஹஷீம். 1973 தொடக்கத்தில் இஸ்ரேலுடன் எகிப்து போரிட்டு வென்றது. அந்தத் தினத்தின் அடையாளமாக 10 ரமதான் என்னும் தேதியை ஓரிடத்துக்குப் பெயராக அளித்துவிட்டார்கள். நண்பர்களின் உதவியோடு அந்த இடத்தில் தங்குவதற்கு இலவசமாக ஓரிடம் கிடைத்தது. தையல் தொழில் நடத்திவந்த ஒருவரின் கடையின் ஒரு பகுதி ஹஷீமின் குடும்பத்துக்காக ஒதுக்கப்பட்டது. அது அந்தக் கடையின் சரக்கு அறை. காலைவேளைகளில் இரைச்சலுடன் தையல் வேலை நடந்துகொண்டிருக்கும். இரவு அமைதியாகிவிடும்.

ஹஷீமின் மனைவி ஹயாம் சிரியாவில் ஒரு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். ஆனால் 10 ரமதானில் அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை.  அருகிலுள்ள வேறொரு பகுதிக்குச் சென்றார்கள். இங்கேயும் சிறிய பொந்துதான் கிடைத்தது. இங்கும் ஆசிரியர் பணி எதுவும் காலியாக இல்லை. ஆனால் ஹஷீமுக்கு பக்கத்தில் உள்ள நகரத்தில் ஒரு கடையில் வேலை கிடைத்தது. காய்கறிகளைப் பெட்டிக்குள் போட்டு அடைப்பதுதான் வேலை. அதைச் சிறிது காலம் முயன்று பார்த்தபிறகு வேறொரு வேலைக்குத் தாவினார். நிலக்கரியைச் சீர்படுத்தி விற்பனை செய்யும் ஒரு சிறிய தொழிற்சாலை அது. மாதம் நூறு டாலர் வரை சம்பளம் கிடைத்தது.

வீட்டுக்குப் போனதும் கணவனும் மனைவியும் ஒன்றாக அமர்ந்து கதை பேசுவார்கள். திரும்பத் திரும்ப பேச்சு கடந்தகாலத்தையே சுற்றிவரும். கண்கள் விரியப் பேசிக்கொண்டே இருப்பார் ஹயாம். இதே சிரியாவாக இருந்திருந்தால் நான் இந்நேரம் பள்ளிக்கூடப் பணிகளை வீட்டுக்கு எடுத்து வந்து செய்துகொண்டிருப்பேன். காலை எழுந்ததும் கிளம்பி ஓடவேண்டியிருக்கும். பள்ளிக்குழந்தைகள் எனக்காகக் காத்திருப்பார்கள். நாளை என்ன வகுப்பெடுக்கவேண்டும் என்பது குறித்து இன்றே முடிவு செய்துவிடுவேன்.  பள்ளியில் குழந்தைகள் என் காலைச் சுற்றிச் சுற்றி எந்நேரமும் ஓடிக்கொண்டிருப்பார்கள். அவர்களை அதட்டுவேன், உருட்டுவேன், அன்போடு அணைத்துக்கொள்வேன். மீண்டும் அதெல்லாம் சாத்தியமா ஹஷீம்?

ஹஷீமிடம் பதில் இருக்காது. சிரியாவில் ஒரு அலுவலகத்தில் சட்டை மடிப்பு கலையாமல் கம்ப்யூட்டரை இயக்கியபடி பணியாற்றிவந்தவர் ஹஷீம். வியர்வை பொங்குவதற்கு வாய்ப்பே இல்லாத குளிரூட்டப்பட்ட அலுவலகம். சென்று வந்தது காரில். லெபனானைச் சேர்ந்த பிரபல இசைப் பாடகியான ஃபைரூஸின் பாடல்களில் தோய்ந்து தன்னை மறந்தபடி கார் ஓட்டிச் செல்வது அவர் வழக்கம். அலுவலகத்திலும்கூட அவ்வப்போது ஃபைரூஸின் பாடல்களை ஒலிக்கவிட்டு மெய்மறந்து கிடப்பது வழக்கம். கரி படிந்திருக்கும் தன் சட்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார் ஹஷீம். அந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்குமா? மீண்டும் அப்படியொரு அலுவலகத்தில் பணியாற்றும் வாய்ப்பு இருக்குமா? இசையை ரசிக்கும் நுண்ணுணர்வு இன்னமும் என்னிடம் எஞ்சியிருக்கிறதா? அதை எப்படிப் பரிசோதித்துப் பார்ப்பது?

விடுமுறை தினங்களில் ஹஷீமும் ஹயாமும் சுற்றுலா சென்றுவிடுவார்கள். அதற்கெனவே சிறிய பகட்டான தரை விரிப்புகளை வைத்திருந்தார்கள். நண்பர்களோடு இணைந்து அத்தி மர நிழலில் கதை பேசியபடி தேநீர் அருந்துவார்கள். பாடல் கேட்பார்கள். அல்லது இரவு உணவு உண்பார்கள். சிரிப்பும் கும்மாளமுமாகப் பொழுது கரைவதே தெரியாது. எகிப்தில் நண்பர்கள் இல்லை, தரை விரிப்பு இல்லை. சுற்றுலா செல்வதற்குக் காசில்லை. காசு கிடைத்தாலும் அந்த மனநிலை இங்கே வாய்க்காது.  தவிரவும், எகிப்தில் அத்தி மரங்களும் இல்லை.

நான் அகதி! - 16 - எங்கே என் வீடு?

வந்த புதிதில் ஒவ்வொரு வாரமும் தன் அப்பாவைத் தொலைபேசியில் அழைப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தார் ஹஷீம். சிரியாவுடன்  ஹஷீமுக்கு இருந்த ஒரே தொடர்பு இதுதான். தன் உறவினர்கள் அனைவரையும் பற்றி விசாரிப்பார். பிறகு நண்பர்கள். இப்ராஹிமும் சமீரும் மொகமதுவும் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியுமா அப்பா? மஹெரிடமிருந்து ஏதாவது செய்தி வந்ததா? அப்தெல் சதாரைத் தொடர்புகொள்ள முடிந்ததா? அவன் வீட்டுக்கு யாராவது போய்ப் பார்த்தீர்களா? மார்வானும் ஹோஸ்னியும் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று யூகிக்க முடிகிறதா? சிரியா எப்படி இருக்கிறது அப்பா? வெளியில் சென்றவர்கள் யாராவது திரும்பியிருக்கி றார்களா? உங்களுக்கும் அம்மாவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே? நலமாக இருக்கிறீர்கள் தானே? இந்தக் கேள்விகளையெல்லாம் ஹஷீம் கிட்டத்தட்ட ஒவ்வொருமுறையும் கேட்பது வழக்கம். எந்தப் புதிய செய்தியும் கிடைக்கப் போவதில்லை என்று தெரிந்தும் எல்லோருடைய பெயர்களையும் தனித்தனியே குறிப்பிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பார்.

எடுத்தவுடனே ஹஷீம் அப்பாவிடம் பேச ஆரம்பித்துவிடுவதில்லை. அழைப்பார். அப்பா எடுத்துக் காதில் வைத்து ஹலோ சொன்னதும் ஹஷீம் அழ ஆரம்பித்துவிடுவார். ஒரு வார்த்தைகூட வாயிலிருந்து வராது. அப்பா அமைதியாகக் காத்திருப்பார். முடியாதபோது அவரும் ஹஷீமுடன் சேர்ந்து அழ ஆரம்பித்துவிடுவார். ஒரே ஒரு சொல்கூட உதிர்க்காமல் சில நிமிடங்கள் சேர்ந்தாற்போல் அழுதுவிட்டு போனை வைத்துவிட்டு ஹஷீம் வீடு திரும்பிவிடுவதும் நடந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் போன் செய்வதற்கும் அவசியமில்லாமல் போய்விட்டது. 2013-ம் ஆண்டு அப்பா இறந்துபோனார்.

சிரியாவை ஆண்டுகொண்டிருந்த பஷார் அல் ஆசாத்தை என்ன செய்யலாம் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த சமயம் அது. சிரியா சிதைந்துகொண்டிருந்தது என்பதை இந்த இரு நாடுகளும் அறிந்திருந்தன. ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான போர் என்னும் பெயரில் சிவிலியன்கள்மீதும் அவர்களுடைய வசிப்பிடங்கள் மீதும் குண்டுகளை எறிந்துகொண்டிருந்தார் ஆசாத். ஆசாத் மீதான போர் என்னும் பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பும் பதிலுக்கு சிரிய மக்களைத்தான் வெடித்துச் சிதறடித்துக் கொண்டிருந்தது. எங்கிருந்து குண்டு வருகிறது என்று தெரியாமல் மக்கள் வீறிட்டு அலறியபடி செத்து விழுந்துகொண்டிருந்தார்கள். உயரமான கட்டடங்களிலிருந்து ஏவுகணைகள் பாய்ந்து கொண்டிருந்தன. சந்தைக்குச் செல்லும் வழியில் இயந்திரத் துப்பாக்கிகள் படபடவென்று வெடிக்க ஆரம்பிக்கும். ஆயிரம் பொத்தல்களுடன் உள்ள வீடுகளை ஒவ்வொரு வீதியிலும் காணமுடிந்தது.

ஆசாத் மட்டுமல்ல அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்த்தேதான் சிரியாவை இப்படிச் சீரழித்திருக்கின்றன என்பது ஹஷீமின் நம்பிக்கை. தேவையில்லாமல் தலையிட்டு இராக்கை அழித்தார்கள் என்றால், தலையிடாமலேயே இருந்து சிரியாவை அழித்துவிட்டார்கள் என்று புலம்பினார் ஹஷீம். அவர் வசித்துவந்த வீடு நூறு துண்டுகளாக விழுந்துகிடந்தது. இன்னொரு குண்டு அவருடைய குழந்தைகளின் கால்களுக்கு மிக அருகில் விழுந்து வெடிக்காமல் இருந்துவிட்டது.  ஆனால், ஹஷீமை உலுக்கியெடுக்க அது போதுமானதாக இருந்தது. குடும்பத்தோடு எகிப்துக்குக் குடிபெயர்ந்தார். அகதி என்னும் பெயர் அப்போது ஓர் உறுத்தலாக அவருக்கு இருக்கவில்லை. நீங்கள் எந்தப் பெயர் சொல்லி அழைத்தாலும், அடியாழத்தில் நான் இன்னமும் ஹஷீமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டார்.

பலரும் குறிப்பிட்டதைப் போல், சிரியா எகிப்தியர்களின் இரண்டாவது தாய்வீடாகத்தான் தொடக்கத்தில் இருந்தது. இந்த நிலை எப்போது, எதனால் மாறியது என்பது ஹஷீமுக்குத் தெரியும். ஆனால் இப்போதைக்கு யோசிப்பதற்கு அவகாசமில்லை. தடித்த இரு அதிகாரிகளுக்கு மத்தியில் சிக்குண்டு கிடந்த ஹஷீம் அடுத்து என்ன யோசித்துக்கொண்டிருந்தார். இவர்கள் என்னை என்ன செய்வார்கள்? ஹஷீமின் ஆடைகளைச் சோதனை போட்டபடி ஒருவர் பேசினார். ‘`ஒரு கொள்ளை நடந்திருக்கிறது. கொள்ளையடித்தபிறகு அவனைக் கொன்றும்போட்டுவிட்டான் அந்தக் கொலையாளி. அவனைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். கொள்ளையடித்ததை எங்கே வைத்திருக்கிறாய்?’’

‘`நான் யாரிடமிருந்தும் எதையும் கொள்ளையடிக்கவில்லை. என் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். நான் ஓர் அகதி. என்னிடம் பணம் எதுவுமில்லை’’ என்று பலவீனமான குரலில் முனகினார் ஹஷீம். உண்மைதான், இவனிடம் ஒன்றுமில்லை என்றார் முதல் அதிகாரி. இரண்டாவது அதிகாரி சிரித்தார். ‘`அதனாலென்ன? நமக்கு ஒரு கொலைக்காரன் தேவைப்படும் சமயத்தில் வசமாக ஓர் அகதி சிக்கியிருக்கிறான். என்ன சொல்கிறாய்? கேஸை முடித்துவிடலாமா?’’ இருவரும் கை குலுக்கிக் கொண்டதைப் பார்த்தபடி ஹஷீம் அமைதியாக அமர்ந்திருந்தார். பிறகு வண்டி ஓரிடத்தில் நின்றது. `இனி என்ன நடக்கும்? என்னை இங்கே வைத்து சுட்டுக்கொன்றுவிடுவார்களா? சிரியாவில் தொடங்கிய என் வாழ்க்கை எகிப்தில் முடிவடைந்து விடுமா? எத்தனை மணி நேரமாக நான் காரில் சென்றுகொண்டிருக்கிறேன்? இது எந்த இடம்?’

 ``கீழே இறங்கு’’ என்று அதட்டினார் முதல் அதிகாரி. ஹஷீம் தள்ளாடியபடி கீழே இறங்கினார். அடுத்த சில விநாடிகளில் கார் விர்ரென்று பறந்துசென்றுவிட்டது. ஹஷீம் தள்ளாடியபடியே நடக்கத் தொடங்கினார். எகிப்தில் முதல் முறை வந்து இறங்கியபோது இருந்த அதே சோர்வு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டதைப் போலிருந்தது.  எகிப்து இன்னொரு சிரியாவாக மாறிவிட்டதை ஹஷீமால் தெளிவாக உணரமுடிந்தது. என்னை அவர்கள் ஏன் கொல்லவில்லை? தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது. இனி எகிப்தில் இருப்பது சாத்தியமில்லை. இன்னொரு பயணத்துக்கு நான் தயாராகவேண்டும். ஹஷீம் நடக்கத் தொடங்கினார். பாவம், ஹயாம். ஏன் இன்று இவ்வளவு தாமதாக வந்தாய், நான் தனியாக இருப்பது தெரியாதா உனக்கு என்று சீறுவாள். அவளுக்கு இன்று ஒரு நீண்ட கதை சொல்லியாக வேண்டும். கையிலிருந்த பத்துப் பவுண்டு தாளையும் அந்த அதிகாரிகள் எடுத்துக்கொண்டுவிட்டனர் என்பதால் வேகமாக நடக்கத் தொடங்கினார் ஹஷீம். எந்தப் பாதை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் என்று தெரியவில்லை. இருள் அடர்த்தியாகப் படர்ந்துகிடந்தது!

- சொந்தங்கள் வருவார்கள்