பாகிஸ்தானில் லாபகரமானது தண்ணீர்தான்..! தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-15 | Water is the most profitable commodity in Pakistan... Stories of water mafia Episode- 15

வெளியிடப்பட்ட நேரம்: 10:42 (25/09/2018)

கடைசி தொடர்பு:10:42 (25/09/2018)

பாகிஸ்தானில் லாபகரமானது தண்ணீர்தான்..! தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-15

கொரங்கி, சுமார் 1.6 கோடி பேர் வசிக்கும் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியிலிருக்கும் ஒரு குடிசைப்பகுதி. அங்கு சுரண்டுவதற்கு எந்த நீர்நிலைகளும் மிஞ்சியிருக்கவில்லை. இருந்தாலும் அது தற்போதும் தண்ணீர் மாஃபியாக்களின் ஆடுகளமாகத்தான் இருந்துவருகிறது.

பாகிஸ்தானில் லாபகரமானது தண்ணீர்தான்..! தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-15

லகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிநீர் வசதியின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்புக்கும் இல்லாமைக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியைப் பயன்படுத்தி பணப் பசியெடுத்தவர்கள் ஆடும் விளையாட்டே அதற்குக் காரணம். இயற்கைப் பேரழிவுகளிலிருந்து அடிப்படை வசதிகளுக்குப் போராடுவதுவரை அனைத்துக்குமே காரணம் நிர்வாகத்தில் படிந்திருக்கும் ஊழல்தான். ஊழல் என்பது லஞ்சம் வாங்குவதும், நிதி ஒதுக்கீட்டில் செய்யும் மோசடிகளும் மட்டுமல்ல. மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும், அரசுக்கு (அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு) லாபம் நல்கும் விதத்திலான முடிவுகளைச் செயல்படுத்துவதும் ஊழல்தான். அவர்களின் விளையாட்டிலிருந்து பாகிஸ்தானும் தப்பிக்கவில்லை. கொரங்கி, சுமார் 1.6 கோடி பேர் வசிக்கும் பாகிஸ்தானின்  துறைமுக நகரமான கராச்சியிலிருக்கும் ஒரு குடிசைப்பகுதி. அங்கு சுரண்டுவதற்கு எந்த நீர்நிலைகளும் மிஞ்சியிருக்கவில்லை. இருந்தாலும் அது தற்போதும் தண்ணீர் மாஃபியாக்களின் ஆடுகளமாகத்தான் இருந்துவருகிறது. அதற்குக் காரணம் அங்கு வாழும் மக்களிடம் அடிப்படைக் குடிநீர் விநியோக வசதிகூட இல்லை.

அந்த மக்கள் குடிக்க, சமைக்க, குளிக்கத் தண்ணீரை எப்படிப் பெறுகிறார்கள்?

அதற்கான விடைதான் தண்ணீர் மாஃபியா.

மொஹமத் ஸுபைர் (Mohammad Zubair). ஒரு தண்ணீர் டாங்கர் லாரியின் ஓட்டுநர். தண்ணீர் மாஃபியாக்களின் பல்லாயிரக்கணக்கான டாங்கர்களில் இவருடையதும் ஒன்று. தண்ணீர் தேவைப்படும்போது அவரைப் போன்றவர்களை மக்கள் அழைப்பார்கள். குறிப்பிட்ட விலைக்கு அவர்கள் குடிநீரை விநியோகிப்பார்கள். தண்ணீரில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று சுத்தமானது. விலை அதிகம். இரண்டாவது அசுத்தமானது. மலிவான விலைக்குக் கிடைக்கும். மலிவு என்பதுகூட சராசரி ஊதியத்தோடு வாழும் குடும்பத்துக்குத்தான். அதற்கும் குறைவான வருமானத்தில் வாழ்பவர்களுக்கு அந்த மலிவு விலைகூட எட்டாக்கனியே. ஸுபைர் போன்ற மாஃபியா லாரிகள்கூட விநியோகிக்க முடியாத அடர்த்தி நிறைந்த மோசமான குடியிருப்புகளும் கொரங்கியில் இருக்கத்தான் செய்கின்றன. அங்கெல்லாமிருந்து கழுதைகளிலும், தள்ளுவண்டிகளிலும் மக்கள் குடங்களையும், பெரிய டின்களையும் கொண்டுவந்து தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள். திருத்தம், விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள். இவைபோக தண்ணீர் நிலையங்களும் செயல்படுகின்றன. அதில்லாமல், மளிகைக் கடைகளில் பெரிய டிரம்களில் தண்ணீரை நிரப்பி வைத்து 50 ரூபாய், 100 ரூபாய் விலைக்கு விற்கிறார்கள்.

பற்றாக்குறை

அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8  அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12 அத்தியாயம் 13 அத்தியாயம் 14

இத்தகைய விற்பனையாளர்களிடம் ஒவ்வொரு நாளும் தண்ணீர் வாங்கி வர பலமுறை நடக்க வேண்டியிருக்கிறது. அதை கொரங்கிவாசிகளைப் போல் பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் செய்துகொண்டுதானிருக்கிறார்கள். செய்துதான் ஆகவேண்டும். இல்லையேல் அன்றைய தண்ணீர் அவர்களுக்குக் கிடைக்காது. அது கிடைக்காமல் அன்றைய நாளே வழக்கம்போல் ஓடாது. அதுதான் இவர்களை இயக்கிக் கொண்டேயிருக்கிறது. 

``தண்ணீர் லாபகரமான தொழில். அதில்லாமல் மக்களால் வாழமுடியாது. அதை எப்படி இந்த மாஃபியாக்கள் கைவிடுவார்கள்?"

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது இவர்களின் வியாபாரம். தனியார் நிலங்களின் வழியாகக் குழாய்களை அமைத்து, அந்த வழியாகப் பாயும் குழாய்களைத் துளையிடுகிறார்கள். அதன்மூலமாகத் தண்ணீரைத் திருடி அது கிடைக்கச் சிரமப்படும் பகுதிகளில் கொண்டுபோய் விற்கிறார்கள். இதில் யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். இவர்கள் நகர நிர்வாகிகளுக்கும், காவல் துறைக்கும் இதைக் கண்டுகொள்ளாமலிருக்கப் பணம் தருகிறார்கள். அவர்கள் தண்ணீரைத் திருட வசதியாக அமையும் தனியார் நிலத்தில் அதைச் செய்துகொள்ள அந்நிலத்தின் உரிமையாளருக்குப் பணம் தருகிறார்கள். இது காலப்போக்கில் பல தரப்பில் வாழும் பணக்காரர்களுக்கு ஓர் அரிய லாபமிக்கத் தொழிலாக மாறிவிட்டது. நில உரிமையாளர்களுக்குத் தண்ணீர்ப் பற்றாக்குறை பற்றிக் கவலையில்லை. அவர்கள் அதற்காக வாடும் மக்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. காலப்போக்கில் அரசாங்கக் குழாய்களிலிருந்து தண்ணீரைத் திருட அவர்களே வசதி செய்துவைத்து மாஃபியாக்களுக்காகக் காத்திருக்கத் தொடங்கிவிட்டார்கள். அது தண்ணீர் மாஃபியாக்களுக்கு மேலும் வசதியாகிவிட்டது. பணத்தை மட்டும் கொடுத்துவிட்டுத் திருடிக் கொள்ளலாம். திருட்டுக்குப் பணம் வசூலிக்கும் அளவுக்கு அவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிட்டார்கள்.

300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவானதைத் தொடர்ந்து நீர் மேலாண்மை வாரியம் பல சட்டவிரோதக் கிணறுகளை மூடினார்கள். இருந்தும் இன்னமும் நிறைய தண்ணீர் கிணறுகள் அதுபோல் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கின்றன. அவர்களைச் சட்டபூர்வமாக மாற்றவும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிநீர் விநியோகஸ்தர்களாக அவர்களை மாற்றுவதற்கு முயன்றார்கள். ஆனால் அவர்களோ அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் ஓட்டுநர்களை வைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் மக்களுக்குச் சட்டவிரோதமாக மேலும் அதிக விலைக்குத் தண்ணீரை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். தற்போது கராச்சியின் பாதி தண்ணீர் இவர்கள் மூலமாகத்தான் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. முறையான தண்ணீர் வசதியில்லாததாலும், கிடைக்கும் நீரும் சுத்தமாக இல்லாததாலும் பாகிஸ்தானில் அதிகமான குழந்தைகள் டையரியா (Diarrhea) போன்ற நீர்சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தானின் 80% குடிநீர் மாசடைந்துதான் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், அதே தண்ணீரை விற்றுக்கொண்டிருக்கும் மாஃபியாக்களுக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு தெரியுமா?

ஒரு நாளைக்கு மாஃபியா லாரிகள் எத்தனை முறை தண்ணீர் விற்பனை செய்கிறார்கள்?

கராச்சியில் மட்டும் அனைத்து லாரிகளும் சேர்த்து 50,000 முறை தண்ணீர் கொண்டு செல்கிறார்கள் (கராச்சி நகரத்தின் செய்தித்தாள்கள், ஆவணங்களில் வெளிவந்த தகவல்களை வைத்து)

ஒரு லாரி தண்ணீருக்கான விலை எவ்வளவு?

அதிகாரபூர்வமாக: ரூ.2000/-

உண்மையில் விற்கும் விலை: ரூ.6000/-

நாளொன்றுக்குக் கள்ளத் தண்ணீரின் (கள்ளச்சந்தை மாஃபியாக்களால் விற்கப்படும் தண்ணீர்)வணிக மதிப்பு என்ன?

50,000*ரூ.6000 = 30 கோடி ரூபாய்.

அதுவே ஒரு வருடத்துக்கு 10,009 கோடி ரூபாய். மூன்றே நாள்களில் 100 கோடியை எட்டும் அளவுக்கு இருக்கிறது அவர்களின் வருமானம். இவ்வளவு லாபத்தைக் கொட்டிக்கொடுக்கும் தண்ணீரை அவர்கள் எப்படி விட்டுக்கொடுப்பார்கள். அது எத்தனைபேரின் வாழ்க்கையைச் சீரழித்தால் அவர்களுக்கென்ன?

இவ்வளவு பெரிய விளைவை உருவாக்கும் தண்ணீர் மாஃபியாக்கள் யார். ஒரு நகரத்துக்கு மட்டும் இவ்வளவு லாபத்தைக் கொட்டிக்கொடுக்கும் இந்தக் கள்ளச்சந்தை வியாபாரத்தைச் செய்துகொண்டிருக்கும் மாஃபியாக் கும்பல்களை வளர்த்துவிடுவது யார்?

தண்ணீர்

இதன் அபரிமித வளர்ச்சி பாகிஸ்தானின் தண்ணீர் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதைப் புரிந்துகொண்ட நீதித்துறை கராச்சியின் தண்ணீர்ப் பற்றாக்குறை குறித்து விசாரிக்க தனிக்குழுவை நியமித்தது. அப்போது தண்ணீர் மாஃபியாக்களை வளர்த்துவிடும் மற்றுமொரு துறைகுறித்தும் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியது. அதுதான் மினரல் வாட்டர் தொழிற்சாலைகள். பாகிஸ்தானின் 40% தண்ணீரை இவர்கள்தாம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுபோக மேலும் அதிகமான தண்ணீர் மாஃபியாக் கும்பல்களால் இவர்களுக்கு விற்கப்படுகின்றது. இதுபோகத்தான் மற்ற பற்றாக்குறைப் பகுதிகளுக்குத் தண்ணீர் விற்பனைக்குச் செல்கிறது.

தண்ணீர் மாஃபியாக்கள் குறித்து விசாரிக்கக் குழு அமைத்த அதே சமயத்தில் பாகிஸ்தானின் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு முக்கியமான முடிவை நோக்கி நகர உச்சநீதிமன்ற நீதிபதியை நிர்பந்தித்துள்ளது. கடந்த 14-ம் தேதி கடாஸ் ராஜ் ஏரி வறண்டு கொண்டிருப்பதாகவும், அதிலிருந்து அருகிலிருக்கும் சிமென்ட் தொழிற்சாலைகள் அளவுக்கதிகமான தண்ணீரைத் திருடுவதே காரணமென்றும் அவர்களுக்கு எதிரான வழக்கொன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதன் முந்தைய அமர்வுகளில் அப்பகுதியின் தொழிற்சாலைகள் குறித்து அறிக்கை கேட்கப்பட்டிருந்தது. அதில் மினரல் வாட்டர் தொழிற்சாலைகளும் அடக்கம். அன்றைய அமர்வில் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிஸார் (Mian Saqib Nisar) இப்படிக் குறிப்பிட்டிருந்தார்,

``தண்ணீர் விலைமதிப்பற்ற விற்பனைச் சரக்காக மாறிக்கொண்டிருக்கிறது. அதன் தேவைக்கும் இதில் முக்கியப் பங்குண்டு. ஆனால், பாட்டில் தண்ணீர் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதை இலவசமாகவும் அதீதமாகவும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தண்ணீரைக் காப்பாற்ற வேண்டும். பாகிஸ்தானின் தண்ணீருக்கான விலையை நாமே நிர்ணயிக்கவேண்டும்."

அன்றே தண்ணீரை மூலப்பொருளாகக் கொண்டு செயல்படும் தொழிற்சாலைகளின் முழு விவரங்களையும், அவை பயன்படுத்தும் தண்ணீர் குறித்த தரவுகளையும்(data) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மிக முக்கியமாக அனைத்து மினரல் வாட்டர் தொழிற்சாலைகளுக்கும் தலைமையாகக் கருதப்படும் நெஸ்ட்லே நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பரிசோதனை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டது. அதற்கு அடுத்த நாளே அனைத்து மினரல் வாட்டர் தொழிற்சாலை உரிமையாளர்களையும் நீதிமன்றத்தில் 16-ம் தேதி ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார். 

ஆனால், 16-ம் தேதி அமர்வில் ஒருமாத காலம் அவகாசம் கேட்டது. நெஸ்ட்லே கணக்குகளைத் தணிக்கை செய்து அறிக்கை வெளியிடவும், மற்ற தண்ணீர் நிறுவனங்களை ஆய்வுசெய்யவும் ஒருமாத காலம் அவகாசம் கோரப்பட்டது. அதற்கு ஒப்புக்கொள்ளாத நீதிபதி 15 நாள்களுக்குள் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கவும், நிறுவன உரிமையாளர்கள் ஆஜராகவும் வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணை அறிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானின் நீரைப் பயன்படுத்த எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமென்பதும், அவர்கள் எவ்வளவு நீரைப் பயன்படுத்தலாமென்பதும் தீர்மானிக்கப்படும். அதோடு அவர்கள் விற்கும் தண்ணீரின் விலையும் நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்படும். அப்போது, ``மினரல் வாட்டர் நிறுவனங்கள் 20 வருடங்களாக நமது தண்ணீரை இலவசமாகப் பயன்படுத்திவிட்டார்கள்." என்று நீதிபதி இஜாஸுல் அஹ்சானும் (Ijazul Ahsan), "அதற்கு அவர்கள் பதிலளிக்க வேண்டிய நேரமிது" என்று தலைமை நீதிபதியும் குறிப்பிட்டுள்ளனர்.

தண்ணீர் விற்பனை மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அந்தச் சுமையை இறக்கி வைக்கும் வகையில் அமையுமென்று மக்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது. பாகிஸ்தானின் தண்ணீர் மாஃபியாக்கள் மட்டுமல்லாமல், அவர்கள் உருவெடுக்கக் காரணமாக அமைந்த நிறுவனங்கள்வரை கைவைத்துள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம். ஆனால், முழுக்க முழுக்க அவர்கள் தண்ணீரைப் பயன்படுத்துவதற்காக அரசுக்குத் தரவேண்டிய விலை குறித்தே நீதிபதிகள் பேசுவது அச்சத்தையும் விளைவிக்கிறது. அடிப்படை உரிமையான நீரை விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்களை சில விதிமுறைகளுக்கு உட்படுத்தி அங்கீகரித்துவிட்டால், மாஃபியாக்கள் அனைவரையும் அரசாங்க குடிநீர் விநியோகஸ்தர்களாக மாற்றிவிட்டால், கராச்சியில் நடந்ததுதான் நாடு முழுவதும் நடக்கும்.

விற்பனையாகும் அடிப்படை உரிமை

இந்த நிறுவனங்கள் மட்டுமன்றி, மக்களிடம் விற்பனை செய்யும் மாஃபியாக்களையும் அடுத்த வாரம் விசாரிக்கப்போவதாகத் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். அதாவது தண்ணீர் ஒரு விலைமதிப்பற்ற விற்பனைச் சரக்கு. அதைப் பயன்படுத்த இவர்கள் அரசுக்குப் பணம் கட்டவேண்டுமென்று கேட்டுத்தான் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அது மக்களின் அடிப்படை உரிமை என்பது குறித்து எங்குமே அவர்கள் குறிப்பிடாதது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்புகிறது. லாபநோக்கத்தோடு செயல்பட வேண்டியது நிர்வாகமே தவிர நீதிமன்றமில்லை.


டிரெண்டிங் @ விகடன்