Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

படம்: ஜி.வெங்கட்ராம்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

படம்: ஜி.வெங்கட்ராம்

Published:Updated:
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

ழைய கடமை ஒன்று, புதிய கடமை இன்று... இப்படி என் முன்னால் இரு கடமைகள். ஆம், சமூகத்தை நோக்கிய என் பயணத்தை நான் கடமையாகத்தான் நினைக்கிறேனே தவிர வாய்ப்பாகக்கூடக் கருதவில்லை.  எப்படியிருந்தாலும் வேறொரு ரூபத்திலாவது இது நிகழ்ந்திருக்கும். ஆனால், இன்னும் முனைப்போடு இறங்கிச் செய்வதுபோன்ற சூழல் இப்போது கனிந்துள்ளது. 

அதன் முதல் படியாக மக்களைச் சந்திக்கப் பயணம் கிளம்புகிறேன். இது நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்த பயணம். மக்களுடனான இந்தச் சந்திப்பு, புரட்சி முழக்கமோ, கவர்ச்சிக் கழகமோ அல்ல. என் புரிதல். எனக்கான கல்வி. இந்தப் பயணத்தை எங்கிருந்து தொடங்குகிறேன் என்று சொல்வதற்கு முன், சின்ன முன்கதைச் சுருக்கம் சொல்ல விழைகிறேன்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

எங்கள் அப்பா சீனிவாசன், வழக்குரைஞர். அப்போது அவர் ராமநாதபுரம் உட்பட இரண்டு சமஸ்தானங்களுக்கான சட்ட வல்லுநர். அதனால் அங்குள்ள அரண்மனைவாசிகளுடன் அவருக்கு நல்ல நட்பு. இப்போது உள்ளதுபோல் அப்போதும் அது புயல், மழைக்கெல்லாம் வாய்ப்பில்லாத பகுதி. ஆனால், 1954-ல் அங்கு பெரிய புயல், மழை. அதில் மருத்துவமனை உட்பட ராமநாதபுரமே வெள்ளத்தில் மிதந்திருக்கிறது.

அந்த மழை நாளில்தான் அம்மாவுக்குப் பிரசவ வலி. நீர் சூழ்ந்த வீடு, மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது ஆரோக்கியமான சூழலாக இருக்காது என்பதால் அம்மாவுக்கு அங்குள்ள அரண்மனையில் வைத்துப் பிரசவம் பார்த்திருக்கிறார்கள். இதன்மூலம் நான் பிறந்தது ராமநாதபுரத்தில், முதல் இரண்டாண்டுகள் வரை வளர்ந்தது மட்டுமே பரமக்குடியில் என்ற தகவலைப் பதிவு செய்கிறேன். இந்த விவரம் அறிந்த ராமநாதபுரத்துக்காரர்கள், ‘என்னங்க, பிறந்த ஊருக்கு வரமாட்டேங்குறீங்க’ என்று அழைத்துக்கொண்டே இருப்பார்கள்.

ஆமாம், நான் கடைசியாக ராமநாதபுரத்துக்குச் சென்றபோது எனக்கு வயது 22. எங்கள் பாட்டி, அதாவது அப்பாவின் அம்மா ராமநாதபுரத்தில்தான் இருந்தார். அப்போது அவருக்கு 99 வயது. ‘`செஞ்சுரி அடிச்சிடுவீங்களா பாட்டி’’ என்றேன். ‘`இங்க வா, உன்னை அடிக்கிறேன்’’ என்றார். ‘தசாவதாரம்’ படப் பாட்டிக்கு அவர்தான் ரெஃபரென்ஸ். அந்தப்பட மேக்கப்மேனுக்கும் அமெரிக்கச் சிற்பிகளுக்கும் அவரின் படத்தைக் காட்டி, ‘`இந்த மாதிரி வேணும்’’ என்று அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்.

இப்படி நான் பிறந்ததும் அரண்மனை, சென்னையில் வளர்ந்ததும் அரண்மனையில்தான். ஆம், சென்னையில் இப்போது நான் உள்ள ஆழ்வார்பேட்டை வீடு ஒருகாலத்தில் திவாகர் ராஜா அவர்களின் வீடு. அவர், ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு உறவுக்காரர். இதுவும் அப்போது அரண்மனைதானாம். பிறகு இந்த வீட்டை ராஜமன்னார் செட்டியார் என்பவரிடம் திவாகர் ராஜா விற்றுவிட்டார்.

பிறகு இந்த வீட்டின் மேல்தளத்துக்கு நாங்கள் வாடகைக்குக் குடிவந்தோம். ராஜமன்னாரின் மகன் சிவக்குமார் எனக்கு மூத்தவர். ஒரே பள்ளியில் படித்த பால்ய நண்பர்கள். அவர் நன்றாகப் படிக்கும் பிள்ளை, நான் சுமாராகக்கூடப் படிக்காத பிள்ளை என்பதுதான் இருவருக்குமான வித்தியாசம். எங்கள் அம்மா எவ்வளவு ருசியாக சமைத்தாலும் அவர்கள் வீட்டு ரசம் அவ்வளவு ருசிக்கும். ராஜி மாமி எனக்காகக் கிண்ணத்தில் ரசம் எடுத்து வைத்திருப்பார். இப்படி ரசத்தை மட்டுமன்று பாசத்தையும் பரிமாறிக்கொள்ளும் ஒரே குடும்பம்போல் பழகி வந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

திடீரென ஒருநாள், ‘`இந்த வீட்டைக் கொடுக்கும் எண்ணம் இருக்கிறதா’’ என்று அப்பா ராஜமன்னாரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவரும், ‘`நீங்கள் கேட்டா கொடுத்துடுறேன்’’ என்று சொல்லியிருக்கிறார். அப்படி திடீரென்று வாங்கியதுதான் இந்த வீடு. இது என்னுடைய வீடாக இருக்க வேண்டும் என்று அப்பா விரும்பினார். குடும்பத்துக்குள் கருத்துவேறுபாடு வந்தபோதுகூட, ‘`இந்த வீடு கமலுக்குத்தான் போக வேண்டும்’’ என்று முடிவு செய்தார். அதற்காக அப்பா, சகோதரர்கள் உட்பட இந்த வீட்டில் அவர்களுக்கான பங்குகளை  எனக்கு விற்றனர். ‘`எப்ப எனக்குப் பணம்  கொடுக்குற’’ என்று நச்சரித்து அதட்டி பணத்தை வாங்கியவர் பிறகு, அதை நான்காகப் பிரித்து எங்களுக்கும், மீதியை உறவினர்களுக்கும் பிரித்துக் கொடுத்தார்.

கடமையை முடித்துவிட்டவராக, `‘நான் தனியாவே இருந்துக்குறேன்’’ என்று இங்குதான் இருந்தார். அவர் இருக்கும்போது, வீட்டை மாற்றியமைக்கக்கூட யோசிப்பேன். ஏனெனில், லேசாக இடித்தால்கூட, ‘வெளியே போ’ என்று சொல்லும் சமிக்ஞையாக அவர்    எடுத்துக்கொள்வரோ என்ற தயக்கம். அதனால் அவர் இருந்தவரை இந்த வீடு முழுவதையும் அவருக்கே ஒதுக்கியிருந்தேன்.

ஒருமுறை, நாங்கள் நடத்திக்கொண்டிருந்த ‘மய்யம்’ பத்திரிகையில் சரிகா அவர்களை விட்டு அப்பாவை ஒரு பேட்டி எடுக்கவைத்தேன். அது, ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டுத் தமிழாக்கம் செய்து வெளியிடப்பட்ட பேட்டி. அப்போது ராசி அழகப்பன் போன்றோர் உடன் இருந்தனர். `‘நீங்கள் காந்தியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?’’ என்ற கேள்விக்கு, ‘`பார்த்திருக்கிறேன். அவர் பரமக்குடிக்கு வந்த இருமுறையும் சந்தித்திருக்கிறேன்’’ என்றார். அதுவே எனக்கு வியத்தகு செய்தியாக இருந்தது.

‘`அவர் முதல்முறை வரும்போது நான் சிறுவன். இரண்டாவது முறை வரும்போது நான் வக்கீலாகிவிட்டேன். முதல் சந்திப்பில் ஒரு வாணலியைக் கையில் நீட்டியபடி நடந்தார். அதில் எல்லோரும் சில்லறைக் காசுகளைப் போட்டனர். அப்போது என் கையில் ஒரு ஓட்டைக் காலணா மட்டுமே இருந்தது. அதைப் போட்டுவிட்டு அவரின் முழங்கையிலிருந்து முன்கை வரை ஒரு தடவு தடவினேன். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. 

ஆனால், நான் வக்கீலான பிறகு காந்தியின் அருகில் போகமுடியவில்லை. அவரை, தள்ளி நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தேன். என் கண்களெல்லாம் நனைந்து விட்டது. ‘காலணா போட்டு விட்டு அன்று கையைத் தொட்டதற்குப் பதிலாகக் காலைத் தொட்டிருக்கலாம். இவரைப் பார்த்ததும் அன்று ஒன்றுமே தோணாமல் போய்விட்டதே. இந்தக் கிழவன் நம்மை ஏமாற்றிவிட்டாரே என்று தோன்றியது’’ என்றார்.

காந்தியின் மீது, காந்தியத்தின் மீது அவர் கொண்டிருந்த விடாப்பிடியான பிடிப்பு அப்பாவுக்குக் கடைசி நாள் வரை இருந்தது. டிரினிட்டி நர்ஸிங் ஹோமில் அவரைச் சேர்த்திருந்தோம். தினமும் போய்ப் பார்ப்போம். அன்று பட்டுச்சட்டை வேட்டி கொண்டு போயிருந்தேன். அந்தத் துணி உடுத்தி அவரை நான் பார்த்ததே கிடையாது. அவர் அணிந்தது அனைத்துமே கதராடைகள்தாம். ‘`என் சந்தோஷத்துக்காக இன்னைக்கு ஒருநாள் மட்டும் இதைப் போட்டுக்கங்க. போட்டுவிடச் சொல்றேன்’’ என்றேன். ‘`முடியாது’’ என்பதுபோல் தலையை ஆட்டினார்.  `‘உங்க பையன் சந்தோஷத்துக்குத்தானே கேக்குறேன்’’ என்றேன். ஆக்சிஜன் குழாயை வாயிலிருந்து எடுக்கச் சொன்னவர், ‘`எனக்கு வசதி இருந்தும் நான் கதர் போட்டுக்குறேன். ஆனா, வசதி இல்லாம, கதருக்குக்கூட வழியில்லாம இருக்கிறவங்க இங்க ஏகப்பட்டபேர் இருக்காங்க. முதலில் அவங்க எல்லோரும் பட்டுச்சட்டை வாங்கி உடுத்திக்கிற அளவுக்கான வசதியைக் கொடு, பிறகு நான் போட்டுக்குறேன்’’ என்றார்.  கண்கலங்கிவிட்டேன். ஆம், அவர் அணிந்த கதர், தன்னால் இயலாததாலோ, காந்திக்குக் காட்டுவதற்காகவோ போட்டுக்கொண்டது அல்ல. அது எளிமையின் அடையாளம். சுதந்திரப்போரின் அடையாளம். அகிம்சையின் அன்றைய ஓர் உன்னதக் கேடயம்.

இப்படி அப்பாவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கூடவே ராமநாதபுரமும் சேர்ந்தே நினைவுக்கு வருவது உண்டு. தவிர நான் மிகவும் மதிக்கும் மனிதர் கலாம் அவர்கள் அதே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கும் எங்கள் குடும்பத்துக்கும் தொடர்பு உண்டு என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன். அட்வகேட் ஜெனரல் பராசரன் அவர்களின் மாமனார் என் சொந்த சித்தப்பா. அதாவது என் அப்பாவின் தம்பி. அவருக்கு அப்துல் கலாம் அவர்களின் குடும்பம் மிக நெருக்கம்.

ஜெயகாந்தன் அவர்களை என் வாழ்க்கையில் மொத்தமாக ஏழெட்டுமுறைதான் சந்தித்திருப்பேன். ஆனால், என் மிக முக்கியமான ஆளுமைகளில் அவரும் ஒருவர். அதேபோலதான் சிவாஜி சாரை நான் அடிக்கடி சந்தித்துப் பேசியதாக ஒரு தோற்றம் உண்டு. இதேபோல்தான் பாலசந்தர் சாரிடமும். ‘`இந்த உறவு எந்தக் காரணத்தைக்கொண்டும் முறிந்துவிடக்கூடாது’’ என்கிற பதற்றத்தால், ‘`கமல் ஏன் வரலை’’ என்று கேட்பதுபோல் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதே என் நோக்கமாக இருந்தது. இப்படி கலாம் அவர்களுடனும் நான் நெருங்கிப் பழகியதில்லை. ஆனால், ஆக்கப்பூர்வமான எண்ணங்களால் இணைந்திருந்தோம்.

கலாம் அவர்களின் ப்ரொஃபைல் பெரிதாவதற்கு முன்பே, ஒரு சயின்டிஸ்டாக அவரைப்பற்றி சுஜாதா அவர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர் ஜனாதிபதியான பிறகு ஊரே அவரைப்பற்றி பேச ஆரம்பித்தது.‘நம்ம கலாம் எளிமையான மனிதர்’ என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஒருமுறை விமானப் பயணத்தில் அவருடன் இரண்டரை மணிநேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எல்லா நல்ல, பெரிய மனிதர்களைப் பற்றியும் பாதிதான் வெளியில் வரும். என்னதான் விளம்பரப்படுத்தினாலும் சிறப்பான, சொல்லாத குணங்கள் எவ்வளவு கொட்டிக்கிடக்கின்றன என்று தெரியும். அதை நான் அன்று கலாம் அவர்களிடம் கண்டேன்.

அதற்குப்பிறகு அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவருடைய வீட்டுக்கு வரச்சொல்லி அவரின் குடும்பத்தார் பலமுறை என்னை அழைத்திருக்கின்றனர். அன்று அப்படிப் போகவேண்டிய வாய்ப்புகளை எல்லாம் இழந்து விட்டேன். ஆனால், இம்முறை நானாக ஏற்படுத்திக்கொண்டாவது செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஆம், அங்கிருந்து, அவரின் இல்லத்திலிருந்து இந்தப் பயணத்தைத் தொடங்க வேண்டும் என நினைக்கிறேன்.

``அங்குபோய் என்ன செய்யப்போகிறீர்கள்?’’ என்று சிலர் கேட்கலாம். கலாம் அவர்களுக்குப் பல கனவுகள் இருந்தன. அதேபோன்ற கனவுகளைக் கொண்டவர்களில்  நானும் ஒருவன். நல்ல தமிழகத்தை விட்டுச் செல்லவேண்டும் என்ற கனவுதான் அவருக்கு. அதே எண்ணம்தான் எனக்கும். அதை நோக்கித்தான் நகர்கிறேனே தவிர விமர்சனம் பண்ணிக்கொண்டே இருப்பது மட்டுமே என் முழுநேர வேலையன்று. மக்களின் மேம்பாடுதான் என் நோக்கம்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

‘`கமல்,  சோ மாதிரி ஒரு தேர்ந்த விமர்சகர்’ என்று என்னை அடையாளப்படுத்துகிறார்கள். நான் வெறும் விமர்சகன் மட்டும் இல்ல, இறங்கி வேலை செய்ய வந்தவன். நான் ஒரு நடனக் கலைஞன், நான் சுப்புடு அல்ல. அதற்காக அவர்களை  நான் கிண்டலடிப்பதாக நினைக்கவேண்டாம். அதுவேறு, இதுவேறு. நான் மக்களின் தெண்டன். அதுதான் என் முதல் அடையாளம். மக்களின் விமர்சகன் அல்ல. மக்கள் பண்ணும் தவறுகளில், எனக்கும் பங்கு இருக்கிறது. அதேபோல் அவர்கள் கொள்ளும் வெற்றிகளில் பங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன்.

வரி கட்டுவதில் முதல் இடம்  மகாராஷ்டிராவுக்கும் இரண்டாவது இடம் தமிழகத்துக்கும் இருக்கிறது. ‘`இங்க வரி வசூல் பண்ணிட்டு அதை வடநாட்டு முன்னேற்றத்துக்கு பிரிச்சு கொடுக்குறாங்க’’ என்று சிலர் சொல்கிறார்கள். கூட்டுக் குடும்பம் என்றால் அப்படித்தானே இருக்கும். அண்ணன் சம்பாத்தியத்தை வேலையில்லாத தம்பிகளுக்கு பகிர்ந்தளிப்பது நம் வழக்கம்தானே. அதை நான் குறைசொல்லவில்லை. ஆனால், அண்ணன் கொடுக்கிறார் என்பதால் ஏமாளி என்று நினைத்து அவரை பட்டினிப்போட்டுவிடக்கூடாது. இந்தப் பகிர்தல் சமீப காலமாக சரிவர நடக்காததுபோன்ற எண்ணம் எனக்கு உள்ளது.

அதற்கு முக்கியமாக, நாம் உணரவேண்டியது, திராவிட இயக்கம் ஏதோ கெட்ட வார்த்தை போன்று சொல்கிறார்கள் சிலர். வேறுசிலரோ, அதைத்தவிர வேறு எதையும் பேசமாட்டோம் என்கிறார்கள். இது இரண்டுமே விமர்சனத்துக்கு உரியதுதான். திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மாத்திரம் அல்ல. நாடு தழுவியது. அதில் மிகப்பெரிய சரித்திரமும் ஆந்த்ரோபாலஜியும் இருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியும் சம்பந்தப்பட்டு இருக்கிறது. உங்கள் சாயலில் என்னால் பீகாரில் ஓர் ஆளை காட்ட முடியும். அதற்குக் காரணம் திராவிடம் என்பது அங்கிருந்து வருகிறது. அதற்காக அதை அழிக்கவேண்டிய அவசியம் கிடையாது. தேவையின்றி தலையில் தூக்கிவைத்துக்கொள்ள வேண்டியதும் இல்லை. அது நம் அடையாளம்.

அதை தென்னிந்தியா முழுவதும் கொண்டாடினால் இப்போது நாம் சொல்லும் இந்த பாரபட்சங்கள் இல்லாமல் போய்விடும். ஒட்டுமொத்தமாக  ஒருங்கே  ஒலிக்கும் கோரஸாக இங்கிருந்து டெல்லிவரை பேச முடியும். சந்திரபாபு நாயுடு அவர்களும், பினராயி விஜயன் அவர்களும், சந்திரேசேகர ராவ் அவர்களும், சித்தராமையாவும் திராவிடர்கள்தான். தமிழன் மட்டும்ததான் திராவிடன் என்று உரிமை கொண்டாட வேண்டியது இல்லை. சந்தோஷமாக வெவ்வேறு மொழி பேசுபவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளலாம். இது என் கருத்து. இந்தக் கருத்து இன்னும் வேர் கொள்ளவேண்டும் என்பதே என் ஆசை. அப்படி நினைக்க ஆரம்பித்தால் நமக்கு பல பலங்கள் கூடும்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

தென்னாடுடைய சிவன் என்பதில் எந்த அவமானமும் இல்லையே. எல்லா ஊர்களிலும் இருக்கிறான் என்கிற பெருமைதான் தெரிகிறது. திராவிடமும் அப்படித்தான், சிவன்போல. அதற்காக தமிழையோ மற்ற மொழிகளையோ கரைத்து ஒன்றாக்கிவிடவேண்டும் என்று சொல்லவில்லை இனம், தன்மானம், சுயமரியாதை, மொழிப்பற்று அப்படியே இருக்கவேண்டும். அதை மாற்றவேக்கூடாது. இது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். அதைத்தான நேருவும் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார். அந்த வேற்றுமையை மாற்றிவிடக்கூடாது.

இதை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருக்கும் ராமநாதபுர மண்ணிலிருந்து இந்தப் பயணத்தை பிப்ரவரி 21-ம் தேதியிலிருந்து தொடங்கலாம் என்று இருக்கிறேன். இது என் நாடு, இதை நான் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு மாத்திரம் இருந்தால் போதாது. இங்கு தலைவன் என்பவன் வழிநடத்த மாத்திரமன்று, பின்பற்றவே தலைவன் இருக்கவேண்டும். பின்தொடர்வதற்கே ஒரு தலைமைப் பொறுப்பு இருக்க வேண்டும். நாமெல்லாம் சேர்ந்து இந்தத் தேரை இழுக்கிறோம் என்ற எண்ணம் வேண்டும். அதுவே ஜனநாயகம். அந்த நாயகர்களைச் சந்திக்கத்தான் நான் போய்க்கொண்டிருக்கிறேன்.

``இது ஆட்சியைப் பிடிப்பதற்கான திட்டமா?” என்று கேட்பார்கள். ஆட்சியை ஒரு தனி ஆள் பிடிக்க முடியுமா? யாரின் ஆட்சி, யாரின் அரசு. குடியின் அரசு. அப்படியென்றால் முதலில் அவர்களை உயர்த்த வேண்டும். அதற்கான கடமைகளை நினைவுபடுத்த வேண்டும். அவர்களுடையது நல்ல மனம். அவை மாறிவிடாமல் இருக்கவேண்டும் என்பதே என் அவா. அதைநோக்கிய பயணம்தான் இது.  உங்களின்  ஆதரவோடு இந்தப் பயணத்தைத் தொடங்குகிறேன். கரம் கோத்திடுங்கள். களத்தில் சந்திக்கிறேன்.

- உங்கள் கரையை நோக்கி!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 16 - ”பிப்ரவரி 21... கலாம் வீடு... அரசியல் பயணத்தைத் தொடங்குகிறேன்!”

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.